Monday, October 29, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 9)




அரசியல் வரலாற்று மரபு பகுதி - 8ன் தொடர்ச்சி.... 


              • விசயநகரப் பேரரசர்களாயிருந்த அச்சுதராயருக்கும், சதாசிவராயருக்கும், அமைச்சர் அல்லிய இராமராயருக்கும் கீழ்ப்படிந்து, நேர்மை குறையாமல், உண்மை ஊழியராய் இருந்து விசுவநாத நாயக்கர், மதுரையில் ஆட்சி நடத்தி வந்தார். இவர் சுமார் 35 ஆண்டுகள் மாட்சியுடன் ஆட்சி செய்தார். தமது 69ஆம் வயதில் கி.பி.1564இல் மறைந்தார்.
இவரின் மறைவுக்குப் பின் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564-1572),  வீரப்ப நாயக்கர் (கி.பி.1572-1595), இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1595 – 1601),  முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1601 – 1609),  முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1609-1623) ஆகியோர் மதுரையை ஆட்சி புரிந்து வந்தனர். இவர்களுக்குப்பிறகு....

• திருமலை நாயக்கர் ஆட்சி:-  (கி.பி.1623-1659):-
                       மதுரை நாயக்க மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற திருமலை நாயக்கர் முத்துக் கிருஷ்ணப்பருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் ஆவார். திருமலை நாயக்கரின் முழுப்பெயர் "திருமலை சவுரி நாயுனு அய்யுலுகாரு" என்பதாகும்.
• ஏழாவதாக பட்டத்துக்கு வந்த திருமலை நாயக்கருக்கு முன்னாலும் அறுவர்; பின்னாலும் அறுவர் ஆட்சி செய்தபோதிலும் "நாயக்கர் வம்சம்" என்றாலே நமக்கு நினைவுக்கு வருகிறவர் திருமலை நாயக்கர் மட்டும் தான்.  [கம்பராமாயணத்தில் குகன் ராமனைப் பார்த்துச் சொல்லும், " நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன் புகழ் ஆக்கிக்கொண்டாய்". என்கிற பாடல் வரிகள் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.]

|| மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் பட்டியல் ||
• 1. விசுவநாத நாயக்கர்
(கி.பி.1529 - 1564)
• 2.முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564 - 1572)
• 3. வீரப்ப நாயக்கர் (கி.பி.1572 - 1595)
• 4. இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி1595 - 1601)
• 5.முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் [இரண்டாம்கிருஷ்ணப்ப நாயக்கரின் சகோதரர்
விசுவப்ப நாயக்கரின் மகன்] (கி.பி.1601 - 1609)
• 6. முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் [முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்த மகன்]
(கி.பி. 1609 - 1623)


• 7. திருமலை நாயக்கர் (கி.பி.1623 - 1659)
• 8. இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1659 )
• 9. சொக்கநாத நாயக்கர் [இராணிமங்கம்மாள் கணவர்] (கி.பி.1659 - 1682)
•10.அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1682 - 1689 )
•11.இராணி மங்கம்மாள் [சொக்கநாதரின்
 மனைவி] (கி.பி.1689 - 1706)
•12.விஜயரங்க சொக்கநாத நாயக்கர் [சொக்கநாதரின் மகன்]
(கி.பி.1706 - 1732 )
•13.இராணி மீனாட்சி [விஜயரங்கநாதரின் மனைவி] (கி.பி.1732 - 1736 ) ஆகியோர்கள் ஆவார்கள்.
•மதுரை நாயக்க ஆட்சியில் ஏழாவது மன்னரான புகழ்பெற்ற திருமலைநாயக்க மன்னர் (கி.பி.1623-1659) ஆட்சியை ஏற்றபோது அவருக்கு வயது 39 இருக்கும் என்பர். திருமலை நாயக்கரின் காலத்தில் மதுரைப் பெருநாடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் ஒரு பகுதி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரும் பரப்புடைய நாடாய் இருந்தது.
தன் ஒப்பற்ற கலை ஆர்வத்தால் மதுரை நகரைக் கலையழகு கொஞ்சும் நகரம் ஆக்கினார்.
 நூற்றுக்கணக்கான கோயில்களை புதுப்பித்துக் கட்டி பெரும் கோபுரங்களை எழுப்பியிருக்கிறார். சரிந்த தொப்பையும் கூப்பிய கரங்களுமாக திருமலைநாயக்கர் தன் இரு ராணிகளுடன் இவரது திருப்பணி பெற்ற திருக்கோயில்களில் நிற்கக் காணலாம். [அழகர் கிள்ளை விடுதூது நாயக்க மன்னரை "தொந்தி வடுகர்" என்றே கூறுகிறது.] மரத்தினடியில் அமர்ந்திருக்கும் காளையின் உருவத்தைத் திருமலை நாயக்கர்
தமது குலச்சின்னமாகக் கொண்டிருந்தார். இது மதுரை, திருப்பரங்குன்றம் கோயில் கொடிமரங்களில் காணப்படுகின்றன.
பன்னெடுங்காலமாக வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா, நடைபெற்றுவந்தது. இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக திருமலை நாயக்க மன்னரால் மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து கோவித்துக் கொண்டு அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்க கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே புராணம்.
• திருமலை நாயக்கரின் கலைப் பணிகள்:-
           திருமலை நாயக்கர் ஒரு தலைசிறந்த "கலாரசிகர்" ஆவார். மதுரையில் அவர் எழுப்பியுள்ள கட்டடங்கள் இன்றும் நின்று அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. "திருமலை நாயக்கர் மஹால்" இவர் கட்டிய கட்டடங்களுள் புகழ்பெற்றதும், பெரியதுமாகும். "தென்னிந்தியாவின் தாஜ்மஹால்" என வரலாற்று ஆய்வாளர்களால் நாயக்கரின் மஹால் போற்றப்படுலது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.




இம்மஹாலில் உள்ள மிகப் பெரிய தூண்கள் காண்போர் கண்ணைப் பறிப்பனவாகும். ஒவ்வொரு தூணும் சுமார் 40 அடி உயரமும், மூவர் அல்லது நால்வர் சேர்ந்தணைத்தாலும் அணைக்க முடியாத அளவு பருமனும் கொண்டு விளங்குவதை, அம்மஹாலின் முற்றத்தில் இன்றும் காணலாம். இந்து, இஸ்லாமிய கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த 'இந்தோ சரசனிக் பாணி' என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த நாயக்கர் அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரமாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன
இந்த அரண்மனை இரண்டு பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது. ஒன்று 'சொர்க்க விலாசம்' என்றும், மற்றொன்று 'ரங்க விலாசம்' என்றும் அழைக்கப்பட்டது. சொர்க்க விலாசத்தில், திருமலை நாயக்கரும், ரங்கவிலாசத்தில் அவரது தம்பி முத்தியாலு நாயக்கரும் வசித்து வந்துள்ளனர்.


அந்த ரங்க விலாசத்தின் தூண்கள் தான் தற்போதுள்ள 'பத்துத் தூண்கள்' ஆகும். ரங்க விலாசத்தின் மற்றைய பகுதிகள் மறைந்துவிட்டன.
[திருவரங்கம் பெரியகோயிலில் 'ஸ்ரீரங்கவிலாசம்' என்ற மண்டபம் முதலில் நம்மை வரவேற்கிறது.]
எஞ்சியுள்ள தற்போதைய திருமலை நாயக்கர் அரண்மனை பகுதிக்கு அப்பொழுது 'சொர்க்க விலாசம்' என்று பெயர்.
 இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை , பதினெட்டு வித இசைக் கருவிகள் வைக்கும் இடம், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன. (18 வகை இசைக்கருவிகள் வாசிக்கப்பட்ட இடம் இன்று 'நவபத்கானா தெரு' என்று மஹாலை ஒட்டி இருக்கிறது.)
இந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதையைப் பயன்படுத்துவர் என்றும், தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே ['பொற்படியான் சந்நதி'] இந்தப் பாதையைப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. திருமலை மன்னன் தந்த மஹாலில் ஐந்தில் ஒருபகுதிதான் தற்போது இருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள்.
திருமலை நாயக்கர், இந்த அரண்மனையில் தனது 75ஆம் வயது வரை, மனைவியுடன் வசித்து வந்ததாக குறிப்புகள் எடுத்துரைக்கின்றன.
• தனது முதலமைச்சரும், ஆகமத்தில் விற்பன்னரும், சிறந்த ஸ்ரீவித்யா உபாசகருமான நீலகண்ட தீட்சிதர், ஆலோசனைப்படி, மதுரை நகரை ஸ்ரீசக்ர வடிவில் கட்டமைத்தார். தனது அரண்மனைக்குள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலும் கட்டி வழிபட்டார்.
திருமலை நாயக்கர் மீனாட்சியம்மன் கோயிலின் கிழக்கே உள்ள சுவாமி கோபுரத்தின் எதிரே கட்டிய புதுமண்டபம், இராய கோபுரம் மற்றும் மதுரைக்குக் கிழக்கே உள்ள வண்டியூரில் அழகிய மையமண்டபத்துடன் உருவாக்கிய தெப்பக்குளம் ஆகியன அவருடைய புகழை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இராய கோபுரம் முற்றுப்பெறாத நிலையில் (எழுகடல் தெரு-விட்டவாசல்) நின்றுவிட்டது. இதைத் திருமலை நாயக்கர் கட்டி முடித்திருப்பாரே என்றால், அதுவே மதுரைக் கோபுரங்களில் மிகவும் உயரமாக அமைந்திருக்கும் என்பர்.


• கிழக்குக் கோபுரத்துக்கு வெளிப்புறமாக கொலுமண்டபம் அல்லது வசந்தமண்டபம் எனப்படும் "புதுமண்டபத்தைக் கட்டுவித்தார்.
அந்தக் காலத்துக்கு அதுவே மிக அலங்காரமானதாகவும் நீராழி, அகழி சூழ்ந்து புதுமுறையில் புதிதாகக் கட்டப்பட்ட வசந்தமண்டபமாகவும் திகழ்ந்தபடியால் மதுரை மக்கள் அதனைப் "புதுமண்டபம்" என்றே அழைத்தனர். அதன் பின்னர் வேறுபல மண்டபங்கள் பலரால் மீனாட்சியம்மன் கோயிலிலும் மதுரையிலும் கட்டப்பட்டுவிட்டன.
ஆனாலும் இம்மண்டபத்திற்கு மட்டும் காலங்கடந்தும் "புதுமண்டபம்" என்ற பெயர் நிலைத்துவிட்டது. புது மண்டபத்தில் இவரது அரசியை சிற்பமாக வடிவமைத்த அமைச்சர் நீலகண்ட தீட்சிதர், சாமுத்ரிகா லட்சணத்தின்படி அரசியின் தொடையில் வடுவொன்று இருக்க வேண்டும் என்று அனுமானித்து அதையும் சிற்பத்தில் செதுக்கி விட, அவர் மீது சந்தேகம் கொண்ட மன்னர் அவரது கண்களை அவித்து விட்டதாக ஒரு செவி வழிக்கதை உண்டு. தொடையில் வடுவுள்ள அரசியின் சிற்பத்தை இன்றும் புதுமண்டபத்தில் காணலாம்.


• திருமலை நாயக்கரின் போர்கள்:-
               அவருடைய ஆட்சிகாலம் வரையில் அவருடைய மதுரைநாடு, விஜயநகரப் பேரரசுக்குக் கீழ் கட்டுப்பட்டே விளங்கியது.
திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை ஐந்து பெரும் போர்களை சந்தித்தது.
• முதலாவதாக, முந்திய பகைமையாலும், செந்தமிழ் மதுரை நாட்டின் செழிப்பாலும் மைசூர் மன்னர் மதுரை மீது படையெடுத்தார். திருமலை நாயக்கர் அவரை எதிர்த்துப் போராட வேண்டியவரானார்.
• இரண்டாவது, திருவாங்கூர் மன்னர் கேரளவர்மா என்பவர் கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்டாததனால் அவர் மீது படையெடுத்துச் சென்று போர் புரியலானார்.
• மூன்றாவது, விசயநகரப் பேரரசின் பிடியிலிருந்து விடுபட்டு, முழுவுரிமை மன்னராக விரும்பி, விசயநகரப் பேரரசை எதிர்க்க வேண்டிப் போர் தொடுத்தார்.
• நான்காவது, இராமநாதபுரத்தில் அரசுரிமைக் கலகங்கள் ஏற்பட்ட காலத்தில் அவற்றை அடக்கி அமைதியை நிலைநிறுத்த இராமநாதபுரத்தை ஆண்டு வந்த சேதுபதியுடன் போர் செய்தார்.
• ஐந்தாவதாக மைசூர் மீது மூக்கறுப்புப் போர்.
அது கி.பி.1656ல் 70 வயதாகி இருந்த திருமலை நாயக்கரை மைசூர் படை பழிவாங்க வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன், மதுரை நாட்டிற்கு 'கம்பையா' என்ற மிகக் கொடியவன் மைசூர்படைக்கு தலைமை ஏற்று வந்தான். மைசூர் மன்னன் கட்டளைப்படி மதுரை நாட்டிற்குள் புகுந்து ஆண், பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனுப்பி வைத்தான். அதோடு நிறுத்தாமல் கொள்ளையும் அடித்தான். சிக்கியவர்களை வெட்டிக் கொலைகளும் செய்தான். இதை அறிந்த திருமலை மன்னர், தன்னரசு நாட்டுத் தலைவர் திருமலை பின்னத்தேவருக்கும், இராமநாதபுரம் சேதுபதிக்கும் தன் பட்டத்து ராணி மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைக் கண்டவுடன் தாமதியாமல் தன் படைகளுடன் வந்து மதுரை படைகளையும் ஒன்று சேர்த்து கடும் போர் செய்த மைசூர் படைக்கு பெரிய சேதத்தை உண்டாக்கி விரட்டியடித்து விட்டு மதுரையைக் காத்தார். இந்த போரில் இரு தரப்பினரிலும் உயிர் விட்டவர்கள் அதிகம்.
அதே நேரத்தில் தன்னரசு கள்ளர் படைகள், கன்னிவாடி, விருப்பாச்சி படைகளை சேர்த்துக்கொண்டு மைசூர் படைகளை விரட்டித் தொடர்ந்து சென்றனர். 'திருமலை பின்னத்தேவர்' தலைமையில் சென்ற படைகள், மதுரையில் பொது மக்களின் மூக்கை அறுத்த போது தளபதியாக இருந்த கம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையும் அறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள். இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை நாயக்க மன்னர், பின்னத்தேவருக்கு 'மூக்குப்பறி' என்ற பட்டம் வழங்கினார். சேதுபதிக்கு 'திருமலை சேதுபதி'என்ற பட்டமும் 'ராணி சொல் காத்தான்' என்ற பெயரும் வழங்கினார். இதோடு நிற்காமல் சேதுபதி இனிமேல் நீ எனக்கு கப்பம் கட்ட வேண்டாம் என்ற உத்தரவும் கொடுத்து இராமநாதபுரத்திற்கு தகுந்த மரியாதையுடன் அனுப்பி வைத்தார்.இப்போர்களினால் மதுரை நாட்டு மக்கள் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளானார்கள். இப்படி ஒரு மூர்க்கத்தனமான மூக்கறுப்புப் போர், மதுரை திருமலை நாயக்கருக்கும், மைசூர் அரசன் கந்தீரவனுக்கும் இடையே நடந்துள்ளதாக சேலம் வரலாற்று ஆய்வாளரும், எனது நீண்டகால முகநூல் (FACEBOOK) நண்பருமான திரு.ஆறகழூர் வெங்கடேசன் கூறுகிறார். ஆனால் 'மூக்கறுப்பு யுத்தம்' நடந்ததற்கான ஆதாரம் இவருக்கு சேலத்தில்தான் கிடைத்திருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரை சேர்ந்த வெங்கடேசன், அடிப்படையில் ஒரு மருந்தாளுநர். தீவிர கடவுள் மறுப்பாளர்; அறிவியல் சிந்தனையாளர். ஆனால், தற்போது கோயில் கோயிலாக சுற்றிக்கொண்டிருக்கிறார். வழிபாட்டிற்காக அல்ல; வரலாற்று ஆராய்ச்சிக்காக.  பேளூர் அங்காளம்மன் கோயில் முன்பு, கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான விளை நிலத்தில்,
6 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட கல்வெட்டாக கிடைத்தது. கல்வெட்டின் நாலாபுறங்களிலும் ஏராளமான எழுத்துகள் இருந்தன. அவை 16ஆம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்கள்.
 கல்வெட்டு பகுதியில், “மீசையுடன் மூக்கறுப்பிச்சே” என்று உள்ளது.
ராமாயண கதையில் ராவணன் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை, ராமன் தம்பி லட்சுமணன் துண்டித்திடுவான். இதிகாசத்தில் மட்டுமே கேட்டுப்பழகிய இதுபோன்ற மூக்கறுப்பு சம்பவம், நிஜத்திலும் நடந்ததற்கான 'ஒரே ஆதாரம்' இந்தக் கல்வெட்டு என்றே சொல்லலாம். “கல்வெட்டின் முதல் பக்கத்திலும், இரண்டாம் பக்கத்திலும் தலா 29 வரிகளும், மூன்றாம் பக்கத்தில் 41 வரிகளும், நான்காம் பக்கத்தில் 32 வரிகளும் பொறிக்கப்பட்டு இருந்தன. மூக்கறுப்புப் போர் பற்றிய தகவல் அடங்கிய முதல் கல்வெட்டு இதுதான்.
மைசூர் நாட்டு மன்னன் கந்தீரவனுக்கும், மதுரை திருமலை நாயக்கருக்கும் இடையே ஏற்பட்ட மூக்கறுப்பு போர் பற்றிய தகவல்கள் அதில் இருந்தன. கந்தீரவனுக்கு எதிராக திருமலை நாயக்கர் தொடர்ந்து வாலாட்டியதால் கடும் ஆத்திரம் அடைந்த மைசூர் மன்னன், அவர் மீது போர் தொடுக்கிறான். போரில் வீரர்களைக் கொல்வது தான் மரபு. ஆனால், எதிரி நாட்டில் எதிர்ப்படுவது யாராக இருந்தாலும் அவர்களின் மூக்கையும், மேல் உதட்டையும் அறுத்துக் கொண்டு வந்தால் வெகுமதிகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கிறான்.
அப்படி கொண்டு வரப்படும் மூக்கு, மேலுதட்டுடன் மீசையும் இருந்தால் வெகுமதிகள் இன்னும் அதிகமாகக் கிடைக்கும். மூக்கறுப்புக்காக விசேஷ கருவியையும் வீரர்கள் வைத்திருந்தனர். கந்தீரவனின் படை வீரர்கள், தமிழ்நாட்டில் புகுந்து பலரின் மூக்கு, மேலுதடுகளையும் அறுத்துச் செல்கின்றனர்.
அடுத்து, கந்தீரவனின் பாணியிலேயே இதற்கு பதிலடி கொடுத்தார் திருமலை நாயக்கர்.
அவருடைய ஆணையின் பேரில், ராமநாதபுரம் ரகுநாதசேதுபதி தலைமையில் 25000 படை வீரர்கள், பாளையக்காரர்களின் 35000 படை வீரர்கள் என 60 ஆயிரம் வீரர்கள் மைசூர் ஆட்சிப் பகுதிக்குள் நுழைந்து, எதிரிகளின் மூக்குகளை அரிந்து சாக்குப்பையில் கட்டி திருமலை நாயக்கருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தப் போர் 1656ம் ஆண்டு நடந்துள்ளதாக, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அப்போது பேளூர் பகுதியில் பாளையக்காரர்கள் ஆட்சி நடத்தி வந்துள்ளனர். அதனால், மூக்கறுப்பு போர் குறித்த கல்வெட்டு, இந்தப் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கலாம்,” என்கிறார் ஆறகழூர் வெங்கடேசன். “மைசூர் மன்னன் கந்தீரவன், பிறவியிலேயே வாய் பேச இயலாதவன்; காதுகளும் கேட்காது. அவரை பலர் கேலி செய்திருக்கலாம். அந்த வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள, எதிரி நாட்டவர்களின் மூக்கையும், மேல் உதட்டையும் அறுத்துக் கொண்டு வரச்சொல்லி இருக்கலாம்,” என்றும் சொல்கிறார் தோழர் ஆறகழூர் வெங்கடேசன்.
இது ஒருபுறம் இருக்க, மைசூர் மன்னன் கந்தீரவனின் முக்கையும் மேல் உதட்டையும் ரகுநாதசேதுபதியின் படை வீரர்கள் அறுத்து வந்து திருமலை நாயக்கரிடம் ஒப்படைத்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.
பிறரை அவமானப்படுத்த இன்றும் ‘அவனை எப்படியாவது மூக்குடைக்க வேண்டும்’ என்றே சொல்கிறோம். எனில், மூக்கறுத்தல் என்பது ஒருவரை மானமிழக்கச் செய்தல் என்பதாகத்தான் இந்தச் சமூகம் கருதி வந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் மூக்கையும், மேல் உதட்டையும் அறுத்து வரச்சொல்லி இருக்கலாம்.
எனினும், மைசூர்க்காரர்களுக்கு (கர்நாடகா), தமிழ்நாட்டுடன் 360 ஆண்டுகளுக்கு முன்பே பகை இருந்து வந்திருக்கிறது என்பதற்கு இந்த கல்வெட்டு ஒரு சான்று.
(ஆதாரம்:- புதிய அகராதி, 2017-பிப்ரவரி திங்கள் இதழில் ஆறகளூர் வெங்கடேசன் அவர்கள் கூறிய தகவல்)

• திருமலை நாயக்கரின் "பெத்தபிள்ளை" என்று புகழாரம் பெற்ற திருமலை பின்னத்தேவனோடு தொடர்புடைய ஓர் இடைச்சமூகத்தினர் இன்றும் மதுரை வடக்கு மாசி வீதியில் வசித்து வருகின்றனர். திருமலை மன்னராலேயே அந்த இடைச்சமூகத்தினருக்கு வடக்கு மாசி வீதி பகுதியின் புகழ்பெற்ற "இராமாயணச்சாவடி"யும் தரப்பட்டது.


திருநெல்வேலி வட்டாரத்தில் வாழ்ந்த அந்த 'புதுநாட்டு இடையர்'களுக்கு அங்கிருந்த ஒரு பாளையக்காரன் தந்த தொந்தரவு சகிக்க முடியாமலிருந்தபடியால், அவர்கள் ஒன்று சேர்ந்து மதுரைக்கு வந்து திருமலை நாயக்க மன்னரிடம் தஞ்சம் புகுந்தார்கள். திருமலை நாயக்கரும் எட்டு நாட்டு கள்ளர் தலைவனாகிய  மூக்குபறி திருமலை பின்னத்தேவரை புதுநாட்டு இடையர்கள் காப்பாளனாக நியமித்து அவர்களுக்கு இடையூறு இல்லாமல் பரிபாலித்து வரும்படியாகச் செய்தார்'  [தகவல் ஆதாரம்: பி.முத்துத்தேவர் என்பவர் எழுதிய 'மூவேந்தர்குலத் தேவர் சமூக வரலாறு' எனும் நூலில் பக்கம் 215ல் மேற்குறித்த கதை உள்ளது.] எனத் தெரிகிறது. 
• திருமலை நாயக்கரிடம் (கி.பி1623-56)
தளவாயாக இருந்த இராமப்பய்யன், இராமநாதபுரத்தை ஆண்டு வந்த 'சேதுபதி சடைக்கத் தேவன்' மீது போர் தொடுத்து அவனைச் சிறைசெய்து வந்த கதையைக் கூறுவது இராமப்பய்யன் அம்மானையாகும்.
[குறிப்பு:- திருமலை நாயக்கர் வரலாற்றைப் பெருமளவு அறியத் துணைபுரிபவை சேசுசபைப் பாதிரிமார் எழுதிய கடிதங்களாகும்.] மேலே கூறப்பட்ட நாயக்கர் வரலாற்றுக்கும், இராமப்பய்யன் அம்மானையில் காணப்படும் வரலாற்றுத் தகவலுக்கும் பெரியதொரு வேறுபாடு இல்லை. திருமலை நாயக்கரின் படைத்தலைவனாய் இருந்த
'இராமப்பய்யன்' என்ற தெலுங்குப் பிராமணப் படைத்தலைவன் ஒருவன் மறவர் நாட்டுப் படையெடுப்பில் வெற்றியடைந்து சடைக்கத்தேவன் சேதுபதியைத் திருமலை நாயக்கனிடம் ஒப்புவித்துச் சிறையில் அடைக்கச் செய்தான் என்பது அம்மானையில் காணப்படும் தகவலாகும். இதற்கு மாறாக, போரின் நடுவிலேயே இராமப்பய்யன் இறந்து விட்டானென்று வரலாறு சொல்லுகின்றது. ஆனால் கதைப்பாடல் சேதுபதியின் மருமகன் வன்னியத் தேவன் இறந்ததனால், சடைக்கத்தேவன் (சேதுபதி) திருமலையிடம் சரணடைந்தான் எனக் கூறுகிறது.
சிறை வைக்கப்பட்ட சேதுபதி மன்னர், சேசு பாதிரியாரின் வேண்டுகோளின்படி விடுதலையடைந்ததாக வரலாறு கூறுகின்றது. தெய்வ பக்தியால் சேதுபதியைக் கட்டியிருந்த விலங்குகள் தெறித்துவிடவே திருமலை மன்னரால் விடுதலை செய்யப்பட்டான் என்று 'அம்மானை' சொல்கிறது. ஆயின் வடநாட்டிலிருந்து வந்த திருத்தலப் பயணிகளான வயிராகிகளும் லாடசந்நியாசிகளும் திருமலை நாயக்கனிடம் முறையிட்டதனால் சேதுபதி விடுதலை செய்யப்பட்டான் என்றும் வரலாறு சொல்லுகின்றது. மேலும் மெக்கன்சி சுவடியில் (Meckenzie Manuscripts) வடநாட்டிலிருந்து வந்த திருத்தலப் பயணிகள் திருச்சியில் சிறை வைத்திருந்த சேதுபதியாகிய சடைக்கத்தேவனை விடுவித்து, "ஸ்ரீரங்கத்தில் அவனுக்கு முடிசூட்டி, இராமநாதபுரம் அழைத்துச் சென்று அரசு கட்டிலில் அமர்த்தினார்கள்" என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.
இவ்விரண்டு செய்திகளிலிருந்தும் சேதுபதி விடுதலையில் வடநாட்டுத் திருத்தலப் பயணிகள் ஈடுபட்டிருந்தார்கள் என்பது பொதுவாகத் தெளிவாகிறது.
இந்த அளவிலேயே கதைப்பாடல், வரலாற்றிலிருந்து மாறுபட்ட செய்திகளைக் கொண்டுள்ளதாக விளங்குகின்றது. கி.பி. 17ஆம் நூற்றாண்டு மதுரை நகர அரசியல் நிலையை அறிந்து கொள்ள "இராமப்பய்யன் அம்மானை" பெரிதும் துணைபுரிகின்றது. எனலாம். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், போன்ற சிற்றிலக்கியங்களும், இரவிக்குட்டி போர், மதுரைவீரன் கதை போன்ற வாய்மொழி இலக்கியங்கள் திருமலை மன்னர் காலத்தில் தோன்றியவையாகும்.
• மேலும் திருமலை மன்னர் காலத்தில் 'பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்' (அழகிய மணவாளதாசர் எனவும் ‘திவ்வியகவி’ என்ற பெயராலும் இவரை அழைத்தனர்) இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் குறிப்பிடத்தக்க இலக்கியமாகும்.. (“அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன் ஆவான்" என்பது தமிழறிஞர்கள் கூறுவர்.) திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த இவர் பின்னர் இறைத்தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
அஷ்டபிரபந்தம் என எட்டு சிற்றிலக்கியங்களை இயற்றிய இவர் இருமொழி புலமைப் பெற்றவர். நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்குப் பிறகு வைணவ சமயச் சார்பாக எழுந்த இத்தொகுதியைத் "திவ்விய பிரந்த சாரம்" எனக் கூறுவர். சொல்லணிகளான யமகம், திரிபு, சிலேடை முதலியவை இதில் சிறந்து விளங்குகின்றன.
• அஷ்ட பிரபந்தங்கள்
1.திருவரங்கக் கலம்பகம் 
2.திருவரங்கத்து மாலை
3.திருவரங்கத்து திருவந்தாதி
4.சீரங்கநாயகர் ஊசல்
5.திருவேங்கட மாலை
6.திருவேங்கடத்தந்தாதி
7.அழகர் அந்தாதி
8.நூற்றெட்டுத் திருபதி அந்தாதி.
இந்த எட்டுநூல்களும், 'அஷ்டப்பிரபந்தம்' எனவும், 'ஐயங்கார்பிரபந்தம்' எனவும் வழங்கப்பட்டன. இதில் முதல் நான்கு நூல்கள் 'திருவரங்கம் பெரியகோயில்' புகழ் பாடும் நூல்களாகும். இவர் திருவேங்கடமாலை முதலிய நூல்க ளியற்றியதைக் குறித்து ஒருசாரார் வழங்குவதொரு கதை பின் வருமாறு:- இவர் ஸ்ரீரங்கநாதனுக்கே தொண்டராகி அப்பெரியபெருமானையன்றிப் பிறிதொரு தெய்வத்தை மறந்துந் தொழாத மனவுறுதியுடையவராய், அப்பெரியபெருமாள் விஷயமாகவே அந்தாதியும் மாலையும் கலம்பகமும் ஊசலும் பாடியபொழுது, திருவேங்கடமுடையான் இவர் வாயால் தாம் பிரபந்தம் பாடப்பெற விரும்பித் தமது உண்மை வடிவத்துடன் இவரது கனவில் தோன்றி 'நம் வேங்கடத்தின் விஷயமாகச் சில பிரபந்தம் பாடுக!' என்று கட்டளையிட, இவர் அதற்கு இணங்காமல் "அரங்கனைப் பாடிய வாயாற் குரங்கனைப் பாடேன்!" என்றுகூறி மறுக்க, திருவேங்கடமுடையான் எங்ஙனமாவது இவர்வாயாற் பாடல்பெற அவாக் கொண்டதுமன்றி, எல்லாத் திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் ஒருவனே யென்று இவர்க்குத் தெரிவித்து இவர் கொண்டுள்ள பேதபுத்தியை அகற்றவுங் கருதியதனால், இவர்க்கு உடனே கண்டமாலையென்னுங் கொடியநோய் உண்டாகும்படி செய்ய, அந்த வியாதியால் மிகவருந்திய இவர் அதன் காரணத்தை உணர்ந்து கொண்டு அப்பெருமான் பக்கல் தாம் அபசாரப்பட்ட அபராதம் தீருமாறு உடனே 'திருவேங்கடமாலை', 'திருவேங்கடத்தந்தாதி' என்னும் பிரபந்தங்களை இயற்றி அப்பெருமானைத் துதிக்க, அது பற்றித் திருவுள்ளமுவந்த திருவேங்கடமுடையான் உடனே இவரெதிரில் எழுந்தருளிக் காட்சிதந்து அநுக்கிரகிக்க, அதனால் இவர் அப்பொழுதே அந்நோய் நீங்கப் பெற்றவராகி, பின்பு, அவ்வடமலைக்கு ஈடான தென்மலையின் விஷயமாக 'அழகரந்தாதி' பாடி, அப்பால் தமது பேதபுத்தி யொழிந்தமை நன்கு விளங்க 'நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி' பாடினார் என்பர்.
• திருவேங்கடமுடையான் [ஸ்ரீநிவாசன்] ஐயங்கார்க்குச் சேவைசாதித்த இடம் - திருவரங்கம் பெரியகோயிலில் சலவைக்கல் மண்டபப்பிராகாரமென்கிற உட்பிரகாரத்தில் தென்கிழக்குப்பக்கத்தில் என்பர். (அதாவது ராஜமகேந்திரன் திருச்சுற்றின் தென்கிழக்கு பகுதியில் தற்போது உள்ள திருவேங்கடமுடையான் சித்திரம் அருகாமையில் என்பர்.)
• தலைநகரம் மாற்றம்:-
விசுவநாத நாயக்கர் காலத்தில் மதுரையே மதுரை நாட்டின் தலைநகராய் இருந்தது. முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் கி.பி.1616இல் மதுரை நகரிலிருந்து தலைநகரைத் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். திருமலை நாயக்கரும் தம் அண்ணனைப் போலவே மதுரையில் முடிசூட்டிக் கொண்டு, திருச்சிராப்பள்ளியில் இருந்தே ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்து வந்தார்.
• திருமலை நாயக்கர் திருச்சியில் அமைந்திருந்த தலைநகரை [கி.பி.1634இல்]
மதுரைக்கு மாற்றினார். ஏனென்றால் ஒரு சமயம் திருமலை நாயக்கருக்குக் கடுமையான நோய் ஏற்பட்டது. பலவகை மருந்துகளை உட்கொண்டும் நோய் தீரவில்லை. அச்சமயத்தில் மதுரையில் மீனாட்சியம்மன் திருக்கோயில் திருவிழா நடந்து கொண்டு இருந்தது. திருமலை நாயக்கர் அத்திருவிழாவைக் காண மதுரைக்குச் சென்று கொண்டிருந்தபோது, நோய் மிகுதியானபடியால் பயணத்தைத் தொடரமுடியாமல், வழியில் திண்டுக்கல்லில் தங்கினார். அன்று இரவு ஒரு சித்தர் அவருடைய கனவில் தோன்றி “அரசே! நீ மதுரையில் நிலையாகத் தங்கி, மீனாட்சி அம்மையாருக்கும், சொக்கநாதப் பெருமானுக்கும் வழிபாடும் திருவிழாவும் நடத்தி ஆட்சி புரிந்து வந்தால் இந்நோய் நீங்கும்” என்றார். உடனே திருமலை நாயக்கர் அவ்வாறு நீங்குமானால் ஐந்து லட்சம் பொன்னுக்குத் திருப்பணி திருவாபரணம் செய்து வைக்கிறேன் என்று நேர்ந்து கொண்டார். மறுநாள் காலையில் அந்நோய் அவரை விட்டு நீங்கிவிட்டது. பின்பு தலைநகரையும் மதுரைக்கு மாற்றினார் என்ற இக்கதையினை  கடந்த பதிவிலேயே பார்த்தோம்.  
• திருவரங்கம் ஸ்ரீவைஷ்ணவர்களிடையே 17ம் நூற்றாண்டில் தென்கலை வடகலை பிரிவுகளின் முரண்பட்ட சச்சரவுகள் நிகழ்ந்தன. 'ஸ்ரீரங்கம் கோயில் தென்கலையாருக்கே உரிய கோயில்' என்பதை நிலைநாட்ட  போராடிய நிகழ்ச்சி திருமலை நாயக்கர் திருச்சியில் இருந்த போது நடந்தது.
திருமலை சௌரி மன்னர் திருச்சியிலிருந்த போது தீவிரமான ஸ்ரீவைஷ்ணவ சமயத்தை பின்பற்றியவராக 'பிரணதார்த்திஹர வாதூல தேசிகரான கோயிலண்ணர்' எனும் ஆச்சார்யன் திருவடி சம்பந்தம் பெற்றிருந்தார்.
கி.பி. 1630 ஆம் ஆண்டு விஜயநகர அரசரான மூன்றாம் வேங்கவனுடைய (கி.பி 1630-42) குலகுருவான 'ஏட்டூர் திருமலை குமார தாத்தாச்சார்யர்' (அல்லது) கோடிகன்யாதானம்  தாத்தாச்சார்யர், திருமலை வேங்கத்துறைவனை வழிபட்டு, ஆனந்த நிலையம் விமானத்திற்கு   பழுது பார்த்து பொன்வேய்ந்து திருப்பணி செய்து, காஞ்சி வரதராசரையும் வழிபட்டு மேற்படி திருப்பணிகளையே செய்த பிறகு திருவரங்கம் நோக்கி வந்தார். விஜயநகர மன்னரான மூன்றாம் வேங்கடவன் திருவரங்கம் பெரியகோயிலுக்கு 'கோடிகன்யாதானம் தாத்தாச்சார்யர்' வருவதற்கு முன்பே திருமலை மன்னருக்கு குருவின் வருகையை தூதனுப்பி தெரிவித்து விட்டார்.
அக்காலகட்டத்தில் திருவரங்கத்தில் பட்டர் திருமலாசார்யர்,உத்தம நம்பி, அண்ணங்கார் ஆகியோரிடையே நிலவி வந்த பகைமை உணர்ச்சி வலுத்திருந்தது. இதற்கான காரணத்தை கோயிலொழுகு (முதற்பாகம்) இறுதியில் கூறுகிறது.



"உத்தமநம்பிக்கும் பட்டர் திருமலாசார்யருக்கும் உண்டாற கலஹம்" எனும் பகுதியில் உள்ளது.
தனது குருவான அண்ணங்காரைச் சந்தித்த திருமலை சௌரி  (கோயிலொழுகு நாயக்கரை அவ்வாறே கூறுகிறது) விஜயநகர மன்னரின் விருப்பப்படி, திருவரங்கம் வருகை தரும் தாத்தாச்சார்யருக்கு தகுந்த மரியாதைகளை அளித்திடுமாறு வேண்டிக் கொண்டான். வடகலையாரான தாத்தாச்சாரியாருக்கு தென்கலையாருக்குரிய கோயில் மரியாதைகளை அளிப்பதற்கு அண்ணங்கார் உடன்படவில்லை. சிஷ்யரான தன்னுடைய. இந்த வேண்டுகோளை ஏற்காவிட்டால் அண்ணங்கார் பல ஆபத்துக்களை  எதிர்கொள்ள நேரிடும் என்று அச்சுறுத்திய போதிலும், அவர் மன்னனுடைய விருப்பத்திற்கு இணங்கவில்லை. திருவரங்த்தில் நிலவியிருந்த சூழ்நிலையை தாத்தாச்சார்யருக்கு தெரியப்படுத்தினான். இதனால் சினங்கொண்ட தாத்தாச்சார்யர் மன்னரிடம் " காஞ்சிபுரத்தில் தென்கலையார்கள் ஒன்றுகூடி இத்தகைய இடர்பாடுகளைச் செய்யமுனைந்தனர். அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை.நீ மன்னனாக இருக்க தகுதியற்றவன். இதுபற்றி நான் விஜயநகர பேரரசரிடம் தெரிவிக்கப்போகிறேன்" என்று கோபத்துடன் கூறினார். திட்டமிட்ட படி வந்த தாத்தாச்சார்யரை ஸ்தலத்தார்கள் யாரும் மமரியாதை தரவில்லை. திருவரங்கம் ப்ரணவாகார விமானத்திற்குப் பொன் வேய்வதற்காக கொண்டு வந்த தங்கத்தினை, 'திருமாலிருஞ்சோலை' சோமச்சந்த விமானத்திற்குப் பொன் வேய்ந்து விட்டு, தாத்தாச்சார்யர் வடநாட்டு யாத்திரையை மேற்க்கொண்டார். விஜயநகரபேரரசன் தன் குருவுக்கு நேர்ந்த அவமானத்தை அறிந்து, பின்னர் கிருஷ்ணராயர், விட்டலராயர் ஆகியோரை திருவரங்கத்திற்கு அனுப்பி வைத்து நடந்த நிகழ்ச்சிகளை உள்ளபடி  ஆராய்ந்து தேவைப்பட்டால் திருமலை சௌரி நாயக்கனின் தலையைக் கொய்து தனக்கு அனுப்பி வைத்திடுமாறு பணித்தான். திருமலை சௌரி குற்றமற்றவர் என்பதை அவர்கள் தீரவிசாரித்து அறிந்து விஜயநகர பேரசனுக்கு தெரியப்படுத்தினர். திருமலை சௌரியும் விஜயநகர மன்னருக்குத் தங்கத்தாலான தனது தலையையும், பல்லாயிரம் பொற்காசுகளையும் காணிக்கையாக அனுப்பி வைத்தாராம். 
தனது கோரிக்கையை ஏற்காத ஸ்ரீரங்கத்து ஸ்தலத்தார்களில் ஒருவரான தனது குரு ப்ரணதார்த்திஹர வாதூல தேசிகர் (அண்ணங்கார்) மீது வெறுப்பு மேலிட்டது. இதன் விளைவாக அவருடன் ஏற்பட்டிருந்த ஆச்சார்ய சிஷ்ய உறவை அறுத்துக் கொண்டு 'திருவானைக்காவல்' ஸ்தலத்தில் இருந்த "அய்யங்காள் ஐயன்" என்ற சைவரிடம் தீட்சை பெற்றுக் கொண்டார். பிறகே தனது தலைநகரை மதுரைக்கு மாற்றினார் என்கிறவாறு கோயிலொழுகு கூறுகிறது.
• திருவரங்கம் பெரியகோயிலில் திருமலை நாயக்கர் காலத்தில் திருமலை மன்னன்  பெயரிலோ அல்லது விஜயநகரமன்னர் பெயரிலோ எந்தக் கல்வெட்டும் பொறிக்கப்படவில்லை. மாறாக மண்டலாதிகாரிகள், சேனைத்தலைவர்கள், தனிகர்கள் ஆகியோருடைய பெயர்களில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சி… … …
 அடுத்த பதிவு- Postல ( பகுதி - 10)
பார்ப்போம்.

                  அன்புடன்

       ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்




No comments:

Post a Comment