Monday, September 17, 2018

கலையிலங்கு மொழியாளர் (பகுதி -2)




(ஸ்ரீரங்கம் கீழச்சித்திரை வீதி ஸ்வாமி பெரிய நம்பிகள் திருமாளிகை வாசலில் 07.01.2016 அன்று 'ஸ்ரீவைஷ்ணவ தாஸர்கள் என்ற சீர்மிகு ராமாநுச தாஸர்கள் ' புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது

~ |'செல்லப்பெருமாள் கோனார் கதை' |~

பற்றி அரங்கராஜன் ஸ்வாமி கூற அடியேன் கேட்டது )

¶||*    1930 ஆம் ஆண்டினின்று 1962 ஆம் ஆண்டு வரை
தீவிர திராவிடத் தொண்டராக இருந்த
மா. செல்லப் பெருமாள் கோனார் ஒரு மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி தெருவில் வாழ்ந்தவர். ’தந்தை பெரியார்’ என்றழைக்கப்பட்ட ஈ.வே.ராமசாமி நாயக்கர் மதுரை வந்தால்  செல்லப் பெருமாள் கோனார் வீட்டில் தான் தங்குவாராம்.

1962 ஆம் ஆண்டின் மார்கழி மாதத்தில் மதுரை அழகர் கோயிலில் நம் இரா.அரங்கராஜன் ஸ்வாமிகள்  திருப்பாவை உபன்யாசம் நடந்துக்கொண்டிருக்கிறார். அன்று மார்கழி கேட்டை – பெரிய நம்பிகள் திருநட்சத்திரம் வேறு. ( ஸ்ரீராமானுஜரின் ஆச்சார்யன் ஸ்ரீபெரியநம்பிகள் ஆவார் ).
“தாழ்ந்த குலத்தில் பிறந்த மாறநேர் நம்பி ஆசாரியன் திருவடிகளை அடைந்த போது (காலமான போது) மாறநேர் நம்பிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார் பெரிய நம்பிகள் என்கிற
 உபன்யாசக் கதைப் பகுதி செல்லப் பெருமாள் கோனார் அவர்களின் காதுகளில் விழ அவர் மனம் அக்கணமே ஆஸ்திக வழியினை பின்பற்றியது.
இவ்வளவு காலம் நாஸ்திகவாதம், பகுத்தறிவு என்று காலத்தை வீண் செய்துவிட்டேனே என்று மனம் வருந்தி, மறுநாள் காலை அழகர் கோயிலில்  நூபுரகங்கையில் குளித்துவிட்டு, தன்னுடைய கருப்பு துணிகளை வீசி எறிந்துவிட்டு திருமண் காப்பு, ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு நம் அரங்கராஜன் ஸ்வாமி முன்பு முன் வந்து நின்றாராம்.
 தான் ஒரு தீவிர ஸ்ரீவைஷ்ணவன் ஆக வேண்டும் ”எனக்கு சமாஸ்ரயணம் செய்துவைக்க உதவ வேண்டும்” என்று கேட்க. பெரிய நம்பிகள் பற்றி காதில் விழுந்து ஒரு இரவில் மாறிய உங்களுக்கு (நம் ஸ்வாமியை விட வயதில் மூத்தவர் செல்லப்பெருமாள் கோனார்) ஸ்ரீரங்கத்தில் பெரிய நம்பிகள் திருமாளிகையில் அவர்கள் வம்சத்தவர்கள் செய்து வைப்பது தான் நன்றாக இருக்கும் என்று கூற செல்லப் பெருமாள் கோனாரும் ஸ்ரீரங்கம் விரைந்தாராம். இரவு போய் சேர்ந்த அவர் பெரிய நம்பிகள் வீட்டு வாசலில் படுத்துக்கொண்டார். காலை பெரிய நம்பிகள் வீட்டில் இருந்தவர்கள் விசாரிக்க இவர் வந்த காரணத்தை சொல்லி அவர்களிடம் 'சமாஸ்ரயணம்' செய்துக்கொண்டு உண்மையான ஸ்ரீவைஷ்ணவனாக மாறினார்.
அதன் பின் ஸ்ரீகாஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகளிடம் இருந்துக்கொண்டு அவருக்கு பல  கைங்கரியம் செய்துக்கொண்டு இருந்தார். அண்ணங்கராசாரியார் செய்த சொற்பொழிவுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து 1976ஆம் வருஷம் ஒரு சின்ன புத்தகத்தை அச்சடித்து பலருக்கு கொடுத்தார். ¶||*

 ✒  பரம்பரை பரம்பரையாக காடிக்கஞ்சி அல்லது புளிஞ்சதண்ணி எனும் மருந்து தரும் வைத்தியப் பிண்ணனியும், மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணனின் மலரடி தொழும் வைணவப்பிண்ணனியும் பெற்ற திருமால் சோலைமணி (இராமக்காரர்) என்கிற வைணவமணி மட்டுமல்லாது வைணவப் பற்றுடைய வடக்குமாசி வீதி இடையர்கள் பலரும் நம் அரங்கராஜன் ஸ்வாமியின் அன்பிற்குரியோராய் இருந்தனர். அண்ணா கடை நம்மாழ்வார் நாயுடு, அவரது தம்பி சௌந்தரராஜன் நாயுடு, கந்தகப்பொடி கைங்கர்யம் டிரில் மாஸ்டர் சௌந்தரராஜன் நாயுடு, கோவிந்த ராமாநுச தாஸர் (அரங்கராஜன் ஸ்வாமிக்கு  ஆதிசேஷனைப் போன்றவர்), மதுரை ஸ்ரீசரண்யாபிமத விஷ்ணுசித்த ராமாநுச கூடம் டிரஸ்ட்டில் ஒருவரான தியாகி T.V. ராமக்கோனார், அ.வீ.நவநீதகிருஷ்ணன் ( பலசரக்கு கடைஅண்ணா), வே.ராமலிங்கம் (இவர்கள் இருவரும் அரங்கராஜன் ஸ்வாமிக்கு துவாரபாலகர்கள் போன்றவரர்கள்),மதனகோபாலன்(அண்ணா) ஞா.ராஜேந்திரன்(க.இ.பரம்பரை),ரெங்கராமாநுச தாஸர்(அருணகிரி), இரா.மணிகண்டன், ஆகியோர் அரங்கராஜன் ஸ்வாமிக்கு அன்பர்களாய் இருந்த வடக்கு மாசி வீதி வைணவ மணிகள் ஆவார்கள்.

  ✒ கூடலழகர் திருக்கோயிலில் மார்கழி மாதம் அத்யயன உத்ஸவம்  திருவரங்கத்தில் நடப்பது போலவே சீரும்,சிறப்புமாக நடந்திட காரணமாக இருந்தவர் நம் அரங்கராஜன் ஸ்வாமி ஆவார்.
  
✒ 2006 ம் ஆண்டு ஸ்ரீகூடலழகர் திருக்கோயில் மகாசம்ரோட்சணம் நடந்திட பெரும் பங்கு வகித்தார். அக்கோயிலில் வாரம் தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையன்று தெற்கு ஆடி வீதி பகுதியில் ஸ்ரீகூடலழகர் சித்திரத்தின்  கீழே திருமால் திருக்கதைகளை சாதாரண சம்சாரிகளும் உய்யும்படி சொல்லிவந்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடலழகர் கோயிலுக்கு அருகிலுள்ள ஸ்ரீசரண்யாபித விஷ்ணு சித்த ராமாநுச கூடத்தில் வைணவ அன்பர்களுக்கு மட்டும் ரஹஸ்ய க்ரந்த காலட்சேபம் நடத்தி வந்தார்.  வைகுண்ட ஏகாதசியன்று மட்டும் (மார்கழி மாதத்து) திருப்பாவை உபன்யாசத்தினை 'திருமோகூர்' திவ்யதேசத்தில் நடத்துவார். அன்று வைணவ அன்பர்கள் திருக்கூடல் திவ்யதேசத்திற்கு நடந்தே  செல்வார்களாம். வழித்துணைப்பெருமாள் அல்லவா நம் திருமோகூர் ஆப்தன். இருந்த போதிலும்  மதுரை சார்ந்த வைணவ மணிகள் 1980,90களில் அரங்கராஜன் ஸ்வாமியையே வழித்துணைப்பெருமாளாகக் கொண்டாடினர் என்றால் மிகையாகாது.
திவ்யதேச யாத்திரைகளுக்கு வைணவ அன்பர்களை ஒன்றினைத்து அமைப்பாளராகவும், வழிகாட்டியாகவும் கைங்கர்யம் செய்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

  ✒ மதனகோபால ராமாநுசதாஸர், திருக்கூடல்.செ.ஜகந்நாத பராங்குச தாஸர்,கிருஷ்ணப்பிரியன் போன்ற இளைய தலைமுறை பாகவத மணிகள் அரங்கராஜன் ஸ்வாமிக்கு மிகவும் அணுக்கர்களாய் இருந்தனர். இவர்களில் ஸ்வாமியின் பேச்சாற்றல் வாரிசாக ஜகந்நாத பராங்குச தாஸரும், அறிவாற்றல் வாரிசாக மதன கோபால ராமாநுச தாஸரும் திழ்ந்தனர். மதன கோபால தாஸர் நம் அரங்கராஜன் ஸ்வாமியின் 'மன்னு புகழ் மணவாள மாமுனிகள்' எனும் படைப்பிற்கு 'நம்பெருமாள் வனவாசம்' பற்றிய பகுதிக்கு பெரும் உதவியாக இருந்து ஆச்சார்ய அபிமானம் பெற்றவர். இதனை அரங்கராஜன் ஸ்வாமியே அந்நூலின் நன்றியுரையில் பதிவு செய்துள்ளார்.  இதனை ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாச்சாரியர் படைப்பாக 'நம்பெருமாள் வனவாசம் அல்லது திருவரங்கன் உலா, என்ற தலைப்பிடப்பட்ட நூலின் தொகுப்பாசிரியராக கைங்கர்யஸ்ரீ. மதனகோபால தாஸரை சேர்துக்கொண்டார்.



மேலும் சீர்மிகு ராமாநுச தாஸர் நூலின் அட்டைப்படமான ஸ்ரீராமாநுசர்  மற்றும் தாஸர் கோஷ்டி படமானது மதன் ஸ்வாமியின் படைப்புத் திறமையினை பறைசாற்றும் கைங்கர்மாகும்.



மதுரை  கொடிக்குளம் ஜோதிஷ்குடியில் வைணவ குருபரம்பரை ஆச்சார்யரான பிள்ளை லோகாச்சாரியர் திருவரசு நம்பெருமாள் மறைத்து வைக்கப்பட்ட குகை ஆகியனவற்றை கண்டுபிடித்து அரங்கராஜன் ஸ்வாமி மூலம் உலகிற்கு அறிவித்தவர் மதன் ஸ்வாமியே ஆவார். அடுத்ததாக கிருஷ்ணப்பிரியன்  நம் அரங்கராஜன் ஸ்வாமிக்கு வாழித்திருநாமமே பாடியுள்ளார் என்றால் அவரது ஆச்சார்ய ர் பக்தியின் மேன்மையை விரிவாக கூறவேண்டியதில்லை.

✒ பேரா.தொ.பரமசிவன்,பேரா.ம.பெ.சீனீவாசன், பேரா. வெ.வேதாசலம், சாந்தலிங்கம் போன்ற மதுரை சார்ந்த ஆய்வாளர்களும், திரு.சொ.சொ.மீ.சுந்தரம், திரு. தா.கு. சுப்பிரமணியம் போன்ற சமயச் சொற்பொழிவாளர்களும் நம் அரங்கராஜன் ஸ்வாமியிடம் நட்பு பாராட்டினர். மதுரை கம்பன் கழகம் அரங்கராஜன் ஸ்வாமி என்கிற ஒரேஒரு வைணவ பேச்சாளரைங் கண்டு திகைத்தது என்றால் அது மிகையாகாது.  கம்பநாட்டாழ்வார் ஒர் தலைசிறந்த வைணவர் என்கிற வாதத்தின் மூலம் மாற்றுச்சிந்தனையாளர்களை அதிர்வடைய வைத்தார். ஸ்வாமியின் பேச்சாற்றலைக் கண்டு சாலமன் பாப்பையா பட்டிமன்ற நடுவர்களும் போன்றோரும் வியந்துள்ளனர்.

✒  ஸ்ரீ உ.வே.கிருஷ்ணஸ்வாமி  அய்யங்கார் (ஸ்ரீஸுதர்சனர் ஸ்வாமி) மற்றும் ஸ்ரீ.உ.வே. கிருஷ்ணமாச்சாரியார் (ஸ்ரீபாஞ்ச சன்னியர் ஸ்வாமி- ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ) ஆகியோர்களின் அன்பிற்குரியவர்  நம் அரங்கராஜன் ஸ்வாமி. இரு ஸ்வாமிகளின் பதிப்பு நூல்களுக்கு நம் அரங்கராஜன் ஸ்வாமி அணிந்துரை கட்டாயம் இடம் பெற்றே தீரும்.  பாஞ்ச சன்னியரான கிருஷ்ணமாச்சாரியாரின் வெளியீடான 7000 பக்கமுடைய கோயிலொழுகு நூலிற்கு நம் அரங்கராஜன் ஸ்வாமியின் அணிந்துரையானது  'ஸ்ரீராமபிரானுக்கு பட்டாபிஷேகம்' செய்த செயலை ஒத்திருந்தது.

✒ ஸ்ரீமத்ராமாயணம்,ஸ்ரீமத் ஹாபாரதம், ஸ்ரீமத்பாகவம், ஸ்ரீரங்க மாஹாத்ம்யம், ஸ்ரீவேங்கடாசல மாஹாத்ம்யம், ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்யம்,ஸ்ரீயாதவாத்ரி மாஹாத்ம்யம் ,ஆழ்வார்,ஆச்சார்யர்கள் வைபவங்கள் ஆகிய தலைப்புகளில் 1997 முதல் 2009 வரை ஸ்ரீகூடலழகர் திருக்கோயிலில் நம் அரங்கராஜன் ஸ்வாமி திருவாய் மலர்ந்து கூறிய கதாகாலட்சேபங்களை கேட்கும் பாக்கியம் அடியேனுக்கும் கிடைத்தது.

|மதுரவல்லி மணாளன் ஸ்ரீகூடலழகர் சங்கல்பம்.|

அடியேன் ராமாநுச தாஸன்

                        அன்புடன்

             ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
       E.P.I. இராம சுப்பிரமணியன்

 


கலையிலங்கு மொழியாளர் (பகுதி -1)





1936ம் ஆண்டு திருக்கோட்டியூரில் தென்கலை வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்த நம் அரங்கராஜன் ஸ்வாமி மதுரைக் கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றியுள்ளார். 'திருவாய்மொழிப் பேருரையாளர் நம்பிள்ளை உரைத்திறன்’ என்கிற தலைப்பில்  1981ம் ஆண்டு ஆய்வு மேற்க்கொண்டு  மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வழங்கிய முனைவர் (டாக்டர் - Ph.D) பட்டம் பெற்றார்.

 தொட்டாச்சாரியர் திருமாளிகை ஸ்ரீ.உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் பெரியப்பங்கார் ஸ்வாமியிடம் திருவடி சம்பந்தம் பெற்ற நம் ஸ்வாமிக்கு  காஞ்சிபுரம் மஹாவித்வான் பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ.உ.வே. அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமிகளால் 'கலையிலங்கு மொழியாளர்' என்று பாராட்டுரையும் கிடைத்தது.




கலையிலங்கு மொழியாளர், மதுரைப்பேராசிரியர்,Dr.இரா.அரங்கராஜன் M.A., Ph.D., அவர்கள் ஆற்றிய கைங்கர்யங்கள் சிலவற்றைக் காண்போம்.

 ✒  ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாய க்ரந்தங்களைப் பெரியோர்பால் முறையாகப் பயின்று அவற்றை பல திருமால் திருத்தலங்களில்  அனைவரும் உளங்கொள்ள இன்றும் சொற்பொழிவு ஆற்றிவரும் நம் அரங்கராஜன் ஸ்வாமி வைணவப்பெரியார்களின் மணிவிழா மலர்களி ல் அரிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதியும், வைணவ மாநாடுகளில் திருமால் திருநெறியை பரப்பியும் வந்த சிறப்பைப் பெற்றவர்.
 ✒ சுமார் நாற்பது  ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை கூடலழகர் திருக்கோயிலில் திருப்பாவை வியாக்யானம் செய்த பெருமைக்குரியவர்.
  ✒ கீதாசாரியன், திருக்கோயில், கலைமகள் ஆகிய மாத இதழ்களில் வைணவம் சார்ந்த சிறுகதை மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.



 ✒  திருக்கோட்டியூர்ப் பிள்ளைத்தமிழ், திருப்பாவை வியாக்கியானகள், பெரிய திருமொழி திவ்யார்த்த தீபிகை, அருளிச்செயல் பாகவதம், காரேய் கருணை இராமாநுசன் முதலிய நூல்களைப் பதிப்பித்தார்.
✒  ஸ்ரீமணவாள மாமுனிகள் வைபவம், ஸ்ரீவானமாமலை ஜீயர் வைபவம்,திருவாய்மொழிப்பிள்ளை வைபவம், ஸ்ரீவைஷ்ணவ தர்மம், வைகுந்தம் புகும் மண்ணவர் யார்?, நூற்றியெட்டு திருப்பதி மாலைத் தொகுப்பு பெரியாழ்வார் திருமொழி உரை, தமிழக கோயிற்கலை ( தமிழக திருக்கோயில்களின் வழிபாட்டு வரலாறு~ஆண்டு-2000),ஸ்ரீவைஷ்ணவ தாஸர்கள் என்ற சீர்மிகு ராமாநுச தாஸர்கள் முதலிய நூல்களை எழுதி வெளியிட்டார்.
✒ தனது சதாபிஷேக (01.06.2016) வெளியீடான ஸ்ரீவைஷ்ணவ லட்சண நிர்ணயம், பட்டர்பிரான் ஜீயர் அருளிச்செய்த அந்திமோபாய நிஷ்டை,திருநட்சத்திரமாலை,நித்யானுசந்தானம்,திருவாராதனக்ரமம் ஆகிய நூல்களுக்கு தொகுப்பாசிரியர் நம் ஸ்வாமியே ஆவார்.
 ✒  மதுரை வட்டார வைணவத் தலங்களுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு விழா மலர்கள்,மற்றும் ஸ்தலபுராணங்கள் ஆகிய பலவற்றிற்கும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
திருமாலிருஞ்சோலை அழகர் பால் தீராக்காதல் கொண்ட நம் அரங்கராஜன் ஸ்வாமிக்கு மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி இடையரான 'திருமால் சோலை மணி' (இராமக்காரர்) எனும் வைணவ மணி அன்பராக நண்பராக வாய்த்தார். அதற்கு முக்கிய காரணம் 'கலையிலங்கு மொழியாளர்' எனும் பட்டமளித்த காஞ்சீபுரம் வித்வான் ஸ்வாமிகளின் முகச்சாயல் அவர் கொண்டிருந்ததாலேயே ஆகும். மேலும் மா.செல்லப்பெருமாள் கோனார் சார்ந்த வடக்கு மாசி வீதிக்காரர் வேறு.

அவர் யார் மா.செல்லப்பெருமாள் கோனார்?   அதை அடுத்த பதிவு - Post ல பார்ப்போம்.

அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்
 

Tuesday, September 4, 2018

கார்ப்பரேட் கம்சன் காம்ரேட் கண்ணன்





இந்த பூமியில் மனிதர்களின் பாவ மூட்டைகள் மலை கணக்கில் பெருகி போனதால்,அதனை தாங்க முடியாத பூமா தேவி, நிலைமை மோசமாவதற்குள் திருமாலின் உதவியை நாடியதால், திருமாலும் கண்ணனாக அவதரித்து துஷ்டர்களை நிக்ரஹம் செய்து பூமியின் பாரத்தை குறைத்தார். (கண்ணனாக
அவதரித்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படும் புராண மரபுக்கதை)

பூமிக்கு பாரமாக மகாபாபியான
கம்சன் என்ற அரசன் தீய சக்தியின்  வடிவமாகவே  வட மதுராவை ஆண்டு வந்தான் கொடுங்கோலன் ஆவான்.  தீய சக்தியின் உச்சத்திற்கே சென்றது கம்சன் செய்த பாவங்கள் அனைத்தும்.

வடமதுரை,கோகுலம் வாழ் இடையர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டினான் அசுரகுணமுடைய கம்சன்.
சர்வாதிகார மன்னனான கம்சன் இடையர்களுக்கு கடுமையான வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக இடையர்கள் வெண்ணெயை விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள்.
தவறான முறையில் வரி விதித்து அப்பாவி மக்களைத் துன்புறுத்தும் சர்வாதிகார கம்சனிடமிருந்து காப்பாற்றவே காம்ரேட் கண்ணபிரான் வெண்ணெயைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். மேலும் எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான். பொதுவுடைமை என்பது முழுமுதற்கடவுளின்  பூர்ண அவதாரமான கண்ணபிரானின் முதற் கொள்கையாகவே இருந்தது என்று கூறிவதில் பிழையேதுமில்லை எனலாம்.
ஏழைப்பங்காளன் ராபின் ஹுட் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? பணக்காரர்களிடம் இருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் இவனை பற்றி ஏராளமான நாவல்களும் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. அவனுக்கெல்லாம் கண்ணபிரான் முன்னோடி ஆவார்.

புராண கால கார்ப்பரேட் கம்சனிடமிருந்து அறிவொன்றுமில்லாத ஆயர்மக்களை காப்பாற்றிய  பொதுவுடமை போராளியான காம்ரேட் கண்ணன் பிறந்தது முதல் இறப்பு வரை அதை நிரூபித்திருக்கிறார். கடைசி வரை நாடோடி மன்னனாகவே வாழ்ந்தவர். எந்த தேசத்திற்கும் அவன் அரசனாக பொறுப்பேற்கவில்லை. அரச பதவி பலராமனுக்கே சென்றதாக புராண மரபு கூறுகிறது.

கண்ணபிரானுக்கு வெண்ணெய் மிகவும் விருப்பமானது என நினைத்து அவரது பக்தர்கள் அதை அவருக்கு நிவேதனம் செய்கின்றனர். உண்மையில் கண்ணன் (ஏழைக்குசேலனின் ஒரு பிடி அவல் மீதே தீராக்காதல் கொண்டு காத்திருந்தாராம்.)

 இடையர்கள் வெண்ணையை உறிப்பானையில்  வைத்திருந்தனர். அதை கண்ணபிரான் அடித்து உடைத்து திருடிய லீலையை நினைவு கொள்ளும் வகையில் இன்றும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழாக்காலங்களில் தமிழகத்தில் உறியடி உத்ஸவம் நடைபெறுகிறது.  இதில்
வரகூர் எனும் ஊரில் ஆண்டுதோறும் நடைபெறும் "ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி' நன்னால் பத்து தினங்களுக்கு, காலம் காலமாக நடத்தப்படுகின்றது. ( இவ்வூர் தஞ்சாவூரில் இருந்து 24 கி.மீ. தூரத்தில் கண்டியூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் இருந்து 1 கி.மீ. தென்புறம் அமைந்துள்ளது.)

 இவ்வூர் உறியடி உத்ஸவம் மற்றும் வழுக்குமரம் ஏறுதல் போன்ற விழாக்கள் உலகப்புகழ் பெற்றவை. இதனால் இவ்வூரும் ஆலயமும் உலகறிய சிறப்புப் பெற்றுள்ளது பெருமையாகும். ஆனால் இவ்வூரில் இருப்பதோ ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் ஆலயம்! கண்ணன் கோயில் இல்லாமல் உறியடித் திருவிழா நடைபெறுவது ஆச்சர்யம்.




ஆண்டு தோறும் ஆவணியில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள், அதாவது காயத்ரி ஜபத்தன்று தொடங்கி, பத்து நாட்கள் இவ்விழா நடைபெறும். உறியடி நாளன்று காலையில் வெண்ணெய் நிரம்பிய தங்கக் குடத்தை அணைத்தபடியே வெள்ளிப் பல்லக்கில் ஸ்ரீநவநீத கிருஷ்ணனாக இக்கோயில் உற்சவமூர்த்தி வீதி உலா வருவார். அன்று இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உறியடி கிருஷ்ணர் அலங்காரத்துடன் புறப்படுவார்.
தலையில் முண்டாசும், நெற்றியில் திருமண் காப்புடன், உடம்பில் போர்வை போர்த்திக் கொண்டு, காலில் சலங்கை கட்டிக் கொண்டு ஒரு கூட்டம் இடையர்கள் போல வேடமணிந்து
உறியடி மரத்தை வந்தடைவார்கள். மிருதங்கம் போன்று அமைப்பில் உறி கட்டி, அதில் கண்ணனுக்கு விருப்பமான முறுக்கு, சீடை, தட்டை போன்ற தின்பண்டங்களையும் மண்பாண்டத்தில் வைத்துத் தொங்க விடுவார்கள். மற்றொரு நுனியில் நீண்ட கயிற்றைக் கட்டி வைத்திருப்பார்கள்.
கையால் எட்டிப் பிடிக்க முடியாமல், இளைஞர்கள் தடிகொண்டு அடிப்பார்கள். அதற்கும் இடையூறு செய்வதுபோல் ஊர் மக்கள் இவர்கள் மீது தண்ணீணரைப் பீய்ச்சும் குழலால் முகத்தில் தண்ணீரை அடித்து, பார்வையை மறைப்பார்கள். முடிவில் யாராவது ஒருவர் இதில் வெற்றி பெறுவார். பின் கைப்பற்றிய தின்பண்டங்களை அங்குள்ள பலரோடும் பங்கிட்டு உண்டு மகிழ்வர்.



வரகூரில் 1868-ல் பிறந்து 1935 வரை வாழ்ந்த ஸ்ரீநாராயணகவி என்பவர் “கிருஷ்ண சிக்யோத்ஸவம்’ என்ற பெயரில் வடமொழியில் ஒரு காவியம் பாடியுள்ளார். சிக்யோத்ஸவம் என்றால் உறியடி உற்சவம் என்று பொருள். சுமதி, சுகுணன் என்ற இரண்டு கின்னரர்கள் பூலோகத்திற்கு வந்து வரகூரை அடைந்து, உறியடி உற்சவத்தைக் கண்டு மகிழ்ந்து, தமக்கிடையே உரையாடும் விதமாக இவ்விழாவைப் பற்றி இந்நூலில் வர்ணிக்கப்படுகிறது.  உத்ஸவத்தின் தத்துவார்த்தம்.

உறியடி நமது ஆசைகள்; வழுக்குமரச் சறுக்கல்கள் நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்கள்; தண்ணீர் அடித்து சறுக்க வைப்பது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சோதனைகள். இவையெல்லாம் நம்முடைய அஞ்ஞானங்கள். வைராக்கியத்தோடு முடிவில் உச்சியை அடைவது என்பதுதான் நாம் பெறும் ஞானம் அல்லது இறையனுபவம் ஆகும்.

வரகூரைத் தொடர்ந்து மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி தெரு இடையர்கள் நடத்தும் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் திருவிழா புகழார்ந்தது எனலாம்.

 இப்பகுதியில் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் பலர் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவரான பதுமைக் கம்பெனி வீரணக்கோனார் பங்காளியான பட்டிக்காரர் ராமசாமிக்கோன் அவர்களால் உறியடி விழா சிறப்பாக நடத்தப்பட்டது.


ராமசாமிக்கோனாருக்கு ஆண்வாரிசு இல்லாததால் அவரது பங்காளிகள் குடும்பத்திற்கு உறியடி உரிமை கை மாறியது. இராமாயணச்சாவடியின் மேற்கு பகுதியில் உள்ள சிறு சந்தில் உள்ள "நல்லதங்கை கோயில்" எனும் அவர்களின் சிறு தெய்வக்கோயிலிலிருந்து தமது பங்காளிகளுடன் திருமண் காப்பிட்டு உறியடி கம்புகளுடன் புறப்பட்டு வந்தபிறகு உறியடி உத்ஸவம் ஸ்ரீநவநீத கிருஷ்ணன் திருமுன்பு தொடங்கும்.  பிறகு வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றோடு அன்றைய இரண்டாம் நாள் ஸ்ரீஜயந்தி உத்ஸவம் நிறைவு பெறும்.

 கம்சன் பற்றி நெல்லை மாவட்டங்களில் வில்லுப்பாட்டு பாடப்பட்டன. சுவடிகளில் கம்சனது கதைப்பாடலை பதிவு செய்து வைத்துள்ளனர். அதில் கார்ப்பரேட்  சிந்தனையாளன் கம்சனின் கதையோடு காம்ரேட் கண்ணன் லீலைகளும் பாடப்பட்டுள்ளன.

கம்சன் வதமான பிறகு அவனது ஆன்மா வைகுண்டத்தை அடைந்தது என்பது புராணக்கதை.
 ‘என்ன? கெட்டவனுக்கு வைகுண்டமா?’ என்று அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடையாதீர்கள்.

மிகக் கொடூரமான கொடுமைக்காரன் என்றாலும், சதா சர்வ காலமும் கண்ணனையே நினைத்தவன் அவன். அவனால் தனக்கு மரணம் ஏற்படுமோ என பயந்து கொண்டே கடவுளை மட்டுமே சிந்தித்தவன். ஆகையால் தான் கம்சனுக்கு வைகுண்டத்தில் ‘சாரூப்ய சொரூபம்’ கிடைத்தது. இந்த சொல்லுக்கு ‘நாராயணனைப் போலவே உருவமெடுத்தல்’ என்பது பொருள். வைகுண்டத்தில் இருப்பவர்கள் நாராயணனை வணங்கி, நாராயண வடிவத்தைப் பெறுவார்களாம். அந்த வடிவம் கருணைக் கடலான கண்ணனால், கல் நெஞ்சம் கொண்ட கம்சனுக்கும் அருளப்பட்டது.




ஒருவன் பூமியில் இருக்கும் போது என்ன நினைக்கிறானோ அதற்கேற்ற மறுபிறவியை அடைகிறான். கம்சன் பயத்தின் காரணமாக கண்ணணையே நினைத்தாலும், அவனையே நினைத்துக் கொண்டிருந்ததால் இந்த உயர் நிலையை அடைய முடிந்தது.

 



அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் 

Monday, September 3, 2018

கண்ணன் பிறப்பும் பாகவத பாராயணமும்






பூபாரம்  குறைக்க மாபாரதப் செயய்த
கண்ணபிரான் பிறந்த ஆவணி (சிரவண)மாத ரோஹிணி நட்சத்திரம், மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு ஸ்ரீஜெயந்தி விழா பாரதம் முழுவதும் சாதி,மத பேதமின்றி கொண்டாடப்படுகிறது.

இந்த குழந்தைக்கண்ணன் நமக்கெல்லாம் ரட்சகனாய் இருப்பவன்.
ஏனெனில், அவனே இந்த உலகில் எல்லாமாக இருக்கிறான். நாம் பகவான் கண்ணபிரானை நம் உறவினனாகவும் பார்க்கலாம். ஆம்…தாயாய், தந்தையாய், குருவாய், குழந்தையாய், நண்பனாய்,
அரசனாய், சீடனாய், மந்திரியாய்,  நல்லாசிரியனாய், தெய்வமாய்,  சேவகனாய்…எப்படி வேண்டுமானாலும் அவனைக் காணும் உரிமையை அவன் நமக்கு அளித்துள்ளான்.
(மகாகவி பாரதியின் அனுபவம் - கண்ணன் பாட்டு)

கண்ணன் பிறப்புக் கொண்டாட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பெரியாழ்வாரிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு வண்ணமாடங்கள் பாசுரமே சிறந்த உதாரணம். பெரியாழ்வார் தன்னை யசோதையாகவே பாவித்து பாடிய பாசுரங்கள் படிக்க படிக்க நாமும் யசோதா பாவம் பெறுகிறோம் அல்லவா?





ஸ்ரீஜெயந்தியன்று நம் வீட்டைத் தூய்மைப்படுத்தி, வாசல்படியில் இருந்து பூஜை அறை வரை கண்ணபிரானின் திருப்பாதங்களைப் பச்சரிக்கோல மாவால் அழகாக வரைந்து மகிழ்கின்றனர்.
சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், அவனது பாதச் சுவடுகளை "ஸ்ரீ கிருஷ்ண பாதம்" எனக் கூறிக் கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்பது தென்கலை ஐயங்கார்களின் வழக்கமாகும்.


 இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம் எனக் கருதுகின்றனர்.
 அதாவது கண்ணபிரானே தன் திருப்பாதங்களைப் பதித்து நடந்து வந்து, பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக்கொள்கிறார் என்பதாகும்.
அன்று காலையில் இருந்து ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு கண்ணன் படக்கதைகள் தந்து படிக்க வைக்கலாம்.  நம் வீட்டு தெய்வ வழிபாட்டு அறையில்
 கண்ணபிரான் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான,
தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். இவற்றுடன் நைவேத்திய பட்சணங்களும் இடம்பெற வேண்டும்.
வெல்லச்சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தேன்குழல், லட்டு, மைசூர்பாகு, பால்கோவா, அவல், வெல்லம், தயிர், பால், வெண்ணெய், திரட்டுப்பால், பர்பி,
பூரி மற்றும் பழ வகைகளான நாவற்பழம், கொய்யாபழம், விளாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம்.
வீட்டில் வழிபாடும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணபிரானின் திருக்கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகளைக் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.
அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து கண்ணபிரானின் லீலைகளை கூறும் பாகவத மகா புராணத்தை படித்தல் சிறப்பு.


பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.
இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசிர்வாதம் நமது இல்லத்திற்கும் உள்ளத்திற்கும் கிடைக்கும்.
வடமொழியில் வியாசர் எழுதிய பாகவதம் என்னும் நூல் திருமாலின் ஆறு அவதாரங்களையும் 25 கீதைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு 36,000 சுலோகங்களில் எழுதப்பட்டுள்ளது.
இதனை அருளாளதாசர் என்பவர் 130 சருக்கங்களில் 9147 பாடல்களால், 16ஆம் நூற்றாண்டில் தமிழில் பாடியுள்ளார்.
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் அதற்கு ஏது  நேரம் என்றிருப்பார்களுக்கென ஆழ்வார்கள் பாசுரம் கொண்டு "பாசுரப்படி பாகவதம்" எனும் நூல் படைக்கப்பட்டுள்ளது. 


தேவகியின் வயிற்றில் பிறந்த பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் உள்ள யசோதையிடமே வளர்ந்தான். அவன் தன் தாய் யசோதையிடம் புரிந்த குறும்புகள் ஏராளமானவை.
பாகவத்தில் தசம ஸ்கந்தத்தில் கண்ணன் பிறப்பு முதல் தொடங்கி அனைத்தையும் சுருக்கமாக தொகுக்கப்பட்ட அற்புதமான நூலாகும்.
கண்ணபிரானுடைய இனிமையான பால்ய லீலைகள் தெய்வீகமானவை. அதை ஆழ்வார்களின் ஈரத் தமிழ்ப் பாசுரங்களில் எளிமையாகப் படிப்பதால் எல்லா நலனும் வளமும் கிடைக்கும் என்பது வைணவச் சான்றோர்கள் வாக்காகும்.





இனிய ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள்!


                     அன்புடன்

           ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
   E.P.I. இராமசுப்பிரமணியன்



 பாசுரப்படி பாகவதம் : -
Download link:-

https://archive.org/details/subburaji2009_gmail_20180903




Sunday, September 2, 2018

ஸ்ரீ பராங்குசாஷ்டகம்





||ஸ்ரீ பராங்குசாஷ்டகம்||

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனச்ய யதேவ நித்யம்|
யத் வா சரண்யம் அசரண்ய ஜனச்ய புண்யம்
தத் சம்ச்ரயேம வகுளா பரணாங்க்ரி யுக்மம்||     1

பக்தி பிரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண|
வேதார்த்த ரத்ந நிதி அச்யுத திவ்ய தாம
ஜியாத் பராங்குசபயோதி அஸீமபூமா||     2

ருஷிம் ஜூஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவ உதிதம்|
சஹச்ர சாகாம் யோத்ராஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம்||     3

யத் கோ சஹஸ்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம்
நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்ர|
யந் மண்டலம் ஸ்ருதிகதம் பிரணமந்தி விப்ரா
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய||     4

பத்யுச் ஸ்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம்|
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம்||     5

சடகோப முநிம் வந்தே சடாநாம் புத்தி தூஷணம்|
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் திந்த்ரிணீ மூல சம்ஸ்ரயம்||     6

வகுளா  பரணம் வந்தே ஜகதா பரணம் முநிம்|
யச் ஸ்ருதேருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா||      7

வகுளா லங்க்ருதம் ஸ்ரீ மத் சடகோப பதத்வயம்|
அஸ்மத் குல தனம் போக்யம் அஸ்து மே மூர்த்நி பூஷணம்||      8

நமத ஜநச்ய சித்த பித்தி பக்தி சித்ர தூலிகா
பவாஹி வீர்ய பஞ்ஜநே நரேந்திர மந்திர யந்த்ரணா|
பிரபன்ன லோககைரவ பிரசன்ன சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத் துநோது மே தம||    9

||  இதி  ஸ்ரீபராங்குசாஷ்டகம் ஸம்பூர்ணம்  ||

 
இந்த ஸ்ரீபராங்குசாஷ்டகத்தில்

முதல் இரண்டு ஸ்லோகங்கள்
• ஸ்ரீ கூரத்தாழ்வான் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் அருளியவை

மூன்றாவது ஸ்லோகம்
• ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் அருளியது

• அடுத்த நான்கு ஸ்லோகங்கள் பூர்வருடைய முக்தங்கள்

• இறுதி ச்லோகம் மணவாள மாமுனிகளின் பூர்வாச்ரம திருப் பேரரான
ஆச்சார்யா பௌத்ரர் என்றே பிரசித்தி பெற்ற
ஜீயர் நாயனார் அருளிச் செய்தது (நக்ஷத்ர மாலிகா ஸ்லோகம்)


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்


அடியேன் ராமாநுச தாஸன்

 அன்புடன்
 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம் 
E.P.I. இராம சுப்பிரமணியன் : 

ஸ்ரீபராங்குசாஷ்டகம் : Book link

https://archive.org/details/subburaji2009_gmail_20180828_1022

ஸ்ரீராங்குசாஷ்டகம் Audio link:-https://archive.org/details/subburaji2009_gmail_20180902_1412