Friday, October 26, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 8)




அரசியல் வரலாற்று மரபு பகுதி - 7ன் தொடர்ச்சி.... 


••மகா மண்டலேசுவரரும் நாயக்கரும்:-

          • மேய்ச்சல் நில வாழ்க்கையுடன் சிதறிப்பரந்து கிடந்த ஒரு பெரும் மக்கள் கூட்டம்  ஒரு மகாஞானியின் சொற்களால் ஆவேசம் கொண்டு திரண்டெழுந்து ஒரு பேரரசை தோற்றுவித்தது என்பது ஓர் ஆச்சரியமூட்டும் நிகழ்வாகும். கன்னடத்தில் ‘மாதவ கருணா விலாசா’என்ற பழைய நூல் மொத்த விஜயநகர சாம்ராஜ்யத்தையே 'மாதவரின் கருணை' என்று குறிப்பிடுகிறது. ஆம்!  அது உண்மையே!
கி.பி.1336-இல் முதலாம் ஹரிஹரரும் முதலாம் புக்கரும் மாதவராகிய குரு வித்யாரண்யரின் துணையோடு விஜய நகரப் பேரரசை நிறுவினார்கள். [இன்று கர்நாடக மாநிலத்தில் பெல்லாரியிலிருந்து 56 கி.மீ. தொலைவிலும், ஹாஸ்பெட் இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் சிதைந்த நிலையில் இருக்கிறது விஜயநகரம். விஜயநகரத்தைச் சங்கமர், சாளுவர், துளுவர், ஆரவீட்டார் ஆகிய நான்கு மரபினர் ஆட்சி புரிந்தனர்.]
விஜயநகரம் தொடங்கிய
காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்தவர் (கி.பி.1339-1363) இராஜ நாராயணச் சம்புவராயன் என்பவர். சம்புவராயர்களின் அரசிற்குப் 'படைவீடு ராச்சியம்' என்று பெயர். இராஜ நாராயணச் சம்புவராயனின் தலைநகரம் வேலூர் மாவட்டத்திலுள்ள விரிஞ்சிபுரம். இன்றைய காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் அடங்கியது படைவீடு ராச்சியம். இவர்களது முன்னோர் திண்டிவனப் பகுதியில் (கிடங்கில்) இருந்த ஓய்மா நாட்டிலிருந்து வந்தவர்கள். சங்க இலக்கிய நூலும், பத்துப்பாட்டில் ஒன்றுமான 'சிறுபாணாற்றுப்படை' ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் மீது இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது என்பதைப் படித்திருக்கலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட படையாச்சிகள் எனப்படும் வன்னிய குல சத்திரிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் சம்புவராயர்கள் ஆவார்கள்.
• சங்கம மரபினரான முதலாம் புக்கரின் மகன் குமார கம்பணனே தமிழகத்தைக் கைப்பற்றி விஜய நகரப் பேரரசிற்கு உட்படுத்தியவர். கி.பி.1362 நவம்பர் மாதத்தில் இராஜ நாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றி அவரை விஜயநகரப் பேரரசிற்கு அடங்கி ஆட்சி புரியுமாறு செய்தார் குமார கம்பணன். அடுத்த சில ஆண்டுகளில் தஞ்சையை ஒய்சளர்களிடமிருந்தும், மதுரையைச் சுல்தான் அலாவுதீன் சிக்கந்தரிடமிருந்தும் (கி.பி.1377) கைப்பற்றி தமிழகம் முழுவதையும் விஜயநகரப் பேரரசிற்கு உட்படுத்தினார். மாநில ஆளுநர் பதவியான மகாமண்டலேசுவரராகவும் ஆனார்.
[மகாமண்டலேசுவரர் தண்டநாயகர் எனப்படுவார் குறைந்த மதிப்புள்ள காசுகளை இவர் வெளியிடமுடியும். சட்டம்-ஒழுங்கு நிருவாகப் பொறுப்பும் வரிவிதிப்பு-வரித்தள்ளுபடி செய்வதற்கான உரிமையும் இவருக்கு உண்டு. இவர் அரசின் நேரடிப் பிரதிநிதி. பேரரசருக்குத் திறை செலுத்தத் தேவையில்லை.]
குமாரகம்பண்ணன் ஆளுமைக்குப்பின் மதுரை விஜயநகரத்துக்கு கப்பம் கட்டும் நாடாகவே இருந்துவந்தது.
 கி.பி.1509ல்  'கர்நாடகத்தின் ராஜராஜசோழன்' போல கருதப்பட்டவரும்,  தென்னகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட விஜயநகரத்தின் மிகச்சிறந்த மன்னரான கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்திலே தான் (கி.பி.1529) மதுரையில் மகாமண்டலேசுவரருக்குப் பதிலாக 'நாயக்கர் ஆட்சி' எழுச்சி பெற்றது.


•மதுரை நாயக்கர் ஆட்சி:-
          விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கன். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர், கிருஷ்ண தேவராயரிடம் அடைப்பக்காரனாக பணிக்குச் சேர்ந்து பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானான். அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின. விஜய நகரத்திற்கு கப்பம் கட்டி வந்த  மதுரையை ஆண்ட சந்திர சேகர பாண்டியனுக்கும், வீர சேகர சோழனுக்கும் இடையே பகைமை வரவே  அவர்களை சமாதானபடுத்த ராயர் நாகம்ம நாயக்கனை சிறு படையுடன் மதுரைக்கு அனுப்பி வைத்தார்.
மதுரைக்கு சென்ற நாகம்மநாயக்கர் சோழனையும் பாண்டியனையும் வென்று தானே ஆட்சிபீடத்தில் அமர்கிறார்.  இதனை அறிந்த ஸ்ரீகிருஷ்ணதேவராயர், நாகம்மநாயக்கனின் இந்த துரோகச் செயல் கண்டு கொந்தளிக்கவே, அவரை கைது செய்ய உத்தரவிடுகிறார் . நாகம்மநாயக்கனின் மகனான விஸ்வநாதனே அந்த பொறுப்பை ஏற்க முன்வருகிறான். ஆரம்பத்தில் நம்ப மறுத்த ராயர் பின் சம்மதிக்கிறார். சொன்னதைப்போலவே விஸ்வநாதன் தன் தந்தையை கைது செய்து வந்து ராயரின் முன் நிறுத்துகிறான்.
விஸ்வநாதனின் விசுவாசத்தை கண்ட ராயர் மதுரையை ஆளும் பொறுப்பை அவனுக்கே ஒப்படைத்து நாகம்ம நாயக்கனை விடுதலையும் செய்கிறார். அது முதல் ராயரின் ஆளுமைக்கு கீழ் விஸ்வநாதன் மதுரை நாயக்க ஆட்சி முறையை தொடங்க ஆரம்பிக்கிறார்.

* இந்த விஸ்வநாத நாயக்கர்களின் காலத்தில் தான் விஜய நகரத்திலிருந்து தெலுங்கர்களும் கன்னடர்களும் தமிழகத்தை நோக்கி பெருங்கூட்டமாக புலம் பெயர்ந்து வந்தனர்.
 (இன்றைக்கு தமிழகத்தில் உள்ள தெலுங்கு ,கன்னடம் பேசுவோர் எல்லாம் இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் புலம் பெயர்ந்து வந்தவர்கள் ஆவார்கள்.)
இதே போல் குஜராத்திலிருந்து சௌராஷ்டிரர்களும் தமிழகம் வந்தடைந்தனர். என்னதான் வெவ்வேறு மொழி பேசுவோர் இருப்பினும் அனைவரும் சமமாகவே நடத்தப்பட்டனர். இதனை கண்ட பாரசீக கவிஞன்”அப்துல் ரசாக் ““ஒற்றுமை என்றால் இப்படி இருக்க வேண்டும், ஆட்சி என்றால் இப்படி நடக்க வேண்டும்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

* விஸ்வநாத நாயக்கனின் அமைச்சர் 'அரியநாத முதலியார்' தென்னகம் முழுக்க தன் படையால் வென்று நாயக்க ராஜ்ஜியத்தை பலப்படுத்தினார். ஜடாவர்மன் சுந்தர பாண்டியனுக்குப் பின் மதுரையில் ஒரு பலமான பேரரசு அமைவது அப்போதுதான். நெல்லை அருகே உள்ள புகழ்பெற்ற 'கிருஷ்ணாபுரம்' கோயிலை அரியநாதர் அமைத்தார். மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அமைந்துள்ள 'ஆயிரங்கால் மண்டபம்' கி.பி.1569 ஆம் ஆண்டு இவரால் கட்டப்பட்டதாகும். இன்றும் கூட குதிரையில் கம்பீரமாக அமர்ந்து காட்சியளிக்கும் இவரின் சிலையை இந்த மண்டபத்தின் நுழைவாயிலில் காணலாம். தளவாய் அரியநாத முதலியார் மாசித் தேர் மண்டபம் கட்டி உள்ளார். இதனை மதுரை கீழமாசி வீதியில் பார்க்கலாம்.
• தொண்டை மண்டல சைவ வெள்ளாளர் குலத்தில் உதித்த தளவாயும் முதலமைச்சருமான அரியநாத முதலியார் தான் தென்னகத்தை 72 பாளையபட்டுகளாக பிரித்து அவற்றுக்கு பாளையக்காரர்களை நியமித்தார்.
[பாளையக்காரர்கள் தாங்கள் ஆளும் பகுதிகளில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் தங்கள் செலவுகளுக்கும், இன்னொரு பகுதியைப் படைவீரர்களுக்கும், மற்றொரு பகுதியை மதுரை நாயக்கருக்கும் என ஒதுக்க வேண்டி இருந்தது. மதுரை அரசு வேண்டும் போது படையுதவி செய்ய வேண்டி இருந்தது. இதுவே பாளையப்பட்டு ஆட்சி முறையாகும்.]
இந்த 72 பாளையக்காரர்களில் சிலர் கன்னடர், சிலர் தெலுங்கர் ஆவர். மேலும் பாண்டியர் பரம்பரையைச் சேர்ந்தவர்களும் சிற்றரசர்களாய் இருந்தவர்களும் பாளையக்காரர்களாக இருந்தார்கள்.
[குறிப்பு:- திருச்சி தென்னூரில் “பெரிய நாச்சியம்மன் திருக்கோவில்” என்ற குலதெய்வம் கோவில் ஒன்று உள்ளது. இத்தெய்வம் வாணிய செட்டியார் சமூகத்தின் பருத்திக்குடையான், தென்னவராயன், பயிராலழகன், பாக்குடையான், மாத்துடையான் மகரிஷி முதலான 5 கோத்திர குடி மக்களுக்கும் உரிமையானது. பெரியநாச்சி அம்மனும், அவரது கணவர் வீரிய பெருமாள் என்பவரும், பிள்ளையற்ற இவர்களின் சிதைக்குத் தீமூட்டிய வீரப்ப சுவாமி என்பவரும் இச்சமூக மக்களுக்கு மூதாதையர்கள். இந்த மூதாதையர்களை இக்குலமக்கள் குலதெய்வங்களாக வணங்கி வழிபடுகிறார்கள். இம்மூவரையும் சேர்த்து இக்கோவிலில் '33 சிறுதெய்வங்கள்' உள்ளனர். அவர்களில் மன்னர் "விசுவப்ப நாயக்கர், தளவாய் அரியநாத முதலியார்" ஆகியோரும் அடங்குவர்.  திருச்சி புத்தூரில் இன்றும் "விசுவப்ப நாயக்கர் தெரு" என்று ஒரு தெரு பெரியநாச்சி அம்மன் கோவிலின் வடமேற்குப் பகுதியில் உள்ளது. மன்னர் விசுவப்ப நாயக்கர் பெரியநாச்சி அம்மனின் தந்தை முறை என்று குறிப்பிடப்பட்டு, அவரது தளவாய் அரியநாத முதலியாருடன் கோவிலில் குடியேற்றப்பட்டு இருவரும் பெரியநாச்சி அம்மையாரின் குடும்பத்துடன் இன்றும் குலதெய்வங்களாக வணங்கப்பட்டு வருகின்றனர்.]

• பொதுவாக 'நாயக்கர்கள்' என்று பொதுவாகச் சொல்லப்படுபவர்கள் கம்பளத்தார்கள் என்றும் தொட்டியர் என்றும் சொல்லப்படுகிறார்கள். கொல்லவார்,சில்லவார் .தொக்லவார், கம்மவார், பலிஜா என பல்வேறு உட்பிரிவுகள் கொண்ட இம்மக்கள் பூர்வத்தில் ஆந்திரப்பகுதி பாறைகள் நிறைந்த ராயலசீமா பகுதியில் ஆடு,மாடு மேய்த்தும் பொட்டல் நிலத்து வேளாண்மை செய்தும் வாழ்ந்தவர்கள் என அறியமுடிகிறது.

* தற்போதைய இந்த 'திருவரங்கம் பெரியகோயில்' எனும் ஆய்வின் நோக்கத்தில்
'மதுரை நாயக்கர்கள்' பற்றிய வரலாற்றுக்கு முதலில் அறிய வேண்டியது ஜெ.எச்.நெல்சனின் [The Madura Country: A Manual (1868)
James Henry Nelson] மதுரை ஆவணப்பதிவு நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் சென்னை பல்கலையில் ஆய்வுமாணவராக இருந்தபோது ஆங்கிலத்தில் ‘மதுரைநாயக்கர் வரலாறு’ நூலாக எழுதினார்.
இந்நூல் [The history of Nayaks of Madura ] 1924ல் சென்னைப் பல்கலை வரலாற்று பேராசிரியரான எஸ்கிருஷ்ணசாமி அய்யங்காரின் முன்னுரையுடன் வெளிவந்தது.
இந்நூலை அடியொற்றி தமிழறிஞர் அ.கி.பரந்தமனார் தமிழில் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’ தெளிவாகவும் சுருக்கமாகவும் நாயக்கர்களின் ஆட்சியையும் வீழ்ச்சியையும் பற்றிச் சொல்லும் வரலாற்று நூலாகும்.
க.அ.நீலகண்ட சாஸ்திரியாரின் [A History of South India: From Prehistoric Times to the Fall of Vijayanagar  by K. A. Nilakanta Sastri. First published as a book in 1955] ‘தென்னிந்திய வரலாறு’
டாக்டர் அ.கிருஷ்ணசாமிப்பிள்ளை எழுதிய ‘விஜயநகரத்தின் கீழ் தமிழகம்’ [Tamil Country under Vijayanagara] முதலிய நூல்களையும் கணக்கில் கொண்டு இந்நூலை எழுதியதாக அ.கி.பரந்தாமனார் சொல்கிறார். 
• விஜயநகருக்கு கட்டுப்பட்டு செஞ்சி, காளஹஸ்தி, தஞ்சாவூர், மதுரைஆகிய நகரங்களை தலைநகராக் கொண்டு 'நாயக்கர் ஆட்சி' தமிழகத்தில் ஏற்பட்டது.
• தஞ்சையில் கி.பி. 1532-இல் நாயக்கர் ஆட்சி தொடங்கியது;
• செஞ்சியில் கி.பி. 1526-இல் தொடங்கியது;
• மதுரையில் கி.பி. 1529-இல் தொடங்கியது.
• இதில் மதுரை நாயக்கர்களே நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள். 1529-ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1736-ஆம் ஆண்டு வரை (மதுரையில் மட்டும் 207 ஆண்டுகள்) இவர்கள் ஆட்சி நிலவியது.

•• முதல் ஐந்து மதுரை நாயக்கர்களும் விஜயநகரப்பேரரசுக்கு விசுவாசமாக அதற்கு அடங்கியே இருந்தார்கள். ஆறாவதாக 1609 தொடக்கம் 1623 வரை மதுரையை ஆண்ட நாயக்கரான முத்துவீரப்ப நாயக்கர், அக்காலத்தில் வலுவிழந்திருந்த விஜயநகரத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்திக்கொண்டார். இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் காலம் "மதுரை நாயக்கர்களின் பொற்காலம்" எனலாம். திருமலை நாயக்கருக்குப் பின்னர் இவ்வம்சத்தைச் சேர்ந்த மேலும் அறுவர் ஆட்சி செய்தனர். இவர்களுள் 'இராணி மங்கம்மாள்' குறிப்பிடத்தக்கவர். இறுதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் இராணி மீனாட்சி. 1732 இல் நாயக்க மன்னர் 'விஜயரங்க சொக்கநாத நாயக்கர்' வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான 'சந்தா சாகிப்' அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார். இதன் மூலம் 'மதுரை நாயக்கர் வம்சம்' ஒரு முடிவுக்கு வந்தது.


• விஸ்வநாத நாயக்கன் (கி.பி.1529 - 1564)
காலத்தில் மதுரை நாயக்கருடைய ஆட்சிப்பரப்பில்  திருச்சிராப்பள்ளி வரை கொண்டுவரப்பட்டது. காவிரியின் இருமருங்கிலும் பரவலாக இருந்த அடர்ந்த குறுங்காடுகள் அகற்றப்பட்டன. விசுவநாதர் திருச்சிராப்பள்ளியில் தெப்பக் குளத்தை வெட்டினார். மேலும் திருச்சி அரண்மனை, நகரசுற்றுப்புறங்கள், திருவரங்கம் பெரியகோயில், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில் மற்றும் மலைக்கோட்டை கோயில் ஆகிய இடங்களில் பாதுகாப்பு கருதி சிறப்புக்காவல் படையைத் தோற்றுவித்தான். இதன் மூலம் திருவரங்கம் பெரியகோயிலுக்கு வருகை தந்த யாத்திரிகர்களுடைய உயிருக்கும், உடைமைக்கும், தகுந்த பாதுகாப்பு அளித்து, அவர்கள் அச்சமின்றி அரங்கனைத் திருவடி தொழுவதற்கு விஸ்வநாத நாயக்கன் வழிவகுத்தான்.


   இவன் காலத்தில் திருவரங்கம் கோயிலின் பல மண்டபங்கள் பழுது பார்க்கப்பட்டன. மூன்று லட்சம் பொன் கொண்டு இவன் மண்டபங்களைப் பழுது பார்த்தான் என்று "விஸ்வநாதனைக் கொண்டு நரஸிம்ஹாசார்யர் பண்ணிண கைங்கர்யம்" 
(இதில் கோயிலொழுகு கூறும் சக ஆண்டு1420 என்பதில் வரலாற்று ஆண்டோடு முரண் உள்ளதாக ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ. அ.கிருஷ்ணமாச்சார்யர் ஸ்வாமி அவர்கள் கூறுகிறார்) என்ற தலைப்பில் கோயிலொழுகு குறிப்பிடுகின்றது. 

• ஸ்ரீவீரப்பிரதாப அச்சுததேவராயர் உபயமாக மதுரை நாயக்க மன்னன் விஸ்வநாத நாயக்கரால் பெருமாள் ஸ்ரீரங்கநாத தேவற்கு திருஊஞ்சல் திருநாளின்போது,  திருஊஞ்சல் மஞ்சத்திற்கு வெள்ளிச்சரப்பள்ளி நாலு வராகன், இடைவெள்ளி ராயசப்படி அரண்மனைப்படிக்கல்லாலும் 8392 தூக்கம் வராகன் சமர்ப்பித்தது என்ற செய்திகளைப் பற்றி கூறும் கல்வெட்டு [ இரண்டாம் திருச்சுற்று மேற்குப்பக்க சுவரில் 07-02-1538ம் நாளில் பொறிக்கப்பட்டது. - A.R.E.No.43/1938-39] ஒன்று விஸ்வநாத நாயக்கனுடையதாகும்.
• விஸ்வநாதநாயக்க மன்னனின் மகன் கிருஷ்ணப்ப நாயக்கன் (1564-1572) ஆட்சி காலத்தில், விஜயநகர ஆரவீடு ராமராஜாவின் தம்பியான 'திருமலை ராஜா' பெயரில் ஆவணி மாதத்தில் பூச நட்சத்திரத்தில் கொடியேற்றி, திருமலைராஜாவின் விசாகத்தில் திருத்தேர் உத்ஸவம் நடைபெற்றது பற்றிய குறிப்புகள் தாயார் சந்நிதி தெற்குப்புறச்சுவரில் உள்ள கல்வெட்டில் (A.R.E.No. 350/1953-54) காணப்படுகின்றன. மேலும் கிருஷ்ணப்பநாயக்கன் உபயமாக ஸ்ரீரங்கநாச்சியார் நவராத்ரி மஹாநவமி திருநாளுக்கு எழுந்தருளும் போது அமுது செய்வதற்காக உபயமாக தந்திட்ட கொந்தட்டை, சிற்றவத்தூர், திருமங்கலம் ஆகிய கிராமங்களில் நிலங்கள் தானமாக தரப்பட்டது பற்றியும் அக்கல்வெட்டு கூறுகிறது.
மதுரை நாயக்க மன்னர்கள் திருவரங்கம் பெரியகோயிலுக்கு திருப்பணிகள் பலவற்றையும், விழாக்கள் நடைபெறுவதற்கு பல உபயங்களைச் செய்தது போல தஞ்சை நாயக்க மன்னர்களும் பல திருப்பணி மற்றும் உபயங்களை திருவரங்கம் பெரியகோயிலுக்கு செய்தனர்.
"செவ்வப்பநாயக்கருக்கும்,மூர்த்தியம்மாவிற்கும் திருவரங்கன் திருவருளாலே பிறந்தவனான அச்சுதப்ப நாயக்கருடைய உபயம்" என்ற சொற்றொடரோடு இரண்டாம் திருச்சுற்று மேற்குப்பகுதி நாயக்க மன்னர்களின் உருவச்சிலைகளுக்கு பின்புறம் பொறிக்கப்பட்ட (கி.பி. 02-11-1570) (ARENo.298/1950-51) கல்வெட்டு கூறுகிறது.
தினந்தோறும் பெரியபெருமாள், பெரியபிராட்டியார் அமுது செய்தருளும் பெரிய அவசரத் தளிகை, கறியமுது, திருவடிநாயனாருக்குத் திருவிளக்கு, சேனைமுதலியார் சந்நிதியில் திருவிளக்கு, திரிநூல், நெய், நாச்சியார் ஊஞ்சல் உத்ஸவத்தின் போது ஊஞ்சல் மண்டபத்தில் திருக்குத்துமணி விளக்கு மற்றும் திருவந்திக்காப்புக்கு நெய், ஊஞ்சல் உத்ஸவத்தின் போது அமுது செய்வதற்கு பொரியமுது, அதிரசம், வடை, சுகியன், இட்டலி, தோசை, வெச்சமுது கூன், பானகக் கூன், கூட்டுக்கறியமுது, புளிக்கறியமுது, அடைக்கறியமுது, இலையமுது, பெரியதிருப்பாவாடைக்கான ஆயிரம் தளிகை, நம்பெருமாள் சாற்றியருளும் சந்தனம், கஸ்தூரி, கற்பூரம், திருமொழித்திருநாள் ஐந்தாம் உத்ஸவத்தின் போது சித்ரமண்பத்தில் அமுது செய்தருளுகிற அதிரசம், சர்க்கரைப் பொங்கல், வெற்றிலைப் பாக்கு....(தொடர்ச்சி கல்வெட்டில் சிதைந்துள்ளது) என்கிற அமுதுபடிகள் சமர்ப்பிப்பதற்கு நிபந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. பெரிய திருப்பாவாடைக்கு பழங்கள் நறுக்கப்படும் போது "காக்கை ஓட்டும் ஸ்ரீவைஷ்ணவருக்கு ஸம்பாவனை" தரப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.
• ராமாநுச கூடமொன்று ஏற்படுத்தி வைப்பதற்காக திருவரங்கம் திருப்பதியைச் சார்ந்த பஞ்சபட்டர் திருமலையப்பர் மற்றும் நாராயணர் ஆகிய் இருவரும்  தங்கள் வீட்டை 110 பொன்னுக்கு தஞ்சை செவ்வப்ப நாயக்கர் குமாரரான அச்சுதப்ப நாயக்கருக்கு விற்றது பற்றிய செய்தியை (A.R.E.No. 97/1936-37)  தென்கலை திருமண்காப்பு பொறித்துள்ள கல்வெட்டு  ஒன்று (நாள்: 13-04-1594)
கூறுகிறது. கிழக்குச்சித்திரை வீதியில் வடக்குப்பகுதி தொடங்கும் இடத்தில் மூலையில் இக்கல்வெட்டு உள்ளது.

• தலைநகரம் மாற்றம்:-
விசுவநாத நாயக்கர் காலத்தில் மதுரை நகரமானது 'மதுரை நாயக்க அரசின்' தலைநகராய் இருந்தது.
மதுரையை ஆண்ட ஐந்தாவது நாயக்க மன்னரான முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரின்
 (1601 -1609) மகன்கள் முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் மற்றும் திருமலை நாயக்கர் ஆவார்கள். ஆறாவது மதுரை நாயக்க அரசராக
முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட (1609-1623) . காலத்தில் மதுரை, தஞ்சை நாயக்கர்களிடையே அடிக்கடி போர் மூண்டதால் தலைநகரை கி.பி.1616இல் மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார்.
ஏழாவது நாயக்க அரசரான திருமலை நாயக்கரும் தம் அண்ணனைப் போலவே மதுரையில் முடிசூட்டிக் கொண்டு, திருச்சிராப்பள்ளியில் இருந்தே ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் மதுரை நாயக்க ஆட்சியை புரிந்து வந்தார்.


• ஏழாண்டுகள் திருச்சியில் வாழ்ந்த நாயக்கருக்கு ஏழாம் ஆண்டு, மண்டைச்சளி என்னும் பீனிச நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.
அக்காலத்து மருத்துவமுறைகளோ சிறிதும் பயனும் அளிக்கவில்லை. ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் எல்லாம் நேர்ந்து கொண்டும், ஒன்றும் ஆகவில்லை. ஆலவாய் கோயிலின் பட்டாபிஷேகத் திருவிழாவின்போது மரபுப்படி செங்கோல் வாங்குவதற்காக, தன்னுடைய கடுமையான நோயையும் தாங்கிக்கொண்டு (கி.பி.1634ம் ஆண்டு)  மதுரைக்குப் புறப்பட்டார்.  நோய் கடுமையாகியதால், மதுரைக்கு நேரே செல்லாமல் திண்டுக்கல்லில் தங்கினார்.
அன்று இரவு, நாயக்கரின் கனவில், சொக்கன் வழக்கம்போல "எல்லாம் வல்ல சித்தர்" வடிவில் தோன்றி, " திருமலை மன்னா! பாண்டிப்பதியே பழம்பதி. அங்கேயே நீ நிலையாகத் தங்கிவிடு. மீனாட்சி சுந்தரேசுவரருக்கு வழிபாடுகள் செய்து, திருவிழாக்கள் நடத்து. உன்னுடைய நோய் நீங்கும்.  இந்த திருநீற்றை வாயில் போட்டு, உடலிலும் தடவு" என்று கட்டளையிட்டார்.  காலை எழுந்தவுடன் அவருடைய பரிவாரங்களிடம் சொல்லி, மதுரையிலேயே தங்கி, ஐந்து லட்சம் பொன்னுக்கு திருப்பணியும் திருவாபரணமும் பண்ணிவைப்பதாக சத்தியம் பண்ணினார்.  பிறகு அவர் பல்விளக்கி, முகம்கழுவி, மூக்கைச் சிந்தியபோது மண்டைச்சளி கொத்தாகக் கழன்று விழுந்தது.  சொக்கநாதப்பெருமானின் பேரருளாலேயே தம்முடைய நோய் பரிபூரணமாகத்  தீர்ந்தது என்று நாயக்கர் மனமாற நம்பினார்.  பிறகு நேராக மதுரைக்குச் சென்று, கோயிலை அடைந்து அங்கையற்கண்ணி தன்னோடு அமர்ந்த ஆலவாய் சோமசுந்தரரையும் வழிபட்டார். 


திருமலை நாயக்கர் பற்றிய இக்கதைக் குறிப்புகள்ஆலவாய் திருப்பணி மாலை, ஸ்ரீதல புஸ்தகம்  முதலிய ஆலவாய் கோயிலின்  ஆவண நூல்களில் உள்ளன.
[கி.பி.1634இல் திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியில் அமைந்திருந்த மதுரை நாயக்க அரசின் தலைநகரை மதுரை நகருக்கு  மீண்டும் மாற்றினார் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.] இவ்வாறிருக்க 'திருவரங்கம் பெரியகோயில் கோயிலொழுகு' நூலானது வேறொரு கதையை கூறுகிறது.

அதனை அடுத்த பதிவு - Postல (பகுதி -9) பார்ப்போம்.

            அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்


4 comments:

  1. மிகவும் புகழ்பெற்ற வரலாற்று அறிஞரும் எழுத்தாளருமான ஆச்சாரியா திருமலா ராமச்சந்திரா என்பவர், 'மாமன்னர் திருமலை நாயக்கர்' 'கம்ம' இனத்தைச் சேர்ந்தவர் என்பதை சான்றுடன் விளக்கியுள்ளார்.[சான்று தேவை] மேலும் 'பெனுகொண்டா சரித்திரத்தில்' மதுரை நாயக்கர்களின் குடும்ப பெயர் 'பெம்மசானி' என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பெயர் கம்ம இனத்திற்கு மட்டுமே உரிய பெயராகும். தமிழகவாழ் கம்ம நாயக்கர்களின் வரலாறும் மதுரை நாயக்கர்களே இன்றைய கம்மவார்களின் முன்னோர்கள் எனத் தெளிவாகக் கூறுகின்றன. அவர் நெற்றியில் நாமம் அணியும் வழக்கம் கொண்டவர், வைணவத்தில் நாட்டம் கொண்டவர். மேலும், இராணி மங்கம்மாளின் பெயரை பெரும்பாலும் இன்று வரையில் சூட்டிமகிழும் ஒரே இனம் கம்ம இனம். மேலும், 'பாரதி' எனப்படும் பத்திரிக்கையிலும் 'கம்ம' இனத்தவர்கள் என சுட்டியுள்ளனர். இவை, மதுரை நாயக்கர்கள் கம்மவார்கள் என காட்டுகிறது. ஆயினும், க.அ நீலகண்ட சாஸ்திரி மதுரை நாயக்கர்களின் குலப்பெயர் 'பலிஜா' இனத்திலுள்ள 'கரிகப்பட்டி' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் எழுத்தாளர்களான 'அ.கி பரந்தாமனார்' மற்றும் 'சு. வெங்கடேசன்' முதலானோர் மதுரை நாயக்கர்களை 'தொட்டிய/ராஜகம்பள' நாயக்கர்களாக காட்டியுள்ளனர். அந்த சமூகத்தினர் 'யாதவர்' எனப்படும் 'சந்திரவன்ஷி க்ஷத்ரிய' வம்சத்தவரின் கிளைசாதியினர் என்று 'எட்கர் தர்ஸ்டன்' எனப்படும் ஆங்கிலேயர் தனது 'தென்னிந்திய நாட்டின் சாதிகள் மற்றும் பழங்குடியினர்கள்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கவரா'பலிஜா' (சந்திர வம்ஷ க்ஷத்ரியர் ) இனத்தின் கிளைசாதியினர் என்று சிலர் பதிவேற்றுகின்றனர். தஞ்சை நாயக்கர்களின் குலப்பெயர் 'அல்லுரி' என்பதாகும். அப்பெயர் கவரா 'பலிஜா' சாதிகளுக்கும் வீட்டுபெயராகத் திகழ்கிறது. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்களாய் உள்ளன.

    ReplyDelete
  2. நாயக்கர் மன்னர்கள் கவராபலிஜாகுலம் மட்டுமே அதற்கான செப்பேடு ஆதாரம் உள்ளது.மதுரை மற்றும் தஞ்சை, செஞ்சி,வேலூர் மற்றும் சந்திரகிரி.எங்கள் வரலாற்றை நன்கரிய "பலிஜவாரு புராணம்" படியுங்கள் சேலம் பகடாலு நரசிம்ஹலுநாயுடு எழுதியது 1905.

    ReplyDelete
    Replies
    1. உண்மை , மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள் ( கலரா - பலிஜா ) வம்சத்தைச் சேர்ந்தவர்களே.

      Delete
  3. ஹ ஹ ஹ மதுரைநாயக்கர்கள் கம்பளத்தார்கள் என்று செப்புபட்டயம் உள்ளது வரலாற்று நெடுகிலும் கூடவே அதிகம் பயணித்தவர்கள் கம்பளத்தார்களே கொல்லவார்கள் தொட்டியநாயக்கர்கள் என்பார்கள்

    ReplyDelete