Saturday, October 6, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 2)







||• ஏழாவது திருச்சுற்று•|| 







   இதற்கு 'பூலோகம்' என்று பெயர். இதற்கு ராஜவீதி, மாட மாளிகை வீதி, கலியுகராமன் திருச்சுற்று, சித்திரைத் திருவீதி எனவும் பெயர்கள் உண்டு. இது தற்போது கடைகள்,
வீடுகள், கட்டிடங்கள், அலுவலகங்கள் சூழ ஒரு சிறுநகரம் போல் தெரிகிறது. ஏழாம் சுற்றான தெற்குச் சித்திரை வீதி புறமுள்ள கட்டைக் கோபுரம்  வழியாக நுழைய  பூர்ணன்,புஷ்கரன்  என்னும் துவாரபாலகர்கள் இருவரை வணங்கி உள்ளே செல்வோம் .  கோபுரத்தின் எதிர்புறமுள்ள நான்கு கால் மண்டபத்தில் வலப்புறக்கம்பத்தின் கீழ்
பாதாள கிருஷ்ணன் சன்னிதி உள்ளது.


பாவனாச்சார்யர் திருமாளிகை, தாத்தாச்சாரியர் திருமாளிகை,  ஆஞ்சநேயர் திருக்கோவில்,
ஸ்ரீஹயக்ரீவர் தேசிகர் சந்நதி,ஆயனார் திருமாளிகை,
கபிஸ்தலம் ஸ்வாமி திருமாளிகை,பகுகுடும்பி ஸ்வாமி திருமாளிகை,
திருவரங்கத்தமுதனார் திருமாளிகை, சித்திரைத்தேர் முட்டி, பெரியநம்பிதிருமாளிகை,கூரத்தாழ்வான் திருமாளிகை,முதலியாண்டான் திருமாளிகை
வானமாமலை மடம் ஆகியனவற்றை நான்கு சித்திரை வீதிகளைச் சுற்றி வந்து காணலாம்.



                              ||' புராணமரபு '||

• புராணம் ஓர் விளக்கம்:-
             புராணம் என்னும் சொல் புராதனம் (பழைமை) என்னும் வடசொல்லின் அடியாக அமைந்ததாகும். புராணம் என்கிற வடசொல் புரா - நவ என்ற இரு வேர்களிலிருந்து பிறந்ததாகும். இச்சொல் பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் உள்ளது என்று பொருள்படும் என்பர். பழைமை வாய்ந்த வரலாறுகளுள்     பெரும்பாலும்    இறைப்பக்தி,     இறையருள் தொடர்புடைய செய்திகளைக் கொண்டதே புராணம் என்பர். மிக நுட்பமான தத்துவங்களை அல்லது செய்திகளை எல்லோரும் அறிந்துகொண்டு பின்பற்றும் நிலையில் அமைவது புராணத்தின் சிறப்பாகும். இத்தகைய செய்திகளை விளக்கிக் கூறும்போது எளிய இனிய கதைகளையும், மனித வாழ்வியல் உண்மைகளையும் இணைத்து, சுவைவமிக்க நிலையில் கூறுவது புராணம் ஆகும்.
 புராணம் என்பதைப் பழங்கதை (Ancient tale or legend) என்று கூறுவதைக் காட்டிலும், வழிவழி வந்த மரபு வரலாறு (Traditional history)     என்று     கூறுவதே மிகவும் பொருத்தமுடையதாகும்.
புராணம் என்ற சொல் வடசொல் ஆயினும், அது தமிழில் மிகத் தொன்மையிலிருந்தே வழங்கப்பட்டு வந்ததை அறியலாம். அதற்குச் சான்றாக, ‘காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினன்’ என மணிமேகலை (27: 98-99) யில் சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வருவதைக் காணலாம்.
அதுமட்டுமன்றி,  திருவாசகத்தின் முதல் அகவல் சிவபுராணம் என்றே பெயர் பெற்றுள்ளதைக் கொள்ளலாம்.
'சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன்யான்'
என்று பாடுகின்றார் மாணிக்கவாசகர்.
புராணம் என்பது ‘பழமை சான்ற வரலாறு’ என்னும் பொருள் கொண்டு வழங்கப் பெற்றதைத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணலாம்.
   
 • புராண இலக்கணம்:-
         வடமொழியில் புராணங்கள் பழமை வாய்ந்த நூல்களாயினும், அவற்றை முறையான வடிவில் இயற்ற வேண்டும் என்ற இலக்கண வடிவும் இருந்திருக்கக் கூடும். அவ்வாறு புராணங்களுக்கு இலக்கணம் வகுத்த பிற்காலத்தவர் முக்கியமானதாக ஐந்து அடிப்படைகளைக் குறிப்பிடுவர். அவை :
   (1) உலகத் தோற்றம்    
   (2) உலகம் அழிந்து மறுபடி தோற்றம் பெறுதல்   
   (3) தெய்வ பரம்பரை    
   (4) மனுக்களின் காலம்    
   (5) அரச வமிசங்களின் வரலாறு
என்பனவாகும்.
     ஆனால், இன்றுள்ள புராணங்களில் பல தானம், விரதம், தீர்த்தம், மூர்த்தி, தலம், சிராத்தம் முதலியனவற்றையே சிறப்பித்துக் குறிப்பிடுகின்றன.
புராணங்கள்     தெய்வங்களின்     பராக்கிமத்தைக் கூறுகின்றனவாயும்,     உலகின் சிருட்டி, திதி, சங்காரம் என்பனவற்றையும்,   அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றையும்  கூறுகின்றனவாயுமிருக்கின்றன. ஆதலால், இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில், கதை தொடர்ச்சியாக இருப்பது போல் புராணங்களில் காண இயலாது.
 புராணங்கள் கதை கூறி நீதி புகட்ட வந்தனவேயாம். எனவே, கதையில் கருத்துச் செலுத்தாமல், வேதங்களில் உள்ள வேள்விகள், உயிர்களின் படைப்பு, உலக அமைப்பு, கிரகங்கள், சுவர்க்கம், நரகம், வழிபாடு, உடலமைப்பு, வைத்திய முறை, நாடிகள், யோக முறைகள், நோன்புகள், மந்திரம், துதி, சகுனம், இம்மைக்கும் மறுமைக்கும் உதவக் கூடிய பல வழிமுறைகள் ஆகிய எல்லாச் செய்திகளும் புராணங்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

• புராணம் - ஐந்தாவது வேதம்
       வடமொழியில் வேதம் மிகத் தொன்மையான இலக்கியப் படைப்பாகும். அவ்வேதத்திற்கு அடுத்தபடியாகப் புராணங்கள் ஐந்தாவது வேதமாகக் கொண்டாடப்படுகின்றன. இப்புராணங்கள் வேதங்களைப் போலவே மிகத் தொன்மையானவையாகும் என்பது ஆன்றோர் கருத்து.
மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்கள் போலவே, புராணங்களும் சமய இலக்கியங்களாகக் கருதப்பட்டு வந்துள்ளன.
 புராணங்கள்,    செவிவழி வாயிலாக வந்த புராதனச் செய்திகளையும், வரலாறுகளையும், கலைச் சிறப்புகளையும் மக்களிடையே சென்றடையச்செய்ய சிறந்த கருவூலமாக விளங்கின எனலாம்.
    ‘ஒரு நண்பன் புத்தி சொல்லி நல்லொழுக்க உணர்ச்சியை ஊட்டுவது போல், பழைய கதைகளைச் சொல்லி நீதியை உணர்த்துகின்றன புராண இதிகாசங்கள்’ என்பர். தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் ஒன்று புராணம் என்கிறது பிற்கால தமிழ் இலக்கணம்.

• தலபுராணம் - ஓர் அறிமுகம்
      ஹிந்து சமயக் கோவில்களின் பழம்பெருமையினையும் வரலாற்றுச் சிறப்பினையும் எடுத்து விளக்கும் நூல்களே தலபுராணங்களாகும்.
புராணம் என்பது 'பழைமையானது, புராதனமானது' எனப்படும். பழைமையான திருத்தலங்களின் பெருமையைப் பற்றிப் பிற்காலத்தவரும், நெடுந்தூரம் பயணம் செய்து வந்து தரிசிக்க முடியாதவரும் அறிந்து கொள்ளவும், அவ்வாலயத்தின் புகழைப் பாடவும் முயன்ற புலவர்கள், தேவாரங்கள் மூலம் பாடல்பெற்ற தலங்களின் பெருமையைப் பாட்டினால் தாமும் பாடியதால் தோன்றியவையே தலபுராணங்களாகும். இவை, அத்தலங்களிலே எழுந்தருளியிருக்கும் இறைவன், அருட்செயல்கள், துன்பங்களையும் நோய்களையும் நீக்கவல்ல தீர்த்தங்கள் என்பவற்றின் சிறப்புக்களை எடுத்துரைக்கின்றன.
இவை குறிப்பாக கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டு காலப்பகுதிலேயே தோற்றம் பெற்றனவாகக் கொள்ளப்படுகின்றன. தல புராணங்களில் முதலாவதாகத் தோன்றியது பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவர் எழுதிய திருவிளையாடற்புராணம். ஆயினும் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் குறிப்பாக 14 முதல் 16 வரையான நூற்றாண்டுகளில் அந்நியரின் ஆதிக்கமும் சமூகக் குழகப்பங்களும் ஏற்பட தலபுராணங்களின் தோற்றமும் மங்கிப் போய்விட்டது. பின்னர் விஜயநகர நாயக்க மன்னர்களின் ஆட்சி தமிழகத்தில் நிலைபெற்றுவிட தலபுராணங்களும் மேலும் பெருக்கமாய்த் தோன்றத் தொடங்கின.
தல புராணங்களின் செய்திகள் மக்களுக்கு எழுச்சி தரும் இன்ப ஊற்றுக்களாகவும், அந்நியரது தாக்குதலினால் அல்லலடைந்து மனங்குன்றியிருந்த மக்களுக்கு புத்துயிர் தருவனவாகவும் அமைந்ததால், மக்கள் மத்தியில் பெருஞ்செல்வாக்கு மிக்கனவாகத் திகழ்ந்தன. இதனால், இவற்றைப் பாடிய புலவர்களை மக்கள் புகழத் தொடங்கினர். இதனால், வறுமையில் வாடிய புலவர்களும் திருக்கோவில்களைப் புகழ்ந்துபாடி உணவும், பெயரும் பெற்றனர். இந் நிலை 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் தொடர்ந்ததால் பல்வேறு தலபுராணங்கள் தோற்றம் பெற்றன.
பெரும்பாலான தலபுராணங்கள் இறைவனும் இறைவியும் எழுந்தருளி, தேவர்கள் - முனிவர்களுக்கு அருள்செய்த வகையை கூறுகின்றன. இதனால் இவை, தெய்வநம்பிக்கை, சமய நம்பிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கோயில் வழிபாடு, பூசை, விழாக்கள், விரதங்கள் என்பவற்றின் பயனையும், சரியை கிரியைத் தொண்டு என்பவற்றையும் தெளிவாக விளக்குகின்றன. இவை, மனிதர்களைப் பாடி பொருளை மாத்திரம் சேர்ப்பதைவிட, இறைவனைப் பாடி இம்மைக்கும் மறுமைக்குமாக அருளைப் பெறல் வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு வலியுறுத்துவன.
இந்திய அளவிலான புராணக் கதைகளில் இடம் பெறும் ஏதேனுமோர் கதையை, அது நிகழ்ந்தது இந்த ஊரில்தான் என எழுதுவர். எனவே இந்திய அளவிலான புராணக்கதையானது பல கோயில்களின் தலபுராணங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும்.
பாடல்பெற்ற தலங்கள்
அற்புதங்கள் நிகழ்த்திய தலங்கள்
முத்தித் தலங்கள்
தேவர் முனிவர் வழிபட்ட தலங்கள்
புராணக் கதைகளில் குறிப்பிடப்படும் தலங்கள்
சித்தர் வாழ்ந்த தலங்கள்
எனப் பலவகையான தலங்களையும் பற்றிப் பேசுவன.
• தமிழ்த் தலபுராணங்கள் நூற்றுக்கணக்கில் கிடைக்கின்றன. முதலில் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்த இவை செய்யுள் வடிவில் பெருகி, ஏட்டிலும் எழுதி வைக்கப் பெற்றன. பிற்காலத்தில் உரைநடை வளர்ச்சியின் காரணமாக வசன நடையிலும் இப்புராணங்கள் நூல்களாக மலர்ந்தன. இவ்வகையில் கி.பி. 12ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரையிலும் செய்யுள் நடையிலமைந்த சுமார் 400 தமிழ்த் தலபுராணங்கள் பற்றி நாம் அறிய முடிகின்றது.
இவற்றுள் சில:
கோயிற் புராணம், தணிகைப் புராணம், சேது புராணம், திருக்கோணாச்சலப் புராணம்,
திருவிளையாடற் புராணம்,திருச்செந்தூர்ப் புராணம், அருணாச்சலபுராணம், திருப்பரங்கிரிப் புராணம், சிதம்பர புராணம்
திருக்குடந்தைப் புராணம்
ஆகியனவாகும்.

• பழங்காலத்தில், மக்கள் தலங்களில் வரலாறுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டு, அத்தலங்களின் விருட்சம், மூர்த்திகளின் திருநாமம்,     தீர்த்த விசேடம் முதலியவற்றை அவ்வூரில் உள்ளோரிடம்     தெரிந்து கொண்டு பிறருக்குச் சொல்வார்கள். இவ்வகையில், பல தலங்களில் சிறப்பு அம்சங்கள் கொண்டது போல், தங்கள் ஊரிலும் அந்தத் தலங்களைப் போல் அமைத்து வழிபடுதல் பழங்காலத்து வழக்கம்.

• மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம்
    மூர்த்தி (இறைவன்), தலம் (ஊர்), தீர்த்தம் (புனித நீர்), விருட்சம் (கோயில் மரம்) ஆகிய நான்கும் தலபுராணங்களில் சிறப்பாகக் கூறப்படும் பொருள்களாகும்.

இதையே தாயுமானவர்,
"மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாயத் தொடங்கினர்க்கு ஓர்
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே"  
           (43, பராபரக் கண்ணி - 156) என்கிறார்.

    ஒவ்வொரு தலத்திலும் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகியவற்றை வழிபட்டதால் எய்திய பேறுகள், நீங்கிய பாவங்கள், நீங்கிய பிணிகள் முதலியனவற்றைச் சான்றுகள் மூலம் அறியலாம்.

• மூர்த்தி
    ஒரு தலத்தில் வீற்றிருக்கும்     இறைவன், இறைவி இவர்களையே மூர்த்தி என்பர்.
 தலங்களுக்கு     ஏற்ப மூர்த்தங்கள் (இறைவன், இறைவி) இருவரும் இணைந்தும் இருப்பர். சில இடங்களில் சற்றுத் தள்ளித் தனிச்சந்தியிலும் இருப்பர்.

• தலம்
    தலம் என்பதற்கு இடம், பூமி எனப் 'பிங்கல நிகண்டு 'பொருள் கூறுகிறது. இடம், பூமி, உலகம், தலைமை நகரம் எனப் பலப் பெயர் பெறினும், இறைவன் உறையும் ஊர்களையே புண்ணிய பூமி எனவும், தலம் எனவும் க்ஷேத்திரம் எனவும் கூறுவர்.
தலம் என்னும் இச்சொல் முதன்முதலில் மணிமேகலையில் காணலாம். ‘இத்தலம் நீங்கேன் இளங்கொடி யானும்’ (மணி, 21-169) என்பது கந்திற்பாவை வருவதுரைத்த காதையில் வரும் ஒரு தொடராகும். சிறப்புடைய ஊர்களுக்கு அங்குள்ள கோயில்களே பெருமை தருவனவாதலின் தலம் என்பது சிறப்பாகக் கோயிலையே குறிக்கும்.

• தீர்த்தம்
    தீர்த்தம் என்பது இறைவன் வீற்றிருக்கும் கோவிலிலோ அல்லது அடுத்தோ உள்ள நீர்நிலைகளைக் குறிப்பிடுவதாகும். பெரும்பாலான புகழ்பெற்ற கோவில்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற     முப்பெரும் பெருமைகளைக் கொண்டனவாகவே அமைந்துள்ளன எனலாம்.
இறைவனை வழிபட்டவர்கள் அங்கு உள்ள தீர்த்தங்களையும் வணங்கி     வழிபட்டனர். அவ்வத் தீர்த்தங்களில் மூழ்கி வழிபட்டோரை விட்டு நீங்கிய பாவங்களைத் தலபுராணங்கள் மூலம் அறியலாம். இந்நீர்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு பல விழாக்கள் நடைபெறுகின்றன.

• விருட்சம்
    விருட்சம் என்ற சொல் மரத்தைக் (கோயில் மரத்தை) குறிப்பதாகும்.     ஆகவே இதைத் தலவிருட்சம் என்றே குறிப்பிடுவார்கள்.     முதன்முதலில்     இம்மரத்தடியிலேயே இறையுருவத்தை     வழிபட்டிருப்பர். பின்னரே கோயில் எழுப்பப்பட்டிருக்கும். விருட்சங்களால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அம்மர நிழல்களில் அமர்ந்து அதன் பயனை நுகர்ந்ததனால் நீங்கிய பிணிகள், அதனால் பெறும் நன்மைகள் முதலானவற்றைத் தலபுராணங்களில் காணலாம்.
 இத்தகைய சிறப்புமிக்க தலங்களில், இன்னின்ன காலங்களில் இன்னின்ன முறைகளால் வழிபடுவோர்க்கு உடம்பு பற்றியும் உணர்வு பற்றியும் தீராமல் நிற்கும் பிணிகளும், மாசுகளும் நீங்கி இன்பமும் நலமும் பெற்று, இம்மையில் வளமான வாழ்வும் மறுமையில் சிறப்பான வீடுபேறும் கிடைக்கும். இதனைத் தெரிவிக்கவே தலபுராணங்கள் பலப்பல வரலாறுகளைக் கொண்டு இயற்றப்பட்டன.

• திருவரங்கம் பெரியகோயில்
ஸ்தல புராணம்

திருவரங்கம் பெரியகோயிலின் புராண மரபுகளான ஸ்ரீரங்க மாஹாத்ம்யத்தை கருடபுராணத்தில் உள்ள 'சதாத்யாயீ' (108 அத்யாயம்) மற்றும் ப்ரம்மாண்ட புராணத்தில் அமைந்துள்ள 'தசாத்யாயீ' (10 அத்யாயம்) ஆகிய இரு புராணங்கள் கொண்டு அறியமுடிகிறது.
• ஸ்ரீரங்க விமான ப்ரதஷிணம்
மேற்க்கண்ட தசாத்யாயீயில் 11வது அத்யாயமாக
ஸ்ரீரங்க விமான ப்ரதஷிணம் என்ற அத்யாயயமும் சேர்த்து பாப்பாக்குறிச்சி கிருஷ்ணய்யங்கார் 1908-ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.(பத்துஅத்தியாயம் போலே சிவன் நாரதருக்கு சொல்லுகிற க்ரமமாயிராமல், ப்ரம்மா ஸநத்குமாரருக்கு சொல்லுவதியிருப்பதால், இது 11ம் அத்யாயம் ஆகாது)
• ஸ்ரீரங்க ப்ரஹ்ம வித்யை
ப்ரம்மாண்ட புராணத்தில் நாரதரால் பிரகலாதனுக்கு உபதேசிக்கப்பட்டது. ஒரே அத்யாயம் கொண்டது இந்த ஸ்ரீரங்க ப்ரஹ்ம வித்யை ஆகும்.
• பாரமேஸ்வர ஸ்ரீரங்க மாஹாத்ம்யம்
ஸ்ரீரங்கம் கோயிலுக்காக ஏற்ப்பட்ட பௌஷ்கர ஸம்ஹிதையின் 10ம் அத்தியாயத்தில் 387 ஸ்லோகங்களில் ஸ்ரீரங்க மாஹாத்ம்யம் சொல்லப்படுகிறது.

• தலபுராணச்சுருக்கம்:-
    இங்கு பள்ளி கொண்டுள்ள பெருமாள் சத்தியலோகம் எனப்படும்
பிரம்மலோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்ட திருவாராதனப்
பெருமாள் ஆவார்.
இப்பூவுலகில் சூரிய குலத்தில் வந்த மனு குமாரரான இட்சுவாகு
என்னும் மன்னன் பிரம்மனைக் குறித்து கடுந்தவமியற்றினான். இவன் தவத்தை
மெச்சிய பிரம்மன் இவனுக்கெதிரில் தோன்றி வேண்டிய வரம் கேள் என்றான்.
அதற்கு இட்சுவாகு, பிரம்மனே, உம்மால் தினந்தோறும் பூஜிக்கப்படும்
திருமாலின் திருவாராதன விக்ரகமே எனக்கு வேண்டுமென்று கேட்க
பிரம்மனும் மறுப்பின்றி வழங்கினான். அப்பெருமானை அயோத்திக்கு
கொணர்ந்த இட்சுவாகு பூஜைகள் நடத்தி வந்தான். திருப்பாற்கடலில்
பள்ளிகொண்ட வண்ணத்தில் உள்ள இப்பெருமானே இட்சுவாகு மன்னன்
முதல் இராம பிரான் வரையில் உள்ள சூரிய குலமன்னரெல்லாம் வழிபட்டு
வந்த குலதெய்வமாயினான்.



இட்சுவாகு மன்னனால் விண்ணுலகில் இருந்து இங்கு கொண்டுவரப்
பட்டு அவன் குலத்தோர்களால் பூஜிக்கப்பட்டு பின்பு எல்லோருக்கும்
உரியவனான். இப்பெருமாள் இட்சுவாகுவால் கொணரப்பட்டதால் இப்பெருமாள்
இட்சுவாகு குலதனம் என்றே அழைக்கப்பட்டார்.
திரேதா யுகத்தில் இராமாவதாரம் மேற்கொண்ட திருமால்
இராவணனையழித்து, அயோத்தியில் பட்டம் சூட்டிக் கொண்டார்.
இலங்கையிலிருந்து தன்னுடன் போந்த வீடணனுக்கு விடைகொடுத்து
அனுப்பும்போது, தன் முன்னோர்களால் பிரம்மனிடமிருந்து கொணரப்பட்ட
இந்த திருவாராதனப் பெருமாளை வீடணனுக்கு (விபீஷணனுக்கு) சீதனமாக
கொடுத்தார். வீடணன் இப்பெருமாளைப் பெற்றுத் திரும்பியதை  வால்மீகி
தமது இராமாயணத்தில்

    " விபிஷனோபி தர்மாத்மா ஸஹ தைர் நைர்ருதைர்ஷபை
     லப்தவா குலதனம் ராஜா லங்காம் ப்ராயாந்த மஹாயா"
     என்று கூறுகிறார்.

     (• வால்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 128 வது ஸர்க்கம்,
     87 வது சுலோகம்.)

     மிக்க பயபக்தியுடன் ப்ரணா வாக்ருதி என்ற விமானத்துடன்
அப்பெருமானை எழுந்தருளச் செய்து இலங்கைக்கு வீடணன்
கொண்டுவருங்காலை, வண்டினம் முரல, குயில் கூவ, மயிலினம் ஆட,
செழுநீர் சூழ தன் சிந்தைக்கு இனிய அரங்கமாகத் தோன்றின, இந்த காவிரி,
கொள்ளிட நதிகட்கிடையில் பள்ளி கொள்ள விரும்பிய திருமால் வீடணனுக்கு
சற்றுக் களைப்பையும் அசதியையும் உண்டு பண்ண வீடணன் இப்பெருமாளை
இவ்விருநதிக்கிடைப்பட்ட இவ்விடத்தில் சற்றே கிடாத்தினான்.
அம்மட்டே தன் உள்ளங்கவர்ந்த இடமாதலால் அசைக்க இயலா
அளவிற்கு வீடணன் செல்ல வேண்டிய தென்றிசை நோக்கி இன்றுள்ள
வடிவில் பள்ளி கொண்டார். வீடணனோ விழுந்து, , அழுது,தொழுதான்.
 இப்பகுதியை ஆண்டுவந்த
சோழமன்னன் தர்ம வர்மன், என்பவன் இந்நிகழ்ச்சியை அறிந்து ஓடிவந்து
பெருமாளையும் தொழுதுவிட்டு வீடணனுக்கு ஆறுதல் கூறினான்.
பித்துப் பிடித்த நிலையில் சில நாட்கள் இங்கு தங்கியிருந்த
வீடணணின் கனவில் வந்த எம்பெருமான் தான் இவ்விடத்தே பள்ளிகொள்ளத்
திருவுள்ளம் பற்றியதை தெரிவித்து, நீ செல்லக்கூடிய பாதையை நோக்கியே
நான் பள்ளி கொண்டுள்ளேன். கவலை வேண்டாம் என்று கூறி,
ஆண்டுக்கொருமுறை வந்து தன்னை வழிபட்டுச் செல்லுமாறும் அருளினார்.
 பின்னர் தர்மவர்மன் அவ்விமானத்தைச் சுற்றி சிறிய கோவில் எழுப்பி
வழிபாடு செய்ய வழிவகை செய்தான்.

• சத்ய லோகத்தில் இருந்த பிரம்மாவால் ஆராதிக்கப்பட்ட ஸ்ரீலக்ஷ்மிநாராயணன், சூர்ய குல அரசர்கள் வழிபட்டு, பின்னர் சூர்யவம்சத்தவரான ஸ்ரீராமபிரான் மூலமாக இராவணன் தம்பி விபீஷணனுக்கு ஸ்ரீதனமாக கிடைக்கிறது.  அவரால் 'சேஷபீடம்' 'அனந்தபீடம்' என்று முதலில் அழைக்கப்பட்ட
திருவரங்கம் சேர்ந்த பிறகு 'திருவரங்க நாதன்' என அழைக்கப்படலானார்.
• தர்மவர்மா காலத்திற்குப் பிறகு அநேக ஆண்டுகள் காலவசத்தால் தற்போது உள்ள இடம் மணற்காடாகக் காட்சியளித்தது. தர்மவர்மா பரம்பரையில் வந்த சோழ மன்னன் வேட்டையாடி களைப்படைந்து ஒரு மர நிழலில் தங்கியிருக்கையில் மரத்தின் மேலே அமர்ந்திருந்த கிளி,

|"காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ்வாஸீதேவோ ரங்கேச வேதச்ருங்கம் பரமம் பதம்
விமாநம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக"|

என்ற வசனம் சொல்லக் கேட்டு வியப்படைந்து பார்க்கையில் அந்தக் கிளி அதே ஸ்லோகத்தைப் பல தடவை சொல்லக் கேட்டான். பகவானே அவன் கனவில் வந்து ""யாம் இம்மரத்தின் கீழ்தான் இருக்கிறோம்'' என்று சொல்லவும் அரசன் மணற்மேட்டைத் திருத்தி, ஸ்ரீரங்க விமானத்தை வெளிப்படுத்தினான் என்பது வரலாறு. ஆகவே கிளிச்சோழன் எனப் பெயர் பெற்ற அவ்வரசன் கிளி மண்டபம் உட்பட பல திருப்பணிகளைச் செய்தான். இங்கு பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாள் வேதஸ்வரூபன் என்னும் விமானத்தை ப்ரணவாகார விமானம் என்றும், கலசங்களை வேதச்ருங்கக்ளெனவும் அழைப்பர். காவிரியும் கொள்ளிடமும் ரங்கநாதனுக்கு மாலை போல் அமைந்துளளன. காயத்ரி மண்டபத்தில் காணப்படும் 24 தூண்கள் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களைக் குறிப்பிடுகின்றன.
வைணவ திவ்ய தேசங்கள் 108 ல் முதன்மையானது திருவரங்கம் பெரியகோயில்.  இந்த திருவரங்கனை வழிபட்டால் மற்றைய திவ்யதேங்களின் மூர்த்திகளை வழிபட்டதற்க ஒப்பாகும் என்றும், ஒவ்வொரு இரவிலும் மற்றைய திவ்யதேச மூர்த்திகள் இங்கு வந்து ஒன்றாக இருந்து பின்பு தமது திவ்யதேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வதாக ஓர் ஐதீகம் உண்டு.
 • இதன் பெருமையையும் மகத்துவத்தையும் ஸ்வாமி தேசிகன் தன் அதிகார ஸ்ங்கரஹத்தில் கூறுகிறார்.
பரமசிவன் நாரதருக்கு ஸ்ரீரங்க மஹாத்மியத்தைப் பற்றிச் சொல்லும்போது காவிரி நடுவே சந்த்ரபுஷ்கரணி கரையிலுள்ள ஸ்ரீரங்கம் செல்பவர்களுக்கு நரகமோ, ஞானக் குறைவோ கிட்டாது என்று சொல்கிறார். அந்த இடம்தான் ஸ்ரீரங்கம் என வழங்கப்படுகிறது.

திருவரங்கம் பெரியகோயில்  மூர்த்தி தீர்த்தம் தலம்  சிறப்பு:-
• மூலவர்(மூர்த்தி)
 ஸ்ரீரெங்கநாதன், பெரிய பெருமாள்
(ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டு தெற்கே திருமுகம் காட்டிய
புஜங்க சயனம் )

• உற்சவர்
 நம் பெருமாள்
அழகிய மணவாளன் என்னும் திருப்பெயரும்
உண்டு

• தாயார்
ஸ்ரீரங்க நாச்சியார்

• தீர்த்தம்
 (இங்கு மொத்தம் 9 தீர்த்தங்கள் உள்ளன)
     • நவ தீர்த்தம்
1.சந்திர புஷ்கரணி
2.வில்வ தீர்த்தம்
3.சம்பு தீர்த்தம்
4.பகுள தீர்த்தம்
5.பலாச தீர்த்தம்
6.அசுவ தீர்த்தம்
7.ஆம்ர தீர்த்தம்
8.கதம்ப தீர்த்தம்
9.புன்னாக தீர்த்தம்

• தலவிருட்சம்
  புன்னை
• விமானம்
    ப்ரணா வாக்ருதி விமானம்
• காட்சி கண்டவர்கள் (பிரத்யட்சம்)
 வீடணன், தர்மவர்மன், கிள்ளிவளவன், சந்திரன். ஆழ்வார்,ஆச்சார்யர்கள்


• புராணமரபு இத்தோடு பூர்த்தியடைந்தது. இனி அரசியல் வரலாற்று மரபுக்குள் தொடர்வோம்.

• அதற்கு உத்தரவீதிகள் உள்ள   'புவர்லோகம்' என்று அழைக்கப்படும் 6ம் திருச்சுற்று திருவிக்கிரமன்
திருவீதிக்குள் நுழைவோம்.

                  அன்புடன்

        ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
 E.P.I. இராமசுப்பிரமணியன்

No comments:

Post a Comment