Saturday, November 17, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 10)



அரசியல் வரலாற்று மரபு (பகுதி - 9) தொடர்ச்சி .....



                        திருமலை நாயக்கரின் மறைவுக்குப் பிறகு அவருடைய மகனான இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர் (கி.பி.1659) மதுரை நாயக்க மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். இவனுடைய ஓராண்டு கால ஆட்சியில் முகம்மதியர்களோடு தொடர்ந்து போரிட்ட போதிலும் நாட்டில் அமைதி மீண்டும் நிலை நாட்டப்பெற்றது. ஸ்ரீரங்கம் கோயிலில் இவனது கல்வெட்டுகள் எதுவும் காணக்கிடைக்கவில்லை. ஆனால் கோயிலொழுகு இரண்டாம் முத்து வீரப்பன் பற்றிய செய்தி ஒன்றினைக் குறிப்பிடுகின்றது. ஒரு வைகாசி வசந்தோத்ஸவத்தின் போது முத்துவீரப்ப நாயக்கன் நம் பெருமாளைத் திருவடி தொழுவதற்கு வந்த போது, கோயில் அதிகாரியான அண்ணங்கார் இரண்டு அபய ஹஸ்தங்களை அளித்ததாகவும், அப்போது முத்து வீரப்ப நாயக்கன் தான் எப்போதும் அண்ணங்காரை கும்பீடு கொண்டுவிட்டு, இரண்டு கைககளாலும் அபயஹஸ்தங்களைப் பெற்றுக் கொள்ளும் முறைமையிலிருந்து மாறுபட்டு அன்று ஒருகரத்தை மட்டும் நீட்டி அந்த அபயஹஸ்தங்களை பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தச் செய்கையால் மன உளைச்சல் கொண்ட அண்ணங்கார் அதுவே காரணமாக சில மாதங்களில் பரம பதித்ததாகவும் கோயிலொழுகு குறிப்பிடுகிறது.

• சொக்கநாத நாயக்கர் (1659 - 1682):-
 மதுரை நாயக்க மன்னர்களின் வரிசையில் மற்றொரு குறிப்பிடத்தக்கவர் சொக்கநாத நாயக்க மன்னர் ஆவார். இவர் 23 ஆண்டுகள் மதுரை நாயக்க நாட்டை ஆண்டார். இவரது ஆட்சிக் காலம் கி.பி.1659 முதல் 1682 வரை ஆகும். இவர் மதுரையிலிருந்து தலைநகரைத் திருச்சிக்கு மாற்றினார், இராணி மங்கம்மாள் இவருடைய மனைவி ஆவார், அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் இவருடைய மகன் ஆவார் .இவருக்குப் பல சோதனைகளும் தோல்விகளும் ஏற்பட்டன. தமிழகத்தின் ஒரு பகுதியில் மராட்டியர் ஆட்சி ஏற்பட்டு, அதன் பண்பாட்டுக்கூறுகளும் தமிழகத்திற் பரவின. சொக்கநாதர் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. பசியால் துன்புற்று ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். ஏகோஜி தஞ்சையைக் கைப்பற்றுவதற்கு முன்னர், தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கர், தமக்குப் பெண் கொடுக்க மறுத்தமையால் சொக்கநாதர் அவர் மீது போர் தொடுத்தார். விஜயராகவர் குடும்பத்தையே சொக்கநாதர் அழித்தார். சொக்கநாதர் இறுதிக்காலத்தில் அவருக்கு வேண்டியவர்களாலேயே சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு அவருடைய குதிரைப் படைத்தலைவரால் விடுவிக்கப்பெற்று மறுபடியும் நாட்டை ஆண்டார். சொக்கநாதர் அவசரபுத்தி உடையவர்; பழிவாங்கும் குணம் படைத்தவர். பிடிவாதம் கொண்டவர். எனவே அவர்காலத்தில் நாயக்கர் ஆட்சி நிலை தாழ்ந்தது.

[கி.பி.17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் திருச்சியில் கட்டப்பட்ட சொக்கநாத நாயக்கர் அரண்மனையானது தற்போது "இராணி மங்கம்மாள் கொலு மண்டபம்" என்றழைக்கப்படுகிறது. இது திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்ற மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. தற்போது இங்கு, திருச்சி அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.]

• சொக்கநாத நாயக்கன் திருவரங்கம் பெரியகோயில் நிர்வாகத்தினை மேற்பார்வையிட்டு வந்த ஸ்ரீநிவாஸாசார்ய உத்தமநம்பி என்பார்க்கு 96 கிராமங்களை ஸர்வமான்யமாய் அளித்து, அதில் கிடைக்கும் வருவாய் கொண்டு உத்ஸவங்களை நடத்தி வருவதற்கான ஏற்பாடுக ளைச் செய்தார். இந்த சாசனம் (கி.பி.1673) செப்பேட்டில் தெலுங்கு மொழியில் உள்ளது.
திருவரங்கம் கோயிலில் சொக்கநாதநாயக்கன் காலத்தைய 12 கல்வெட்டுக்கள் உள்ளன.
அவையாவன ARNo.61 of 1938-39;  ARNo.109 of 1937-38;  ARNo.11 of 1938-39; ARNo.11 of 1937-38;  ARNo.108 of 1937-38;  ARNo.102 of 1937-38;  ARNo.104 of 1937-38;  ARNo.105 of 1937-38;  ARNo.2of 1936-37;  ARNo.31 of 1938-39; ARNo.27 of 1938-39; ARNo.9  of 1936-37;
இதில் திருவரங்கம் பெரியகோயிலின் முதற்சுற்றான தர்மவர்மாதிருச்சுற்று (திருவுண்ணாழி) நடைபாதையில் தெலுங்கு மொழியில் அமைந்துள்ள கல்வெட்டு
[ARNo.2 of 1936-37] குறிப்பிடத்தக்கது. அதில் ராணி மங்கம்மா, முத்து சந்திரசேகரம்மா, கமலாஜம்மா,ஜானகம்மா, இந்து வதனம்மா ஆகிய ஐவரும் தம்முடைய கணவரான சொக்கநாத நாயக்கருடைய நலத்தை வேண்டி ஸ்ரீரங்கநாதரிடம் ப்ரார்த்தனை செய்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் தேதி குறிப்பிடப்படவில்லை.
சொக்கநாத நாயக்க மன்னனது ஆச்சார்ய புருஷரான "ஸ்ரீநிவாஸ தேசிகர்" எனப்படும் கோயிலண்ணர் திருவரங்கம் கோயிலில் பல கைங்கர்யங்களைச் செய்துள்ளார்.
நான்முகன் கோபுரம் அருகேயுள்ள 'திருவந்திக்காப்பு' மண்டபம் என்றழைக்கப்படும் "நாலு கால் மண்டபம்" இவராலேயே  கட்டப்பட்டது.  அந்த மண்டபத்தின் ஒரு தூணில் உள்ள சிலை சொக்கநாத நாயக்கருடையது என்பர்.

மேலும் ஸ்ரீரங்க நாச்சியார் சந்நதிக்கு எதிரேயுள்ள நாலுகால் மண்டபம் [கம்பர் இராமாயணம் இயற்றிய பகுதி] இவரது (கோயிலண்ணர்) காலத்திலே கட்டப்பட்டது என்பர். இவர் நான்கு லட்சம் பொன் மதிப்புடைய நான்கு ஆபரணங்களை நம்பெருமாளுக்கு அளித்து மகிழ்ந்தார். ஸ்ரீரங்கநாச்சியார் சந்நிதியைச் சூழ்ந்துள்ள பிரகாரங்களில் உள்ள மண்டபங்கள் சொக்கநாத நாயக்கன் காலத்தில்  கட்டப்பட்டன.

• மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் (கி.பி1682-88):-
                        சொக்கநாத நாயக்கர் - இராணி மங்கம்மாள் இவர்களின் மகன், மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கன் (கி.பி1682-88) தனது 16ம் வயதில் அரியனையேறியதாக தெரிகிறது.
ஆரம்ப ஆட்சி காலத்தில்  மதுரை மைசூர் மன்னர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறுவர். மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கன் தன் ஆசார்யரான ஸ்ரீநிவாஸ தேசிகரை சிறைபிடித்தது பற்றிய செய்தி ஒன்றினை கோயிலொழுகு கூறுகிறது. அவனுடைய அரச சபையில் இருந்த திருவேங்கடநாத அய்யன் என்பவனுடைய துர்போதனையால் தன்னுடைய ஆசார்யர் மீது வெறுப்புக் கொண்டு மூன்றாம் முத்துவீரப்பன் தனது ஆச்சார்யரையே கைது செய்தான். இதனால் வருத்தமுற்ற ஸ்ரீநிவாஸதேசிகர், முத்து வீரப்ப நாயக்கர் ஆறு மாத காலத்தில் இறந்தொழிவான் என்று சாபமிட்டார். இதனால் அதிர்ச்சியுற்ற நாயக்கன் அவரை சிறையிலிருந்து விடுவித்தான். ஆனால் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இதனால் விரக்தியுற்ற ஸ்ரீநிவாஸ தேசிகர் நாற்பது நாட்கள் உண்ணா நோன்பு இருந்து ஆசார்யன் திருவடியடைந்தார். ஸ்ரீநிவாஸ தேசிகருடைய சகோதரரும், தாயாதிகளும் கொல்லப்பட்டனர். நாயக்கரின் தாயான (ராணி) மங்கம்மாள் தன்னுடைய புதல்வனால் மேற்கொள்ளப்பட்ட அடாத செயல்களுக்கு மனம் வருந்தி இராமேச்வரம் நோக்கி தீர்த்தயாத்திரை மேற்கொண்டாள். இந்த நிகழ்ச்சிகள் நடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு முத்துவீரப்ப நாயக்கனுடைய உடம்பு முழுவதும் சீழ்பிடித்து புண்கள் உண்டாயின. தன் தவறை உணர்ந்து ஆசார்யன் காலடியில் வீழ்ந்து மன்னிப்புக்கோர நினைத்து, அதற்கு முன்பாகவே இறந்துபட்டான் என்று 'கோயிலொழுகு' முத்துவீரப்பன் மரணம் பற்றி கூறுகிறது. ஏசு சபைக் கடிதங்கள் வாயிலாக முத்து வீரப்பன் பெரியம்மை கண்டு இறந்ததாக அறிகிறோம்.
இவன் ஆட்சி செய்த போது, அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னர், தம் செருப்பை, நாடெங்கும் ஊர்வலமாக அனுப்பினார். அச்செருப்புக்கு எல்லாரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரமிக்க முத்துவீரப்பர் அந்தச்செருப்பைத் தன்காலில் அணிந்து கொண்டு “உங்கள் மன்னர் இன்னொரு செருப்பை அனுப்பவில்லையா?” எனக் கேட்டார் என்ற கதை ஒன்றும் கூறுவர். ஏழே ஆண்டுகள் மன்னராக வாழ்ந்த முத்து வீரப்பர் இறந்த போது அவர் மனைவி கருவுற்றிருந்தாள். பிள்ளையைப் பெற்றுவிட்டு அவ்வரசியும் உயிர் விட்டாள்.
திருவரங்கத்தில் மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கன் காலத்திய கல்வெட்டுகள் நான்கு
ARNo.3  of 1936-37; ARNo.4  of 1936-37; ARNo.83  of 1936-37; ARNo.106  of 1937-38; உள்ளன. அதில் முதலாம் திருச்சுற்றான தர்மவர்மா (திருவுண்ணாழி) திருச்சுற்றின் நடைபாதையில் அமைந்துள்ள 26.06.1688 ம் தேதியிட்ட தெலுங்கு மொழிக் கல்வெட்டு (ARNo.3  of 1936-37) குறிப்பிடத்தக்கது. மதுரை நாயக்க மன்னனான ஸ்ரீரங்ககிருஷ்ண முத்து வீரப்பநாயக்கனுடைய மனைவி 'முத்தம்மகாரு' நலன்கோரி பெரியபெருமாளுக்கு ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுவற்காக 'எசனக்கூர்,நானக்கூர்' என்ற இரு கிராமங்கள் பொலியூட்டாக ஸ்ரீபண்டாரத்தில் சேர்க்கப்பட்டது பற்றிய குறிப்பு அதில் காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு மூலம் முத்து வீரப்ப நாயக்கனுடைய முழுப்பெயர் 'ஸ்ரீரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கன்' என்பது அறியப்படுகிறது.  மற்றொரு கல்வெட்டு அதே முதலாம் திருச்சுற்று நடைபாதையில் [ ARNo.4 of 1936-37 ] அமைந்துள்ளது. தெலுங்கு மொழியிலான அக்கல்வெட்டு நாயக்கனுடைய மனைவி முத்தம்மா ஸ்ரீரங்கநாதனுக்கு கிரீடம் ஒன்றினை சமர்ப்பித்ததாக கூறுகிறது.

  • ராணி மங்கம்மாள் (கி.பி.1689-1706) ஆட்சிகாலம்:-
              மூன்றாம் முத்து வீரப்பன் இறந்தபோது அவனுடைய மனைவி முத்தம்மாள் கருவுற்றிருந்தாள். கணவரோடு உடன்கட்டையேற முற்பட்ட அவளை மங்கம்மாள் தடுத்து நிறுத்தினாள். ஒரு ஆண்மகவை ஈன்ற பிறகு  முத்தம்மாள் தற்கொலை செய்துகொண்டாள். முத்து வீரப்ப நாயக்க மன்னனுக்கு 'விஜயரங்க சொக்கநாத நாயக்கன்' என்று பெயரிடப்பட்டு மூன்று மாதக்குழந்தையாக முடிசூட்டப்பட்டு, அவனுடைய சார்பில் ராணிமங்கம்மாள் அரசப்பிரதிநிதியாய் செயல்பட்டு வந்தாள். இவள் ஆண்ட காலத்தில் நாட்டில் பெரும் போர்கள் எதுவும் நிலவவில்லை. மைசூர், தஞ்சை மன்னர்கள் மொகலாயப் பேரரசைப் பகைத்துக் கொண்டு வாழ விரும்பாத போது, தானும் அவர்களைப்போலவே மொகலாய பேரரசரான ஔரங்கசீப்பிற்கு கட்டுப்பட்டு ஆட்சி புரிந்தாள். தனது ஆட்சி காலத்தில் பல தர்மசத்திரங்களைக் க.டி பல தர்மசெயல்கள் செய்தவாறு பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தாள். திருவரங்கம் தசாவதாரக் கோயிலில் ராணிமங்கம்மாள் காலத்தைய கல்வெட்டுகள் (ARNo.102  of 1936-37; ARNo.101  of 1936-37; ) இரண்டு காணப்படுகின்றன.
ராணிமங்கம்மாள் பற்றிய கோயிலொழுகு நூலில் சில குறிப்புகள் காணப்படுகின்றன. ராணிமங்கம்மாள் தன்னுடைய புதல்வனான மூன்றாம் முத்து வீரப்பநாயக்கன், ஸ்ரீநிவாஸ தேசிகருக்கு இழைத்த கொடுமைகளுக்கு, ஆசார்யனிடம் மன்னிப்பை வேண்டி நின்றாள் ராணி மங்கம்மாள். ஸ்ரீநிவாஸ தேசிகரின் திருக்குமாரரான குமாரஸ்ரீநிவாஸாசார்யரை மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கு வரவழைத்து கோயில் ஸ்ரீகார்ய பதவியை அளித்தாள். அவரும் சில ஆண்டுகளில் ஆசார்யன் திருவடி அடைய, அவருக்குப்பின் அவரது புத்திரரான ஸுந்தரராஜ வாதூல தேசிகர் ஸ்ரீகார்யம் பொறுப்பை ஏற்றார். இவர் இளம் வயதினராக விளங்கியதால், அவருடைய சிறிய தந்தை  "ஸ்ரீரங்கராஜ வாதூல தேசிகர்" இவர் வகித்த பதவியைப் பறித்துக் கொண்டார். இவரே ராணி மங்கம்மாளுக்கு ஆச்சார்யனாக விளங்கினார். இவருக்குச் சிறப்புத் திருநாமமாக "துரை ரங்காசார்யர்" என்ற பெயர் வழங்கப்பட்டது.
ராணிமங்கம்மாள் உதவி கொண்டு பெரியபெருமாளுக்கு முத்தாலான அட்டிகை, நம்பெருமாள் திருமார்பில் அணிந்து கொள்வதற்கான வைரப்பதக்கம், வைர முடி ஆகியவற்றை சமர்ப்பித்தார் துரை ரங்காசார்யர் என்கிறது
"கோயிலண்ணன் திருமாளிகை குருபரம்பரா ப்ரபாவம்" என்னும் வைணவ நூல்.
  கி.பி.1691ம் ஆண்டில்  ராணி மங்கம்மாள்  ஸ்ரீரங்கநாதனுக்கு துலாபாரம் சமர்ப்பித்து, அதன் வழியாக பெரும் பொருளை ஸ்ரீபண்டாரத்தில் சேர்த்தாள். இவளுடைய காலத்தில் வைச்யர்கள் பலர் ஒன்று கூடி நாச்சியார் சந்நிதி திருப்பணிகளையும், சூர்யபுஷ்கரணி திருப்பணிகளையும்,மேற்க்கொண்டனர். வாரத்தின் ஏழு நாட்களிலும்  நம்பெருமாள் அணிந்து சேவை சாதிக்கும் விதமாக ஏழுவிதமான ஆபரணங்களை ஸ்ரீபண்டாரத்தில் சமர்ப்பித்தாள். இவளுடைய காலத்தில் தங்கத்தாலான கலன்களும், வட்டில்களும் சமர்ப்பிக்கப்பட்டன. சித்திரைத்தேர் நிலை கொண்டுள்ள இடத்திற்கு மேற்கே அமைந்துள்ள மண்டபத்தையும் இவள் கட்டுவித்தாள்.(தற்போது நகராட்சி பள்ளிக்கூடமாக செயல்படுகிறது.)

• விஜயரங்க சொக்கநாத நாயக்கர்(கி.பி.1706-31)ஆட்சிக் காலம் :-
உரிய பருவம் அடைந்த பின் விஜயரங்கசொக்கநாத நாயக்கன் (கி.பி 1706ல்)  மதுரை நாயக்க மன்னனாக முடிசூட்டிக்கொண்டான். இவனுடைய காலத்திலேயே மதுரை நாயக்கர் ஆட்சி சரிவை நோக்கிச் சென்றது. அரசாள்வதில் நாட்டமில்லாத இந்த நாயக்க மன்னன் அரசாளும் பொறுப்பினை தன்னுடைய மந்திரிகளிடமும் விட்டு வைத்திருந்தான். இதனால் நாட்டில் பல முறைகேடுகள் தொடங்கின.
பல முறை பல தலங்களுக்கு தீர்த்தயாத்திரைகளும் சென்றான். இவன் ஸ்ரீரங்கம் கோயிலை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டான்.
இவனுடைய ஆட்சியில் கி.பி.1710 -1720 ம் ஆண்டுகளில் நாட்டில் பஞ்சம் நிலவியதால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாயினர். இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்று துறைகளிலும் விஜயரங்க சொக்கநாத நாயக்கர்
புலமை பெற்றிருந்தார். இவர் தெலுங்கு மொழியில் "ஸ்ரீரங்க மாஹாத்ம்யம்" மற்றும் "துலாகாவேரி மாஹாத்ம்யம்" ஆகிய நூல்களைப் படைத்தார்.   

           •• இம்மன்னர் பற்றிய ஓர் கதை :- விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஓர் சமயம் கைசிக ஏகாதசி சமயம் 'கற்பூரப்படியேற்றம்' காண சற்று தாமதித்து வந்தார். இடையில் பெருமாள் மூலஸ்தானம் சென்றிருந்தார். அது கண்டு நாயக்க அரசர் மீண்டும் 'கற்பூரப்படியேற்றம்' காண விழைந்தார். நிர்வாகிகள் இனி அடுத்த வருடம் தான் கற்பூரப்படியேற்ற சேவை. பெருமாள் மூலஸ்தானம் சென்று விட்டால், பிறகு திரும்புவது கிடையாது, என்பதும் அரசருக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் மனம் வருந்திய அரசர் அடுத்த வருடம் வரை திருவரங்கத்திலேயே தங்கியிருந்து அக்கற்பூரப்படியேற்ற சேவையைக் கண்டு பேரானந்தமடைந்தார் என்று ஒரு கதை கூறுவர்.
இதனை நினைவூட்டும் வகையில் இரண்டாம் திருச்சுற்றான ராஜமகேந்திரன் திருச்சுற்று மேற்குப்பகுதியில் நாயக்க அரசரும் அவர் குடும்பத்தாரும் தந்தத்தால் ஆன சிலாரூபமாக கருவூலமண்டபத்தில் கண்ணாடி பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். அதற்கான அறிவிப்பு பலகையும் அருகில் உள்ளது.






• விஜயரங்கநாத சொக்கநாத நாயக்கர் பற்றிய கோயிலொழுகு குறிப்புகள்:-
              • விஜயரங்க சொக்கநாத மன்னர் கைசிக ஏகாதசியன்று நம்பெருமாளுக்குச் சாற்றுவதற்காக 360 பீதாம்பரங்களைச் சமர்பித்தார். ஸஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுவதற்காக ஆயிரம் செப்புக்குடங்களையும் இவர் காணிக்கையாக சமர்ப்பித்தார். திருவரங்கத்திலேயே பலநாட்கள் தங்கியிருந்து நாள், பக்ஷ, மாத, திருவிழாக்களை இவர் கண்டுகளித்து வந்ததாகக் கோயிலொழுகு தெரிவிக்கிறது.
• கி.பி.1707ம் ஆண்டு துரை ரங்காச்சார்யருடைய மகனான ஸ்ரீநிவாஸ தேசிகர் மன்னனுடைய பொருளுதவி கொண்டு "திருவாராதன காலத்தில் உபயோகத்தில் கொள்ளும்படி தங்கத்தாலான வட்டில்கள், தங்கத்தட்டுகள், படிக்கம், காவிரி நீரினைச் சுமந்து வருவதற்கான தங்கத்தாலான குடம் மற்றும் பல பொருட்களோடு, நம்பெருமாளும், உபயநாச்சிமார்களும், ஸ்ரீரங்கநாச்சியாரும்  விசேஷ நாட்களில் அணிந்து கொள்ளும் பொருட்டு,  வைரமுடி,  விலையுயயர்ந்த ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டன. விஜயரங்கசொக்கநாதன் காலத்தில் தான் தற்போதைய 'கண்ணாடி அறை' நிர்மாணிக்கப்பட்டது. சேரனை வென்றான் மண்டபத்திற்கு வடக்கு நோக்கி,  துரை ரங்காச்சார்யர் மண்டபத்திற்குச் செல்லும் நடைபாதை சீரமைப்பு செய்யப்பட்டது. சக ஆண்டு1619 (கி.பி.1697 -ஸர்வஜித் ஆண்டு)ல் ஸ்தலத்தாரையும், பரிஜனங்களையும் கலந்தாலோசித்து, நம்பெருமாள் புறப்பாட்டின் போது நாட்டியம் ஆடுவதற்காக விஜயரங்க சொக்கநாதன் தம்முடைய பெயரிலே ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தினான் என கோயிலொழுகு கூறுகிறது. கோயிலின் ஒரு பகுதியான நாடகசாலையில் தேவதாஸிகளாக இருந்த சந்தரவதனா,ஹம்ஸரமணா,லக்ஷ்மி, ஸீதா, ஜகன்மோஹினி, ரங்கநாயகி, வேங்கடாசலம், மற்றும் நாராயணி ஆகிய எண்மரும் நம்பெருமாள் புறப்பாட்டின் போது நாட்டியம் ஆடுவதற்காக ஏற்பாடு செய்தனர். நம்பெருமாள் புறப்பாடு கண்டருளும் போது குடமுறை எனப்படும் நீர் நிறைந்த கலசங்களை ஏந்திச் செல்வதற்காக தேவதாஸிகளான நாகரத்தினம், ரமாமணி, நாய்ச்சியார், அலமேலு மங்கம்மா, ரங்கநாதமணி, வெங்கடாசலம், முத்துலக்ஷ்மி, அலகம்மாள் மற்றும் அம்புஜவல்லி ஆகியோருக்குப் பத்தாயிரம் பொன் அறக்கட்டளையாக அளிக்கப்பட்டு, அவர்களுக்கு ஊரின் மேற்குப் பகுதியில் குடியிருப்புகளையும்  திருக்கோயில்களில் சில மரியாதைகளையும், சில உரிமைகளையும் அளித்தான் இம்மன்னன்.  • துரை மண்டபத்தில் அமைந்துள்ள வடக்குப்பகுதி உத்தரத்தின் மீது  பொறிக்கப்பட்டுள்ள தேதியிடாத தெலுங்கு மொழிக் கல்வெட்டு (ARNo. 10 of 1936-37) ஒன்றின் மூலம்  குலசேகரன் திருச்சுற்றில்  வடக்குப்பகுதியில் அமைந்துள்ள வேதபாராயண மண்டபம், விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டதாக அறியமுடிகிறது. 
• தேதியிடப்படாத கல்வெட்டொன்று ஸ்ரீரங்கநாச்சியார் சந்நிதி  விமான கலசத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. (A.R.No.345 of 1952-53)அதில் விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் சமர்ப்பிக்கப்பட்டதாக தெலுங்கு மொழியில் உள்ளது.
• நிலைக்காலுடன் கூடிய தங்கக்கிண்ணம் நாயக் மன்னரால் நம்பெருமாளுக்குத் தரப்பட்டது. அதில் 'விஜயரங்க சொக்கநாயக்கருடைய. உபயம்' என்ற (A.R.No.346 of 1952-53) தெலுங்கு மொழி வாசகங்கள் உள்ளன.
ஐப்பசி மாதம் துலா காவிரி ஸ்நாநத்திற்கென தங்கக்குடம் இம்மன்னரால் சமர்ப்பிக்கப்பட்டது.
(A.R.No.347 of 1952-53) தெலுங்கு மொழியில் பொறிக்கப்பட்ட வாசகங்கள் அதில் உள்ளன.
12,515 வராகன் எடை கொண்ட இந்தத் தங்கக் குடமானது திருடர்களால் பிற்காலத்திலே ஒருமுறை அபகரிக்கப்பட்டு ரங்கப்ப உடையாரால் மீட்கப்பட்டு மீண்டும் கோயிலார் வசம் ஒப்படைக்கப்பட்டதாக அதில் குறிக்கப்பட்டுள்ளது. 


• நம்பெருமாளுடைய திருவடி நிலைகளுக்கு கீழே அமைந்துள்ள தங்கத்தகட்டில் விஜயரங்க சொக்க நாயக்கருடைய உபயம் என்ற தெலுங்கு மொழி (A.R.No.353 of 1950-51)வாசகங்கள் உள்ளன.
• உமிழ் நீரை ஏந்தும் தங்கத்தாலான வட்டில்கள் மூன்றினில் இவை விஜயரங்க சொக்கநாத நாயக்கனால்  கஸ்தூரி ஸ்ரீரங்கநாதனுக்கு ஸமர்ப்பிக்கப்பட்டவை என்று (A.R.No.354 of 1950-51)தெலுங்கு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.
• தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளால் ஆன தங்கப்பபல்லக்கு இம்மன்னராலேயே நம்பெருமாளுக்கு (A.R.No.348 of 1952-53) சமர்ப்பிக்கப்பட்டதாக தெலுங்கு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
(இப்பல்லக்கு 1813ல் ஜார்ஜ் பிரான்சிஸ் எனும் ஆங்கிலேய கலெக்டரால் பழுது பார்க்கப்பட்டது)
• பெருமாளுக்கு இரவில் பால் சமர்ப்பிக்கப்படும்  தங்கக்கிண்ணம் இம்மன்னராலேயே தரப்பட்டதாக (A.R.No.353.1 of 1950-51) அதிலுள்ள தெலுங்கு வாசகங்கள் மூலம் அறியமுடிகிறது. 


• நம்பெருமாள் புறப்பாட்டிற்கென தங்கக்குடை ஒன்றும் இம்மன்னரால் (A.R.No.348 of 1950-51) சமர்ப்பிக்கப்பட்டது. தங்கக்குடையின் பிடியில் 02-04-1734 ஆம் நாளன்று பொறிக்கப்பட்ட வாசகங்கள் " ஆனந்த வருஷம், சைத்ரமாதம், சுக்ல பக்ஷ தசமியன்று ஜிட்டு விசுவநாத நாயனி, விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் இந்தத் தங்கக்குடை சமர்ப்பிக்கப்பட்டது"
மேலும் இதன் பிடியில்  இந்தக் குடை1927ம் ஆண்டு டிசம்பர் மாதம் பழுது பார்க்கப்பட்டதாகவும் பொறிக்கப்பட்டுள்ளது.
• விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்து தாமிரப்பட்டயம்  ஸ்ரீங்கத்தில் தர்ம கார்யங்களுக்கான நிலம் அளித்தமையைப் பற்றியும் தெரிவிக்கின்றது.

தொடர்ச்சி அடுத்த பதிவு - Post ல (பகுதி - 11) பார்ப்போம்

   அன்புடன்

ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்




(Notes)****பின் குறிப்பு:-

ஸ்ரீரங்க நம்பெருமாளுக்கென்றே ப்ரத்யேகமான கைங்கர்யமாக விஜயரங்கச் சொக்கநாத நாயக்க மன்னரால் வழங்கப்பட்ட
தங்கக்குடம் மானிடர்களுக்கு பயன்படுத்தப்பட்ட அவலமும் சரித்திரத்தின் காலச்சுவடுகளில்.....




கால வெளியில் நம் சமகாலத்தில் கண்ட. அபச்சாரங்கள். அரங்கனின் தங்கக்குடம் மற்றொருவரை வரவேற்கப் பயன்படுத்திய நிலை கண்டு அடியவர்கள் பலரும் வருந்தினர்.

ஸ்ரீரங்கநாதோ விஜயதே!