Monday, October 29, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 9)




அரசியல் வரலாற்று மரபு பகுதி - 8ன் தொடர்ச்சி.... 


              • விசயநகரப் பேரரசர்களாயிருந்த அச்சுதராயருக்கும், சதாசிவராயருக்கும், அமைச்சர் அல்லிய இராமராயருக்கும் கீழ்ப்படிந்து, நேர்மை குறையாமல், உண்மை ஊழியராய் இருந்து விசுவநாத நாயக்கர், மதுரையில் ஆட்சி நடத்தி வந்தார். இவர் சுமார் 35 ஆண்டுகள் மாட்சியுடன் ஆட்சி செய்தார். தமது 69ஆம் வயதில் கி.பி.1564இல் மறைந்தார்.
இவரின் மறைவுக்குப் பின் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564-1572),  வீரப்ப நாயக்கர் (கி.பி.1572-1595), இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1595 – 1601),  முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1601 – 1609),  முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1609-1623) ஆகியோர் மதுரையை ஆட்சி புரிந்து வந்தனர். இவர்களுக்குப்பிறகு....

• திருமலை நாயக்கர் ஆட்சி:-  (கி.பி.1623-1659):-
                       மதுரை நாயக்க மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற திருமலை நாயக்கர் முத்துக் கிருஷ்ணப்பருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் ஆவார். திருமலை நாயக்கரின் முழுப்பெயர் "திருமலை சவுரி நாயுனு அய்யுலுகாரு" என்பதாகும்.
• ஏழாவதாக பட்டத்துக்கு வந்த திருமலை நாயக்கருக்கு முன்னாலும் அறுவர்; பின்னாலும் அறுவர் ஆட்சி செய்தபோதிலும் "நாயக்கர் வம்சம்" என்றாலே நமக்கு நினைவுக்கு வருகிறவர் திருமலை நாயக்கர் மட்டும் தான்.  [கம்பராமாயணத்தில் குகன் ராமனைப் பார்த்துச் சொல்லும், " நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன் புகழ் ஆக்கிக்கொண்டாய்". என்கிற பாடல் வரிகள் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.]

|| மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் பட்டியல் ||
• 1. விசுவநாத நாயக்கர்
(கி.பி.1529 - 1564)
• 2.முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564 - 1572)
• 3. வீரப்ப நாயக்கர் (கி.பி.1572 - 1595)
• 4. இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி1595 - 1601)
• 5.முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் [இரண்டாம்கிருஷ்ணப்ப நாயக்கரின் சகோதரர்
விசுவப்ப நாயக்கரின் மகன்] (கி.பி.1601 - 1609)
• 6. முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் [முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்த மகன்]
(கி.பி. 1609 - 1623)


• 7. திருமலை நாயக்கர் (கி.பி.1623 - 1659)
• 8. இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1659 )
• 9. சொக்கநாத நாயக்கர் [இராணிமங்கம்மாள் கணவர்] (கி.பி.1659 - 1682)
•10.அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1682 - 1689 )
•11.இராணி மங்கம்மாள் [சொக்கநாதரின்
 மனைவி] (கி.பி.1689 - 1706)
•12.விஜயரங்க சொக்கநாத நாயக்கர் [சொக்கநாதரின் மகன்]
(கி.பி.1706 - 1732 )
•13.இராணி மீனாட்சி [விஜயரங்கநாதரின் மனைவி] (கி.பி.1732 - 1736 ) ஆகியோர்கள் ஆவார்கள்.
•மதுரை நாயக்க ஆட்சியில் ஏழாவது மன்னரான புகழ்பெற்ற திருமலைநாயக்க மன்னர் (கி.பி.1623-1659) ஆட்சியை ஏற்றபோது அவருக்கு வயது 39 இருக்கும் என்பர். திருமலை நாயக்கரின் காலத்தில் மதுரைப் பெருநாடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் ஒரு பகுதி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரும் பரப்புடைய நாடாய் இருந்தது.
தன் ஒப்பற்ற கலை ஆர்வத்தால் மதுரை நகரைக் கலையழகு கொஞ்சும் நகரம் ஆக்கினார்.
 நூற்றுக்கணக்கான கோயில்களை புதுப்பித்துக் கட்டி பெரும் கோபுரங்களை எழுப்பியிருக்கிறார். சரிந்த தொப்பையும் கூப்பிய கரங்களுமாக திருமலைநாயக்கர் தன் இரு ராணிகளுடன் இவரது திருப்பணி பெற்ற திருக்கோயில்களில் நிற்கக் காணலாம். [அழகர் கிள்ளை விடுதூது நாயக்க மன்னரை "தொந்தி வடுகர்" என்றே கூறுகிறது.] மரத்தினடியில் அமர்ந்திருக்கும் காளையின் உருவத்தைத் திருமலை நாயக்கர்
தமது குலச்சின்னமாகக் கொண்டிருந்தார். இது மதுரை, திருப்பரங்குன்றம் கோயில் கொடிமரங்களில் காணப்படுகின்றன.
பன்னெடுங்காலமாக வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா, நடைபெற்றுவந்தது. இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக திருமலை நாயக்க மன்னரால் மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து கோவித்துக் கொண்டு அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்க கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே புராணம்.
• திருமலை நாயக்கரின் கலைப் பணிகள்:-
           திருமலை நாயக்கர் ஒரு தலைசிறந்த "கலாரசிகர்" ஆவார். மதுரையில் அவர் எழுப்பியுள்ள கட்டடங்கள் இன்றும் நின்று அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. "திருமலை நாயக்கர் மஹால்" இவர் கட்டிய கட்டடங்களுள் புகழ்பெற்றதும், பெரியதுமாகும். "தென்னிந்தியாவின் தாஜ்மஹால்" என வரலாற்று ஆய்வாளர்களால் நாயக்கரின் மஹால் போற்றப்படுலது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.




இம்மஹாலில் உள்ள மிகப் பெரிய தூண்கள் காண்போர் கண்ணைப் பறிப்பனவாகும். ஒவ்வொரு தூணும் சுமார் 40 அடி உயரமும், மூவர் அல்லது நால்வர் சேர்ந்தணைத்தாலும் அணைக்க முடியாத அளவு பருமனும் கொண்டு விளங்குவதை, அம்மஹாலின் முற்றத்தில் இன்றும் காணலாம். இந்து, இஸ்லாமிய கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த 'இந்தோ சரசனிக் பாணி' என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த நாயக்கர் அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரமாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன
இந்த அரண்மனை இரண்டு பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது. ஒன்று 'சொர்க்க விலாசம்' என்றும், மற்றொன்று 'ரங்க விலாசம்' என்றும் அழைக்கப்பட்டது. சொர்க்க விலாசத்தில், திருமலை நாயக்கரும், ரங்கவிலாசத்தில் அவரது தம்பி முத்தியாலு நாயக்கரும் வசித்து வந்துள்ளனர்.


அந்த ரங்க விலாசத்தின் தூண்கள் தான் தற்போதுள்ள 'பத்துத் தூண்கள்' ஆகும். ரங்க விலாசத்தின் மற்றைய பகுதிகள் மறைந்துவிட்டன.
[திருவரங்கம் பெரியகோயிலில் 'ஸ்ரீரங்கவிலாசம்' என்ற மண்டபம் முதலில் நம்மை வரவேற்கிறது.]
எஞ்சியுள்ள தற்போதைய திருமலை நாயக்கர் அரண்மனை பகுதிக்கு அப்பொழுது 'சொர்க்க விலாசம்' என்று பெயர்.
 இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை , பதினெட்டு வித இசைக் கருவிகள் வைக்கும் இடம், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன. (18 வகை இசைக்கருவிகள் வாசிக்கப்பட்ட இடம் இன்று 'நவபத்கானா தெரு' என்று மஹாலை ஒட்டி இருக்கிறது.)
இந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதையைப் பயன்படுத்துவர் என்றும், தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே ['பொற்படியான் சந்நதி'] இந்தப் பாதையைப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. திருமலை மன்னன் தந்த மஹாலில் ஐந்தில் ஒருபகுதிதான் தற்போது இருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள்.
திருமலை நாயக்கர், இந்த அரண்மனையில் தனது 75ஆம் வயது வரை, மனைவியுடன் வசித்து வந்ததாக குறிப்புகள் எடுத்துரைக்கின்றன.
• தனது முதலமைச்சரும், ஆகமத்தில் விற்பன்னரும், சிறந்த ஸ்ரீவித்யா உபாசகருமான நீலகண்ட தீட்சிதர், ஆலோசனைப்படி, மதுரை நகரை ஸ்ரீசக்ர வடிவில் கட்டமைத்தார். தனது அரண்மனைக்குள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலும் கட்டி வழிபட்டார்.
திருமலை நாயக்கர் மீனாட்சியம்மன் கோயிலின் கிழக்கே உள்ள சுவாமி கோபுரத்தின் எதிரே கட்டிய புதுமண்டபம், இராய கோபுரம் மற்றும் மதுரைக்குக் கிழக்கே உள்ள வண்டியூரில் அழகிய மையமண்டபத்துடன் உருவாக்கிய தெப்பக்குளம் ஆகியன அவருடைய புகழை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இராய கோபுரம் முற்றுப்பெறாத நிலையில் (எழுகடல் தெரு-விட்டவாசல்) நின்றுவிட்டது. இதைத் திருமலை நாயக்கர் கட்டி முடித்திருப்பாரே என்றால், அதுவே மதுரைக் கோபுரங்களில் மிகவும் உயரமாக அமைந்திருக்கும் என்பர்.


• கிழக்குக் கோபுரத்துக்கு வெளிப்புறமாக கொலுமண்டபம் அல்லது வசந்தமண்டபம் எனப்படும் "புதுமண்டபத்தைக் கட்டுவித்தார்.
அந்தக் காலத்துக்கு அதுவே மிக அலங்காரமானதாகவும் நீராழி, அகழி சூழ்ந்து புதுமுறையில் புதிதாகக் கட்டப்பட்ட வசந்தமண்டபமாகவும் திகழ்ந்தபடியால் மதுரை மக்கள் அதனைப் "புதுமண்டபம்" என்றே அழைத்தனர். அதன் பின்னர் வேறுபல மண்டபங்கள் பலரால் மீனாட்சியம்மன் கோயிலிலும் மதுரையிலும் கட்டப்பட்டுவிட்டன.
ஆனாலும் இம்மண்டபத்திற்கு மட்டும் காலங்கடந்தும் "புதுமண்டபம்" என்ற பெயர் நிலைத்துவிட்டது. புது மண்டபத்தில் இவரது அரசியை சிற்பமாக வடிவமைத்த அமைச்சர் நீலகண்ட தீட்சிதர், சாமுத்ரிகா லட்சணத்தின்படி அரசியின் தொடையில் வடுவொன்று இருக்க வேண்டும் என்று அனுமானித்து அதையும் சிற்பத்தில் செதுக்கி விட, அவர் மீது சந்தேகம் கொண்ட மன்னர் அவரது கண்களை அவித்து விட்டதாக ஒரு செவி வழிக்கதை உண்டு. தொடையில் வடுவுள்ள அரசியின் சிற்பத்தை இன்றும் புதுமண்டபத்தில் காணலாம்.


• திருமலை நாயக்கரின் போர்கள்:-
               அவருடைய ஆட்சிகாலம் வரையில் அவருடைய மதுரைநாடு, விஜயநகரப் பேரரசுக்குக் கீழ் கட்டுப்பட்டே விளங்கியது.
திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை ஐந்து பெரும் போர்களை சந்தித்தது.
• முதலாவதாக, முந்திய பகைமையாலும், செந்தமிழ் மதுரை நாட்டின் செழிப்பாலும் மைசூர் மன்னர் மதுரை மீது படையெடுத்தார். திருமலை நாயக்கர் அவரை எதிர்த்துப் போராட வேண்டியவரானார்.
• இரண்டாவது, திருவாங்கூர் மன்னர் கேரளவர்மா என்பவர் கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்டாததனால் அவர் மீது படையெடுத்துச் சென்று போர் புரியலானார்.
• மூன்றாவது, விசயநகரப் பேரரசின் பிடியிலிருந்து விடுபட்டு, முழுவுரிமை மன்னராக விரும்பி, விசயநகரப் பேரரசை எதிர்க்க வேண்டிப் போர் தொடுத்தார்.
• நான்காவது, இராமநாதபுரத்தில் அரசுரிமைக் கலகங்கள் ஏற்பட்ட காலத்தில் அவற்றை அடக்கி அமைதியை நிலைநிறுத்த இராமநாதபுரத்தை ஆண்டு வந்த சேதுபதியுடன் போர் செய்தார்.
• ஐந்தாவதாக மைசூர் மீது மூக்கறுப்புப் போர்.
அது கி.பி.1656ல் 70 வயதாகி இருந்த திருமலை நாயக்கரை மைசூர் படை பழிவாங்க வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன், மதுரை நாட்டிற்கு 'கம்பையா' என்ற மிகக் கொடியவன் மைசூர்படைக்கு தலைமை ஏற்று வந்தான். மைசூர் மன்னன் கட்டளைப்படி மதுரை நாட்டிற்குள் புகுந்து ஆண், பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனுப்பி வைத்தான். அதோடு நிறுத்தாமல் கொள்ளையும் அடித்தான். சிக்கியவர்களை வெட்டிக் கொலைகளும் செய்தான். இதை அறிந்த திருமலை மன்னர், தன்னரசு நாட்டுத் தலைவர் திருமலை பின்னத்தேவருக்கும், இராமநாதபுரம் சேதுபதிக்கும் தன் பட்டத்து ராணி மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைக் கண்டவுடன் தாமதியாமல் தன் படைகளுடன் வந்து மதுரை படைகளையும் ஒன்று சேர்த்து கடும் போர் செய்த மைசூர் படைக்கு பெரிய சேதத்தை உண்டாக்கி விரட்டியடித்து விட்டு மதுரையைக் காத்தார். இந்த போரில் இரு தரப்பினரிலும் உயிர் விட்டவர்கள் அதிகம்.
அதே நேரத்தில் தன்னரசு கள்ளர் படைகள், கன்னிவாடி, விருப்பாச்சி படைகளை சேர்த்துக்கொண்டு மைசூர் படைகளை விரட்டித் தொடர்ந்து சென்றனர். 'திருமலை பின்னத்தேவர்' தலைமையில் சென்ற படைகள், மதுரையில் பொது மக்களின் மூக்கை அறுத்த போது தளபதியாக இருந்த கம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையும் அறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள். இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை நாயக்க மன்னர், பின்னத்தேவருக்கு 'மூக்குப்பறி' என்ற பட்டம் வழங்கினார். சேதுபதிக்கு 'திருமலை சேதுபதி'என்ற பட்டமும் 'ராணி சொல் காத்தான்' என்ற பெயரும் வழங்கினார். இதோடு நிற்காமல் சேதுபதி இனிமேல் நீ எனக்கு கப்பம் கட்ட வேண்டாம் என்ற உத்தரவும் கொடுத்து இராமநாதபுரத்திற்கு தகுந்த மரியாதையுடன் அனுப்பி வைத்தார்.இப்போர்களினால் மதுரை நாட்டு மக்கள் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளானார்கள். இப்படி ஒரு மூர்க்கத்தனமான மூக்கறுப்புப் போர், மதுரை திருமலை நாயக்கருக்கும், மைசூர் அரசன் கந்தீரவனுக்கும் இடையே நடந்துள்ளதாக சேலம் வரலாற்று ஆய்வாளரும், எனது நீண்டகால முகநூல் (FACEBOOK) நண்பருமான திரு.ஆறகழூர் வெங்கடேசன் கூறுகிறார். ஆனால் 'மூக்கறுப்பு யுத்தம்' நடந்ததற்கான ஆதாரம் இவருக்கு சேலத்தில்தான் கிடைத்திருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரை சேர்ந்த வெங்கடேசன், அடிப்படையில் ஒரு மருந்தாளுநர். தீவிர கடவுள் மறுப்பாளர்; அறிவியல் சிந்தனையாளர். ஆனால், தற்போது கோயில் கோயிலாக சுற்றிக்கொண்டிருக்கிறார். வழிபாட்டிற்காக அல்ல; வரலாற்று ஆராய்ச்சிக்காக.  பேளூர் அங்காளம்மன் கோயில் முன்பு, கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான விளை நிலத்தில்,
6 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட கல்வெட்டாக கிடைத்தது. கல்வெட்டின் நாலாபுறங்களிலும் ஏராளமான எழுத்துகள் இருந்தன. அவை 16ஆம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்கள்.
 கல்வெட்டு பகுதியில், “மீசையுடன் மூக்கறுப்பிச்சே” என்று உள்ளது.
ராமாயண கதையில் ராவணன் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை, ராமன் தம்பி லட்சுமணன் துண்டித்திடுவான். இதிகாசத்தில் மட்டுமே கேட்டுப்பழகிய இதுபோன்ற மூக்கறுப்பு சம்பவம், நிஜத்திலும் நடந்ததற்கான 'ஒரே ஆதாரம்' இந்தக் கல்வெட்டு என்றே சொல்லலாம். “கல்வெட்டின் முதல் பக்கத்திலும், இரண்டாம் பக்கத்திலும் தலா 29 வரிகளும், மூன்றாம் பக்கத்தில் 41 வரிகளும், நான்காம் பக்கத்தில் 32 வரிகளும் பொறிக்கப்பட்டு இருந்தன. மூக்கறுப்புப் போர் பற்றிய தகவல் அடங்கிய முதல் கல்வெட்டு இதுதான்.
மைசூர் நாட்டு மன்னன் கந்தீரவனுக்கும், மதுரை திருமலை நாயக்கருக்கும் இடையே ஏற்பட்ட மூக்கறுப்பு போர் பற்றிய தகவல்கள் அதில் இருந்தன. கந்தீரவனுக்கு எதிராக திருமலை நாயக்கர் தொடர்ந்து வாலாட்டியதால் கடும் ஆத்திரம் அடைந்த மைசூர் மன்னன், அவர் மீது போர் தொடுக்கிறான். போரில் வீரர்களைக் கொல்வது தான் மரபு. ஆனால், எதிரி நாட்டில் எதிர்ப்படுவது யாராக இருந்தாலும் அவர்களின் மூக்கையும், மேல் உதட்டையும் அறுத்துக் கொண்டு வந்தால் வெகுமதிகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கிறான்.
அப்படி கொண்டு வரப்படும் மூக்கு, மேலுதட்டுடன் மீசையும் இருந்தால் வெகுமதிகள் இன்னும் அதிகமாகக் கிடைக்கும். மூக்கறுப்புக்காக விசேஷ கருவியையும் வீரர்கள் வைத்திருந்தனர். கந்தீரவனின் படை வீரர்கள், தமிழ்நாட்டில் புகுந்து பலரின் மூக்கு, மேலுதடுகளையும் அறுத்துச் செல்கின்றனர்.
அடுத்து, கந்தீரவனின் பாணியிலேயே இதற்கு பதிலடி கொடுத்தார் திருமலை நாயக்கர்.
அவருடைய ஆணையின் பேரில், ராமநாதபுரம் ரகுநாதசேதுபதி தலைமையில் 25000 படை வீரர்கள், பாளையக்காரர்களின் 35000 படை வீரர்கள் என 60 ஆயிரம் வீரர்கள் மைசூர் ஆட்சிப் பகுதிக்குள் நுழைந்து, எதிரிகளின் மூக்குகளை அரிந்து சாக்குப்பையில் கட்டி திருமலை நாயக்கருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தப் போர் 1656ம் ஆண்டு நடந்துள்ளதாக, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அப்போது பேளூர் பகுதியில் பாளையக்காரர்கள் ஆட்சி நடத்தி வந்துள்ளனர். அதனால், மூக்கறுப்பு போர் குறித்த கல்வெட்டு, இந்தப் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கலாம்,” என்கிறார் ஆறகழூர் வெங்கடேசன். “மைசூர் மன்னன் கந்தீரவன், பிறவியிலேயே வாய் பேச இயலாதவன்; காதுகளும் கேட்காது. அவரை பலர் கேலி செய்திருக்கலாம். அந்த வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள, எதிரி நாட்டவர்களின் மூக்கையும், மேல் உதட்டையும் அறுத்துக் கொண்டு வரச்சொல்லி இருக்கலாம்,” என்றும் சொல்கிறார் தோழர் ஆறகழூர் வெங்கடேசன்.
இது ஒருபுறம் இருக்க, மைசூர் மன்னன் கந்தீரவனின் முக்கையும் மேல் உதட்டையும் ரகுநாதசேதுபதியின் படை வீரர்கள் அறுத்து வந்து திருமலை நாயக்கரிடம் ஒப்படைத்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.
பிறரை அவமானப்படுத்த இன்றும் ‘அவனை எப்படியாவது மூக்குடைக்க வேண்டும்’ என்றே சொல்கிறோம். எனில், மூக்கறுத்தல் என்பது ஒருவரை மானமிழக்கச் செய்தல் என்பதாகத்தான் இந்தச் சமூகம் கருதி வந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் மூக்கையும், மேல் உதட்டையும் அறுத்து வரச்சொல்லி இருக்கலாம்.
எனினும், மைசூர்க்காரர்களுக்கு (கர்நாடகா), தமிழ்நாட்டுடன் 360 ஆண்டுகளுக்கு முன்பே பகை இருந்து வந்திருக்கிறது என்பதற்கு இந்த கல்வெட்டு ஒரு சான்று.
(ஆதாரம்:- புதிய அகராதி, 2017-பிப்ரவரி திங்கள் இதழில் ஆறகளூர் வெங்கடேசன் அவர்கள் கூறிய தகவல்)

• திருமலை நாயக்கரின் "பெத்தபிள்ளை" என்று புகழாரம் பெற்ற திருமலை பின்னத்தேவனோடு தொடர்புடைய ஓர் இடைச்சமூகத்தினர் இன்றும் மதுரை வடக்கு மாசி வீதியில் வசித்து வருகின்றனர். திருமலை மன்னராலேயே அந்த இடைச்சமூகத்தினருக்கு வடக்கு மாசி வீதி பகுதியின் புகழ்பெற்ற "இராமாயணச்சாவடி"யும் தரப்பட்டது.


திருநெல்வேலி வட்டாரத்தில் வாழ்ந்த அந்த 'புதுநாட்டு இடையர்'களுக்கு அங்கிருந்த ஒரு பாளையக்காரன் தந்த தொந்தரவு சகிக்க முடியாமலிருந்தபடியால், அவர்கள் ஒன்று சேர்ந்து மதுரைக்கு வந்து திருமலை நாயக்க மன்னரிடம் தஞ்சம் புகுந்தார்கள். திருமலை நாயக்கரும் எட்டு நாட்டு கள்ளர் தலைவனாகிய  மூக்குபறி திருமலை பின்னத்தேவரை புதுநாட்டு இடையர்கள் காப்பாளனாக நியமித்து அவர்களுக்கு இடையூறு இல்லாமல் பரிபாலித்து வரும்படியாகச் செய்தார்'  [தகவல் ஆதாரம்: பி.முத்துத்தேவர் என்பவர் எழுதிய 'மூவேந்தர்குலத் தேவர் சமூக வரலாறு' எனும் நூலில் பக்கம் 215ல் மேற்குறித்த கதை உள்ளது.] எனத் தெரிகிறது. 
• திருமலை நாயக்கரிடம் (கி.பி1623-56)
தளவாயாக இருந்த இராமப்பய்யன், இராமநாதபுரத்தை ஆண்டு வந்த 'சேதுபதி சடைக்கத் தேவன்' மீது போர் தொடுத்து அவனைச் சிறைசெய்து வந்த கதையைக் கூறுவது இராமப்பய்யன் அம்மானையாகும்.
[குறிப்பு:- திருமலை நாயக்கர் வரலாற்றைப் பெருமளவு அறியத் துணைபுரிபவை சேசுசபைப் பாதிரிமார் எழுதிய கடிதங்களாகும்.] மேலே கூறப்பட்ட நாயக்கர் வரலாற்றுக்கும், இராமப்பய்யன் அம்மானையில் காணப்படும் வரலாற்றுத் தகவலுக்கும் பெரியதொரு வேறுபாடு இல்லை. திருமலை நாயக்கரின் படைத்தலைவனாய் இருந்த
'இராமப்பய்யன்' என்ற தெலுங்குப் பிராமணப் படைத்தலைவன் ஒருவன் மறவர் நாட்டுப் படையெடுப்பில் வெற்றியடைந்து சடைக்கத்தேவன் சேதுபதியைத் திருமலை நாயக்கனிடம் ஒப்புவித்துச் சிறையில் அடைக்கச் செய்தான் என்பது அம்மானையில் காணப்படும் தகவலாகும். இதற்கு மாறாக, போரின் நடுவிலேயே இராமப்பய்யன் இறந்து விட்டானென்று வரலாறு சொல்லுகின்றது. ஆனால் கதைப்பாடல் சேதுபதியின் மருமகன் வன்னியத் தேவன் இறந்ததனால், சடைக்கத்தேவன் (சேதுபதி) திருமலையிடம் சரணடைந்தான் எனக் கூறுகிறது.
சிறை வைக்கப்பட்ட சேதுபதி மன்னர், சேசு பாதிரியாரின் வேண்டுகோளின்படி விடுதலையடைந்ததாக வரலாறு கூறுகின்றது. தெய்வ பக்தியால் சேதுபதியைக் கட்டியிருந்த விலங்குகள் தெறித்துவிடவே திருமலை மன்னரால் விடுதலை செய்யப்பட்டான் என்று 'அம்மானை' சொல்கிறது. ஆயின் வடநாட்டிலிருந்து வந்த திருத்தலப் பயணிகளான வயிராகிகளும் லாடசந்நியாசிகளும் திருமலை நாயக்கனிடம் முறையிட்டதனால் சேதுபதி விடுதலை செய்யப்பட்டான் என்றும் வரலாறு சொல்லுகின்றது. மேலும் மெக்கன்சி சுவடியில் (Meckenzie Manuscripts) வடநாட்டிலிருந்து வந்த திருத்தலப் பயணிகள் திருச்சியில் சிறை வைத்திருந்த சேதுபதியாகிய சடைக்கத்தேவனை விடுவித்து, "ஸ்ரீரங்கத்தில் அவனுக்கு முடிசூட்டி, இராமநாதபுரம் அழைத்துச் சென்று அரசு கட்டிலில் அமர்த்தினார்கள்" என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.
இவ்விரண்டு செய்திகளிலிருந்தும் சேதுபதி விடுதலையில் வடநாட்டுத் திருத்தலப் பயணிகள் ஈடுபட்டிருந்தார்கள் என்பது பொதுவாகத் தெளிவாகிறது.
இந்த அளவிலேயே கதைப்பாடல், வரலாற்றிலிருந்து மாறுபட்ட செய்திகளைக் கொண்டுள்ளதாக விளங்குகின்றது. கி.பி. 17ஆம் நூற்றாண்டு மதுரை நகர அரசியல் நிலையை அறிந்து கொள்ள "இராமப்பய்யன் அம்மானை" பெரிதும் துணைபுரிகின்றது. எனலாம். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், போன்ற சிற்றிலக்கியங்களும், இரவிக்குட்டி போர், மதுரைவீரன் கதை போன்ற வாய்மொழி இலக்கியங்கள் திருமலை மன்னர் காலத்தில் தோன்றியவையாகும்.
• மேலும் திருமலை மன்னர் காலத்தில் 'பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்' (அழகிய மணவாளதாசர் எனவும் ‘திவ்வியகவி’ என்ற பெயராலும் இவரை அழைத்தனர்) இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் குறிப்பிடத்தக்க இலக்கியமாகும்.. (“அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன் ஆவான்" என்பது தமிழறிஞர்கள் கூறுவர்.) திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த இவர் பின்னர் இறைத்தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
அஷ்டபிரபந்தம் என எட்டு சிற்றிலக்கியங்களை இயற்றிய இவர் இருமொழி புலமைப் பெற்றவர். நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்குப் பிறகு வைணவ சமயச் சார்பாக எழுந்த இத்தொகுதியைத் "திவ்விய பிரந்த சாரம்" எனக் கூறுவர். சொல்லணிகளான யமகம், திரிபு, சிலேடை முதலியவை இதில் சிறந்து விளங்குகின்றன.
• அஷ்ட பிரபந்தங்கள்
1.திருவரங்கக் கலம்பகம் 
2.திருவரங்கத்து மாலை
3.திருவரங்கத்து திருவந்தாதி
4.சீரங்கநாயகர் ஊசல்
5.திருவேங்கட மாலை
6.திருவேங்கடத்தந்தாதி
7.அழகர் அந்தாதி
8.நூற்றெட்டுத் திருபதி அந்தாதி.
இந்த எட்டுநூல்களும், 'அஷ்டப்பிரபந்தம்' எனவும், 'ஐயங்கார்பிரபந்தம்' எனவும் வழங்கப்பட்டன. இதில் முதல் நான்கு நூல்கள் 'திருவரங்கம் பெரியகோயில்' புகழ் பாடும் நூல்களாகும். இவர் திருவேங்கடமாலை முதலிய நூல்க ளியற்றியதைக் குறித்து ஒருசாரார் வழங்குவதொரு கதை பின் வருமாறு:- இவர் ஸ்ரீரங்கநாதனுக்கே தொண்டராகி அப்பெரியபெருமானையன்றிப் பிறிதொரு தெய்வத்தை மறந்துந் தொழாத மனவுறுதியுடையவராய், அப்பெரியபெருமாள் விஷயமாகவே அந்தாதியும் மாலையும் கலம்பகமும் ஊசலும் பாடியபொழுது, திருவேங்கடமுடையான் இவர் வாயால் தாம் பிரபந்தம் பாடப்பெற விரும்பித் தமது உண்மை வடிவத்துடன் இவரது கனவில் தோன்றி 'நம் வேங்கடத்தின் விஷயமாகச் சில பிரபந்தம் பாடுக!' என்று கட்டளையிட, இவர் அதற்கு இணங்காமல் "அரங்கனைப் பாடிய வாயாற் குரங்கனைப் பாடேன்!" என்றுகூறி மறுக்க, திருவேங்கடமுடையான் எங்ஙனமாவது இவர்வாயாற் பாடல்பெற அவாக் கொண்டதுமன்றி, எல்லாத் திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் ஒருவனே யென்று இவர்க்குத் தெரிவித்து இவர் கொண்டுள்ள பேதபுத்தியை அகற்றவுங் கருதியதனால், இவர்க்கு உடனே கண்டமாலையென்னுங் கொடியநோய் உண்டாகும்படி செய்ய, அந்த வியாதியால் மிகவருந்திய இவர் அதன் காரணத்தை உணர்ந்து கொண்டு அப்பெருமான் பக்கல் தாம் அபசாரப்பட்ட அபராதம் தீருமாறு உடனே 'திருவேங்கடமாலை', 'திருவேங்கடத்தந்தாதி' என்னும் பிரபந்தங்களை இயற்றி அப்பெருமானைத் துதிக்க, அது பற்றித் திருவுள்ளமுவந்த திருவேங்கடமுடையான் உடனே இவரெதிரில் எழுந்தருளிக் காட்சிதந்து அநுக்கிரகிக்க, அதனால் இவர் அப்பொழுதே அந்நோய் நீங்கப் பெற்றவராகி, பின்பு, அவ்வடமலைக்கு ஈடான தென்மலையின் விஷயமாக 'அழகரந்தாதி' பாடி, அப்பால் தமது பேதபுத்தி யொழிந்தமை நன்கு விளங்க 'நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி' பாடினார் என்பர்.
• திருவேங்கடமுடையான் [ஸ்ரீநிவாசன்] ஐயங்கார்க்குச் சேவைசாதித்த இடம் - திருவரங்கம் பெரியகோயிலில் சலவைக்கல் மண்டபப்பிராகாரமென்கிற உட்பிரகாரத்தில் தென்கிழக்குப்பக்கத்தில் என்பர். (அதாவது ராஜமகேந்திரன் திருச்சுற்றின் தென்கிழக்கு பகுதியில் தற்போது உள்ள திருவேங்கடமுடையான் சித்திரம் அருகாமையில் என்பர்.)
• தலைநகரம் மாற்றம்:-
விசுவநாத நாயக்கர் காலத்தில் மதுரையே மதுரை நாட்டின் தலைநகராய் இருந்தது. முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் கி.பி.1616இல் மதுரை நகரிலிருந்து தலைநகரைத் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். திருமலை நாயக்கரும் தம் அண்ணனைப் போலவே மதுரையில் முடிசூட்டிக் கொண்டு, திருச்சிராப்பள்ளியில் இருந்தே ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்து வந்தார்.
• திருமலை நாயக்கர் திருச்சியில் அமைந்திருந்த தலைநகரை [கி.பி.1634இல்]
மதுரைக்கு மாற்றினார். ஏனென்றால் ஒரு சமயம் திருமலை நாயக்கருக்குக் கடுமையான நோய் ஏற்பட்டது. பலவகை மருந்துகளை உட்கொண்டும் நோய் தீரவில்லை. அச்சமயத்தில் மதுரையில் மீனாட்சியம்மன் திருக்கோயில் திருவிழா நடந்து கொண்டு இருந்தது. திருமலை நாயக்கர் அத்திருவிழாவைக் காண மதுரைக்குச் சென்று கொண்டிருந்தபோது, நோய் மிகுதியானபடியால் பயணத்தைத் தொடரமுடியாமல், வழியில் திண்டுக்கல்லில் தங்கினார். அன்று இரவு ஒரு சித்தர் அவருடைய கனவில் தோன்றி “அரசே! நீ மதுரையில் நிலையாகத் தங்கி, மீனாட்சி அம்மையாருக்கும், சொக்கநாதப் பெருமானுக்கும் வழிபாடும் திருவிழாவும் நடத்தி ஆட்சி புரிந்து வந்தால் இந்நோய் நீங்கும்” என்றார். உடனே திருமலை நாயக்கர் அவ்வாறு நீங்குமானால் ஐந்து லட்சம் பொன்னுக்குத் திருப்பணி திருவாபரணம் செய்து வைக்கிறேன் என்று நேர்ந்து கொண்டார். மறுநாள் காலையில் அந்நோய் அவரை விட்டு நீங்கிவிட்டது. பின்பு தலைநகரையும் மதுரைக்கு மாற்றினார் என்ற இக்கதையினை  கடந்த பதிவிலேயே பார்த்தோம்.  
• திருவரங்கம் ஸ்ரீவைஷ்ணவர்களிடையே 17ம் நூற்றாண்டில் தென்கலை வடகலை பிரிவுகளின் முரண்பட்ட சச்சரவுகள் நிகழ்ந்தன. 'ஸ்ரீரங்கம் கோயில் தென்கலையாருக்கே உரிய கோயில்' என்பதை நிலைநாட்ட  போராடிய நிகழ்ச்சி திருமலை நாயக்கர் திருச்சியில் இருந்த போது நடந்தது.
திருமலை சௌரி மன்னர் திருச்சியிலிருந்த போது தீவிரமான ஸ்ரீவைஷ்ணவ சமயத்தை பின்பற்றியவராக 'பிரணதார்த்திஹர வாதூல தேசிகரான கோயிலண்ணர்' எனும் ஆச்சார்யன் திருவடி சம்பந்தம் பெற்றிருந்தார்.
கி.பி. 1630 ஆம் ஆண்டு விஜயநகர அரசரான மூன்றாம் வேங்கவனுடைய (கி.பி 1630-42) குலகுருவான 'ஏட்டூர் திருமலை குமார தாத்தாச்சார்யர்' (அல்லது) கோடிகன்யாதானம்  தாத்தாச்சார்யர், திருமலை வேங்கத்துறைவனை வழிபட்டு, ஆனந்த நிலையம் விமானத்திற்கு   பழுது பார்த்து பொன்வேய்ந்து திருப்பணி செய்து, காஞ்சி வரதராசரையும் வழிபட்டு மேற்படி திருப்பணிகளையே செய்த பிறகு திருவரங்கம் நோக்கி வந்தார். விஜயநகர மன்னரான மூன்றாம் வேங்கடவன் திருவரங்கம் பெரியகோயிலுக்கு 'கோடிகன்யாதானம் தாத்தாச்சார்யர்' வருவதற்கு முன்பே திருமலை மன்னருக்கு குருவின் வருகையை தூதனுப்பி தெரிவித்து விட்டார்.
அக்காலகட்டத்தில் திருவரங்கத்தில் பட்டர் திருமலாசார்யர்,உத்தம நம்பி, அண்ணங்கார் ஆகியோரிடையே நிலவி வந்த பகைமை உணர்ச்சி வலுத்திருந்தது. இதற்கான காரணத்தை கோயிலொழுகு (முதற்பாகம்) இறுதியில் கூறுகிறது.



"உத்தமநம்பிக்கும் பட்டர் திருமலாசார்யருக்கும் உண்டாற கலஹம்" எனும் பகுதியில் உள்ளது.
தனது குருவான அண்ணங்காரைச் சந்தித்த திருமலை சௌரி  (கோயிலொழுகு நாயக்கரை அவ்வாறே கூறுகிறது) விஜயநகர மன்னரின் விருப்பப்படி, திருவரங்கம் வருகை தரும் தாத்தாச்சார்யருக்கு தகுந்த மரியாதைகளை அளித்திடுமாறு வேண்டிக் கொண்டான். வடகலையாரான தாத்தாச்சாரியாருக்கு தென்கலையாருக்குரிய கோயில் மரியாதைகளை அளிப்பதற்கு அண்ணங்கார் உடன்படவில்லை. சிஷ்யரான தன்னுடைய. இந்த வேண்டுகோளை ஏற்காவிட்டால் அண்ணங்கார் பல ஆபத்துக்களை  எதிர்கொள்ள நேரிடும் என்று அச்சுறுத்திய போதிலும், அவர் மன்னனுடைய விருப்பத்திற்கு இணங்கவில்லை. திருவரங்த்தில் நிலவியிருந்த சூழ்நிலையை தாத்தாச்சார்யருக்கு தெரியப்படுத்தினான். இதனால் சினங்கொண்ட தாத்தாச்சார்யர் மன்னரிடம் " காஞ்சிபுரத்தில் தென்கலையார்கள் ஒன்றுகூடி இத்தகைய இடர்பாடுகளைச் செய்யமுனைந்தனர். அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை.நீ மன்னனாக இருக்க தகுதியற்றவன். இதுபற்றி நான் விஜயநகர பேரரசரிடம் தெரிவிக்கப்போகிறேன்" என்று கோபத்துடன் கூறினார். திட்டமிட்ட படி வந்த தாத்தாச்சார்யரை ஸ்தலத்தார்கள் யாரும் மமரியாதை தரவில்லை. திருவரங்கம் ப்ரணவாகார விமானத்திற்குப் பொன் வேய்வதற்காக கொண்டு வந்த தங்கத்தினை, 'திருமாலிருஞ்சோலை' சோமச்சந்த விமானத்திற்குப் பொன் வேய்ந்து விட்டு, தாத்தாச்சார்யர் வடநாட்டு யாத்திரையை மேற்க்கொண்டார். விஜயநகரபேரரசன் தன் குருவுக்கு நேர்ந்த அவமானத்தை அறிந்து, பின்னர் கிருஷ்ணராயர், விட்டலராயர் ஆகியோரை திருவரங்கத்திற்கு அனுப்பி வைத்து நடந்த நிகழ்ச்சிகளை உள்ளபடி  ஆராய்ந்து தேவைப்பட்டால் திருமலை சௌரி நாயக்கனின் தலையைக் கொய்து தனக்கு அனுப்பி வைத்திடுமாறு பணித்தான். திருமலை சௌரி குற்றமற்றவர் என்பதை அவர்கள் தீரவிசாரித்து அறிந்து விஜயநகர பேரசனுக்கு தெரியப்படுத்தினர். திருமலை சௌரியும் விஜயநகர மன்னருக்குத் தங்கத்தாலான தனது தலையையும், பல்லாயிரம் பொற்காசுகளையும் காணிக்கையாக அனுப்பி வைத்தாராம். 
தனது கோரிக்கையை ஏற்காத ஸ்ரீரங்கத்து ஸ்தலத்தார்களில் ஒருவரான தனது குரு ப்ரணதார்த்திஹர வாதூல தேசிகர் (அண்ணங்கார்) மீது வெறுப்பு மேலிட்டது. இதன் விளைவாக அவருடன் ஏற்பட்டிருந்த ஆச்சார்ய சிஷ்ய உறவை அறுத்துக் கொண்டு 'திருவானைக்காவல்' ஸ்தலத்தில் இருந்த "அய்யங்காள் ஐயன்" என்ற சைவரிடம் தீட்சை பெற்றுக் கொண்டார். பிறகே தனது தலைநகரை மதுரைக்கு மாற்றினார் என்கிறவாறு கோயிலொழுகு கூறுகிறது.
• திருவரங்கம் பெரியகோயிலில் திருமலை நாயக்கர் காலத்தில் திருமலை மன்னன்  பெயரிலோ அல்லது விஜயநகரமன்னர் பெயரிலோ எந்தக் கல்வெட்டும் பொறிக்கப்படவில்லை. மாறாக மண்டலாதிகாரிகள், சேனைத்தலைவர்கள், தனிகர்கள் ஆகியோருடைய பெயர்களில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சி… … …
 அடுத்த பதிவு- Postல ( பகுதி - 10)
பார்ப்போம்.

                  அன்புடன்

       ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்




Friday, October 26, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 8)




அரசியல் வரலாற்று மரபு பகுதி - 7ன் தொடர்ச்சி.... 


••மகா மண்டலேசுவரரும் நாயக்கரும்:-

          • மேய்ச்சல் நில வாழ்க்கையுடன் சிதறிப்பரந்து கிடந்த ஒரு பெரும் மக்கள் கூட்டம்  ஒரு மகாஞானியின் சொற்களால் ஆவேசம் கொண்டு திரண்டெழுந்து ஒரு பேரரசை தோற்றுவித்தது என்பது ஓர் ஆச்சரியமூட்டும் நிகழ்வாகும். கன்னடத்தில் ‘மாதவ கருணா விலாசா’என்ற பழைய நூல் மொத்த விஜயநகர சாம்ராஜ்யத்தையே 'மாதவரின் கருணை' என்று குறிப்பிடுகிறது. ஆம்!  அது உண்மையே!
கி.பி.1336-இல் முதலாம் ஹரிஹரரும் முதலாம் புக்கரும் மாதவராகிய குரு வித்யாரண்யரின் துணையோடு விஜய நகரப் பேரரசை நிறுவினார்கள். [இன்று கர்நாடக மாநிலத்தில் பெல்லாரியிலிருந்து 56 கி.மீ. தொலைவிலும், ஹாஸ்பெட் இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் சிதைந்த நிலையில் இருக்கிறது விஜயநகரம். விஜயநகரத்தைச் சங்கமர், சாளுவர், துளுவர், ஆரவீட்டார் ஆகிய நான்கு மரபினர் ஆட்சி புரிந்தனர்.]
விஜயநகரம் தொடங்கிய
காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்தவர் (கி.பி.1339-1363) இராஜ நாராயணச் சம்புவராயன் என்பவர். சம்புவராயர்களின் அரசிற்குப் 'படைவீடு ராச்சியம்' என்று பெயர். இராஜ நாராயணச் சம்புவராயனின் தலைநகரம் வேலூர் மாவட்டத்திலுள்ள விரிஞ்சிபுரம். இன்றைய காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் அடங்கியது படைவீடு ராச்சியம். இவர்களது முன்னோர் திண்டிவனப் பகுதியில் (கிடங்கில்) இருந்த ஓய்மா நாட்டிலிருந்து வந்தவர்கள். சங்க இலக்கிய நூலும், பத்துப்பாட்டில் ஒன்றுமான 'சிறுபாணாற்றுப்படை' ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் மீது இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது என்பதைப் படித்திருக்கலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட படையாச்சிகள் எனப்படும் வன்னிய குல சத்திரிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் சம்புவராயர்கள் ஆவார்கள்.
• சங்கம மரபினரான முதலாம் புக்கரின் மகன் குமார கம்பணனே தமிழகத்தைக் கைப்பற்றி விஜய நகரப் பேரரசிற்கு உட்படுத்தியவர். கி.பி.1362 நவம்பர் மாதத்தில் இராஜ நாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றி அவரை விஜயநகரப் பேரரசிற்கு அடங்கி ஆட்சி புரியுமாறு செய்தார் குமார கம்பணன். அடுத்த சில ஆண்டுகளில் தஞ்சையை ஒய்சளர்களிடமிருந்தும், மதுரையைச் சுல்தான் அலாவுதீன் சிக்கந்தரிடமிருந்தும் (கி.பி.1377) கைப்பற்றி தமிழகம் முழுவதையும் விஜயநகரப் பேரரசிற்கு உட்படுத்தினார். மாநில ஆளுநர் பதவியான மகாமண்டலேசுவரராகவும் ஆனார்.
[மகாமண்டலேசுவரர் தண்டநாயகர் எனப்படுவார் குறைந்த மதிப்புள்ள காசுகளை இவர் வெளியிடமுடியும். சட்டம்-ஒழுங்கு நிருவாகப் பொறுப்பும் வரிவிதிப்பு-வரித்தள்ளுபடி செய்வதற்கான உரிமையும் இவருக்கு உண்டு. இவர் அரசின் நேரடிப் பிரதிநிதி. பேரரசருக்குத் திறை செலுத்தத் தேவையில்லை.]
குமாரகம்பண்ணன் ஆளுமைக்குப்பின் மதுரை விஜயநகரத்துக்கு கப்பம் கட்டும் நாடாகவே இருந்துவந்தது.
 கி.பி.1509ல்  'கர்நாடகத்தின் ராஜராஜசோழன்' போல கருதப்பட்டவரும்,  தென்னகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட விஜயநகரத்தின் மிகச்சிறந்த மன்னரான கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்திலே தான் (கி.பி.1529) மதுரையில் மகாமண்டலேசுவரருக்குப் பதிலாக 'நாயக்கர் ஆட்சி' எழுச்சி பெற்றது.


•மதுரை நாயக்கர் ஆட்சி:-
          விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கன். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர், கிருஷ்ண தேவராயரிடம் அடைப்பக்காரனாக பணிக்குச் சேர்ந்து பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானான். அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின. விஜய நகரத்திற்கு கப்பம் கட்டி வந்த  மதுரையை ஆண்ட சந்திர சேகர பாண்டியனுக்கும், வீர சேகர சோழனுக்கும் இடையே பகைமை வரவே  அவர்களை சமாதானபடுத்த ராயர் நாகம்ம நாயக்கனை சிறு படையுடன் மதுரைக்கு அனுப்பி வைத்தார்.
மதுரைக்கு சென்ற நாகம்மநாயக்கர் சோழனையும் பாண்டியனையும் வென்று தானே ஆட்சிபீடத்தில் அமர்கிறார்.  இதனை அறிந்த ஸ்ரீகிருஷ்ணதேவராயர், நாகம்மநாயக்கனின் இந்த துரோகச் செயல் கண்டு கொந்தளிக்கவே, அவரை கைது செய்ய உத்தரவிடுகிறார் . நாகம்மநாயக்கனின் மகனான விஸ்வநாதனே அந்த பொறுப்பை ஏற்க முன்வருகிறான். ஆரம்பத்தில் நம்ப மறுத்த ராயர் பின் சம்மதிக்கிறார். சொன்னதைப்போலவே விஸ்வநாதன் தன் தந்தையை கைது செய்து வந்து ராயரின் முன் நிறுத்துகிறான்.
விஸ்வநாதனின் விசுவாசத்தை கண்ட ராயர் மதுரையை ஆளும் பொறுப்பை அவனுக்கே ஒப்படைத்து நாகம்ம நாயக்கனை விடுதலையும் செய்கிறார். அது முதல் ராயரின் ஆளுமைக்கு கீழ் விஸ்வநாதன் மதுரை நாயக்க ஆட்சி முறையை தொடங்க ஆரம்பிக்கிறார்.

* இந்த விஸ்வநாத நாயக்கர்களின் காலத்தில் தான் விஜய நகரத்திலிருந்து தெலுங்கர்களும் கன்னடர்களும் தமிழகத்தை நோக்கி பெருங்கூட்டமாக புலம் பெயர்ந்து வந்தனர்.
 (இன்றைக்கு தமிழகத்தில் உள்ள தெலுங்கு ,கன்னடம் பேசுவோர் எல்லாம் இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் புலம் பெயர்ந்து வந்தவர்கள் ஆவார்கள்.)
இதே போல் குஜராத்திலிருந்து சௌராஷ்டிரர்களும் தமிழகம் வந்தடைந்தனர். என்னதான் வெவ்வேறு மொழி பேசுவோர் இருப்பினும் அனைவரும் சமமாகவே நடத்தப்பட்டனர். இதனை கண்ட பாரசீக கவிஞன்”அப்துல் ரசாக் ““ஒற்றுமை என்றால் இப்படி இருக்க வேண்டும், ஆட்சி என்றால் இப்படி நடக்க வேண்டும்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

* விஸ்வநாத நாயக்கனின் அமைச்சர் 'அரியநாத முதலியார்' தென்னகம் முழுக்க தன் படையால் வென்று நாயக்க ராஜ்ஜியத்தை பலப்படுத்தினார். ஜடாவர்மன் சுந்தர பாண்டியனுக்குப் பின் மதுரையில் ஒரு பலமான பேரரசு அமைவது அப்போதுதான். நெல்லை அருகே உள்ள புகழ்பெற்ற 'கிருஷ்ணாபுரம்' கோயிலை அரியநாதர் அமைத்தார். மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அமைந்துள்ள 'ஆயிரங்கால் மண்டபம்' கி.பி.1569 ஆம் ஆண்டு இவரால் கட்டப்பட்டதாகும். இன்றும் கூட குதிரையில் கம்பீரமாக அமர்ந்து காட்சியளிக்கும் இவரின் சிலையை இந்த மண்டபத்தின் நுழைவாயிலில் காணலாம். தளவாய் அரியநாத முதலியார் மாசித் தேர் மண்டபம் கட்டி உள்ளார். இதனை மதுரை கீழமாசி வீதியில் பார்க்கலாம்.
• தொண்டை மண்டல சைவ வெள்ளாளர் குலத்தில் உதித்த தளவாயும் முதலமைச்சருமான அரியநாத முதலியார் தான் தென்னகத்தை 72 பாளையபட்டுகளாக பிரித்து அவற்றுக்கு பாளையக்காரர்களை நியமித்தார்.
[பாளையக்காரர்கள் தாங்கள் ஆளும் பகுதிகளில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் தங்கள் செலவுகளுக்கும், இன்னொரு பகுதியைப் படைவீரர்களுக்கும், மற்றொரு பகுதியை மதுரை நாயக்கருக்கும் என ஒதுக்க வேண்டி இருந்தது. மதுரை அரசு வேண்டும் போது படையுதவி செய்ய வேண்டி இருந்தது. இதுவே பாளையப்பட்டு ஆட்சி முறையாகும்.]
இந்த 72 பாளையக்காரர்களில் சிலர் கன்னடர், சிலர் தெலுங்கர் ஆவர். மேலும் பாண்டியர் பரம்பரையைச் சேர்ந்தவர்களும் சிற்றரசர்களாய் இருந்தவர்களும் பாளையக்காரர்களாக இருந்தார்கள்.
[குறிப்பு:- திருச்சி தென்னூரில் “பெரிய நாச்சியம்மன் திருக்கோவில்” என்ற குலதெய்வம் கோவில் ஒன்று உள்ளது. இத்தெய்வம் வாணிய செட்டியார் சமூகத்தின் பருத்திக்குடையான், தென்னவராயன், பயிராலழகன், பாக்குடையான், மாத்துடையான் மகரிஷி முதலான 5 கோத்திர குடி மக்களுக்கும் உரிமையானது. பெரியநாச்சி அம்மனும், அவரது கணவர் வீரிய பெருமாள் என்பவரும், பிள்ளையற்ற இவர்களின் சிதைக்குத் தீமூட்டிய வீரப்ப சுவாமி என்பவரும் இச்சமூக மக்களுக்கு மூதாதையர்கள். இந்த மூதாதையர்களை இக்குலமக்கள் குலதெய்வங்களாக வணங்கி வழிபடுகிறார்கள். இம்மூவரையும் சேர்த்து இக்கோவிலில் '33 சிறுதெய்வங்கள்' உள்ளனர். அவர்களில் மன்னர் "விசுவப்ப நாயக்கர், தளவாய் அரியநாத முதலியார்" ஆகியோரும் அடங்குவர்.  திருச்சி புத்தூரில் இன்றும் "விசுவப்ப நாயக்கர் தெரு" என்று ஒரு தெரு பெரியநாச்சி அம்மன் கோவிலின் வடமேற்குப் பகுதியில் உள்ளது. மன்னர் விசுவப்ப நாயக்கர் பெரியநாச்சி அம்மனின் தந்தை முறை என்று குறிப்பிடப்பட்டு, அவரது தளவாய் அரியநாத முதலியாருடன் கோவிலில் குடியேற்றப்பட்டு இருவரும் பெரியநாச்சி அம்மையாரின் குடும்பத்துடன் இன்றும் குலதெய்வங்களாக வணங்கப்பட்டு வருகின்றனர்.]

• பொதுவாக 'நாயக்கர்கள்' என்று பொதுவாகச் சொல்லப்படுபவர்கள் கம்பளத்தார்கள் என்றும் தொட்டியர் என்றும் சொல்லப்படுகிறார்கள். கொல்லவார்,சில்லவார் .தொக்லவார், கம்மவார், பலிஜா என பல்வேறு உட்பிரிவுகள் கொண்ட இம்மக்கள் பூர்வத்தில் ஆந்திரப்பகுதி பாறைகள் நிறைந்த ராயலசீமா பகுதியில் ஆடு,மாடு மேய்த்தும் பொட்டல் நிலத்து வேளாண்மை செய்தும் வாழ்ந்தவர்கள் என அறியமுடிகிறது.

* தற்போதைய இந்த 'திருவரங்கம் பெரியகோயில்' எனும் ஆய்வின் நோக்கத்தில்
'மதுரை நாயக்கர்கள்' பற்றிய வரலாற்றுக்கு முதலில் அறிய வேண்டியது ஜெ.எச்.நெல்சனின் [The Madura Country: A Manual (1868)
James Henry Nelson] மதுரை ஆவணப்பதிவு நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் சென்னை பல்கலையில் ஆய்வுமாணவராக இருந்தபோது ஆங்கிலத்தில் ‘மதுரைநாயக்கர் வரலாறு’ நூலாக எழுதினார்.
இந்நூல் [The history of Nayaks of Madura ] 1924ல் சென்னைப் பல்கலை வரலாற்று பேராசிரியரான எஸ்கிருஷ்ணசாமி அய்யங்காரின் முன்னுரையுடன் வெளிவந்தது.
இந்நூலை அடியொற்றி தமிழறிஞர் அ.கி.பரந்தமனார் தமிழில் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’ தெளிவாகவும் சுருக்கமாகவும் நாயக்கர்களின் ஆட்சியையும் வீழ்ச்சியையும் பற்றிச் சொல்லும் வரலாற்று நூலாகும்.
க.அ.நீலகண்ட சாஸ்திரியாரின் [A History of South India: From Prehistoric Times to the Fall of Vijayanagar  by K. A. Nilakanta Sastri. First published as a book in 1955] ‘தென்னிந்திய வரலாறு’
டாக்டர் அ.கிருஷ்ணசாமிப்பிள்ளை எழுதிய ‘விஜயநகரத்தின் கீழ் தமிழகம்’ [Tamil Country under Vijayanagara] முதலிய நூல்களையும் கணக்கில் கொண்டு இந்நூலை எழுதியதாக அ.கி.பரந்தாமனார் சொல்கிறார். 
• விஜயநகருக்கு கட்டுப்பட்டு செஞ்சி, காளஹஸ்தி, தஞ்சாவூர், மதுரைஆகிய நகரங்களை தலைநகராக் கொண்டு 'நாயக்கர் ஆட்சி' தமிழகத்தில் ஏற்பட்டது.
• தஞ்சையில் கி.பி. 1532-இல் நாயக்கர் ஆட்சி தொடங்கியது;
• செஞ்சியில் கி.பி. 1526-இல் தொடங்கியது;
• மதுரையில் கி.பி. 1529-இல் தொடங்கியது.
• இதில் மதுரை நாயக்கர்களே நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள். 1529-ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1736-ஆம் ஆண்டு வரை (மதுரையில் மட்டும் 207 ஆண்டுகள்) இவர்கள் ஆட்சி நிலவியது.

•• முதல் ஐந்து மதுரை நாயக்கர்களும் விஜயநகரப்பேரரசுக்கு விசுவாசமாக அதற்கு அடங்கியே இருந்தார்கள். ஆறாவதாக 1609 தொடக்கம் 1623 வரை மதுரையை ஆண்ட நாயக்கரான முத்துவீரப்ப நாயக்கர், அக்காலத்தில் வலுவிழந்திருந்த விஜயநகரத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்திக்கொண்டார். இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் காலம் "மதுரை நாயக்கர்களின் பொற்காலம்" எனலாம். திருமலை நாயக்கருக்குப் பின்னர் இவ்வம்சத்தைச் சேர்ந்த மேலும் அறுவர் ஆட்சி செய்தனர். இவர்களுள் 'இராணி மங்கம்மாள்' குறிப்பிடத்தக்கவர். இறுதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் இராணி மீனாட்சி. 1732 இல் நாயக்க மன்னர் 'விஜயரங்க சொக்கநாத நாயக்கர்' வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான 'சந்தா சாகிப்' அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார். இதன் மூலம் 'மதுரை நாயக்கர் வம்சம்' ஒரு முடிவுக்கு வந்தது.


• விஸ்வநாத நாயக்கன் (கி.பி.1529 - 1564)
காலத்தில் மதுரை நாயக்கருடைய ஆட்சிப்பரப்பில்  திருச்சிராப்பள்ளி வரை கொண்டுவரப்பட்டது. காவிரியின் இருமருங்கிலும் பரவலாக இருந்த அடர்ந்த குறுங்காடுகள் அகற்றப்பட்டன. விசுவநாதர் திருச்சிராப்பள்ளியில் தெப்பக் குளத்தை வெட்டினார். மேலும் திருச்சி அரண்மனை, நகரசுற்றுப்புறங்கள், திருவரங்கம் பெரியகோயில், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில் மற்றும் மலைக்கோட்டை கோயில் ஆகிய இடங்களில் பாதுகாப்பு கருதி சிறப்புக்காவல் படையைத் தோற்றுவித்தான். இதன் மூலம் திருவரங்கம் பெரியகோயிலுக்கு வருகை தந்த யாத்திரிகர்களுடைய உயிருக்கும், உடைமைக்கும், தகுந்த பாதுகாப்பு அளித்து, அவர்கள் அச்சமின்றி அரங்கனைத் திருவடி தொழுவதற்கு விஸ்வநாத நாயக்கன் வழிவகுத்தான்.


   இவன் காலத்தில் திருவரங்கம் கோயிலின் பல மண்டபங்கள் பழுது பார்க்கப்பட்டன. மூன்று லட்சம் பொன் கொண்டு இவன் மண்டபங்களைப் பழுது பார்த்தான் என்று "விஸ்வநாதனைக் கொண்டு நரஸிம்ஹாசார்யர் பண்ணிண கைங்கர்யம்" 
(இதில் கோயிலொழுகு கூறும் சக ஆண்டு1420 என்பதில் வரலாற்று ஆண்டோடு முரண் உள்ளதாக ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ. அ.கிருஷ்ணமாச்சார்யர் ஸ்வாமி அவர்கள் கூறுகிறார்) என்ற தலைப்பில் கோயிலொழுகு குறிப்பிடுகின்றது. 

• ஸ்ரீவீரப்பிரதாப அச்சுததேவராயர் உபயமாக மதுரை நாயக்க மன்னன் விஸ்வநாத நாயக்கரால் பெருமாள் ஸ்ரீரங்கநாத தேவற்கு திருஊஞ்சல் திருநாளின்போது,  திருஊஞ்சல் மஞ்சத்திற்கு வெள்ளிச்சரப்பள்ளி நாலு வராகன், இடைவெள்ளி ராயசப்படி அரண்மனைப்படிக்கல்லாலும் 8392 தூக்கம் வராகன் சமர்ப்பித்தது என்ற செய்திகளைப் பற்றி கூறும் கல்வெட்டு [ இரண்டாம் திருச்சுற்று மேற்குப்பக்க சுவரில் 07-02-1538ம் நாளில் பொறிக்கப்பட்டது. - A.R.E.No.43/1938-39] ஒன்று விஸ்வநாத நாயக்கனுடையதாகும்.
• விஸ்வநாதநாயக்க மன்னனின் மகன் கிருஷ்ணப்ப நாயக்கன் (1564-1572) ஆட்சி காலத்தில், விஜயநகர ஆரவீடு ராமராஜாவின் தம்பியான 'திருமலை ராஜா' பெயரில் ஆவணி மாதத்தில் பூச நட்சத்திரத்தில் கொடியேற்றி, திருமலைராஜாவின் விசாகத்தில் திருத்தேர் உத்ஸவம் நடைபெற்றது பற்றிய குறிப்புகள் தாயார் சந்நிதி தெற்குப்புறச்சுவரில் உள்ள கல்வெட்டில் (A.R.E.No. 350/1953-54) காணப்படுகின்றன. மேலும் கிருஷ்ணப்பநாயக்கன் உபயமாக ஸ்ரீரங்கநாச்சியார் நவராத்ரி மஹாநவமி திருநாளுக்கு எழுந்தருளும் போது அமுது செய்வதற்காக உபயமாக தந்திட்ட கொந்தட்டை, சிற்றவத்தூர், திருமங்கலம் ஆகிய கிராமங்களில் நிலங்கள் தானமாக தரப்பட்டது பற்றியும் அக்கல்வெட்டு கூறுகிறது.
மதுரை நாயக்க மன்னர்கள் திருவரங்கம் பெரியகோயிலுக்கு திருப்பணிகள் பலவற்றையும், விழாக்கள் நடைபெறுவதற்கு பல உபயங்களைச் செய்தது போல தஞ்சை நாயக்க மன்னர்களும் பல திருப்பணி மற்றும் உபயங்களை திருவரங்கம் பெரியகோயிலுக்கு செய்தனர்.
"செவ்வப்பநாயக்கருக்கும்,மூர்த்தியம்மாவிற்கும் திருவரங்கன் திருவருளாலே பிறந்தவனான அச்சுதப்ப நாயக்கருடைய உபயம்" என்ற சொற்றொடரோடு இரண்டாம் திருச்சுற்று மேற்குப்பகுதி நாயக்க மன்னர்களின் உருவச்சிலைகளுக்கு பின்புறம் பொறிக்கப்பட்ட (கி.பி. 02-11-1570) (ARENo.298/1950-51) கல்வெட்டு கூறுகிறது.
தினந்தோறும் பெரியபெருமாள், பெரியபிராட்டியார் அமுது செய்தருளும் பெரிய அவசரத் தளிகை, கறியமுது, திருவடிநாயனாருக்குத் திருவிளக்கு, சேனைமுதலியார் சந்நிதியில் திருவிளக்கு, திரிநூல், நெய், நாச்சியார் ஊஞ்சல் உத்ஸவத்தின் போது ஊஞ்சல் மண்டபத்தில் திருக்குத்துமணி விளக்கு மற்றும் திருவந்திக்காப்புக்கு நெய், ஊஞ்சல் உத்ஸவத்தின் போது அமுது செய்வதற்கு பொரியமுது, அதிரசம், வடை, சுகியன், இட்டலி, தோசை, வெச்சமுது கூன், பானகக் கூன், கூட்டுக்கறியமுது, புளிக்கறியமுது, அடைக்கறியமுது, இலையமுது, பெரியதிருப்பாவாடைக்கான ஆயிரம் தளிகை, நம்பெருமாள் சாற்றியருளும் சந்தனம், கஸ்தூரி, கற்பூரம், திருமொழித்திருநாள் ஐந்தாம் உத்ஸவத்தின் போது சித்ரமண்பத்தில் அமுது செய்தருளுகிற அதிரசம், சர்க்கரைப் பொங்கல், வெற்றிலைப் பாக்கு....(தொடர்ச்சி கல்வெட்டில் சிதைந்துள்ளது) என்கிற அமுதுபடிகள் சமர்ப்பிப்பதற்கு நிபந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. பெரிய திருப்பாவாடைக்கு பழங்கள் நறுக்கப்படும் போது "காக்கை ஓட்டும் ஸ்ரீவைஷ்ணவருக்கு ஸம்பாவனை" தரப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது.
• ராமாநுச கூடமொன்று ஏற்படுத்தி வைப்பதற்காக திருவரங்கம் திருப்பதியைச் சார்ந்த பஞ்சபட்டர் திருமலையப்பர் மற்றும் நாராயணர் ஆகிய் இருவரும்  தங்கள் வீட்டை 110 பொன்னுக்கு தஞ்சை செவ்வப்ப நாயக்கர் குமாரரான அச்சுதப்ப நாயக்கருக்கு விற்றது பற்றிய செய்தியை (A.R.E.No. 97/1936-37)  தென்கலை திருமண்காப்பு பொறித்துள்ள கல்வெட்டு  ஒன்று (நாள்: 13-04-1594)
கூறுகிறது. கிழக்குச்சித்திரை வீதியில் வடக்குப்பகுதி தொடங்கும் இடத்தில் மூலையில் இக்கல்வெட்டு உள்ளது.

• தலைநகரம் மாற்றம்:-
விசுவநாத நாயக்கர் காலத்தில் மதுரை நகரமானது 'மதுரை நாயக்க அரசின்' தலைநகராய் இருந்தது.
மதுரையை ஆண்ட ஐந்தாவது நாயக்க மன்னரான முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரின்
 (1601 -1609) மகன்கள் முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் மற்றும் திருமலை நாயக்கர் ஆவார்கள். ஆறாவது மதுரை நாயக்க அரசராக
முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட (1609-1623) . காலத்தில் மதுரை, தஞ்சை நாயக்கர்களிடையே அடிக்கடி போர் மூண்டதால் தலைநகரை கி.பி.1616இல் மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார்.
ஏழாவது நாயக்க அரசரான திருமலை நாயக்கரும் தம் அண்ணனைப் போலவே மதுரையில் முடிசூட்டிக் கொண்டு, திருச்சிராப்பள்ளியில் இருந்தே ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் மதுரை நாயக்க ஆட்சியை புரிந்து வந்தார்.


• ஏழாண்டுகள் திருச்சியில் வாழ்ந்த நாயக்கருக்கு ஏழாம் ஆண்டு, மண்டைச்சளி என்னும் பீனிச நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.
அக்காலத்து மருத்துவமுறைகளோ சிறிதும் பயனும் அளிக்கவில்லை. ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் எல்லாம் நேர்ந்து கொண்டும், ஒன்றும் ஆகவில்லை. ஆலவாய் கோயிலின் பட்டாபிஷேகத் திருவிழாவின்போது மரபுப்படி செங்கோல் வாங்குவதற்காக, தன்னுடைய கடுமையான நோயையும் தாங்கிக்கொண்டு (கி.பி.1634ம் ஆண்டு)  மதுரைக்குப் புறப்பட்டார்.  நோய் கடுமையாகியதால், மதுரைக்கு நேரே செல்லாமல் திண்டுக்கல்லில் தங்கினார்.
அன்று இரவு, நாயக்கரின் கனவில், சொக்கன் வழக்கம்போல "எல்லாம் வல்ல சித்தர்" வடிவில் தோன்றி, " திருமலை மன்னா! பாண்டிப்பதியே பழம்பதி. அங்கேயே நீ நிலையாகத் தங்கிவிடு. மீனாட்சி சுந்தரேசுவரருக்கு வழிபாடுகள் செய்து, திருவிழாக்கள் நடத்து. உன்னுடைய நோய் நீங்கும்.  இந்த திருநீற்றை வாயில் போட்டு, உடலிலும் தடவு" என்று கட்டளையிட்டார்.  காலை எழுந்தவுடன் அவருடைய பரிவாரங்களிடம் சொல்லி, மதுரையிலேயே தங்கி, ஐந்து லட்சம் பொன்னுக்கு திருப்பணியும் திருவாபரணமும் பண்ணிவைப்பதாக சத்தியம் பண்ணினார்.  பிறகு அவர் பல்விளக்கி, முகம்கழுவி, மூக்கைச் சிந்தியபோது மண்டைச்சளி கொத்தாகக் கழன்று விழுந்தது.  சொக்கநாதப்பெருமானின் பேரருளாலேயே தம்முடைய நோய் பரிபூரணமாகத்  தீர்ந்தது என்று நாயக்கர் மனமாற நம்பினார்.  பிறகு நேராக மதுரைக்குச் சென்று, கோயிலை அடைந்து அங்கையற்கண்ணி தன்னோடு அமர்ந்த ஆலவாய் சோமசுந்தரரையும் வழிபட்டார். 


திருமலை நாயக்கர் பற்றிய இக்கதைக் குறிப்புகள்ஆலவாய் திருப்பணி மாலை, ஸ்ரீதல புஸ்தகம்  முதலிய ஆலவாய் கோயிலின்  ஆவண நூல்களில் உள்ளன.
[கி.பி.1634இல் திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியில் அமைந்திருந்த மதுரை நாயக்க அரசின் தலைநகரை மதுரை நகருக்கு  மீண்டும் மாற்றினார் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.] இவ்வாறிருக்க 'திருவரங்கம் பெரியகோயில் கோயிலொழுகு' நூலானது வேறொரு கதையை கூறுகிறது.

அதனை அடுத்த பதிவு - Postல (பகுதி -9) பார்ப்போம்.

            அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்


Wednesday, October 24, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 7)


    


அரசியல் வரலாற்று மரபு



 திருவரங்கம்  பெரியகோயில் 'பகுதி - 6' ன் தொடர்ச்சி......

• விஜயநகரத்தின் ராஜ்ஜியத்தை மாபெரும் ராஜ்ஜியமாக கட்டமைத்த ஸ்ரீகிருஷ்ண தேவராயர் கி.பி.1529-ல் இரண்டாவது மனைவிக்கு பிறந்த ஆறு வயது சிறுவனான தனது மகனை இளவரசனாக பட்டம் சூட்டி விட்டு திருவேங்கடமுடையானுக்கு சேவகம் செய்ய நினைக்கிறார். ஆனால் இந்த விசயத்தில் அமைச்சர் திம்மையாவிற்கு சம்மதம் இல்லை. காரணம் சிறுவனை அரசனாக்கினால் ராஜ்ஜியம் வலிமை இழந்துவிடும் என்று கருதுகிறார். ராயர் இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது பாலகன் (திருமலைராயன்) அரியணை ஏற்றுகிறார்.  இந்த சமயத்தில்தான் விதி விளையாடிவிட்டு போகிறது. அரியனை ஏறிய சில மாதங்களிலேயே  ராயரின் மகன்  இறந்து போகிறான்.  யாரோ விஷம் கொடுத்துதான் தனது மகன் இறந்தான் என்பதை ராயர் ஒற்றன் ஒருவனின் மூலமாக அறிகிறார். அரண்மனை வைத்தியனை பிடித்து விசாரிக்கையில் திம்மையாவும் அவரது மகன்களான கோவிந்தராஜூவும், திண்டம நாயகனும்தான் இதனை திட்டம் தீட்டி செயல்படுத்தினர் என தவறாக தெரிய வருகிறது. மூவரது கண்களை பிடுங்கி சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார் ராயர். சிறையிலேயே இவர்கள் இறந்துவிட ராயரை தொடர்ந்து தம்பியான அச்சுதராயர் அரியணை ஏறுகிறார். நோய்வாய்ப்பட்ட நிலையில் 27-10-1529-ல் ராயரை மரணம் தழுவிகொண்டது . ராயரின் மரணத்திற்கு பின்பு விஜயநகரம் அதன்  பலத்தை இழக்கவே முகலாயர்கள் படையெடுப்பு நடத்தி அதன் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றினர்.
இப்படி விஜயநகரத்தின் சரித்திரத்தில் எந்த வம்சமும் வாழையடி வாழையாக தழைத்து வளரவே இல்லை என்பதை வரலாறு தன்
காலச்சுவடுகள் மூலம் குரூர சிரிப்புடன் சொல்லுகிறது.

• மாபெரும் விஜயநகரத்தை கட்டமைத்து ஒட்டுமொத்தத தென்னிந்தியாவையே ஆட்சி செய்த  ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் இடம் வரலாற்றில்  சிறப்பானது மட்டும் அல்ல, தனித்துவமானதும் கூட!.  
திருவரங்கம் பெரியகோயிலில்
ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலத்தைய 34 கல்வெட்டுக்கள் உள்ளன. ஸ்ரீகிருஷ்ணதேவராயரால் இயற்றப்பட்ட 'ஞானசிந்தாமணி'யைப் பெரியபெருமாள் கேட்டுமகிழும் வண்ணம் அதைப் படிப்பதற்காக பண்டிதர்களை நியமித்து  அதற்காக ஸ்ரீபண்டாரத்தி ல் (கோயிற் கருவூலம்) 105 பொன் செலுத்தியது பற்றிய கல்வெட்டு (இரண்டாம் திருச்சுற்று மேற்குத் தாழ்வரை பகுதி - A.R.E.No 295 of 1950-52)  கூறுகிறது. இது ராயரின் மகன் இறப்பதற்கு முன்பு (கி.பி.03-02-1526) திருவரங்கம் பெரிய கோயிலில் ஏற்படுத்தப்பட்ட கட்டளையாகும். 
 • அச்சுத தேவ ராயன் (கி.பி.1529-1542)
                    கி.பி.1529ல் கிருஷ்ணதேவராயரின் ஒன்று விட்ட தம்பி அச்சுத தேவ ராயன்  விஜயநகரப் பேரரசின் அரியணை ஏறினார். (இவனுக்கு மூன்று முறை முடிசூட்டுவிழா நடைபெற்றது.)  அச்சுத தேவ ராயன் முடிசூட்டிக் கொண்ட போது பேரரசில் நிலைமைகள் அவனுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்த அமைதியும், வளமும் குறையத் தொடங்கியது. சிற்றரசர்களும், பகைவர்களும் பேரரசை வீழ்த்துவதற்கான காலத்தை எதிர்பார்த்து இருந்தனர். இவற்றுடன்கூட கிருஷ்ண தேவராயனின் மருமகனான அலிய ராம ராயனின் போட்டியையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது.


• ஸ்ரீகிருஷ்ண தேவராயனைப் போலவே திருவேங்கடமலைக் கோயிலில்  அச்சுதராயன் தன் மனைவி திருமலாம்பாவுடன் திருவேங்கடத்துறைவனை வணங்கியவாறு
தனது சிலையினைச் செய்து வைத்தான் (அதன் பின்பே இரண்டாவது மனைவி 'வரதாம்பிகா'வை மணந்தான்).



• விஜயநகர பேரரசின் கீழ்க்கோட்டை மற்றும் 
மேல்க்கோட்டை என்று அமைந்துள்ள (திருமலா-திருப்பதி மலை அடிவாரத்தில்) சந்திரகிரிக் கோட்டை வளாகத்திற்குள் எட்டு உருக்குலைந்த சைவ, வைணவக் கோவில்களும், இராஜா மஹால், இராணி மஹால் மற்றும் சில சிதைந்த கட்டமைப்புகளும் இன்றும் உள்ளன. அச்சுதராயனுக்கு பிரியமான சந்திரகிரிக் கோட்டை இராஜாமஹாலிலும் விஜயநகர அரசர்களான ஸ்ரீகிருஷ்ணதேவராயர் மற்றும் அவருடைய இரு மனைவிகளான சென்னாதேவி மற்றும் திருமலாதேவியுடனும் காட்சி தரும் ஆளுயர வடிவிலான உலோகச் சிற்பங்களும் வெங்கடபதிராயர் மற்றும் ஸ்ரீரங்கராயர் ஆகியோர் அவரவர் அரசியுடன் காட்சிதரும் ஆளுயரக் கற்சிற்பங்களும் உலோகச் சிற்பங்களும் தர்பார் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். 
• ஸ்ரீகிருஷ்ணதேவராயர்  ஒரே சமயத்தில் நாடெங்கும் (அவரது ஆட்சிக்
காலத்தில்) 96 திருக்கோவில்களில் இராஜ(ய) கோபுரம் கட்டும் பணியை  மேற்கொண்டார்
 என்று கூறுவர். தலைக்கோட்டை யுத்தத்தில் இவர் ஆட்சி முறியடிக்கப்பட்டதும் பல கோபுரங்கள் பூர்த்தி அடையாமல் பாதியளவிலேயே நின்று விட்டன.
 அவ்வாறு திருவரங்கம்  8வது திருச்சுற்றில் ராயர்கோபுரமான (தெற்கு கோபுரம்) ஸ்ரீகிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும். பின்பு அச்சுதராயனால் தொடரப்பட்டு பாதியிலேயே கைவிடப்பட்டது என்று கூறுவர்.
• திருவரங்கம் ஏழாவது பிராகாரத்தில் விஜய நகர சமஸ்தான அரண்மனை இருந்தது. 16-ஆம் நூற்றாண்டில் அச்சுதராயர், திருவனந்தபுரத்தின் மீது படையெடுத்தபோது, இந்த அரண்மனையைக் கட்டினார். அப்போது தன் மைத்துனனைப் படைகளுடன் திருவனந்தபுரம் அனுப்பினார். அவன் வெற்றியுடன் திரும்பும் வரை (கி.பி.1530ல்) திருவரங்கத்திலேயே தங்கி அச்சுதராயர் இருந்தார்.  ஒரு முறை கிருஷ்ண ஜயந்தி உற்சவத்தின் போது ஸ்ரீரங்க நாதனும், கிருஷ்ண பரமாத்மாவும் திருவீதிவுலாவாக எழுந்தருளினர். தனது அரண்மனைக்கு முன்னால் ஸ்வாமிக்கு ஓர் உபயம் ஏற்படுத்தி னார் அச்சுத ராயர். அதற்காக ஏராளமான மானியங்களை ஏற்படுத்தினார். அந்த உபயம் இன்றும் தொடர்கிறது. (அரண் மனை இருந்த இடத்தில் பின்னர் ‘வாணி விலாஸ் பிரஸ்’ செயல்பட்டது. ஏராளமான ஞான நூல்களை வெளியிட்ட அந்த அச்சகம் இப்போது அங்கு இல்லை. அங்கு அச்சுதராயர் ஏற்படுத்தி வைத்த உபயம் இன்றும் நடக்கிறது). 
திருவரங்கம் பெரியகோயிலில் அச்சுதராயன் காலத்தைய 56 கல்வெட்டுகள் தற்போது கிடைக்கின்றன.
• கி.பி.1530 ஜனவரியில் அச்சுதராயர்   திக்விஜயம் நிகழ்ந்ததையும், அதே ஆண்டு மார்ச் இரண்டாம் நாளில்  அவனது படைகள் திருவனந்தபுரம் திருவடி மன்னரை வெற்றி பெற்றதற்காக 'ஜய ஸ்தம்பம்' (வெற்றித்தூண் - அகளங்கன் திருச்சுற்றில் உள்ள திருப்பாணாழ்வார் சந்நதி எதிரே உள்ளது.) 


நாட்டியதாக சேனைமுதலியார் கிழக்குப்பக்கச் சுவர் (02-03-1530) கல்வெட்டு  (A.R.E.No. 316/1950-51) கூறுகிறது.
• சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ள சம்பு காவியங்களுள் மிகச்சிறந்ததாக மதிக்கப்பெறும் 'வரதாம்பிகா பரிணய சம்பு' எனும் நூல் அச்சுதராயன் மனைவி திருமலாம்பாவால் எழுதப்பெற்றது.
கி.பி.1532 ல் திருவரங்கம் வருகை தந்த விஜயநகர ராணி திருமலாம்பா, தான் இயற்றிய 'பக்த சஞ்சீவி'     எனும் நூலில் அமைந்துள்ளவற்றை திருவரங்கம் அரையர்கள் நடித்துக் காண்பிப்பதற்காக 'அணிலை' எனும் ஊரில் நிலம் (கி.பி.12-09-1532 அன்று)அளித்ததை திருவரங்கம் பெரியகோயில் கல்வெட்டு (A.R.E.No. 308/1950-51) மூலம் அறியலாம்.  
• கி.பி.1543ல் அச்சுத தேவ ராயன் இறந்ததைத் தொடர்ந்து, சிறுவனாக இருந்த 'சதாசிவ ராயன்' (கி.பி.1542-1570) முடிசூட்டப்பட்டான். இவனும் ஆரவிடு மரபினனுமான
அலிய ராமராயனின் வலுவான ஆதரவினாலேயே ஆட்சி செய்ய முடிந்தது. சதாசிவ ராயனது ஆட்சிக் காலம் முழுவதும் அலிய ராம ராயனே அரசன் போல் செயல்பட்டு வந்தான்.
 கி.பி.1565ம் ஆண்டு சனவரி மாதத்தில் தக்காணச் சுல்தான்கள் ஒன்றிணைந்து, தலிகோட்டை சண்டையில், அலிய ராம ராயனின் விஜயநகரப் பேரரசின் படைகளை தோற்கடித்தனர். இப்போரில் விஜயநகரப் பேரரசின் படையில் இருந்த இரு முஸ்லிம் படைத்தலைவர்கள் தங்கள் படையணிகளுடன் தக்காணச் சுல்தான்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால், போரில் விஜயநகரப் பேரரசு தோற்றது என வரலாற்று அறிஞர்களான 'ஹெர்மன குல்கே' மற்றும் 'டயட்மர் ரோதர்மண்ட்' கூறுகிறார்கள். போரில் கைதியாக பிடிபட்ட இடத்திலேயே, சுல்தான்கள் கிருஷ்ணதேவரயரின் மருமகனான அலிய ராம ராயனின் தலையை கொய்தனர்.  மேலும் சுல்தான்கள் ஹம்பி எனும் விஜயநகரத்தின் கோயில்களையும், கோட்டைகளையும் சிதைத்து அழித்தனர்.

• விஜயநகர வீழ்ச்சி:-
தலிகோட்டா சண்டையில் இறந்த அலிய ராம ராயனின் தம்பியும், ஆரவிடு மரபைத் துவக்கியவனுமான திருமலை தேவ ராயன், தற்கால ஆந்திரப் பிரதேசத்தின் பெனுகொண்டாவிற்கு விஜயநகரப் பேரரசின் தலைநகரை மாற்றினார். தலைக்கோட்டைப் போரின் முடிவில் விஜயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, பேரரசின் கீழிருந்த மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள் மற்றும் செஞ்சி நாயக்கர்கள் தனிவழி செல்லத் தொடங்கினர். வேறு சிலர் திருமலை தேவ ராயனுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1572ல் திருமலை தேவ ராயனை அரியணை விட்டு விலகிய போது, மீதமிருந்த விஜயநகரப் பேரரசை தனது மூன்று மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். 1614ல் அரவிடு மரபினரின் விஜயநகரப் பேரரசு, பிஜப்பூர் சுல்தானகம் மற்றும் பிற சுல்தான்களின் தொடர் படையெடுப்புகளால் உருக்குலைந்து, இறுதியாக 1646ல் விஜயநகரப் பேரரசின் ஆட்சி முடிவிற்கு வந்தது.
விஜயநகர பேரரசின் வீழ்ச்சியின் போது தென்னிந்தியாவில் மைசூர் அரசு, கேளடி நாயக்கர்கள், மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள், சித்திரதுர்க நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆட்சி செலுத்த துவங்கினர்.  
• • நாயக்க மன்னர்களின் எழுச்சி:-
         'நாயக்கர்' என்னும் சொல் நாயக் என்னும் வடசொல்லின் திரிபாகும். இச்சொல் முதலில் தலைவன் என்னும் பொருளில் வழங்கி வந்து, பின்பு படைத்தலைவனைக் குறிக்கலாயிற்று. விசயநகரப் பேரரசில் இச்சொல், அப்பேரரசின் பகுதிகளாய் இருந்த தஞ்சை, செஞ்சி, இக்கேரி, வேலூர், மதுரை ஆகியவற்றை அரசச் சார்பாளர்களாகவோ (viceroys), ஆளுநர்களாகவோ (Governors) இருந்து ஆட்சி செய்தவர்களைச் சிறப்பாகக் குறிப்பிடலாயிற்று.
• விசயநகரப் பேரரசின் பகுதிகளாய் இருந்த தஞ்சை, செஞ்சி, இக்கேரி, மைசூர், வேலூர் இவற்றைப் பற்றி இங்குப் பார்க்கலாம். தஞ்சை விசய நகரப் பேரரசின் ஒரு பகுதியாக கி.பி.1532இல் அமைந்தது. தஞ்சையில் முதன்முதலில் நாயக்கர் ஆட்சியைத் தொடங்கியவர் செவ்வப்ப நாயக்கர் ஆவார். செஞ்சியும் கி.பி.1526இலிருந்து விசயநகரப் பேரரசிற்கு உட்பட்டு இருந்தது. செஞ்சியில் முதன்முதலில் நாயக்கர் ஆட்சியைக் கிருஷ்ணதேவராயர் காலத்தில் தொடங்கி வைத்தவர் வையப்ப நாயக்கர் என்பவர் ஆவார். கி.பி.1540இல் இக்கேரி என்னும் இடம் (இது மைசூரில் அடங்கிய ஷிமோகா ஆகும்) விசயநகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. சதாசிவன் என்பவன் இக்கேரியில் நாயக்கர் ஆட்சியைத் தொடங்கிவைத்தான். இக்கேரியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்ததால் இவர்களை இக்கேரி நாயக்கர் என்பர்.
செஞ்சி நாயக்கருக்கு அடங்கிய நாயக்கர் ஆட்சி வேலூரில் ஏற்பட்டது. அங்கு நாயக்கர் ஆட்சியை நடத்தியவர் வீரப்ப நாயக்கர் என்பவர் ஆவார்.
• துளுவ வம்சத்து மன்னர் துளுவ நரச நாயக்கரின் மகன்களாகிய
ஸ்ரீகிருஷ்ணதேவ ராயருக்கும், அச்சுத தேவ ராயருக்கும் இரு தளபதிகள் இருந்தனர். ஒருவர் திம்மப்பா நாயக்கர் , மற்றொருவர் நாகம்ம  நாயக்கர். இந்த திம்மப்பா நாயக்கரின் மகன் தான் செவப்ப நாயக்கர். இவர்தான் தஞ்சையில் நாயக்க ஆட்சியை தோற்றுவித்தவர்.
திம்மப்பா நாயக்கருக்கு 4 மகன்கள். அவர்களில் இரண்டாவது மகன்தான் செவப்ப நாயக்கர். இவர் அச்யுத நாயக்கரின் மனைவியாகிய திருமலம்பாவின் தங்கை மூர்த்திம்பாவாய் திருமணம் செய்த கொள்கிறார். அப்போது தனக்கு சீதனமாக தஞ்சாவூரை தர வேண்டுமென அச்யுத நாயக்கரிடம் கேட்டு பெற்று கொண்டு , தஞ்சையில் நாயக்க ஆட்சியை தோற்றுவித்தார்.
கி.பி.1509 முதல் 1529 வரை கிருஷ்ணதேவ ராயர் ஆட்சியின் கீழ் மட்டமே தஞ்சை இருந்தது .
கி.பி.1529 ல் கிருஷ்ணதேவ ராயர் தனது சகோதரர் அச்சுதன் ஆட்சிக்கு வரட்டும் என்று கூறி விட்டு இறந்து விடுகிறார்.
தன்னுடைய சகலையாகிய அச்சுத தேவராயருக்கு கப்பம் கட்ட மறுத்து தானே இனி தஞ்சையின் மன்னன் என கூறி செவப்ப நாயக்கன் தனக்கென தனி அரசை உருவாக்குகிறான்.
• ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் தளபதியான
நாகம்ம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயக்கர். இவர்  தான் "மதுரையில் நாயக்க ஆட்சி"யை தோற்றுவித்தவர். இவரைப் பற்றிய வரலாற்றோடு அடுத்த பதிவு-Post ல (பகுதி 8) தொடர்வோம்.

                 அன்புடன்

     ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் 



Monday, October 15, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 6)





• அரசியல் வரலாற்று மரபு


திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 5)
 தொடர்ச்சி .....

 மதுரையை ஆண்ட பாண்டிய வம்சத்தின் கடைசி மன்னரரான
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
 கி.பி. 1308ஆம் ஆண்டு தன் இறப்பு வரை ஆட்சியைத் தொடர்ந்தார். இவருடைய இறப்புக்குப் பின் அவருடைய இரு மகன்களுக்கு இடையில் மூண்ட வாரிசுரிமைச் சண்டையால் ஏற்பட்ட குழப்பத்தால் "மதுரை அரசு" (பாண்டிய பேரரசின் தமிழ் மாகாண பேரரசு) தில்லி சுல்தானின் கைக்கு மாறியது. 1327ஆம் ஆண்டு ' மதுரை' தில்லி சுல்தானத்தில் 23ஆவது மாநிலமாக மதுரை அறிவிக்கப்பட்டது. ஜலாவுதீன் ஹசன் ஷா மதுரையின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
இதன் பிறகு முகமது பின் துக்ளக் 1325இல் தில்லியின் சுல்தானானார். ஆனால் பாரசீகப் படையெடுப்பால் மிக மோசமான பொருளாதார நிலைக்கு துக்ளக்கின் ஆட்சி சென்றது. மாநிலங்கள் பிரிந்து செல்லத் தொடங்கின. மதுரையும் தனி நாடாகியது. அதற்கான அறிவிப்பை ஜலாவுதீன் ஹசன் ஷா 1333ஆம் ஆண்டு வெளியிட்டான். இதிலிருந்துதான் 'மதுரை சுல்தானகத்தின் ஆட்சி' தொடங்குகிறது.
ஜலாவுதீன் ஹசன் ஷா மதுரையின் வலிமை மிக்க சுல்தானாக இருந்தான். அவர் காலத்தில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் கணக்கில் அடங்காதவை. இவன் 1340ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். இறுதியாக சிக்கந்தர் ஷாவின் காலத்துடன் மதுரை சுல்தான்களின் ஆட்சி
கி.பி. 1371 விஜயநகர குமார கம்பண்ணனால் முடிவுக்கு வந்தது.

விஜயநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு தோன்றிய விஜயநகரப் பேரரசு முஸ்லீம்களை புறமுதுகிட்டு ஓடச் செய்து இத்திருக்கோவிலை மீட்டு திருவேங்கடமலையிலிருந்து உற்சவப் பெருமாளையும், பிறபொருட்களையும் மீளக் கொணர்ந்து சற்றேறக் குறைய இன்றுள்ள
அளவிற்கு திருவரங்கம் சீர்படுத்தப்பட்டு பொலிவு பெற்றது. அன்று முதல்
விடுபட்டுப் போயிருந்த விழாக்களும். நிகழ்ச்சிகளும் தொடரத் தொடங்கின.
சில வைணவச் சொற்றொடர்களும் 15ஆம் நூற்றாண்டில் கொடுக்கப்பட்ட
பெயர்களுடனே இன்றும் நின்று நிலவுகிறது.
கி.பி.1565இல் தலைக்கோட்டை
யுத்தத்தில் விஜயநகர பேரரசு வீழ்ச்சி அடையும்வரை இத்திருக்கோவிலை
அவர்கள் கண் போல காத்து வந்தனர்.

இக் காலத்தில் பல புதிய கோயில்கள் கட்டப்பட்டன, அத்துடன், தென்னிந்தியா முழுவதும் ஏற்கனவே இருந்த பல ஆயிரக்கணக்கான கோயில்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டதுடன், திருத்த வேலைகளும் செய்யப்பட்டன. தென்னிந்தியாவில் உள்ள
விஜயநகரக் கோயில்கள் பெரும்பாலும் உறுதியான சுற்று மதில்களால் சூழப்பட்டவை. சிறிய கோயில்கள் ஒரு கருவறையையும் அதன் முன் அர்த்த மண்டபம் எனப்படும் சிறிய மண்டபம் ஒன்றையும் மட்டும் கொண்டவை. நடுத்தர அளவிலான கோயில்களில், கருவறையயும், அர்த்த மண்டபத்தையும் இணைக்கும் சிறிய இடைநாழி எனும் ஒரு சிறிய இடம் அமைந்திருக்கும். அத்துடன் அர்த்த மண்டபத்துக்கு அப்பால் முக மண்டபம் என்னும் இன்னொரு மண்டபமும் இருக்கும். பெரிய கோயில்களில் சுற்று மதில்களில் வாயில்கள் இருக்கும் இடங்களில் பெரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விஜயநகரப் பேரரசர்களான ராயர்களின் பெயரைத் தழுவி இக் கோபுரங்கள் 'ராய கோபுரங்கள்' என அழைக்கப்பட்டன. இவை, மரம், செங்கல், சாந்து ஆகியவற்றைக் கொண்டு, பெரும்பாலும் சோழர் பாணியில் அமைக்கப்பட்டன. கோபுரங்களில், மக்கள், கடவுளர் ஆகியோரின் பெரிய அளவுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
தமிழர் கட்டிடக்கலைச் செல்வாக்கினால் உருவான இவ்வழக்கம், பேரரசன் கிருஷ்ணதேவ ராயரின் காலத்தில் பிரபலமாகிப் பின்வந்த 200 ஆண்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வந்தது.  இவை தவிர, மதில்களுக்குள் கருவறையைச் சுற்றிய கூரையிடப்பட்ட திருச்சுற்று, மகாமண்டபம் எனப்படும் பல தூண்களோடு கூடிய பெரிய மண்டபங்களாக 1000கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், கல்யாண மண்டபம், திருக்குளம் என்பனவும் இக் காலக் கோயில்களின் கூறுகள் ஆயின. இக் காலத் தூண்களின் ஒரு புறத்தில், அவற்றோடு ஒட்டியபடி நிமிர்ந்த நிலையில் யாளிகள், முதுகில் வீரர்கள் இருக்க, இரண்டு கால்களில் பாய்ந்தபடி நிமிர்ந்து நிற்கும் குதிரைகள் ஆகியவற்றின் சிற்பங்கள் காணப்படுகின்றன. தூணின் மறு பக்கங்களில் இந்துப் பழங்கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். யாளிகள், குதிரைகள் போன்றவை இல்லாத தூண்கள் சதுர வடிவாக அமைந்து அவற்றில் பழங்கதைகளை அடிப்படையாகக் கொண்ட சிற்பங் களஞ்சியங்கள் காணப்படும்.



||: விஜயநகரப் பேரரசு :||

 தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசாக விஜயநகரப் பேரரசு
இருந்தது. தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவே சிருங்கேரி மடாதிபதி "வித்யாரண்யர்" வழிகாட்டுதலின் படி, விஜயநகரப் பேரரசு கி.பி.1336 ஆம் ஆண்டில்
சங்கம மரபைச் சேர்ந்த முதலாம் 'ஹரிஹரர்' மற்றும் 'முதலாம் புக்கராயர்' ஆகியோரால் நிறுவப்பட்டது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந்திய வரலாற்றில் 'விஜயநகர பேரரசு ஒரு முக்கிய இடம்' கொண்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. விஜயநகர பேரரசு உண்மையில் பார்த்தால் ஒரே மன்னர் வம்சம் கிடையாது, அது 1336 - 1485 வரை சங்கம வம்சம், 1485-1491 வரை சாலுவ வம்சம், 1491-1542 வரை துளுவ வம்சம் மற்றும் 1542 - 1646 வரை ஆரவிடு வம்சம் என 4 வம்சங்களால், சுமார் 310 வருடங்கள் விஜயநகரத்தை தலைநகரமாக கொண்டு ஆளப்பட்டது.  இப்பேரரசின் அழிபாடுகள் இன்றைய கர்நாடகத்தில் உள்ள 'ஹம்பி'யைச் சுற்றிலும் காணப்படுகின்றன.
 கிருஷ்ண தேவராயரின் ஆமுக்த மால்யதா, கங்காதேவி எழுதிய மதுராவிஜயம், அல்லசானி பெத்தண்ணாவின் மனுசரிதம் போன்ற பல  விஜயநகர சமகால இலக்கிய  நூல்களில் இருந்து விஜயநகர பேரரசின் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.
விஜய நகரப் பேரரசுக்கு பல்வேறு அயல்நாட்டு பயணிகள் வருகைபுரிந்தனர். அவர்களது குறிப்புகளும் பயனுள்ள சான்றுகளாகும். மொரோக்கா நாட்டைச் சேர்ந்த இபின் பதூதா, வெனிஷியப் பயணி நிக்கோலோ டி கோன்டி, பாரசீகப்பயணி அப்துல் ரசாக், போர்ச்சுகீசியப் பயணி டோமிங்கோ பயஸ் போன்ற பயணிகள் விஜய நகர கால சமூக பொருளாதார நிலைமைகள் பற்றி தங்களது பயணக் குறிப்புகளில் விவரித்துள்ளனர்.
இரண்டாம் தேவராயரின் ஸ்ரீரங்கம் செப்பேடுகள் போன்ற செப்பேடுகள் விஜயநகர அரச வழித்தோன்றல்கள் மற்றும் அவர்களது சாதனைகளைக் கூறுகின்றன. ஹம்பி இடிபாடுகளும் பிற சின்னங்களும் விஜய நகர ஆட்சியாளர்களின் பண்பாட்டுப் பங்களிப்பை வெளிப்படுத்துகின்றன. அவர்கள் வெளியிட்டுள்ள எண்ணற்ற நாணயங்களில் காணப்படும் உருவங்கள் மற்றும் சொற்றொடர்கள் விருதுகளையும் சாதனைகளையும் எடுத்துக்கூறுகின்றன.

• விஜயநகர கம்பண உடையார், இஸ்லாம் மத ஆதிக்கத்தை ஒழிக்கக் கருதித் தெற்கே படையெடுத்துச் சென்றார். தமிழகத்துத் தொண்டை நாட்டில் இருந்த படைவீடு ராஜ்ஜியத்தை வென்று, பின்பு மதுரையில் முகமது பின் துக்ளக்கின் காலத்தில் ஏற்பட்டு நடந்து வந்த சுல்தான் ஆட்சியை ஒழித்து, அங்கே விஜயநகர நேரடி ஆட்சிக்கு வழிகோலி வைத்தார்.



• ஸ்ரீரங்க அழகியமணவாளன்
 திருவேங்கடமலையில் ரங்கமண்டபத்தில்  இருந்தபோது செஞ்சியை ஆண்டு கொண்டு இருந்த கோபண்ண உடையார் திருமலைக்கு வருகை தந்து அழகியமணவாளனனை
 தரிசித்து விட்டு  திருவரங்கத்தில் திரும்பவும் அவரை எழுந்தருளப்பண்ணச் சித்தம் கொண்டு அவரது பெரு முயற்சியால் அழகியமணவாளனையும் உபய நாச்சிமார்களையும் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பித்தான்  என்பதை கடந்த பதிவிலேயே அறிந்தோம்.
அப்போது (கி.பி. 1371 பரீதாபி ஆண்டு வைகாசி 17ஆம் நாள்) தற்போதைய பவித்ரோத்ஸவ மண்டபத்தில்தான் அழகியமணவாளன் எழுந்தருளியிருந்தார். திருவரங்க மாளிகையாரும் அப்போது எழுந்தருளியிருந்ததால், யார் உண்மையான 'அழகியமணவாளன்' என்பதைத் தெள்ளத் தெளிவாக அங்கு கூடியிருந்தோரால் அறுதியிட இயலவில்லை. கி.பி.1323ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதால் 1371ஆம் ஆண்டில் 48 வருடத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறுவார் யாருமில்லை. அப்போது வயது முதிர்ந்த கண்பார்வையற்ற ஈரங்கொல்லி ஒருவன் (வண்ணான்) அழகிய மணவாளனின் திருமஞ்சனம் செய்த பிறகு அழகியமணவாளன் உடுத்தியிருந்த கைலியைப் பிழிந்து பிரஸாதமாகக் கொடுக்கப்படும் புனிதநீரை
(ஈரவாடை தீர்த்தம்) சுவைத்து முன்பு எழுந்தருளியிருந்த அழகிய மணவாளனே “நம்பெருமாள்” ஆவார் என்று உறுதி செய்தார்.
அவன் இட்ட "நம்பெருமாள்" என்ற
பெயரே இன்றுவரை வழங்குகிறது என்கிற இந்த செய்தியையும் கடந்த பதிவில் கண்டோம்.
• நம்பெருமாள் (கி.பி.1371ல்) ஆஸ்தானம் எழுந்தருளிய போது மூலஸ்தானம் முழுதுமாக பாழ்பட்டு கிடந்தது.  வெயிலிலும் மழையிலும் மூலவர் ரங்கநாதர் காய்ந்தும் நினைந்தும் கிடந்திருக்கின்றார்.  ஆதிசேஷனின்
சேஷபடம் அவரது திருமுகத்தினை மட்டும் பாதுகாத்தபடியிருந்திருக்கின்றது.
 சுந்தரபாண்டியனால் வேயப்பட்ட தங்கவிமானம், தங்கத்தினால் ஆனக் கொடிக்கம்பம், தங்கத்தினால்
செய்த சேரகுலவல்லி, அணிகலன்கள், சிம்மாசனங்கள் அனைத்தும் சுத்தமாக கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இந்த சமயத்தில் உத்தமநம்பி வம்சத்தரான 'கிருஷ்ணராய உத்தமநம்பி' செய்த கைங்கர்யங்கள் முக்யத்துவமானது. மகத்தானது.  இவர் வீரகம்பண்ண உடையாரையும், அவரது உறவினரான விருப்பண உடையாரையும் விஜயநகரம் சென்று ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்துள்ளார். கம்பண்ணரும், விருப்பண்ண உடையாரும் திருவிடையாட்டமாக பல கிராமங்களை கோவிலுக்கென்று அர்ப்பணித்து திருப்பணி வேலைகளை மேற்கொள்கின்றனர்.
 கோவிலின் ஸ்தலத்தார்களும், உத்தமநம்பிகளும், கோவிலார்களும் வெகுவாக அரசர்களுடன் சேர்ந்து பாடுபட்டு ஸ்ரீரங்கத்தினை புனர்நிர்மாணம் செய்கின்றனர்.
 சித்திரையில் விருப்பண உடையார், கோவிலின் நிதிநிலைமையை சீர்செய்யும் பொருட்டும், கோவிலில் ஆராதனைகள் சீராக நடைபெறுவதற்கு தானியங்களை பெருக்குவதற்கும் அருகிலுள்ள அனைத்து கிராம மக்களையும் அரவணைத்து அன்போடு அழைத்து, அரங்கனுக்கு ஒரு தேரோட்டத்துடன் 'பிரம்மோற்சவம்' ஒன்றை கொண்டாடுகின்றார்.
 கிராமத்து மக்கள் அனைவரும் தாங்கள் விளைநிலங்களில் விளைந்த தானியங்களை அரங்கனுக்குக் காணிக்கையாக்கி உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
 அரங்கனது நித்யபடி பூஜைகளுக்குக் குறைவின்றி தானியங்கள் குவிந்தன.  அன்று தொடங்கிய இவ்விழா இன்றும் அன்று போன்றே குறைவற நடந்து வருகின்றது.  இந்த விழாவிற்கு ‘விருப்பண் திருநாள்” என்று பெயர்.
(விஜயநகர பேரரசின் சங்கமகுல மன்னன் இரண்டாம் ஹரிஹரன், அவருடைய புதல்வரான  விருப்பண்ண உடையார் பெயரில் கி.பி.1383ல் ஏற்படுத்தப்பட்டத் திருவிழா சித்திரை பிரம்மோத்ஸ்வம் ஆகும்.)


கோயிலொழுகு நூலில் கோபண்ணவுடையார்,குண்டு சாளுவயர், மற்றும் விருப்பண்ணஉடையார்
கைங்கர்யம்  பற்றி குறிக்கிறது.
இதில் கோபண்ணவுடையாருடன் வந்த 'குண்டு சாளுவயர்' அணியரங்கன் திருமுற்றத்திலே பாண்டியன் கைங்கர்யமான பொன்னாலான 'திருக்கொடித்தட்டு' (த்வஜஸ்தம்பம்-கொடிமரம்) துலுக்கனழித்ததால் வெண்கல வார்ப்பாகத் திருக்கொடித்தட்டு பண்ணி நாட்டுவித்தார். (தற்போது அந்த வெண்கல கொடிமரத்திற்கு பொற்கவசம் பூட்டியுள்ளனர்). அதன் அருகே கிழக்கே பெரிய கிருஷ்ணராய உத்தமநம்பி, ஹரிஹரராயரின் குமாரர் உத்தரவுப்படி துலாபுருஷ மண்டமும் கட்டி வைத்தனர். அந்த ராயர் குமாரர் விருப்பண்ண உடையாரும் வந்து, "துலாபுருஷங்கட்டி தாரைவார்க்கையில், பொன்னும், குட்டிக்கோயில் விமானமும் பொன் மேய்ந்து, இந்த ராயர் காணிக்கை இரண்டு பொற்குடம் உள்பட ஒன்பது பொற்குடமும் வைப்பித்து, பெருமாள் பஹுநாளைக்காக எழுந்தருளினபடியாலே நாநாதேசத்திலும் வந்த, பரிஜனங்களுக்கு ஸேவிக்கும்படி, விருப்பண்ண உடையார் பேரிலே சித்திரைத்திருநாள் த்வாஜாரோஹணத் திருநாள் நடத்துகையில்...." என்று விருப்பண்ண உடையார் கைங்கர்யம் பற்றி கோயிலொழுகு விவரிக்கிறது.

வீரகம்பண்ண உடையார் காலத்துக் கல்வெட்டுகள்
ராஜமகேந்திரன் திருச்சுற்றுகளில்
[( கி.பி.1371  பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாள் கல்வெட்டு:
A.R.E.No. 55 of 1892)
மற்றும்( A.R.E.No. 47,48 of 1938-39), ( A.R.E.No. 35 of 1948-49)] உள்ளன.
• மேலும் விருப்பண்ண உடையாரின் தாதியான 'கன்னாத்தை' என்பாள் திருவரங்கநாதனுக்கு பாலமுது மற்றும் நெய்யமுது படைப்பபதற்கு ரக்தாக்ஷி மற்றும் அக்ஷய ஆண்டுகளில்  முறையே 15 கன்றுகளுடன் கூடிய பசுக்களை தானமாக அளித்தமை பற்றிய கல்வெட்டு ( A.R.E.No. 341 of 1952-53)
ஒன்று ஆர்யபடாள் நுழைவு வாயில் இடது உள்பக்க சுவரில் உள்ளது. மேலும் அதே கைங்கர்யமாக விருப்பண்ண உடையாரின் 'பிரதானி தேவராஜர்' செய்தது பற்றிய கல்வெட்டு    (A.R.E.No.77,78 of 1938-39) சந்தன மண்டபம் தென்பக்க சுவரில் உள்ளது.
• சங்கமகுல விஜயநகர அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு
திருச்சி பகுதியை "கோனேரிராயன்" என்போன் மகாமண்டலேஸ்வரனாக ஆண்டு வந்தான்.
கி.பி.1486  ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சாளுவநரசிம்மன் என்போன் விஜயநகர் ராஜவானான்.  இவனின் மூத்த சகோதரர்  “ராமராஜராயன்” என்போன் சன்யாசி கோலம் கொண்டு  "கந்தாடை ராமானுஜ முனி” பெயருடன் ஸ்ரீரங்கத்தில் (தனது தம்பியின் விஜயநகர அரச அனுமதியுடன் ) பல கையங்கரியங்கள் செய்தது வந்தார்.
இவர்தான் வைணவ கோவில்களில் பிராமணர் பிடியில் இருந்து விடுவித்து சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் ஏற்றமும் மரியாதையும் பெற்றுத் தந்தவர்.
மேலும் எண்ணற்ற  திருப்பணிகளும் செய்தனர்.
இவர் வாழ்ந்த வீடு இன்றும் 'ஸ்ரீரங்கம் தெற்கு உத்திரவீதி'யில் உள்ளது.


சைவ சமயத்தின் மீது பற்றுக்கொண்ட, சோழமண்டல அரசனான கோனேரிராஜா திருச்சிராப்பள்ளியிலேபாளையம் பண்ணிக் கொண்டிருக்கையில்,திருவரங்கம் கோயில் சொத்துகளை பறித்து, திருவானைக்காவல் கோவிலுக்கு கொடுக்க உத்தரவிட்டார். திருவரங்கம் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தனக்கு வேண்டியவர்களான கோட்டை சாமந்தனார், மற்றும் சென்றப்ப நாயக்கர் ஆகியோருக்கு குத்தகைக்கு விட்டார். 'புரவரி' 'காணிக்கைவரி' 'பட்டுவரி' 'பரிவட்ட வரி' போன்ற வரிகளை விதித்து திருவரங்கம் கோயில் ஸ்ரீ பண்டாரத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த உயர்ந்த திருவாபரணங்களையும், பொற்காசுகளையும் கவர்ந்து சென்றான். இவ்வாறான கொடுமைகளை பொறுக்க ஒண்ணாத நிலையில்
இதை எதிர்த்து, கி.பி., 1489ல், இரண்டு ஜீயர்கள் மற்றும் 'அழகியமணவாள தாஸர்' எனப்படும் ஒரு ஏகாங்கியும் என, மூன்று பேர், வெள்ளை கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து தங்களது உயிரை மாய்ந்துக் கொண்டனர்.
• இந்த விசயத்தை கந்தாடை ராமாநுச முனி
தனது சகோதரன் சாளுவநரசிம்மனின் தளபதி நரசநாயக்கனுக்கு (அப்போது அவன்தான் அரசாண்டு வந்தான் சாளுவநரசிம்மன்(கி.பி. 1491) இறந்து போய் இருந்தான் அவன் மகன்கள் சிறுவர்கள் )   கடிதம் எழுதினார்.
• கந்தாடை ராமாநுச முனியின் (ராமராஜராயர்) கடிதத்தின் மூலமாக
தகவலறிந்த, விஜயநகர சாளுவ அரசனின் தளபதியான நரசநாயக்கன், (கி.பி. 1495 நளவருஷம், ஐப்பசி மாதம் 14ம் நாள்) கோனேரிராயனை போரிட்டு வென்று, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் சொத்துகளை மீட்டுக் கொடுத்தார் என, கோயிலொழுகு கூறுகிறது. கோனேரிராயனை போரில் வென்று  கொன்று தனது ஆளுமையை கந்தாடை ராமாநுச முனி திருவரங்கம் கோயிலில் நிலை நாட்டினார்.
( உயிரிழந்த மூவருக்கும், வெள்ளை கோபுரத்தில் சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளன.)

• திருவரங்கம் பெரியகோயிலின் கிழக்கு வெள்ளை கோபுர உட்புறம் வடபுற நிலைக்காலில்,
நெற்றியில் திருமண்காப்பு தரித்து, கையில் தூக்கிய அரிவாள் ஒன்றினைத் தோளில்சுமந்த வண்ணம், இடுப்பில் ஆடை தரித்துக் கழுத்தில் மாலையும் சூடி அரங்கனை வணங்கும் கோலத்தில் ஓர் அடியவரின் சிலை உள்ளது. அந்த சிலைக்கு மேல் உள்ள கல்வெட்டும்
(A.R.E.No. 87 of 1936-37)
உள்ளது.




ஸ்வஸ்திஸ்ரீ சௌமிய வருஷம் தைமாதம் இருபதாம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு படித்தனம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம் பண்ணுகையில் பொறுக்க மாட்டாதேயிந்த திருகோபுரத்திலேறி விழுந்து இறந்த காலமெடுத்த அழகியமணவாளதாசன் ஸ்ரீகாரியம் பெரியாழ்வார் ....
என்று கூறப்பட்டுள்ளது.
அந்தச்சிலைக்கு நேர்  எதிரே இரண்டு ஜீயர்களின் திருவுருவம் உள்ளது.



• தெற்கு ராஜகோபுரத்தின்  கீழ்புறநிலையில் நெற்றியில் திருமண்காப்பு தரித்து, மார்பில் மாலை புரள கூப்பிய கரங்களுடன்
அப்பாவையங்கார் சிலை உள்ளது.

சுபமஸ்த்து சௌமிய வருஷம் தை மாதம் நாலாம் தேதி வெள்ளிக்கிழமை நாள் ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு படித்தனம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம் பண்ணுகையில் குடுக்க மாட்டாதே இந்த திருக்கொபுரத்தில் ஏறி விழுந்து இறந்தகாலம் எடுத்த அழகியமணவாளதாசன் ஸ்ரீகாரியம் அப்பாவய்யங்கார். இவருக்கு சுவாமி யெக்காளகள் திருத்தேர் புறப்பாட்டு முதலான அதிகவரிசை பிரசாதித்தருளி பிரம்மமேத சம்ஸ்காரம் பண்ணிவித் தருளி முழுபடித்தனம் கொண்ட ருளினார். யிப்படி நடந்த இந்த முழு படித்தனத்துக்கு விரோதம் பண்ணியவன் ரெங்கத் துரோகியாய் போகக் கடவன் அனுகூலம் பண்ணியவன் ஸ்ரீலட்சுமி பரிபூர்ண கடாக்ஷ பாக்யஸ்தனா  இருக்கக் கடவன் “ என்று கல்லெழுத்துக்ள் கூறுகின்றன.
இதில் சைவ,வைணவ சமப்பூசல் என்று கொள்ள முடியாது. அதற்குக் காரணம். ஸ்ரீரங்கம் கோயிலில் கோனேரிராயன் பல கல்வெட்டுக்கள் உள்ளன. அவன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொக்கப்பனை 'கார்த்திக்கை கோபுர வாசல் கதவுகள்' செய்து கொடுத்த கல்வெட்டு உள்ளது , (அந்த கதவுகள் 2005 வரை இருந்தது)
• கோனேரிராயன் சக ஆண்டு 1414 (கி.பி.1492ம் ஆண்டு) பரீதாபி ஆண்டு ஆவணி 26 ஆம் நாள் வெள்ளிக்கிழமை,உத்திர நாளில் கதவுகள் இட்டு இரண்டு கிராமங்களை தானமாக குடுத்தது பற்றிய கல்வெட்டு( A.R.E. No.115 of 1937-38) கார்த்திகை கோபுர வாசல் உள் கீழ் புறம் உள்ளது. (அவன் தந்த கதவுகள் கி.பி.2002 ம் ஆண்டு நடந்த திருப்பணியின் போது அகற்றப்பட்டு மடைப்பள்ளியில் வைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்போடு  மறைந்து போனது.)


இது கோனேரிராஜாவுக்கும், கந்தாடை ராமாநுஜ முனியான ராமராஜருக்கும் இடையேயான திருவரங்க உள்துறை நிர்வாக ஆளுமை செய்வதில் ஏற்பட்ட பூசலே காரணம் என்பர் பேரா. குடவாயில்- திரு.பாலசுப்பிரமணியன்.
• கி.பி.15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயநகர ஆட்சியின் கீழ் சிற்றரசனாக இருந்தவன் கோனேரிராயன் (கி.பி.1486-1495) இவனது ஆட்சிப் பகுதி வடக்கே காஞ்சிபுரத்திலிருந்து தெற்கே திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் உட்பட்ட பகுதிகள் அடங்கியிருந்தன. 1471இல் கோனேரிராயன் திருச்சிராப்பள்ளி பிராந்திய தலைவரானார். இவரது தலைநகர் காஞ்சிபுரமாகும். திருவரங்கத்தில் இவனது கல்வெட்டே தமிழ் மன்னர்களின் கடைசி கல்வெட்டாகும்.

  • சாளுவ வம்சம்  (கி.பி1485- 1491)  முடிவு:-
                • கி.பி.1485ல் சங்கம மரபைச் சேர்ந்த இறுதி விஜயநகரப் பேரரசர் பிரௌத ராயன் இறப்பிற்குப் பின், சாளுவ மரபின் படைத்தலைவர் சாளுவ நரசிம்ம தேவ ராயன் (கி.பி. 1485 – 1491) இராணுவப் புரட்சி மூலம் விஜயநகரப் பேரரசின் அரியணை ஏறினார். இவருக்குப் பின் வந்த திம்ம பூபாலன் மற்றும் நரசிம்ம ராயன் II ஆகியோர் கி.பி.1491 முதல் 1505 முடிய பேரரசை ஆண்டனர்.

• துளுவ வம்சம்(கி.பி.1491-1542):-
                கி.பி.1505 பேரரசின் துளுவ மரபின் பெரும் படைத்தலைவர் துளுவ நரச நாயக்கன் இராணுவப் புரட்சி செய்து சங்கம மரபினரிடமிருந்து விஜயநகரப் பேரரசை கைப்பற்றி அரியணை ஏறினார். கி.பி.1509ல் துளுவ நரச நாயக்கரின் மகன் கிருஷ்ணதேவராயரின் ஆட்சி துவங்கியது.

•கிருஷ்ணதேவராயர் (கி.பி.1509 - 1529) ஆட்சி:-                        ஸ்ரீகிருஷ்ணதேவராயனின்,  தந்தை நரச நாயகன், உண்மையில் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாய் கொண்டவர் இல்லை, கர்நாடகத்தில்(தற்போதைய கூர்க்) துளு என்ற மொழியை தாய்மொழியாய் கொண்டவர், அவர் தலைமை தளபதியாக வேலை பார்த்த கடைசி சாலுவ வம்ச மன்னனான நரசிம்ம ராயனுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் மன்னன் ஆனார்.
கிருஷ்ணதேவராயர் இந்து வீரர்களுடன், முஸ்லீம் படைவீரர்களையும் தனது படைதுறைகளில் சேர்த்து வளுவான படையணிகளை உருவாக்கினார்.  பத்தாண்டுகளில் தன் போர்த் திறமையால் வடக்கில் இருந்த தக்காணச் சுல்தான்களின் ஆக்கிரமிப்புகளை வென்றார்.
கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் விஜயநகரப் பேரரசு நாற்புறங்களிலும் விரிவாக்கப்பட்டு, புகழின் உச்சத்தில் இருந்தது. தக்காண சுல்தான்களின் வடக்கு, கிழக்குப் பகுதிகளையும் மற்றும் கலிங்க நாட்டையும் கைப்பற்றி விஜயநகரப் பேரரசில் இணைத்தார். கி.பி.1520ல் நடைபெற்ற ராய்ச்சூர் போரில் கிருஷ்ணதேவராயர், பீஜாப்பூர் சுல்தானகத்தை வெற்றி கொண்டார். போரின் முடிவில் பிஜப்பூர் சுல்தான் கிருஷ்ண நதியின் அப்பாலுக்கு விரட்டியடிக்கப்பட்டார். ராயர் மிகுந்த இறை நம்பிக்கை உடையவராகவும்  இருந்தார் .
இன்றைய ஆந்திராவில் உள்ள திருவேங்கடமலைக்கு (திருப்பதி ) சென்று, தங்கம் வைடுரியங்களால் ஆன பொருட்களை தானமாக வழங்கினான். மேலும் திருப்பதி கோயிலுக்கு பல தானங்கள் செய்து, கடைசியாக, தன் இரு பட்டத்து ராணிகளுடன் தன் சிலையையும்  (சென்னாதேவி, திருமலாதேவி) சேர்த்து மூன்று பேரும் அங்கு வேங்கடவனை நோக்கி வணங்குவது போல சிலைகளைச் செய்து வைத்தான்.
இன்றும் திருவேங்கடமலையில் சென்றால் இவர்கள் மூவரின் வெண்கல சிலைகனை பார்க்கலாம்.
கிருஷ்ணதேவராயர் தாம் வைணவராக இருந்தபோதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார். கலை இலக்கியப் புரவலராகவும் அவர் திகழ்ந்தார். எனவே 'ஆந்திரபோஜர்' என்று அவர் அழைக்கப்பட்டார்.
•அஷ்டதிக்கஜங்கள் என்ற எட்டு சிறந்த அறிஞர்கள் அவரது அவையை அலங்கரித்தனர். அவர்களின் முதன்மையானவர் அல்லசானி பெத்தண்ணா. ஆந்திரகவிதாபிதாமகர் என்று அவர் புகழப்பட்டார். அவரது முக்கிய படைப்புகள் மனுசரிதம் மற்றும் ஹரிகதாசாரம் என்பதாகும். பிங்கலி சூரண்ணா, தெனாலி ராமகிருஷ்ணா இருவரும் சிறந்த அறிஞர்களாகத்திகழ்ந்தனர். ஆமுக்தமால்யதம் என்ற தெலுங்கு மொழி நூலையும், ஜாம்பவதி கல்யாணம், உஷாபரிணயம் என்ற வடமொழி நூல்களையும் கிருஷ்ண தேவராயர் இயற்றியுள்ளார்.
• ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் மீது மிகுந்த ஈடுபாடு உடைய ராயர் ஆண்டாளை மையக்கருவாகக் கொண்டு “ஆமுக்த மால்யதா’ என்ற நுலை எழுதினார். இந்த நூல் தெலுங்கு இலக்கிய உலகில் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாக கருதப் படுகிறது.
•ஸ்ரீகிருஷ்ணதேவராயர் திருவரங்கம் பெரியகோயிலுக்கு சக ஆண்டு 1438 (கி.பி.16-02-1517) தாது வருஷம் மாசி மாதம் 11ம் நாள் திங்கட்கிழமை வருகை தந்து, அன்றே பல விலையுயயர்ந்த ஆபரணங்களையும், நவரத்னங்களையும் திருக்கோயிலுக்கு நன்கொடையாகவும், சில கிராமங்களைத் தானமாகவும் தந்தது பற்றிய தெலுங்கு மொழிக் கல்வெட்டு (A.R.E.No.341 of 1950-51 - இரண்டாம் திருச்சுற்று மேற்குப் பக்கச் சுவர் அடித்தளப்பகுதியில்) கூறுகிறது. மேலும் இவரது பெயரால் மாசி மாதம் தேரோட்டத்துடன் கூடிய 'மாசி பிரம்மோத்ஸவம்' நடைபெற்றதாக இரு தமிழ் கல்வெட்டுக்களின்
(A.R.E.No.42 of 1938-39)
(A.R.E.No.265 of 1930)
 மூலம் அறியமுடிகிறது. தற்போது மாசி தெப்போத்ஸவம் மட்டுமே நடைபெறுகிறது.

தொடர்ச்சி அடுத்த பதிவு-Postல பார்ப்போம்.


                    அன்புடன்

        ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்