Saturday, October 13, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 5)




• அரசியல் வரலாற்று மரபு
திருவரங்கம் பெரியகோயில் 
                         (பகுதி - 4)ன் தொடர்ச்சி … … … …




• முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்ட பாண்டிய மன்னனாவான். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை அடுத்து முடி சூடியவனான இவன் தன் இறப்பு வரை ஆட்சி புரிந்தான்.

மாறவர்மன் குலசேகரன் 'எம் மண்டலமும் கொண்டருளிய', 'கோனேரின்மை கொண்டான்', 'கொல்லங்கொண்டான்' என்ற விருதுகளை ஏற்றான். கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம்,சிங்களம் ஆகிய நாடுகளை வெற்றிகொண்டான் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறது. மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசள இராமநாதனை கி.பி 1279 இல் வென்றான். சிங்களத்தில் உண்டான அரசியல் கலவரத்தை வாய்ப்பாக கொண்டு கி.பி 1284 இல் தனது படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான் கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து குலசேகரபாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டு சென்றான். குலசேகரன் அரசவையில் 'தகியுத்தீன் அப்துல் ரகுமான்' என்பவர் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக 'அப்துல்லா வசாப்' எனும் அரபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார்.
• மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 10வது ஆட்சியாண்டுக் (06-12-1277) கல்வெட்டு ஒன்று (A.R.E.No. 7 of 1936-37)
திருவரங்கம் பெரியகோயில்
 மூன்றாம் திருச்சுற்று  கிழக்குப்பக்கச்சுவரில்
உள்ளது. செவ்விருக்கை நாடு சக்கரவர்த்திநல்லூர் மதிதுங்கன் தனிநின்று வென்ற பெருமாளான ஆர்ய சக்ரவர்த்தி என்பான் திருவரங்கம் அழகியமணவாளப்பெருமாளுக்கு திருமாலைகள் சமர்ப்பிக்க கொடுத்த நிலதானங்கள் பற்றி அக்கல்வெட்டு கூறுகிறது.

• மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மறைவிற்கு பிறகு அவனது இரு மகன்கள் சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரிடையே எழுந்த பங்காளிச் சண்டையைப் பயன்படுத்தி தில்லி சுல்தான்(அலாவுதீன் கில்சி) பாண்டி மண்டல ஆட்சியை கைப்பற்றினான்.
யாரந்த 'அலாவுதீன் கில்சி' என்று
வரலாற்றுச்சுவடுகளைத் தேடியதில் எனக்குக் கிடைத்த செய்திகளோடு தொடருகிறேன்.

 • கில்ஜி வம்சம்:-
கில்ஜி வம்சத்தினர் மத்திய ஆசியாவைச் சார்ந்த துருக்கியர்கள் ஆவார்கள்.
இவர்கள் தில்லியைக் கைப்பற்றுவதற்கு முன்னர் தற்போதைய ஆப்கானிஸ்தான் பகுதியில் வசித்து வந்தனர். 'கில்ஜி' என்பது ஆப்கானியக் கிராமம் ஒன்றின் பெயர் ஆகும். இவர்கள் ஆப்கானியர்களின் கலாச்சாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றியதால் ஆப்கானிய இனக் குழுக்களுள் ஒன்றாகக் கருதப்பட்டனர். அதன் காரணமாய் இவர்களை துருக்கிய-ஆப்கான் வம்சம் என்று அழைத்தனர். கில்ஜி அரசர்கள் 'சுல்தான்கள்' என அழைக்கப்பட்டனர். இவர்களுள் ஜலானுதீன் பிரோஸ் கில்ஜி, அலாவுதீன் கில்ஜி மற்றும் குத்புதீன் முபாரக் ஆகிய மூவர் மிகவும் முக்கியமான சுல்தான்களாக வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றனர்.
• அலாவுதீன் கில்ஜி (கி.பி. 1296–1316)
அலாவுதீன் கில்சி போர்க்களங்களில் தனது படையணிகளை நடத்திச் செல்வதில் கைதேர்ந்தவர். முரட்டு மங்கோலியர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தி இந்திய துணை கண்டத்திலிருந்து மங்கோலியர்களை விரட்டி அடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுல்தான் அலாவுதீன் கில்சி.
சித்தூர் (மேவார்) நாட்டு பட்டத்து அரசி பத்மினியின் அழகை கேள்விப்பட்டு, பத்மினியை அடையும் நோக்கில் மேவார் கோட்டை மீது அலாவுதீன் கில்சி 1303ல் படை எடுத்த விவரங்கள்
சூஃபி கவிஞரான 'மாலிக் முகமது ஜாயசி' என்பவர், கிபி 1540ல் 'அவதி' மொழியில், சித்தூர் ராணி பத்மினி குறித்து 'பத்மாவதி காவியம்' இயற்றியுள்ளார். இக்காவியம் புனையபட்டது அன்றி, வரலாற்றுக் காவியம் அல்ல என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
[ராணி பத்மினி மற்றும் அலாவுதீன் கில்சி குறித்த 'பத்மாவத்'  என்ற திரைப்படமும் சனவரி, 2018ல் வெளியானது.]
அலாவுதீன் கில்ஜியின் தக்காணப் படையெடுப்பும் தென்னிந்திய வெற்றிகளும் குறிப்பிடத்தக்கவை. தெற்கில் நான்கு முக்கிய அரசுகளான 1.தேவகிரி யாதவ அரசு 2.வாரங்கல் காகதீய அரசு, 3.துவார சமுத்திரத்தில் ஹோய்சள அரசு மற்றும் 4.மதுரைப் பாண்டிய பேரரசு ஆகியனவற்றை கில்சி படையெடுத்து வென்றான்.

 • அலாவுதீன் கில்சி குசராத்து  படையெப்பு:-
அலாவுதீன் கில்சி, குசராத்து மீது படையெடுத்து செல்ல தனது இரண்டு படைத்தலைவர்களான, 'உலுக்கான் மற்றும் நுசுரத் கான்' என்பவர்கள் தலைமையில் இரண்டு படையணிகள் இரண்டு பக்கமாக அனுப்பினார். நுசுரத் கான் (24. 02. 1299ல்) தனது படைகளை தில்லியிலிருந்து குசராத்திற்கு நேர்வழியில் நடத்திச் சென்றார். உலுக்கான் தனது படைகளை, தில்லியிலிருந்து சிந்து நாட்டின் வழியாக குசராத்து நோக்கிச் சென்றான். பின்னர் குசராத்து மன்னர் வகேலா வம்சத்தின் இரண்டாம் கர்ணதேவ வகேலாவுடன் நடந்த போரில், கர்ணதேவன் தோற்று தனது மகள் தேவலா தேவியுடன் தேவகிரியை நோக்கி தப்பி ஓடிவிட்டார். அலாவுதீன் கில்சியின் படைகள் குசராத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த சோமநாதபுரம் (குசராத்து) சிவன் கோயிலை உடைத்தெறிந்தனர். மேலும் துவாரகையில் இருந்த கிருட்டிணன் கோயிலையும் இடித்து தரைமட்டம் ஆக்கினர். அரண்மனை மற்றும் கோயில்களின் கருவூலங்களில் இருந்த பெருஞ்செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர். அத்துடன் நில்லாது, குசராத்து மன்னன் இரண்டாம் கர்ணதேவ வகேலாவின் பட்டத்தரசி கமலாதேவி
மற்றும் அவளது பணிப்பெண்ணையும் (திருநங்கை), கில்ஜியின் படைத்தலைவர்கள் கைப்பற்றி தில்லி சுல்தானாகிய அலாவுதீன் கில்ஜியிடம் ஒப்படைத்தனர்.
குசராத் மன்னரின் மனைவியை கில்ஜி, இசுலாமிய மதத்திற்கு மத மாற்றம் செய்து மணந்து கொண்டார். அரசியின் பணிப்பெண்னான திருநங்கையையும் மதமாற்றம் செய்து ’மாலிக் கபூர்’ என்று இசுலாமிய பெயர் சூட்டினார்.
மத குருக்களின் எதிர்ப்பை மீறி, மாலிக்கபூருடன் கில்ஜி நெருங்கிய நட்பும், பாலியல் உறவும் கொண்டிருந்தார். மாலிக் கபூருக்கு முதலில் சிறு படைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. மாலிக் கபூர் விரைவாக கில்ஜியின் படையில் வேகமாக உயர்ந்து 10,000 படைவீரர்கள் கொண்ட படைஅணிக்கு படைத்தலைவரானார்.  

• மாலிக் கபூர்
தென்னிந்தியா மீது படையெடுப்பு:-
மாலிக் கபூர் இரண்டு முறை தென்னிந்தியா மீது படையெடுத்தான். முதலில் 1309ல் தேவகிரி மீது படையெடுத்து வென்றார். தேவகிரி மன்னர் இராமச்சந்திரனின் குசராத் பகுதியையும் அவரின் மகள் இளவரசியுமான சோதி என்பவளையும் பரிசாக பெற்று கில்ஜியிடம் ஒப்படைத்தார். 1311ல் மாலிக் கபூர் வாரங்கல் நாட்டை ஆண்டு கொண்டிருந்த காகாதீய குல மன்னர் பிரதாப் ருத்ர தேவனை வென்று, தில்லி சுல்தானுக்கு அடங்கி, ஆண்டு தோறும் கப்பம் கட்டும்படி பணித்தார். அத்துடன் நில்லாது, ஹொய்சாலப் பேரரசை கைப்பற்றி ஹம்பி பகுதிகளில் இருந்த ஹோய்சாலேஸ்வரர் கோவில், கேதாரேஸ்வரர் கோயில் போன்ற போசளர் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்துக் கோயில்களை பாழடித்தார்.
உலகப்புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை வாரங்கல் அரசிடமிருந்த்து கொள்ளையடித்து கைப்பற்றினார். பின்பு மாலிக் கபூர், தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி காஞ்சிபுரம் கோயில்கள், சிதம்பரம் நடராசர் கோயில், திருவண்ணாமலை, திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில்களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்ததுடன், கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார்.
(மதுரை ஆலவாய் கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கம், தானாய்த் தோன்றியவர். மாலிக் கபூர் படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர். இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்கு எதிரே மாலிக் கபூரால் உடைக்கப்பட்ட லிங்கம் காட்சிக்கு உள்ளது.)
• இசுலாமிய வரலாற்று அறிஞரான சியாவுதின் பருணியின் கூற்றுப்படி, மாலிக் கபூர், தென்னிந்தியாவில் கொள்ளையடித்த செல்வங்களையும் மற்றும் 240 டன் தங்கத்தையும், 612 யானகள், 20,000 குதிரைகள் மேலேற்றி தில்லிக்கு வெற்றி வாகையுடன் திரும்பிச் சென்றான் எனக் கூறுகிறார். தில்லி சுல்தான் அலாவூதின் கில்ஜி, மாலிக் கபூரின் வெற்றிகளையும், கைப்பற்றிய தென்னிந்த்திய செல்வங்களைக் கண்டு பாராட்டி, மாலிக் கபூருக்கு தில்லி சுல்தானகத்தின் “தலைமைப் படைத்தலைவர்” ('மாலிக் நைப்’) என்ற புதிய பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டு, மன்னரின் பிரிக்க முடியாத துணையாக மாறினான் மாலிக் கபூர். 
• சயாவுடீன் பார்னி , அமீர்குசுரு, வாசப் போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த பொன், பொருள்களைக் கொள்ளையிட்டு சிற்பங்கள் பலவற்றையும் சிதைப்பதற்குக் காரணமானான் மேலும் கொள்ளையிட்ட பொருள்களை டில்லிக்குக் கொண்டு சென்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாலிக்காபூர் 612 யானைகள், 20,000 குதிரைகள், 96,000 மணங்கு பொன், முத்து மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளினை எடுத்துச் சென்றான் என பார்னி என்பவன் குறித்துள்ளான்.
• 'பொன் வேய்ந்த பெருமாள்' ஆகிய ஜடாவர்மன் சுந்தரபாண்டியனாலே பொன்மயமாக இருந்த ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தென்னகத்து திருக்கோயில்களின் பொக்கிஷங்களைக் கொள்ளையிட்டு தில்லிக்கு கொண்டு சென்று கில்சி மன்னனிடம் ஒப்படைத்தான். அந்த பாபத்தின் விளைவாக அடுத்த வருடங்களில்
அலாவுதீன் கில்சிக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அவன் படுக்கையில் வீழ்ந்தான். பின்னர் அவனுக்கு நினைவாற்றல் குறையத் தொடங்கி மரணமடைந்தான். இதனைப் பயன்படத்தி மாலிக் காபூர் கில்சியின் வாரிசுகளைக் குருடாக்கி விட்டு அவர்களில் மீதம் இருந்த ஒரு சிறுவனை மன்னனாக்கி நாட்டை ஆளத்தொடங்கினான்.
 கில்ஜியின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து, மாலிக் கபூர் உயிரோடு இருக்கும் வரை தங்களால் நிம்மதியாக வாழ முடியாது என்று, அவனது பாதுகாவலர்களைக் கொண்டே அவனை மடக்கினர். டெல்லியில் தனி அரண்மனையில் படுக்கையில் இருந்த மாலிக் கபூரை, நள்ளிரவில் சுற்றி வளைத்த கில்ஜியின் விசுவாசிகள், அவனை கை வேறு கால் வேறாக வெட்டித் தலையை தனியே எடுத்தனர். டெல்லி கோட்டையின் ஒவ்வொரு வாசலிலும் ஒவ்வொரு உறுப்புகளைத் தொங்கவிட்டு பழிதீர்த்துக்கொண்டனர்.எதிர்ப்பே இல்லாமல் பெரும் படை நடத்திச் சென்று, இந்தியாவை நடுங்கச் செய்த மாலிக் கபூர், அடையாளமே இல்லாமல் அழித்து ஒழிக்கப்பட்டான். ஓர் அடிமையாகத் தொடங்கி ஆட்சி அதிகாரம் வரை உயர்ந்த இரண்டு பேரின் 'பெரும் எழுச்சியும் வீழ்ச்சியும்' வரலாறு நமக்குப் புகட்டும் பாடம்.
 காலவெளியில் காலச்சுவடுகளாய்  கண்ட இவை, காலத்தின் வெறும் நிகழ்வுதான் என்பதுபோல அந்த காலவெளியெனும் ஆறு அமைதியாய் ஏதுமறியாதது போலே ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
• தென் இந்தியாவின் மீது முதல் முதலில்  (1311-13) படையெடுத்து வந்தவன் மாலிக் கபூர்.
இரண்டாம் முறை படையெடுத்து வந்தவன் 'உலுக்கன்' ( இவனே பின்னாளில் முகமதுபின் துக்ளக் என்று பெயர் சூட்டிக்கொண்டான்) ஆவான். அப்போதைய ஹொய்சாள மன்னனான மூன்றாம் வீரவல்லாளன்,  மாலிக் கபூர்(கி.பி.1311) மற்றும் குரூஸ்கான் (கி.பி.1318)  ஆகியோரிடம் அடிபணிந்தது போல , உலூக்கனிடமும் (கி.பி.1323) அடிபணிந்து, துருக்கர்கள் தென்னிந்தியாவில் மிக எளிதாக நுழைய வழிவகுத்தான்.
• டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான்.
கிபி 1321ல் தென் இந்தியாவின் மீது படையெடுக்க விரும்பினான். அவனுடைய முக்கிய குறிக்கோள் தங்க வைரங்களின் கருவூலமாக திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே. கிபி1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் 22ஆம் தேதி டில்லியிலிருந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான். புறப்பட்டு திருவரங்கமருகே வந்தபோது,
அன்று நம்பெருமாள் 'பங்குனி உத்சவம்' எட்டாம் திருநாள் அன்று வடதிருக்காவேரி (கொள்ளிடக்கரை) கரையில் அன்று இருந்த பன்றியாழ்வான் கோவிலில் பெருமாள் எழுந்தருளி இருந்த போது, உலுக்கன் வருகை அறிந்த மக்கள் அவன்  தொடர்ந்து வருவானே என்று அஞ்சினர்.
[உலூக்கான் நடத்திய படுகொலைகளும் அடித்த கொள்ளைளும் ரத்ததை உறையச் செய்பவை. கோயிலுக்குள் நுழைந்ததும் அவன் உற்சவர் விக்கிரகத்தைத்தான் தேடினான். உற்சவர் இல்லாத்தால் கோபத்தில் அங்கே கூடியிருந்த அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களையும் கொன்றுகுவித்தான். அன்று மட்டும் ஸ்ரீரங்கத்த்தில் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டனர். இதைப் “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.]
ஸ்ரீரங்கத்தில் வைணவ குரு பிள்ளைலோகாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு ரகசிய உபதேசங்கள் செய்து வந்த காலத்தில், இந்த வரலாற்றுச் சம்பவம் நடந்தேறியது.
எல்லாம் நல்லனவாகவே நடந்துகொண்டிருந்த அந்த கால, நேரத்தில் முகலாயர்கள் படையெடுத்து (கி.பி.1323) திருவரங்கத்தைத் தாக்க வரும் செய்தி ஊரெங்கும் காட்டுத்தீயாய் பரவியது. படையெடுப்பின் நோக்கமே கோயில்களைத் தகர்த்து அதிலுள்ள விலைமதிப்பற்ற பெருஞ்செல்வங்களைக் கொள்ளயடிப்பதுதான்.
அதை எண்ணி திருவரங்கத்திலுள்ள ஒவ்வொருவரும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துபோனார்கள்.
அந்தச் அவசரகால சமயத்தில் 'ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியார்' வைஷ்ணவ சமயத்தின் மூத்த ஆச்சாரியராக (குருவாக) இருந்து வந்தமையால் அந்த நிலைமையச் சமாளிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவர் மிகவும் வயது முதிர்ந்து தன்னைத் தானே பராமரித்துக்
கொள்ள இயலாத நிலையில் இருந்தும் திருவரங்கம் பெரிய பெருமாளை அவர்களிடமிருந்து காக்கும் பொருட்டு மூலவர் சந்நிதியை கல்திரையிட்டு மூடி, முன்பொரு விக்ரஹத்தை வைத்துவிட்டு 'அழகிய மணவாளனை' உபயநாச்சிமார்களுடன் மூடுபல்லக்கில் எழுந்தருளப் பண்ணி தோளில் சுமந்துகொண்டு தெற்கு நோக்கி பயணப்படலானார். தெற்கே திருமோகூருக்கு அருகில் யானைமலை அடிவாரத்தில் 'ஜ்யோதிஷ்குடி' (யா. கொடிக்குளம்) என்ற கிராமத்தில் பெருமாளையும் நாச்சிமார்களையும் ஒரு குகையில் மறைவாக எழுந்தருளச் செய்து திருவாராதனம் செய்து வந்தனர். அக்ஷய வருடம் (கி.பி.1323) ஆனிமாதம் ஜ்யேஷ்ட சுத்த துவாதசியில் 118வது (118 வயதில்) திருநக்ஷத்திரத்தில் பிள்ளைலோகாச்சாரியார் பரமபத்திற்கு எழுந்தருளினார். அவரது சரமத் திருமேனியை (பூத உடலை) அலங்கரித்து ஜ்யோதிஷ்குடியில்(யா. கொடிக்குளம்) மலையடிவாரத்தில் திருப்பள்ளிப்படுத்தி திருவரசும் கட்டிவைத்தார்கள் என்கிற தகவலை கோயிலொழுகின் மூலம் அறிகிறோம்.

பிள்ளை லோகாச்சார்யரின் மறைவுக்குப்பிறகு,
பாதுகாப்பு கருதி'அழகிய மணவாளப்பெருமாள்' மதுரை அழகர் திருமலையில் (திருமாலிருஞ்சோலை - அஞ்சினான் கோட்டை)
ஒரு வருடம் மலைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தார். அப்போது அழகர்மலை அழகாபுரிக்கோட்டையை ஆட்சி செய்தவன் 'கங்கைகொண்ட சூரியத்தேவன் வாணாதிராயன் காளிங்கராயன்' எனும் பாணர்குலச் சிற்றரசன் ஆவான். அவனது பெரும் உதவியுடன் பிள்ளைலோகாச்சாரியார் சிஷ்யர்கள் அழகியமணவாளரின் திருமஞ்சனம் மமற்றும் திருவாராதனங்களுக்காக 'அழகியமணவாளன் திருக்கிணறு' ஒன்றையும் உருவாக்கினார்கள். (அழகர்மலையில் நூபுரகங்கைக்குச் செல்லும் வண்டிப்பாதையில் கோயிலின் மேற்கு மதில்சுவருக்கு அருகே இன்றும் அக்கிணறு உள்ளது.)

பிறகு  கோழிக்கோடு(கேரளம்), தமிழ்நாடு-கர்நாடகம்-கேரளா மாநிலம் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் திருக்கணாம்பியில் சில காலம், பிறகு மேல்கோட்டை திருநாராயணபுரம் பிறகு திருவேங்கடமலைக் காடுகளில்
மறைத்து வைக்கப்பட்டிருந்தார். பின்பு யாதவராயனால் கி.பி.1360ல் திருமலைக் கோயிலில் கட்டப்பட்ட ரங்க மண்டபத்தில் அழகியமணவாளப்பெருமாள் எழுந்தருளியிருந்தார்.
கிபி. 1336 ஆம் ஆண்டில் ஹரிஹரர் மற்றும் புக்கர் எனும் யாதவ சகோதரர்கள் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தார்கள். குமார கம்பணன் புக்கரின் மகன் ஆவார். இவர் கிபி 1362 இல் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட இராஜநாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினார். பின்னர் மதுரை சுல்தானகம் மீது படையெடுத்து அங்கு சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார். கி.பி. 1364 ஆம் ஆண்டளவில் மகமதியர்களின் ஆட்சி நிலை குலையத்தொடங்கி கி.பி. 1378 வரை போராட்டம் நடைபெற்றது. குமார கம்பண்ணன் கோயில் அறநிலையங்களினைப் பாதுகாப்பதனையும் கடமையாகக் கொண்டு போர் புரிந்து பல தலைவர்களை பாண்டிய நாட்டின் பொறுப்புகளில் அமர்த்தினான்.
[மதுரை படையெடுப்பின் போது உடனிருந்த இவரது மனைவி கங்கதேவி மதுரை முற்றுகையையும், வெற்றிகளையும் 'மதுரா விஜயம்' என்ற தனது சமஸ்கிருத நூலில் பதிவு செய்துள்ளார்]

• 1336 ஆம் ஆண்டு விஜயநகர் சாம்ராஜ்யம் இறைஅருளால் தென்னிந்தியாவில் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 'அழகியமணவாளப் பெருமாள்' திருமலையில் இருந்தபோது செஞ்சியை ஆண்டுகொண்டு இருந்த கோபண்ண உடையார் திருமலையில் வருகை தந்து அரங்கநாதனை திரிசித்து விட்டு  ஸ்ரீரங்கத்தில் திரும்பவும் அவரை எழுந்தருளப்பண்ண சித்தம் கொண்டார்.
அழகியமணவாளப்பெருமாளை செஞ்சிக்கு அருகேயுள்ள 'சிங்கபுரம்' என்கிற ஊரில் எழுந்தளுப்பண்ணி  பல காலம் ஆராதித்து வரும் காலத்து ஸ்ரீரங்கத்தில் இருந்து சிங்கபிரானுடைய குமாரர் திருமணத்தூண் நம்பி (திருமணல்தூண் நம்பி என்றும சில குறிப்புகள் சொல்லுகின்றன) அன்றைய கோவில் அதிகாரியான உத்தம நம்பியை செஞ்சிக்கு அனுப்பி கோபண்ண உடையாருக்கு கண்ணனூரில் உள்ள துலுக்கன் படை பற்றிய செய்திகளை சொல்லி அதனை வென்று,
கி.பி.1371 பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாள் அழகியமனவாளனையும் உபய நாச்சிமார்களையும் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பித்தான். இதற்கான கல்வெட்டு ஒன்று (A.R.E.No.55 of 1892) ஸ்ரீரங்கம் கோவிலில் ராஜமகேந்திரன் திருச்சுற்று கிழக்குப்பகுதியில் காணப்படுகிறது.
 (கி.பி.1324 முதல் 1370 வரை
சுமார் 48வருடம் அழகியமணவாளர் வனவாசம் அல்லது உலா சென்றார்) 





அழகியமணவாளப்பெருமாள் திருவரங்கத்திற்கு எழுந்தருளுவதற்கு முன்பு கொள்ளிடக்கரையின் வடகரையில் 'அழகியமணவாளம்' எனும் கிராமத்தில் தங்கியிருந்து, பிறகு கி.பி.1371 பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாளில் திருவரங்கம் வந்தார். மூன்றாம் திருச்சுற்றில்  சேரனை வென்றான் மண்டபத்தில் எழுந்தருள பண்ணப்பட்டனர். 48 வருடமாகியதால் இவர் தான் அழகியமணவாளனா? என்று திருவரங்க மக்கள் சந்தேகமுற்றனர். ஈரங்கொல்லி எனப்படும் ஒரு வண்ணானால் உண்மை அறியப்பட்டது.
அந்த வண்ணானால் திருவரங்கம் அழகிய மணவாளப்பெருமாளுக்கு சூட்டப்பட்ட திருநாமமே "நம்பெருமாள்" என்பதாகும். கி.பி.1371 ம் ஆண்டு தொடங்கி அழகிய மணவாளனுக்கு நம்பெருமாள் என்ற திருநாமமே வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சி.....
அடுத்த பதிவு - Postல பாப்போம்.

அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் 



3 comments:

  1. மாலிக் காஃபூர் அடிமை இந்துவாக இருந்து பின்னர் முஸ்லீமாக மார்க்கம் மாறிய ஒரு சிறந்த படைத்தளபதி ஆவார். இவர் ஒரு அரவாணியும் கூட. கம்பட் போரில் அலாவுத்தீன் கில்ஜியின் படைகளால் அடிமையாக கைப்பற்றப்பட்ட மாலிக் கபூர் பார்த்தவுடன் ஈர்க்கும் கவர்ச்சி உடையவராக இருப்பாராம். அதனால் அலாவுத்தீனின் பார்வையில் பட்டு அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டார். இவரை ‘ஆயிரம் தினார் காஃபூர்’ என்றும் அழைப்பார்கள். சுல்தான் அலாவுத்தீன் கில்ஜிக்கு இவருக்கும் தகாத உறவு இருந்ததாகவும் செய்தி உண்டு.
    • ʿAlāʾ ud-Dīn Khaljī (r. 1296–1316) was the second and the powerful ruler of the Khalji dynasty that ruled the Delhi Sultanate in the Indian subcontinent. Alauddin wished to become the second Alexander (Sikander-e -Sani), and this title of his was mentioned on coins and public prayers.

    • சுல்தான் அலாவுதீன் கில்சி ஒரு குறிக்கோளுடன் கூடிய உறுதி மிக்க ஆட்சியாளர். தனது வெற்றியின் அடித்தளத்திற்கு வலுவான, நிலையான படையணிகளை நாடெங்கும் நிலை நிறுத்தினார். சந்தைப் பொருள்களுக்குச் சரியாகக் கணக்கிட்டு விலை விதித்து, அதற்கான விதிகள் இயற்றினார். அதனைக் கண்காணிக்க அரசு அலுவலர்களை நியமித்தார். பெருஞ் சந்தைகளில் விளைபொருள்களுக்கு சரியான விலையில் விற்கப்படுவதை கண்காணிக்க அரசு மேற்பார்வையாளர்களை நியமித்தார். கூடுதல் விலையில் விளைபொருள்களை விற்கும் வணிகர்கள் மீது கடும் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சரியான விலை கொடுத்து மக்கள் பொருள்கள் வாங்கினர். தேவைக்கு அதிகமான விளைபொருள்கள் அரசு கிட்டங்கிகளில் (Ware House) சேமிக்கப்பட்டது.. இதனால் வறட்சிக் காலத்தில் விளைபொருள்கள் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது.

    ReplyDelete
  2. Titanium Iron-Steel Razor - Titanium Tail - Titsanium Art
    Titanium does titanium have nickel in it Iron-Steel Razor. titanium dioxide sunscreen Titanium Iron-Steel t fal titanium pan Razor. Titsanium Iron-Steel Razor. Titsanium titanium scooter bars Iron-Steel Razor. Titsanium titanium dioxide formula Iron-Steel Razor. Titsanium Iron-Steel

    ReplyDelete