Friday, October 12, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 4)




• திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 3)
தொடர்ச்சி …… … … … … …



கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர்கள் 'முற்காலச் சோழர்கள்' என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் மிகவும் புகழ் பெற்று விளங்கினார். காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 'கல்லணை' இவரது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது. இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்றும் கூறப்படுகிறது.
இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி, போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்,இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி, குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். மேலும் நல்லுருத்திரன், கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணான் ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
களப்பிரர்களின் வருகையால் சங்க காலச் சோழர்கள் சிற்றரசர்களாயினர்

சிற்றரசர்களான சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். பல குறுநில மன்னர்களோடு திருமணத் தொடர்பு கொண்டு இழந்த செல்வாக்கை சோழர்கள் மீட்க முயன்றனர். பல்லவருக்கு கீழடங்கி ஆண்ட சிற்றரசனான 'விசயாலய சோழன்' என்பவன் பாண்டிய மேலாதிக்கத்திலிருந்து ஆட்சி செய்த முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தான்.
கி.பி.9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழரும், அவரது மகனான முதலாம் இராசேந்திர சோழரும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க அரசர்களாவர்.
கி.பி. 10-12 ஆம் நூற்றாண்டுகளில், மேற்கண்ட சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. முதலாம் இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தார். முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.  இவ்வாறாக சோழப்பேரரசர்களாக முதலாம் குலோத்துங்கன், பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர்.
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சோழர்கள்  தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர். தெற்கே "பாண்டியர்கள்" வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன.
கி.பி.1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் 'மாறவர்மன் சுந்தரபாண்டியன்' தலைமையில் பாண்டியர்கள் 'கங்கைகொண்ட சோழபுரம்' மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான 'இரண்டாம் நரசிம்மன்' சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர்.  மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று. 
"பாண்டியப் பேரரசு" தொடங்கிய அக்காலகட்டடத்தில் திருவரங்கம் பெரிய கோயிலின் அரசியல் வரலாற்று நிகழ்வுகளை இனி அறிவோம்.



பாண்டிய பேரரசர்கள் காலத்தில் திருவரங்கம் பெரியகோயில்:-

திருவரங்கம் பெரியகோயிலின் வரலாற்றை ஆராயப் புகுந்தோமானால் இந்திய வரலாற்றினை முழுவதுமாக அறியவேண்டியிருக்கும். வைணவர்களால் "கோயில்" என்று கொண்டாடப்படும் திருவரங்கம் பெரியகோயில் எப்போது கட்டப்பட்டது என்ற சரியான தகவல்கள் கிடைக்காவிட்டாலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து இதன் வரலாற்று சுவடுகள் கண்டறியப்பட்டு வரலாற்று அறிஞர்களால் பெரிதும் பேசப்படுகிறது. இந்தக் கோயிலின் ஆரம்பகட்ட வரலாறு குறித்த ஆதாரபூர்வத் தகவல்கள் கிட்டாதது வருத்தத்திற்குறிய ஒன்றாகும்.
 எனினும் நமக்கு இந்தக் கோயிலின் ஒவ்வொரு பிரகாரங்கள் குறித்தும், மதில்கள் குறித்தும் கிடைக்கும் விபரங்களில் இருந்து அவ்வப்போது சோழ, பாண்டிய மன்னர்களால் இந்தக் கோயில் பல திருப்பணிகளைக் கண்டிருப்பது தெரிய வருகிறது.

நான்காம் திருமதிலைக் கட்டியவர் 'திருமங்கை ஆழ்வார்' என்கிறது கோயிலொழுகு.
ஏழாம் திருமதில் பிரகாரத்திலும், நான்காம் திருமதில் பிரகாரத்திலும் ஆண்டாளுக்கு எனத் தனிப்பட்ட சந்நிதிகள் தென்மேற்கு மூலையில் ஏற்படுத்தியுள்ளனர் . இதில் ஏழாம் திருமதில் பிரகாரத்தில் உள்ள வெளி ஆண்டாளின் திருச்சந்நிதி 'பிற்காலப் பாண்டியர்கள்' காலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது.
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டிற்குள் அது கட்டப்பட்டிருக்கும் என அந்தச் சந்நிதி பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டிருப்பதில் இருந்து தெரிய வருகிறது.
இதைத் தவிர நான்காம் திருமதில் பிரகாரத்தில் இருக்கும் உள் ஆண்டாள் சந்நிதி கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம்.

திருவரங்கம் பெரிய கோயிலின்  கல்வெட்டுகள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்து கிடைத்துள்ளது.

சோழமன்னர்கள் கல்வெட்டுக்களில் பழமையானதாகச் சொல்லப்படுவது முதலாம் பராந்தகனின் கல்வெட்டு ஆகும். இவனுக்கு அடுத்து மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் மகன்களில் ஒருவனான ராஜமஹேந்திர சோழனின் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது கி.பி. 1060---1063 ஆம் ஆண்டில் இங்குள்ள முதல் பிரகாரத்தின் திருமதிலைக் கட்டியதால் இது 'ராஜமஹேந்திரன் திருவீதி' என வழங்கப் படுகிறது. 
சோழகுல மரபில் முதலாம் குலோத்துங்கனுக்குப் 
பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டும், 'ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம்' சோழர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்து வந்ததைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அப்போதைய காலநிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
 
மூன்றாம் குலோத்துங்கனின் இருபதாண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டு ஒன்றின் மூலம் திருவரங்கம் கோயில் நிர்வாக அலுவலர்கள், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில் நிர்வாகத்தினரோடு
 சமரமாகப் பூசல்களைத் தீர்த்துக்கொள்ளும்படிக் கட்டளை இட்டிருக்கிறான்.

 ஒரிசா வரை சோழ ஆட்சி பரவி இருந்தாலும் தெற்கே இருந்து இலங்கையின் துணையோடு பாண்டியர்களும், கீழ்த்திசையில் ஆட்சி புரிந்த கங்கர்களும், அடிக்கடி சோழர்களைத் தாக்கி வந்தனர். இதில் கி.பி. 1223 முதல் 1225 வரையிலும் ஸ்ரீரங்கம் கோயில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டுக் கோயிலின் நிர்வாகம் முற்றிலும் சிதைந்து பாழ்பட்டுப் போனது என்பதை சோழர் கால வரலாற்றின் மூலம் அறிகிறோம். ஹொய்சளர்களின் துணை கொண்டு கோயிலை மீண்டும் அவர்கள் வசம் கொண்டு வர நினைத்தாலும் அவர்களால் இயலவில்லை. அப்போது பாண்டியர்கள் தலை எடுத்துச் சோழர்களை நிமிர முடியாமல் செய்து வந்தனர்.

பாண்டிய பேரரசு:

பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். (மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர்.) இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத "நீண்ட நெடிய வரலாறு" பாண்டியர்களுக்கு மட்டுமே உண்டு. பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.

• திருவரங்கம் பெரியகோயிலில்
சுந்தரபாண்டியனான மானாபரணன்(கி.பி. 1104-31) கல்வெட்டே
A.R.E.No. 117 of 1937-38)
 பாண்டியர்களின் திருவரங்கக் கல்வெட்டில் பழமையானது. அதற்கடுத்து
• பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அரசனான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216---1238) கல்வெட்டானது (இரண்டாம் திருச்சுற்று கிழக்குப்பக்க சுவர்
-A.R.E.No. 53 of 1982) குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவனது 9வது ஆட்சியாண்டில் 28-03-1225 ஆம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் அவன் திருவரங்கத்தில் மேற்க்கொண்ட நிர்வாஹ சீர்திருத்தத்தைப் பற்றிஅறிய முடிகிறது. இந்தக் கல்வெட்டில் தான்,  எம்பெருமானார் திருவடிகளை ஆச்ரயித்திருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ற சொற்றொடர் முதனே முதலாக வருகிறது. கோயில் உள்துறை நிர்வாகத்தினர் ராஜமகேந்திரன் திருச்சுற்று மேலைப்பகுதியில் கூடி இருந்து எடுத்த முடிவினை அக்கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டில் 2000 எழுத்துக்கள் உள்ளதாக கல்வெட்டுக்குறிப்பே கூறுகிறது.
• முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஒன்பதாம் ஆட்சியாண்டுக் காலத்தில் அவனுடைய படைகள் திருவரங்கம் கோயிலை கங்கர்களிடமிருந்து விடுவித்தது. ஆனாலும் கோயிலின் திருப்பணிகளில் ஹொய்சளர்களின் ஈடுபாடு குறையவில்லை. அவர்கள் பல திருப்பணிகளைச் செய்ததாகக் கலவெட்டுக்கள் பல குறிப்பிடுகின்றன.

பாண்டிமண்டலத்தில்  போஜளர்கள் ஆளுமை:-

     திருச்சிக்கு அருகேயுள்ள கண்ணனூர்(சமயபுரம்) எனும் ஊரினைத்
தலைமையிடமாகக் கொண்டு கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த
'போசளர்கள்' தமிழகத்தில் காலூன்றினர். பாண்டியர்களுக்கு
எதிராகச் சோழர்களுக்கு உதவ முற்பட்டதனால் இவர்களது
பலம் மிகுந்தது. கண்ணனூரில் போசளர் ஆட்சியைத்
தோற்றுவித்தவன் வீரநரசிம்மனாவான். இவ்வரசன் கி.பி. 1231- இல்
காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கனைத் தோற்கடித்து அவன்
சிறைபிடித்திருந்த மூன்றாம் இராஜராஜ சோழனைச் சிறையிலிருந்து
மீட்டு, அவனைச் சோழர் அரியணையில் அமரச் செய்தான்.
போசள வீரநரசிம்மன் மகனான 'வீரசோமேஸ்வரன்' பாண்டிய
நாட்டை வென்று அவர்களிடமிருந்து திறைபெற்றான். இக்கால
கட்டத்தில் வெட்டப் பெற்ற போசளர் கல்வெட்டுக்கள் பல
பாண்டியநாட்டின் பல்வேறு இடங்களில் காணப்பெறுகின்றன.
பாண்டியர் போசளர்களுடன் நட்புறவுடன் திகழும் நிலை
ஏற்பட்டது. திருவரங்கத்திலிருந்து கிடைக்கும் வீரசோமேஸ்வரனின் கல்வெட்டு (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் - A.R.E.No. 362 of 1953-54 ) முதலாம் சடையவர்மன் விக்கிரமபாண்டியனின்  (கி.பி. 1241-1254) நாலாவது ஆட்சியாண்டு 270ம் நாளில் 'விக்கிரம சதுர்வேதிமங்கலம்' என்ற ஊரை திருவரங்கம் பெரியகோயிலுக்கு தானமாக அளித்தது பற்றி கூறுகிறது. முதலில்
ஸ்வஸ்திஸ்ரீ போஜள வீர சோமேஸ்வர தேவர் என்று தொடங்கும்.
பின்பு 2வது வரியிலிருந்து ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடை பன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவிக்கிரம பாண்டியத்தேவர் என்று தொடரும். இதன் மூலம் பாண்டிய அரசு போஜள வீரசோமேஸ்வரனின் மேலாதிக்கத்தை ஏற்றிருந்ததை அறிய முடிகிறது. வீரசோமேஸ்வரனது மற்றொரு கல்வெட்டு  (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் - A.R.E.No. 361 of 1953-54 ) இவனது
22வது ஆட்சியாண்டு(02-11-1252)நந்தவன தானம் பற்றிக் குறிக்கிறது.
வீரசோமேஸ்வரன் 6வது ஆட்சியாண்டில் பட்டத்து ராணி சோமலா தேவியார் தந்த தானம் பற்றிய மற்றொரு கல்வெட்டும் (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் - A.R.E.No. 68 of 1892) உள்ளது.

• கி.பி.1262 வரை ஆட்சி புரிந்த சோமேசுவரனுக்குப் பின்னர் வந்த ஹொய்சள மன்னன் இராமநாதர் என்பார்(கி.பி.1263—1297) வரை ஆட்சி புரிந்தார். இவர் படைத்தலைவர்களாகிய இரு சகோதரர்கள் கோயிலுக்குப் பல வகையான தானங்கள் வழங்கியுள்ளனர் என்பதைக் கோயில் வரலாற்று நூல் கூறுவதாக அறிகிறோம்.
வீரராமநாதனது இரண்டாம் ஆட்சியாண்டு (04-02-1256)கல்வெட்டு (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் - A.R.E.No. 67 of 1892) அழகிய மணவாளருக்கு திருமாலைகள் சமர்பித்திட நந்தவன கைங்கர்யத்திற்காக நிலதானம் தரப்பட்ட குறிப்பு உள்ளன.
வீரராமநாதனுடைய மூன்றாம் ஆட்சியாண்டில் (கி.பி.1257) இவன் தந்தருளின திருமுகப்படி  சிங்கண்ண தண்டநாயகரால் எடுத்த கை அழகியநாயனார் (மேட்டு அழகிய சிங்கர்) திருக்கோபுரத்திற்கு மேற்குப் பகுதியில் "ஆரோக்ய சாலை" ஒன்றினை ஏற்படுத்திப் பராமரிப்பதற்காக ஸ்ரீபண்டாரத்தில் 1100 பொற்காசுகள் சேர்ப்பிக்கப்பட்டு வைத்ததை ஒரு கல்வெட்டு (A.R.E.No. 80 of 1936-37)
 கூறுகிறது. சந்திர புஷ்கரணியிலிருந்து ஐந்து குழி மூன்று வாசல் செல்லும் நடை பாதையில் இக்கல்வெட்டை இன்றும்
காணலாம். தந்வந்தரிசந்நிதியை நெடுநாள் பராமரித்து வந்த 'கருடவாகன பண்டிதர்' இந்த ஆரோக்ய சாலையையும் நிர்வகித்து வருவார் என்றும் கல்வெட்டு குறிக்கிறது. மேலும் இவனது காலத்திய கல்வெட்டுகளாக
 (A.R.E.No.64,65,70,74, of 1936-37)  (A.R.E.No.372,377 of 1953-54)
(A.R.E.No. 52 of 1892) ஆகியனவற்றை திருவரங்கம் கோயிலில் காணலாம். ஸ்ரீரங்கவிலாஸத்தின் மேற்குப் பகுதியில்
இவனது ஆட்சி காலத்தில் தான் மிகவும் அழகு வாய்ந்த 'வேணுகோபால கிருஷ்ணர் சந்நிதி' கட்டப் பட்டது. இவனது 15வது  ஆட்சிகாலக் கல்வெட்டு
(A.R.E.No.74 of 1892)
'திருக்குழல் ஊதும் பிள்ளை சந்நிதி' என்று குறிக்கிறது
• முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின்
இந்த கல்வெட்டிற்குப் பிறகு இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1238-1255) காலத்து கல்வெட்டு (A.R.E.No. 77 of 1936-37) ஒன்று  இவனது அமைச்சர்களான அய்யன் மழவராயன், சக்கரபாணி நல்லூர் பல்லவராயன் என்பவர்கள் வேண்டுகோளுக்கிணங்க  குதிரை வியாபாரியான குளமூக்கு நாவாயன் கொண்ட நம்பி என்பான் திருவரங்கம் கோயிலுக்கு தானமாக கொடுத்த 'குமாரநம்பி நல்லூர்' என்ற கிராமத்தை (கடமை ற்றும் அந்தராயம் ஆகிய) வரிகள் நீக்கிய கிராமமாக கொள்வதற்கு மன்னன் பிறப்பித்த ஆணை பற்றி கூறுகிறது. 
• போசள வீரசோமேஸ்வரனுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே
இருந்த நட்பு அல்லது பகை வெகு நாட்கள் நீடிக்கவில்லை. கி.பி. 1250-இல்
முடிசூடிய 'இரண்டாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன்' போசள
மன்னனுடன் பகைமை கொண்டான்.
'கர்நாடக யானைக்கு சிங்கம் போன்றவன்' (கர்நாடக கரிகல்ப கந்திரவ) என்று தன்னைக் கல்வெட்டுகளில் கூறிக்கொண்டான்.
 அவனது தம்பியான
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264- இல் வீரசோமேஸ்வரனைப் போரில் கொன்று, பாண்டிய நாட்டில்
இருந்த போசளர் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வந்தான்.


    திருவரங்கம் பெரியகோயிலின் பொற்காலம்:-

-|முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1251 - 1271)  ஆட்சி|-

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த 'பாண்டிய பேரரசன்' ஆவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான்.

•  'மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன்,எல்லாம் தலையானான் பெருமாள்,கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன்' போன்ற பல பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழ நாட்டுப் படையெடுப்பும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

• இவன் பல கட்டிடங்களை திருவரங்கம் பெரியகோயிலில் எழுப்பியுள்ளான் என்பதோடு பல்வகையான அலங்காரங்களையும் செய்ததோடு தாராளமாக நன்கொடைகளையும் வழங்கினான். இதனால் அவன் புகழ் மிகவும் பெரிய அளவில் பேசப்படுகின்றது என்பதோடு அவன் காலத்துக் கல்வெட்டுக்களும்
(இரண்டாம் திருச்சுற்று வடக்குப் பக்கச்சுவர் - A.R.E.No. 45 of 1891),
(சந்தனமண்டபம் -A.R.E.No. 60 of 1892)
அவன் ஸ்ரீரங்கம் கோயிலைப் பொன்மயமாகச் செய்தான் என்று பாராட்டுகிறது.

•  திருவரங்கநாதர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, விஷ்ணு நரசிம்மன் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவை இவனால் கட்டப்பட்டதாக அறிகிறோம். இந்தக் கட்டிடங்களும், இரண்டாம் பிரகாரமும் பொன்னால் வேயப்பட்டதாகவும் அறிகிறோம். இத்தோடு நில்லாமல் ஆதிசேடன் திருவுருவம், பொன்னாலாகிய பிரபை, பொன்னாலான பீடம், பொன் மகர தோரணம், பொன் கருட வாகனம் ஆகியனவும் பொன்னாலேயே அவனால் வழங்கப் பட்டிருக்கிறது. ஒரிசா எனப்படும் கலிங்க நாட்டரசனைப் போரில் எதிர்கொண்டு வெற்றி பெற்று அவனுடைய கருவூலத்தில் இருந்து கைப்பற்றிய பல பொருள்களைக் கொண்டு ஸ்ரீரங்கநாதருக்கு மரகத மாலை, பொன் கிரீடம், முத்தாரம், முத்து விதானம், பொன் பட்டாடை, பொன் தேர், பொன்னால் நிவேதனப் பாத்திரங்கள், குவளைகள் போன்றவற்றை வழங்கியுள்ளான். விலையுயர்ந்த பட்டாடைகளாலும், ஆபரணங்களாலும் திருவரங்கத் திருமேனியை அலங்கரித்து மகிழ்ந்திருக்கிறான்.

• காவிரியில் இரு படகுகளை விட்டு தனது பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி அதன் முதுகில் மன்னன் அமர்ந்தான். மற்றொரு படகில் ஏராளமான ஆபரணங்களும், அணிமணிகளும், பொற்காசுகளும் அவனால் நிரப்பப்பட்டுக் குவிந்து கிடந்தன. தன்னுடைய படகினது நீர்மட்டத்திற்கு மற்றொரு படகும் வரும் வரையில் அந்தப் படகில் பொன்னைச் சொரிந்து கொண்டே இருந்தான். பின்னர் அப்பொன்னையும், அணிமணிகளையும் இக்கோயில் கருவூலத்திற்குத் தானமாக வழங்கினான். தன்னுடைய எடை அளவிற்குத் தங்கத்தினாலே திருவரங்கநாதரின் விக்ரஹம் செய்து அதையும் தன் பெயரால் (ஹேமச்சந்தன ஹரி) வழங்க வைத்துக் கோயிலுக்கு அளித்தான். இவ்வாறு அவன் செய்த பல திருப்பணிகளை 'கோயில் ஒழுகு' நூல் கூறுகின்றது.
'பொன்வேய்ந்த பாண்டியன்' என்று புகழப்பட்ட 'ஹேமச்சந்தன ராஜா'வால் எடுப்பிக்கப்பெற்ற அரங்கனது தங்க விமானம், கருடன் சந்நிதி,தங்கமணி மயமான மண்டபம் ஆகிய விமானங்களும் திருவரங்கனுக்கே அணிவித்த கிரீடம் போல விளங்கின.

• இவனது ஆட்சிகாலத்தில் நடுவிற்கூற்றத்து துஞ்சலுடையான் வரந்தருவான் எடுத்தகை அழகியான் என்கிற பல்லவராயன் என்பான் திருவிக்கிரமன் திருவீதியில் தன்னுடைய மன்னன் நலம் வேண்டி, முக்கோல் பகவர்களான ஸ்ரீவைஷ்ணவ ஸந்நியாஸிகள் தங்கியிருப்பதற்காக  'சுந்தரபாண்டியன் மடம்' என்று தன் மன்னனின் பெயரிலேயே மடம் ஒன்றைக்கட்டியுள்ளான். 




இரண்டு மீன்சின்னங்கள்  பொறிக்கப்பட்டு சுதர்சன சக்கரத்தோடு காணப்படுகிற திருவாழிக்கல் கல்வெட்டு (A.R.E.No.99 of 1936-37) விக்கிரமசோழன் திருவீதியாகிய தெற்கு உத்திர வீதியில் தென்கிழக்கு மூலையிலுள்ள சுந்தரபாண்டியன் மடமாகிய ஸ்ரீமணவாளமாமுனிகள் சந்நிதி  முன்பு இன்றும் காணலாம்.
மேலும் இவனதுஆட்சிகால கல்வெட்டு (A.R.E.No.81,82,83,84,89 of 1938-39)
கல்வெட்டு (A.R.E.No.43 of 1948-49)
கல்வெட்டு (A.R.E.No.338 of 1952-53) ஆகியன திருவரங்கம் சந்தன மண்டபத்தில் உள்ளன.

• சடையவர்மன் சுந்தர பாண்டியனின் கைங்கர்யங்கள் 
(கோயிலொழுகு தரும் தகவல்)

      திருவரங்கத்தில் பல ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் மற்றும் பல அரசர்களும் கைங்கர்யங்கள் செய்து உள்ளனர். இதில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (எ) சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்கு மட்டும் தனி சிறப்பு உண்டு. 'சுந்தரபாண்டியம் பிடித்தேன்' என்ற அருளப்பாடு உண்டு.

||சுந்தரபாண்டியம் பிடித்தேன் என்ற அருளப்பாடு காரணம்||

இந்த அரசன் திருவரங்கம் கோயிலுக்கு சமர்ப்பித்த கைங்கரியங்கள் அளவு கடந்தவை. இந்த அரசன் அரங்கனுக்கு சமர்ப்பித்த ஆபரணங்களின் புகழ் வட இந்தியா வரை பரவி 14ஆம் நூற்றாண்டு முகலாய படையெடுப்புக்கள் நடக்க இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுவதும் உண்டு.
பெருமாள் தன் திருவாராதனம் கண்டருளும் போது ராமானுஜர் பெயரோ அல்லது எந்த ஒரு ஆழ்வார்களின் பெயரும் கேட்பதில்லை. ஆனால் இரண்டு முறை “சுந்தரபாண்டியம் பிடித்தேன்” என்று அருளப்பாடு சாதிப்பதுண்டு.
பெருமாளுக்கு கண்ணாடி காட்டும் போது (வெள்ளி கண்ணாடி)
அர்க்யம்,பாத்யம் ஆசமணீயம் சேர்க்கும் படிக்கம் பிடிப்பதற்க்கும்  உண்டு.
சுந்தரபாண்டியம் பிடித்தேன் அருளப்பாடு
இதனை அனைவரும் அனுபவிக்க வேண்டுமென்றால் நம்பெருமாள் வெளி மண்டபங்களில் (பூச்சாற்று மண்டபம், வசந்த மண்டபம், பவித்ர மண்டபம், ஊஞ்சல் மண்டபம்) திருவாராதனம் நடைபெறும் போது காணலாம். 'சுந்தரபாண்டியம் பிடித்தேன்' என்ற அருளப்பாடு 800 ஆண்டுகளுக்கு மேல் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
இந்த அருளப்பாடுக்கு ஒரு காரணம் உள்ளது. “ஒரு முறை அரசன் சுந்தரபாண்டியன் பெருமாள் திருவாராதனம் நடைபெறும் போது சேவித்து கொண்டு இருந்தான். அப்போது பெருமாள் கைங்கர்யபாரர் பெருமாளின் படிக்கம் (தீர்த்தம் சேர்க்கும் பாத்திரம்) கொண்டு வர மறந்து விட்டார். அரசன் சுந்தரபாண்டியன் தனது கிரீடத்தை எடுத்து பெருமாளின் தீர்த்தத்தை பிடித்தான். இந்த காரணத்தினால் இன்றளவும் தீர்த்தம் சேர்க்கும் படிக்கத்தின் வடிவம் அரசனின் மகுடம் தலைகீழாக வைத்தது போல் இருக்கும்.
சுந்தரபாண்டியன் திருவரங்கத்தில் எண்ணற்ற கைங்கர்யங்களைச் செயதார்.
அவற்றுள் தலைசிறந்தது பிரணவாகார விமானத்திற்கு பொன்வேய்ந்த கைங்கர்யம்.
சுந்தர பாண்டியன் தங்கத்தினால் பல கைங்கர்யங்கள் செய்ததனால் “பொன்மேய்ந்த பெருமாள் சுந்தரபாண்டிய தேவர்” என்று சிறப்பு பெயர் பெற்றார்.
சுந்தர பாண்டிய அரசனின் மற்றொரு கைங்கரியம் நம்பெருமாள் பொதுவாக அணிந்து கொள்ளும் “பாண்டியன் கொண்டை” வைகுண்ட ஏகாதசி அன்றும் உபயநாச்சியார்களோடு திருச்சி வகையில் எழுந்தருளும் போதும் இந்த பாண்டியன் கொண்டை சாற்றப்படும்.
இந்த பாண்டியன் கொண்டையை பெருமாள் இரண்டு விதமாக சாற்றி கொள்வார் .
(இந்த பாண்டியன் கொண்டையில் மூன்று பகுதிகள் இருக்கும் (தத்வ த்ரயம் நிலை)
1) அடி பகுதி
2) வட்ட வடிவம் கொண்ட நடு பகுதி
3) குமிழ் பகுதி)

இந்த பாண்டியன் கொண்டை 19ஆம் நூற்றாண்டு பழுதாகி “வேங்கடாத்ரி ஸ்வாமிகள்” என்ற அடியவர் புனர்நிர்மானம் செய்த செய்தியும் உண்டு.

• சுந்தர பாண்டிய அரசனின் மற்றொரு கைங்கரியம்
      சுந்தர பாண்டியன் வடக்கே ஆந்திர மாநிலம் நெல்லூர் முதல் தமிழகத்தில் இருந்த சோழ ஹொய்சள மற்றும் கேரளத்தை ஆண்ட சேர அரசர்களையும் வெற்றி கொண்டதனால் “எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்” என்ற சிறப்பு பெயருடன் விளங்கி வந்தார். தற்போது நம்பெருமாள் பவித்ர உற்சவம் கண்டருளும் மண்டபத்தின் பெயர் “சேரனை வென்றான்(சேனை வென்றான்) மண்டபம் ஆகும். இந்த மண்டபம் சுந்தரபாண்டியன் சேர அரசனை வென்றதன் நினைவாக கட்டியது.
(சேரனை வென்றான்) பவித்ர உற்சவம் மண்டபத்தில் நம்பெருமாள்
துலா புருஷ மண்டபம் பெயர் காரணம்:
“திருமுகத்துறையிலே ஒரு நிறையாக இரண்டு ஓடம் கட்டி அதில் ஒரு ஓடத்தில் தச்சுமுழத்திலே ஏழு முழம் இருக்கிற பட்டத்தானையின் மேலே தானும் தன்னுடைய ஆயுதங்கலோதேனிருந்து ஒரு ஓடத்திலே அந்த மட்டத்துக்சரியான ச்வேர்ணம் முத்து முதலான நவரத்னங்கள் ஏற்றி யானை யானை துலாபுருஷந தூக்கி …..”
            ஒரு தச்சு முழம் = 33 inch
தச்சுமுழத்திலே ஏழு முழம் இருக்கிற பட்டத்து யானை (33 × 7 = 231 inch)
19 அடி உயர யானையை ஒரு படகின் மேல் ஏற்றி அதற்கு மேல் அம்பாரியில் தானும் தனது ஆயுதங்களுடன் ஏறி அமர்ந்து கொள்வார். அதன் அருகில் மற்றொரு படகை நிறுத்தி தான் அமர்ந்த படகு எத்தனை ஆழம் இறங்குறதோ அதே அளவுக்கு இறங்க அந்த படகில் தங்கம், முத்து, நவரத்தினம் ஆகிய தனங்களை ஏற்றி துலாபாரம் போல் சமநிலையாக இருக்க வைத்து அந்த தனங்களை கொண்டு நான்கு கால் மண்டபம் கட்டியதால் இதற்கு துலா புருஷ மண்டபம் என்று பெயர்.
சுந்தரபாண்டியன் 24 நான்கு கால் மண்டபங்கள் கட்டினார்.இந்த நான்கு கால் மண்டபங்களுக்கு துலா புருஷ மண்டபம் என்று பெயர். இந்த மண்டபங்கள் இரண்டாம் திருசுற்று (ராஜ மகேந்திரன் திருவீதி) முதல் ஐந்தாம் திருசுற்று (அகனங்கன் திருவீதி) வரை பல்வேறு இடங்களில் அமைய பெற்றுள்ளன.

• பெருமாள் செல்வங்களை ஏற்க மறுத்தது:
“அந்த த்ரவ்யத்தை கைங்கர்யம் பண்ண உத்யோகிக்குமளவில் அந்தத்ரவ்யம் ஸபரிகரரான ஸ்வாமிக்குத் திருவுள்ளமாகாதபடியினாலே இரண்டு வருஷம் மறிபட்டுக் கிடந்தது....”
அரசன் தான் சமர்ப்பிக்கும் தனம் என்று பெருமையுடன் கொடுத்தபோது பெருமாள் இந்த தனங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து ஆரியப்படால் வாசலின் வெளியே இரண்டு ஆண்டுகள் கிடந்தன. தங்கம், வெள்ளி, வைரம், முத்து, பவளம் என செல்வங்கள் பெருமாள் மறுத்த படியினாலே திருவரங்க வாசிகள் எவரும் தொடாமல் சீந்துவாரற்று கிடந்தது.

• பெருமாள் செல்வங்களை ஏற்றுக்கொண்டது:
"அநந்தரம் அவனுடைய ஆர்த்தியாலேயும் அனுஸரணத்தினாலேயும் ஸபரிகரரான பெருமாள் திருவுள்ளமானவந்தரம் அந்த த்ரவயயத்தை கருவு கவத்திலே முதலிட்டு பண்ணின கைங்கர்யத்துக்கு…"
[விவரம் – கோயிலொழுகு]
இரண்டு ஆண்டுகள் பின்னர் சுந்தரபாண்டியன் இது பெருமாளின் சொத்துக்கள் என்றும் அவருடையதை அவரே எடுத்துக்கொள்ள வேண்டியது. தான் இதில் ஏதும் செய்யவில்லை என்று சரண் அடைந்த பிறகு பெருமாள் மனமுவந்து ஏற்றார்.

• சரஸ்வதி பண்டார நூலகம்:
சுந்தர பாண்டியன் திருவரங்கம் கோவில் திருப்பணிகள் செய்ததோடு இல்லாமல் பழங்கால சுவடிகளையும் பாதுகாத்து வந்தார். கோவிலில் சரஸ்வதி பண்டார நூலகத்தில் பூர்வாசார்யர்கள் அருளிச்செய்த நூல்களின் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பாக வைத்து அதற்கு பணியாளர்களை நியமித்து அனைவருக்கும் ஓலைச்சுவடிகள் கிடைக்க ஆவன செய்தார்.
இந்த சரஸ்வதி பண்டாரம் நூலகம் மூன்றாம் திருச்சுற்றில் இருந்தது.  சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவர் சன்னதிகள் அமைந்துள்ள பவித்ர மண்டபத்திற்கும் பூச்சாற்று உள்கோடை மண்டபத்திற்கும் இடையில் அமைந்துள்ள நடைமாளிகையில் இடது புறத்தில் அமைத்திருந்தது.
இந்த ஓலை சுவடிகள் அனைத்தும் முகலாய படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது.
(இன்றும் திருவரங்கம்
பெரிய கோயிலில் ஒரு நூலகம் உள்ளது ஆனால் அது  எவருக்கும் உபயோகமின்றி உள்ளது.)
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனை (கி.பி. 1251 - 1271)  
 அடுத்து 25 ஆண்டுகள் வரை எந்தவிதக் குழப்பமும், தொந்திரவும் இன்றி அரங்கநாதர் நிம்மதியாக இருந்து வந்தார்.
ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் அதாவது கி.பி. 1268-1308 ஆம் ஆண்டு காலத்தில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மட்டும் அல்லாமல், முக்கியமாய்த் தென்னகத்துக் கோயில்களுக்கும் மாபெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
• போர்ச்சுக்கீசிய யாத்திரீகனான 'மார்க்கோபோலோ' பாண்டிய மண்டலத்திற்கு வந்து இப்பகுதியின் சிறப்பையும் செல்வச் செழிப்பையும் வியந்து எழுதியுள்ளார்.
 பாண்டிய நாட்டு மக்களையும், மன்னனையும் பற்றி அவர் எழுதியுள்ளவை அக்காலத்தில் நாட்டின் பெரும் செல்வத்தை மட்டும் குறிப்பிடாமல் மக்களின் உயர்ந்த பண்பையும் குறிப்பிடுகின்றது. தமிழ்நாட்டின் பெரும் செல்வ வளத்தையும் முத்துக்குளித்துறையின் வளத்தையும் பற்றிப் பெருமையாகப் பேசிய மார்க்கோபோலோ தமிழகத்து மக்கள் அனைவரும் இருமுறை குளித்துச் சுத்தமாக இருந்ததாகவும், குளிக்காதவர்களைத் தூய்மைக்குறைவுள்ளவர்களாகக் கருதியதையும், நீர் அருந்துகையில் உதட்டுக்கு மேல் வைத்துத் தூக்கிக் குடித்ததையும், மன்னனாகவே இருந்தாலும் தரையில் அமர்வதைக் கெளரவக் குறைவாய்க் கருதாததையும் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்.
• இத்தகைய யெருமைக்குரிய குலசேகர பாண்டியன் காலத்திலேயே பாண்டிய நாட்டில் பிரச்னைகள் ஆரம்பித்தன. இவனுக்குப் பட்டமஹிஷி மூலம் ஒரு மகனும், ஆசை நாயகி மூலம் இன்னொரு மகனும் இருந்தனர். பட்டத்து இளவரசன் சுந்தரபாண்டியன் என்னும் பெயருள்ளவன். நியாயமாய் இவனே பட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் “எம்மண்டலமும் கொண்டருளிய” என்னும் பட்டம் பெற்ற குலசேகரனோ, தன் ஆசை நாயகியின் மகனான வீரபாண்டியனுக்கே அரசு உரிமையை அளித்தான். இது இரு சகோதரர்களுக்குள் பகைமையை உண்டாக்கியது என்பதோடு அந்நியரைத் தென்னகத்தில் வரவும் வழி வகுத்தது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஸ்ரீரங்கம் கோயிலும், சிதம்பரம் கோயிலும், மதுரை மீனாக்ஷியம்மன் கோயிலும் ஆகும்.

• ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் அதன் அரசியல் பின்னணியையும் அடுத்த பதிவு - Postல பார்ப்போம்.

                 அன்புடன்

         ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
 E.P.I.இராமசுப்பிரமணியன் 



No comments:

Post a Comment