Monday, August 27, 2018

நன்மாறனும் தமிழருவியும் (பகுதி - 1)



திருமால் மீது  பக்தியில் ஆழ்ந்து சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் மாறன் சடகோபனாகிய நம்மாழ்வார் ஆவார்.  ஞான சூரியனாகிய இவர் நான்கு வேதங்களை மேகங்ளாக இழுத்து திருமால் எனும்  மலை மீது தமிழருவியாக  பொழிந்தார். "வேதம் தமிழ் செய்த மாறன்" என்று புகழப்பட்ட இவர் வாழ்க்கை வரலாற்றினை முதலில் அறிவோம்.


திருக்குருகூரில் காரியார் மற்றும் திருவண்பரிசாரம் உடைய நங்கைக்கு மகனாக வைகாசி விசாகத்தில் பிறந்தார். பொதுவாக உலக வழக்கப்படி குழந்தை பிறந்தவுடன் அழும். பின்னர் தாயின் முலைப்பால் குடிக்கும். ஆனால் இவரோ இவை எவற்றையும் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தார். எனவே அவரை "மாறன்" என்று அழைத்தனர்.

ஒவ்வொரு ஜீவனும் இந்நிலவுகில் பிறக்கும்பொழுது, அதன் உச்சந் தலையில் முதன் முதலாக காற்று படும். இக்காற்று பட்டவுடன், அக்குழந்தைக்கு முன் ஜென்ம நினைவுகள் மறக்கும். மீண்டும் இந்நிலவுலக மாயையில் சிக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். மாயையை உருவாக்கும் "சடம்" என்னும் இக்காற்று உச்சந்தலையில் படுவதாலேயே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்று சொல்லப்படுகிறது.

ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வார், சடம் என்னும் இக்காற்றை கோபமாக முறைத்ததால் "சடகோபன்" என்று அழைக்கப்படுகிறார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமை யால் "பராங்குசன்" என்று அழைக்கப் பட்டார். தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடியதால் "பராங்குசநாயகி" என்றும் அழைக்கப்படுகிறார்.
திருவரங்கனால் அவர் "நம்மாழ்வார்" என்றே அழைக்கப்பட்டார்.
பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளிய மரத்தின் அடியில் இருந்த பொந்தில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். இவரது தவ ஓளி பல நூறு மைல் தூரம் வீசியது. இவ்வொளியை மதுர கவி ஆழ்வார் கண்டார். அவர் அப்போது வடதிசை யாத்திரை மேற்கொண்டு அயோத்தியில் இருந்தார். தெற்கு திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடையத் தென்திசை நோக்கிப் பயணித்தார்.


திருக்குருகூர் நம்பி கோவிலில் இருந்த நன்மாறனிடமிருந்தே அவ்வொளி வருவதைக் கண்டு உணர்ந்தார். அவரைச் சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். பின்னாளில் சடகோபனின் ஞானத்தாலும், பக்தியாலும் கவரப்பெற்ற மதுரகவி ஆழ்வார் அவருக்கே அடிமை செய்தார் . இவ்வாறு நம்மாழ்வார் இறைவனை நினைந்து இன்புற்றுப் பாசுரங்களைப் பாடிக்கொண்டும், மதுரகவிகளுக்கு உபதேசித்துக் கொண்டும் முப்பத்தைந்து ஆண்டளவும் இவ்வுலகில் எழுந்தருளியிருந்து, அதன்மேல் அந்தமில் பேரின்பவீடாகிய பரமபதத்தை அடைந்தார்
என்கிறது
வைணவ குருபரம்பரை வரலாறு.


திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகிய நான்கு தமிழருவிகளாகிய நூல்களை மாறன் சடகோபனாகிய நம்மாழ்வார் இயற்றினார். இவை ரிக், யஜுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்துள்ளன என வைணவப் பெரியோர்கள் கூறுவார்கள்.
இந்த திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் 8 பாசுரங்களும் பெரிய திருவந்தாதிநூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார். நன்மாறன் நம்மாழ்வாரின் பாட்டுடைத் தலைவர் திருமால் ஆவார்.
மாறன் என்பது பாண்டியர்பெயர்களுள் ஒன்று.
(சங்ககாலப் பாண்டிய அரசர்கள்
முடத்திருமாறன்பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
மாறன் வழுதிகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதிமாலைமாறன்நாயனார்
நின்றசீர் நெடுமாற நாயனார்
மாறவர்மன் என்ற பெயரில் பல பாண்டிய அரசர்கள் இருந்தனர்.)

கி.பி.7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாறன் சடகோபனின் தந்தை காரி மாறன். இவர் பாண்டியர் ஆட்சியில் சிற்றரசராக திருக்குருகூர் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்தவர். அதனால் பாண்டியர்களின்
"மாறன்" எனும் அடைமொழியோடு வாழ்ந்தார். ஆழ்வாரும் தம் தமிழருவிப் பாசுரங்களில் சில பாசுரங்களில் தன்னை  சடகோபன் மாறன் என்றே கூறிக்கொள்கிறார்.
(திருவாய்மொழி2-6-11, 4-5-10, 4-7-11, 4-10-10, 5-2-11,)
நன்மாறனாகிய நம்மாழ்வார் அருளியது.
1.
திருவிருத்தம் 100 பாசுரங்கள்
2.
திருஆசிரியம் 7 பாசுரங்கள்
3.
பெரிய திருவந்தாதி 87 பாசுரங்கள்
4.
திருவாய்மொழி 1102 பாசுரங்கள்

இனி முதலில் மாறன் அருளிய திருவிருத்தம் பற்றிக் காணலாமா?

1.திருவிருத்தம்
இப்பிரபந்தத்தின் முதல் பாசுரம் விண்ணப்பம் அல்லது வேண்டுதல் ஆகவும், இறுதிப் பாசுரம் பயன் உரைக்கும் பாசுரம் ஆகவும் அமைய, ஏனைய 98 பாசுரங்கள் அகப்பொருள் துறையில் அந்தாதித் தொடையில் அமைந்தவை
2.திருஆசிரியம்
ஏழு பாசுரங்களைக் கொண்ட இப்பிரபந்தம் மூன்று உலகம் அளந்தவனின் சேவடியைப் போற்றுகிறது. சிவன், பிரமன், இந்திரன் ஆகிய தெய்வங்களும் திருமாலுக்குள் அடக்கம். அவன் தனிப்பெரும் தெய்வம். ஐம்பெரும் பூதங்கள் அவனுள் அடக்கம். உலகுக்கும் அவன் தெய்வம்,  எமக்கும் அவனே தெய்வம் எனத் தீவிர வைணவராகத் திருஆசிரியத்தை நிறைவு செய்கின்றார் மாறன். பிரிவையும்
கூடலையும் மாற்றி மாற்றித் திருவிருத்தத்தில் காட்டிய நன்மாறன்  திருஆசிரியத்தில் திருமால் மட்டும் தனிப்பெரும் தெய்வம் என்றும் அவன் அருளிச் செயல்களைத் தொகுத்துக் காட்டி, அவனை மட்டும் வணங்குவோம் என்றும், அவன் திருவடிகளைப் போற்றும் பேறு பெற்று நல்வீடு பெறுவோம் என்றும் கூறி, உண்மையான செல்வம் (பக்தி) வழிபாட்டின் மூலம் கிடைக்கும் என்பதைக் காட்டுகிறார்.

3.பெரிய திருவந்தாதி

அந்தாதித் தொடையில் அமைந்தது இந்நூல்; 87 பாசுரங்கள் கொண்டது.

நெஞ்சை விளிப்பது போலத் தன் உணர்வையும், பிறரையும் பக்தி நெறிப்படுத்தும் ஆழ்வாரின் அணுகுமுறையைக் காட்டும் இவ்வந்தாதி, உண்மையிலேயே பெரிய அந்தாதிதான்.

4. திருவாய்மொழி

‘வேதம் தமிழ் செய்த மாறன்’ எனத் திருவாய்மொழியினால் திருநாமம் பெற்றார் நன்மாறனாகிய ஆழ்வார். இத்தன்மைத்தான சிறப்புக்குரிய திருவாய்மொழி பற்றிக் காண்போம்.
 திராவிட(தமிழ்) வேதம் எனப் போற்றப்படும் நூலானது நன்மாறன் சடகோபன் உருவாக்கிய தமிழ் பேரருவி எனலாம்.
நன்மாறன் சடகோபனின் திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் (பாடல்களைக்) கொண்டது.
இதில் பல்வேறு வகையான விருத்தப் பாடல்கள் அந்தாதியாக அமைந்துள்ளன.
இவற்றிற்கு ஈடு உரை என்று போற்றப்படும் ஐந்து உரைகள் உள்ளன.
இது பாடலின் பொருளாழத்தை நுட்பமாக விளக்குகிறது.
இந்நூலின் பாடல்களில் பல அகத்திணைத் துறைகளாக உள்ளன.
திருவாய்மொழி என்றால் மேன்மையுடைய வாயினால் சொல்லும் சொற்களாலாகிய நூல் என்பது பொருள். இது ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு ப்ரபந்ரங்களுள் நான்காவதான சரமப்ரபந்தம். இது ஸாமவேத ஸாரமாகும்.

ஆழ்வார் இப்ரபந்தத்திலே நமக்காக, நாம் உஜ்ஜீவிப்பதற்காக பல பல அத்யத்புதமான விஷயங்களை ஆயிரத்துக்கு மேற்பட்ட பாசுரங்களில் கூறியிருக்கிறார். அவருக்கு ஒவ்வொரு அனுபவம் ஏற்படும் போதும் அதை பாசுரமாக வெளியிட்டுள்ளார்.

ஆழ்வார் சொல்வதாவது,

மக்களில் பெரும்பாலோர் நமக்குச் சோறில்லையே, தண்ணீரில்லையே, துணிமணியில்லையே!’ என்று குறைபடுவார்களேயொழிய தமக்கு ஆன்மீக ஞானம் இல்லையே என்று குறைபடுவதில்லை.

அதனாலேயே கண்ணபிரான் உலகமெல்லாம் அறியும்படி அர்ச்சுனனை வ்யாஜமாக்க்கொண்டு पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् என்று பார்த்தனுக்குமட்டுமல்லாமல், அறிவினால் தமக்கு குறைவு இருக்கிறது என்ற ஞானமும் இல்லாத உலக மக்களுக்கு நெறியெல்லாம் சொல்லி பகவத் கீதையை அவர்கள் உஜ்ஜீவிக்க உபதேசித்தான். - திருவாய்மொழி 4.8.6

அழகிய மணவாள பெருமாள் நாயனார என்பவர் இயற்றிய நூல்.
ஆசார்ய ஹ்ருதயம்
இதனை மாறன் மனம் (நம்மாழ்வாரின் மனம்) என்று முன்னோர் அழைப்பர். அவரது மனத்தினை அறிந்து நன்மாறன் உருவாக்கிய நான்கு தமிழ்அருவியில் நீராடி நாராயணன் நலந்திகழ் கழல்களை அடைய முயற்சிப்போமாக!
இதனை தொடந்து நன்மாறன் தந்த தமிழருவியில் நீராடி மகிழ்வோம்.

 (தொடரும்.....)





 


அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் 

8 comments:


  1. திருக்குருகூரில் நம்மாழ்வார் பரம்பரையில் தோன்றி, கல்வியிலும் கவி பாடுவதிலும் சிறந்து விளங்கிய புலவர் சிலர், நம்மாழ்வார் சிறப்புகளையும் அவர் நூல்களின் சிறப்புகளையும் அமைத்துப்பல நூல்களை இயற்றியுள்ளனர். மாறன் அலங்காரம், மாறன் பாப்பாவினம், மாறன் திருப்பதிக்கோவை, மாறன் அகப்பொருள் முதலிய பல நூல்கள் அவ்வாறு இயற்றப்பட்டுள்ளன. திருவேங்கடத்துறைவான் கவிராயர் இயற்றிய மாறன் கோவை என்ற ஓர் அரிய நூலும் உளது.

    திராவிடவேதோபநிஷத் சங்கதி, திராவிடவேதோபநிஷத் தாத்பர்ய ரத்நாவலி என்ற இரண்டு வடமொழி நூல்கள் திருவாய் மொழியின் சிறப்பைக் கூறத் தோன்றியுள்ளன. தமிழ் நூலைப் பாராட்டி வடமொழி நூல்கள் தோன்றின எனின், அத்தகைய பாராட்டிற்குரியது திருவாய்மொழி ஒன்றேயாகும். திருவாய் மொழியை ஆயிரம் தெலுங்குச் செய்யுளாகவும், ஆயிரம் வடமொழிச் செய்யுளாகவும் பாடியிருக்கிறார்கள். அதற்கு ‘ஆந்திர கீர்வாண சகஷ்ரம்’ என்பது பெயர். இவ்வாறு கன்னடத்திலுஞ் செய்யப்பட்டுள்ளது.

    நச்சினார்க்கினியர் தொல்காப்பியச் செய்யுளியலில் ‘தரவின்றாகித் தாழிசை பெற்றும்’ என்ற 149-ஆம் சூத்திரத்தின் உரையில் திருவாய்மொழியை எடுத்துக்கூறி இதன் ஒவ்வொரு பதிகத்திலும் (ஒவ்வொரு திருவாய்மொழியிலும்) உள்ள பாக்கள் தாழிசைகள் என்றும், இவை நான்கடியின் மிகாமல் வந்தவை என்றும் கூறினர். ஒவ்வொரு பதிகப் பாக்களும் ஒரு பொருள்மேல் அடுக்கி வந்தன என்றும் கூறினர். அவர் எழுத்து எண்ணி வரும் கட்டளைக் கலித்துறை தரவு கொச்சகம் என்றனர்.

    ReplyDelete
  2. நம்மாழ்வார் பல பெயர்கள் கொண்டவர். அவை சடகோபன், மாறன், காரிமாறன், பராங்குசன், வகுளாபரணன், குருகைப்பிரான். குருகூர் நம்பி, திருவாய்மொழி பெருமாள், பெருநல்துறைவன், குமரித் துறைவன், பவரோக பண்டிதன், முனி வேந்து, பரப்ரம்ம யோகி, நாவலன் பெருமாள், ஞான தேசிகன், ஞான பிரான், தொண்டர் பிரான், நாவீரர், திருநாவீறு உடைய பிரான், உதய பாஸ்கரர், வகுள பூஷண பாஸ்கரர், ஞானத் தமிழுக்கு அரசு, ஞானத் தமிழ் கடல், மெய் ஞானக் கவி, தெய்வ ஞானக் கவி, தெய்வ ஞான செம்மல், நாவலர் பெருமாள், பாவலர் தம்பிரான், வினவாது உணர்ந்த விரகர், குழந்தை முனி, ஸ்ரீவைணவக் குலபதி, பிரபன்ன ஜன கூடஸ்தர், மணிவல்லி, பெரியன்.

    சடகோபன் என்னும் நம்மாழ்வார்தான் கம்பர் இயற்றிய சடகோபர் அந்தாதி எனும் நூலின் நாயகன். பெருமாளின் பாதங்கள் பொறிக்கப்பட்ட சடாரியை வைணவக் திருக்கோவில்களில் பக்தர்களின் தலையில் வைத்து எடுப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. நம்மாழ்வார் என்னும் சடகோபனின் அம்சமே சடாரி என்று அழைக்கப்படுகிறது என்பர் பெரியோர். சடம் + ஹரி ( பாதம் ) சடாரி என்று அழைக்கப்படுவது சாலப் பொருத்தமே.

    ReplyDelete


  3. பெருமானிடம் நமக்குள்ள பக்தி பரிணமிப்பதற்கு நமக்கு ஸம்ப்ரதாய ஞானம் ஏற்படவேண்டியது மிகவும் அவச்யம். நாம் ஸம்ப்ரதாய ஞானம் பெற நாம் முதலில் அர்த்த பஞ்சகத்தை அறிய வேண்டும். இந்த அர்த்த பஞ்சகம் ஐந்து விஷயங்களை நமக்கு போதிக்கிறது. அவையாவன

    1. எம்பெருமானின் ஸ்வரூபம்
    2. நம் ஸ்வரூபம்
    3. நம் லக்ஷ்யம் என்ன
    4. நம் லக்ஷ்யத்தை அடையும் வழி என்ன
    5. நாம் நம் லக்ஷ்யம் அடைய தடைகள் யாவை

    மேற்சொன்னவைகளுக்கு விடைகளாவது,

    1. ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள், வேறு தெய்வமில்லை என அறியவேணும்
    2. எம்பெருமானுக்கும் அவன் மெய்யடியார்க்கும் நாம் அடிமை என உணரவேணும்
    3. பெருமானின் திருவடிகளில் அடிமை செய்கையே நம் லக்ஷ்யம் என அறியவேணும்
    4. எம்பெருமானை அடைய அவன் திருவடிகளே நமக்கு உபாயம் என உணரவேணும்
    5. அவனை அடைய நம்முன் இருக்கும் தடைகளை அறுக்க வேண்டும் என உணரவேணும்

    ஆகவிப்படி அர்த்த பஞ்சகத்தை உணர்ந்து தெளிவு பெற்று பேதமை தீர்ந்தாலேயே நாம் நம் பக்தியை சரிவர செய்யமுடியும். - திருவாய்மொழி 4.7.7

    ReplyDelete
  4. காந்திஸ்வரத்தில் கருவூர்ச்
    சித்தர் என்னும் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார் அவரிடம் ஒரு
    நாய் இருந்தது. அது தினந்தோறும் குருகூர்த் தெருவிற்கு வந்து
    ஸ்ரீ வைணவர்கள் உணவருந்திவிட்டு எறிந்த எச்சில் இலையில்
    உள்ள மீத உணவை உண்டுவந்தது.
    ஒரு நாள் அவ்விதம் எச்சில் இலையுணவை அருந்திவிட்டு
    நதியைக் கடந்து வரும்போது ஒரு நீர்ச்சூழல் ஏற்பட்டு
    அதனின்றும் மீள முடியாமல் உயிர் துறக்க நேர்ந்தது. அது
    உயிர் துறக்கும் சமயம் அதன் கபாலம் வெடித்து மாபெரும்
    ஜோதியாய் எழுந்து விண்ணுடன் கலந்தது. ஆகா இத்தகைய
    பேறு தமக்கு வாய்க்கவில்லையே என்று கருதிய கரூவூரார்
    “ வாய்க்குங் குருகைத் திருவீதி எச்சிலை வாரியுண்ட
    நாய்க்கும் பரமபதமளித்தாய் அந்த நாயோடிந்தப்
    பேய்க்குமிட மளித்தாற்பழுதோ பெருமாள் மகுடஞ்
    சாய்க்கும் படிக்கு கவி சொல்லு ஞானத் தமிழ்க்கடலே”
    என்று பாடினார்.

    ReplyDelete
  5. நம்மாழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-16
    1. ஸ்ரீவைகுண்டம் (அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில் (நவ திருப்பதி), ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி)
    2. நத்தம் (அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் (நவ திருப்பதி), வரகுணமங்கை, நத்தம், தூத்துக்குடி
    3. திருப்புளியங்குடி (அருள்மிகு காசினி வேந்தன் திருக்கோயில், (நவ திருப்பதி), திருப்புளியங்குடி, தூத்துக்குடி
    4. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில்(நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி (திருத்தொலைவில்லி மங்கலம்), தூத்துக்குடி
    4ஏ. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு அரவிந்த லோசனன் திருக்கோயில், (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி,(திருத்தொலைவில்லி மங்கலம்), தூத்துக்குடி
    5. பெருங்குளம் (அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில், (நவ திருப்பதி), பெருங்குளம், தூத்துக்குடி)
    6. தென்திருப்பேரை (அருள்மிகு மகா நெடுங்குழைக்காதர் திருக்கோயில்(நவ திருப்பதி), தென்திருப்பேரை, தூத்துக்குடி)
    7. திருக்கோளூர் (அருள்மிகு வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோயில்(நவ திருப்பதி), திருக்கோளூர், தூத்துக்குடி)
    8. வானமாமலை (அருள்மிகு தோத்தாத்ரி நாதன் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி)
    9. திருப்பதிசாரம் (அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருப்பதிசாரம், நாகர் கோவில், கன்னியாகுமரி)
    10. திருவட்டாறு (அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி)
    11. திருவனந்தபுரம் (அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம், கேரளா மாநிலம்)
    12. ஆரம்முளா (அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில்,திருவாறன் விளை,பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்)
    13. திருவண்வண்டூர் (அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)
    14. திருக்கடித்தானம் (அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்,கோட்டயம், கேரளா மாநிலம்)
    15. திருக்காக்கரை (அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
    16. திருச்செங்குன்றூர் (அருள்மிகு இமையவரம்பன் திருக்கோயில்,செங்கனூர், திருச்சிற்றாறு, ஆழப்புழா, கேரளா மாநிலம்)

    ReplyDelete
  6. நம்மாழ்வார் மற்ற ஆழ்வார்களுடன் சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-19
    நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் (5)
    1. திருமோகூர் (அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை)
    2. திருப்புலியூர் (அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில்,திருப்புலியூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)
    3. திருவல்லவாழ் (அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், வல்லப ÷க்ஷத்திரம், பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்
    4. திருமூழிக்களம் (அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
    5. திருநாவாய் (அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம், கேரளா மாநிலம்)
    நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் (1)
    1. ஆழ்வார் திருநகரி (அருள்மிகு ஆதி நாதன் திருக்கோயில், (நவ திருப்பதி), ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி)
    நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் (1)
    1. திரு விண்ணகர் (அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோவில், தஞ்சாவூர்)
    நம்மாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
    1. வெண்ணாற்றங்கரை (அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர்)
    நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)
    1. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்)
    2. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.)
    நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)
    1. திருப்பேர் நகர் (அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்)
    2. திருக்குறுங்குடி (அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி)
    நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
    1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)
    நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
    1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)
    நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார் (1)
    1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை
    நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார் (1)
    1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)
    நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)
    1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
    2. திருப்பாற்கடல்
    நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)
    1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி

    ReplyDelete
  7. நம்மாழ்வாரையும் அவருடைய திருவாய்மொழியையும் பாராட்டித் தமிழிலும் வடமொழியிலும் பல நூல்கள் தோன்றியுள்ளன. நம்மாழ்வாரது காலத்திலேயே, அவருடைய சிஷ்யராய் இருந்த மதுரகவிகள் என்பவர், நம்மாழ்வாரையும் அவருடைய நூல்களையும் சிறப்பித்துக் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் பத்துப் பாசுரங்கள் அடங்கிய ஒரு நூலை அருளிச்செய்தார். அவர், நம்மாழ்வாருடைய பாசுரங்களைப் பாடுதல் எனக்குப் பேரின்பமாய் உள்ளது; அவரே எனக்குத் தெய்வம்; அவரையன்றி வேறு தெய்வம் அறியேன்; அவர் பாசுரங்களை இசையோடு பாடுதலே எனக்கு இன்பமான பொழுது போக்காகும்,ழு என்று பலவாறாகப் போற்றியுள்ளார். அவர் மதுரகவி என்றும் மதுரகவிகள் என்றும், மதுரகவியாழ்வார் என்றும் பெயர் கூறப்பட்டு, ஆழ்வார்களோடு சேர்த்து எண்ணப்பட்டுள்ளார். அவர் அருளிச்செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் நூல், ஏனைய ஆழ்வார்களுடைய நூல்களோடு நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றால், நம்மாழ்வாரை எவ்வளவு பெருமையாக மதித்துள்ளனர் என்பது புலனாகும்.

    கவிச்சக்கரவர்த்தியாராகிய கம்பர் நம்மாழ்வாரைப் பற்றிச் சடகோபரந்தாதிஎன்ற ஓர் அரிய நூலை இயற்றியுள்ளார். அந்நூல் நூறு பாக்களையுடையது. அந்நூலில் நம்மாழ்வாரைப் புகழ்ந்திருப்பதைவிட அவருடைய திருவாய்மொழியை மிகச் சிறப்பாகப் புகழ்ந்துள்ளார். திருமாலினுடைய சிறப்புகள் எல்லாவற்றினும் நம்மாழ்வாருடைய திருவாய்மொழி அவருக்குக் கிடைத்தது மிகப் பெரிய சிறப்பு என்கிறார்; திருவாய்மொழியை ழுஆராவமுதக் கவியாயிரம்ழு என்கிறார்; திருவாய்மொழியின் முன் பிற கவிகள் பொருள் அற்ற கவிகளே என்கிறார்.

    திருவாய்மொழி நூற்றந்தாதி என்ற ஒரு நூல் உளது. அது, திருவாய்மொழியில் ஒவ்வொரு பதிகத்தின் கருத்தையும் தொகுத்து ஒவ்வொரு வெண்பாவில் அடக்கிக் கூறுகின்றது.

    ReplyDelete
  8. நம்மாழ்வாரை
    அடைந்தவுடன், அவரிடத்துப் பேரன்புபூண்ட மதுரகவிகள், அவரையே தெய்வமாக எண்ணி, அவர்மீது பத்துப் பாசுரங்களடங்கிய நூல் ஒன்றைப் பாடினார். அந்நூல் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்று தொடங்குவதனால், ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்றே பெயர் கூறப்பட்டு, நாலாயிரப் பிரபந்தத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. அந்நூல், எட்டெழுத்து மந்திரமாகிய பெரிய திரு மந்திரத்தில் மிக முக்கியமான நடுப்பதத்தின் பொருளை விளக்குவதாகக் கொண்டுள்ளனர்.

    நம்மாழ்வார் அவதரித்த காரணத்தால், திருக்குருகூர், அப்பெயர் வழக்கு மாறி,‘ஆழ்வார் திருநகரி’ என்ற பெயராலே வழங்கப்படுகின்றது. திருக்குருகூர் என்னும் பெயர் நூல் வழக்கில் மட்டுமே உள்ளது. இப்பெரியாரது காலம், கி. பி. ஏழாம் நூற்றாண்டு என்று சரித்திர அறிஞர் கூறுவர்

    திருவாய்மொழி எல்லாவற்றானுஞ் சிறந்த ஒரு நூலாய் இருப்பதனால், சிறந்த தமிழ் நூல்களின் உரையாசிரியர்கள், இதிலிருந்து இலக்கியக் கருத்துகளுக்கும், சமயக் கருத்துகளுக்கும், இலக்கணக் குறிப்புகளுக்கும் பல மேற்கோள்கள் எடுத்துக்காட்டி உள்ளார்கள்.


    ReplyDelete