Saturday, August 25, 2018

ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்யம்



ஸ்ரீகாஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் ஸ்தல வரலாறு


திருக்கச்சி,அத்திகிரி என்றழைக்கப்படும் இத்திருத்தலம் பற்றி பாத்மபுராணத்தில் ஏழுஅத்தியாயங்களிலும், கூர்ம
            புராணத்தின் 52, 57 ஸ்லோகங்களிலும்                                         பேசப்பட்டுள்ளது.

ஸ்ரீஹஸ்திகிரீ மாஹாத்ம்யம்  கதைச்சுருக்கம்

முன்னொரு ஒரு சமயம் முப்பெருந்தேவியர்களின் துணையின்றி மும்மூர்த்திகள்(ப்ரும்மா,விஷ்ணு,சிவன்) தனித்து யாகம்
செய்து வெற்றி காண முடியாதென்று சர்ச்சை ஏற்பட ப்ரும்மா நான் செய்து
காட்டுகின்றேனென்று லோக சேமத்திற்காக ஒரு யாகத்தை ஆரம்பிக்க, ஸரஸ்வதி
அந்த யாகத்தை தடுத்து நிறுத்த பல முயற்சிகள் மேற்கொண்டாள். ப்ரும்மாவின் யாகத்தைக் கெடுக்க ஸரஸ்வதி எத்தனையோ முயற்சிகள்
செய்தாள். அக்னி ரூபத்தில் அசுரர்களை ஸரஸ்வதி அனுப்பினாள். பிரம்மனுக்காக
அந்த அக்னியை கையில் தீபம் போல் ஏந்தி தீபப் பிரகாசமாக எம்பெருமான்
நின்றார். இதனால் சினங்கொண்ட ஸரஸ்வதி கொடூரமான யானைகளைப்
படைத்தனுப்பி யாகத்தை அழிக்க எத்தனித்தாள். எம்பெருமான் நரசிம்ஹ
ரூபனாகி யானைகளை வென்று விரட்டியடித்தார்  அதன் பின்னர் ஸரஸ்வதி அரக்கர் கூட்டங்களைப் படைத்து அனுப்பினாள்.
அவ்வரக்கர்களைத் துவம்சித்து எம்பெருமான் ரத்தப் பிரவாளராக நின்றார்.
இந்நிலையில் யாகத்தைக் கலைக்க 8 கைகளைக் கொண்ட காளியைப்
படைத்தனுப்பினாள். திருமால் 8 திருக்கரங்கள் கொண்ட அட்டபுயக்கரத்தானாகத்
தோன்றி காளியின் ஆங்காரத்தை அடக்கினார். இவ்வாறு தனது முயற்சிகள்
எல்லாம் வீணாவதைக் கண்ட ஸரஸ்வதி தானே ஒரு வேகமுள்ள நதியாக
"வேகவதி" என்ற பெயரில் பிரளயம் போல் வர திருமால் அந்த நதிக்கு
எதிரே அணையாகப் படுத்துத் தடுத்தார்.

 திருமால் அணையாக வந்து படுத்து ஸரஸ்வதியின் வெள்ளப் பெருக்கைத் தடுத்த
பிறகு ப்ரும்மா திருமாலைக் குறித்துக் கடுந்தவம் செய்ய திருமால் அக்னி ஜுவாலையாக காட்சிக் கொடுத்து ப்ரும்மாவின் யாகத்தைத் தொடர
அருள்புரிந்தார். இவ்வாறு தனது இடைஞ்சல்கள் எல்லாம் தவிடுபொடியாவதைக் கண்ட
ஸரஸ்வதி நாணமுற்று ஓய்ந்தாள்.

     இதன்பின் ப்ரும்மா யாகத்தைத் தொடர்ந்தார். இந்நிலையில் யாகத்தில்
கிடைக்கும் அவிர்ப்பாகத்தை வழக்கப்படித் தமக்குத் தரவேண்டுமென்று
தேவர்கள் ப்ரும்மாவிடம் முறையிட சுவர்க்கம் முதலான பலனைக் கோரி
செய்யும் யாகங்களில் தான் உங்களுக்குப் பங்குண்டு. இது உலக நன்மைக்காகச்
செய்யும் யாகம். இது லோக சிருஷ்டியாகும். எனவே இதில் யக்ஞ அங்கமாக
உங்கள் பெயர்கள் கூறினாலும், உங்களிடத்திலும் அதேபோல் உலகத்தின் சகல
ஜீவன்களிலும் அந்தர்யாமி(உள்ளுறைபவன்)யாக இருக்கும் ஸ்ரீமந் நாராயணனுக்கே அவிர்ப்பாகம்
செல்லும். அவரே இதனை ஏற்றுக்கொள்வார் என்று சொல்லி யாகத்தைத்
தொடர்ந்தார். யாகம் முடியும் தருவாயில் பேரொளி பொருந்திய விமானம்
ஒன்று அதில் (யாக அக்னி) தோன்றியது.
கோடிப்பிறவியில் செய்த புண்ணியத்தால் தரிசிக்கத்
தகுந்த அந்த விமானம் "புண்யகோடி விமானம் என்றாகியது. அதில் சங்கு சக்ர கதா
பாணியாக திருமால் தோன்றி அவிர்ப்பாகத்தையேற்றுக் கொள்ள யாகம்
முடிவுற்றது.

     யாகத்தில் பங்கு கொண்ட தேவர்களுட்பட்ட அனைவருக்கும் கேட்கும்
வரமெல்லாம் கொடுத்ததால் எம்பெருமானுக்கு "ஸ்ரீவரதர்" என்னும் திருநாமம்
உண்டாயிற்று. ஸ்ரீமந்நாராயணன் புண்ணிய கோடி விமானத்துடன் இங்கு எழுந்தருளிய நன்னாள் ஒரு சித்திரை மாதத்து திருவோண தினத்திலாகும்.


(அக்னி ஜ்வாலையாக இவ்விடத்து எம்பெருமான் எழுந்தருளியமையை
இங்குள்ள ஸ்ரீவரதராஜப்பெருமாள் உற்சவரின் திருமுகத்தில்  அக்னியின் வடுக்கள் போன்று ஜ்வாலை
வீசக்கூடிய புள்ளிகளை இன்றும் காணலாம்.)

இதேபோல் எம்பெருமான் இங்கு நித்யவாசம் செய்து வேண்டியவர்க்கு
வேண்டிய வரமெல்லாம் கொடுக்க வேண்டுமென அனைவரும் பிரார்த்திக்க
எம்பெருமானும் அதற்கிசைந்தார். உடன் தேவலோகத்தில் உள்ள ஐராவதம்
என்ற வெள்ளை யானையே மலைவடிவங்கொண்டு எம்பெருமானைத் தாங்கி நின்றது.
அதனால் இதற்கு "அத்திகிரி" (ஹஸ்தி கிரி)என்ற பெயர் ஏற்பட்டது. ஐராவதம் வெள்ளைநிற
யானை என்பதால் ஸ்வேதகிரி என்றழைக்கப்பட்டு வேதகிரி என மருவியது.

க - என்றால் பிரம்மன் என்றும் அஞ்சிரம் என்றால் பூஜிக்கப்படல் என்பதாலும்
கஞ்சிரம் என்றாகி கஞ்சிதபுரியாகி காலப்போக்கில் மருவி
காஞ்சிபுரமாயிற்றென்பர்.
  இத்தலத்தை கிரேதா யுகத்தில் பிரம்மனும்
     திரேதாயுகத்தில் கஜேந்திரனும்
     துவாபரயுகத்தில் பிருஹஸ்பதியும்
     கலியுகத்தில் அனந்தனும்
     பூஜித்து உய்ந்தனர்.
   
 ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்று இரண்டு
புத்திரர்கள் இருந்தனர். இவர்கள் கொங்கண தேசத்தில் கௌதம முனிவரிடம்
வித்தை பயின்றனர். இவ்விருவரும் விஷ்ணு பூசைக்கு பழம், புஷ்பம், தீர்த்தம்
கொடுக்கும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தனர். ஒரு நாள் தீர்த்தத்தை
மூடாமல் வைக்க அதில் ஒரு பல்லி விழுந்துவிட்டது. அதைக்காணாது
அப்படியே கொணர்ந்து குருவிடம் கொடுக்க அதிலிருந்து பல்லி
தாவியோடியது. இதைக்கண்டு சினந்த முனிவர் இவ்விருவரையும்
பல்லிகளாகும்படி சபித்தார். தமது தவறுணர்ந்த சீடர்கள் மன்னிப்பு வேண்டி
பிராயச் சித்தம் கோரினார்.

 இந்திரன் (கஜேந்திரனாக) யானையாகி வரதனைத் தரிசிக்க
இச்சன்னதியில் நுழைவான். அப்போது உங்கள் சாபமகலும் என்று தெரிவிக்க
இருவரும் இத்தலத்தின் பிரகாரத்தில் பல்லிகளாக வந்தமர்ந்தனர். பின்பு
இந்திரன் இத்தலத்தில் நுழைந்ததும் இவர்களின் சாபமகன்று தங்கள்
பூர்வஜென்ம உடம்பைப் பெற்று வரதனைச் சேவித்து முக்தியடைந்தனர்.
இந்நிகழ்வைக் குறிக்கும்படியாக தற்போது இத்தலத்தின் பிரகாரத்தில்
24வது படிக்கெதிரில் தங்கத்தினாலும், வெள்ளியினாலுமான இரண்டு பல்லிகள்
செய்து அமைக்கப்பட்டுள்ளன.
இதனை  'வையமாளிகை பல்லி' தரிசனம் என்பர்.

இதைத் தொட்டு வணங்கு பவர்களுக்கு பல்லி விழுவதால் ஏற்பட கூடிய சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது ஐதீகம். கடுமையான தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்
இப்பல்லிகளைத் தொட்டு ஸ்ரீவரதராஜப் பெருமாளைச் சேவித்தால் நோயினின்று
விடுபடுகின்றனர் என்று ஐதீஹம்.
(அயோத்தி மன்னன் சகரன் என்பவனின் மகனும் மனைவியுமே
சாபத்தினால் பல்லிகளாக மாறி இவ்விதம் ஆனர் என்றும் ஒரு கதையுண்டு)


 வாரணகிரி, அத்திகிரி என்ற ஒரு சிறிய மாடி போன்ற மலைகளாலானது
இத்தலம். வாரணகிரி என்ற முதல் மாடியில் நரசிம்மன் சன்னதி உள்ளது.
இங்கு அழகிய சிங்கர் (நரசிம்ம அவதார திருக்கோலத்தில்) அமர்ந்த
திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஹரித்ரா தேவியே இங்கு பிராட்டியாக
எழுந்தருளியுள்ளார். குஹ விமானம் பிருஹஸ்பதிக்கு காட்சி.

     2வது மாடியான மேல்மாடி வரதராஜப் பெருமாள் சன்னதியான
அத்திகிரியாகும். தற்போதுள்ள இவ்வமைப்பு பிற்காலத்தில் ஒரு பக்தரால்
கட்டப்பட்டதாகும். இவர் முதலில் சிவபக்தனாக இருந்து புத்திரப்பேறு வேண்டி
சிவபக்தி செய்ய புத்திரப்பேறு கிட்டாது போகவே விஷ்ணு பூஜை செய்ய
புத்திரப்பேறு உண்டாக எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனுக்கு அடிமை பூண்டு
இத்தலத்தின் தற்போதைய அமைப்பை அமைத்தார் என்றும் கூறுவர்.





                அன்புடன்
     ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம் 
E.P.I. இராம சுப்பிரமணியன்


No comments:

Post a Comment