Friday, August 31, 2018

நன்மாறனும் தமிழருவியும் (பகுதி - 5)





நன்மாறன் சடகோபரின் தமிழ் பேரருவியான திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் (பாடல்களைக்) கொண்டது.
இதில் பல்வேறு வகையான விருத்தப் பாடல்கள் அந்தாதியாக அமைந்துள்ளன.
இவற்றிற்கு ஈடு உரை என்று போற்றப்படும் ஐந்து உரைகள் உள்ளன.
இது பாடலின் பொருளாழத்தை நுட்பமாக விளக்குகிறது.

இந்நூலின் பாடல்களில் பல அகத்திணைத் துறைகளாக உள்ளன
பன்னிரண்டு ஆழ்வார்களில்ஒருவரான நம்மாழ்வார் இயற்றியதிருவாய்மொழி நூலிலுள்ள பாடல்களுக்குப் ஐந்து பேர் எழுதிய பழமையான உரைகள் உள்ளன. அவைமணிப்பிரவாள நடையில்அமைந்துள்ளன. திருவாய்மொழி வேதத்தின் சாரமாகவும், தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இவற்றை வெளிப்படுத்தும் வகையில் இதன் உரைகள் உள்ளன. திருக்குருகைப்பிரான் பிள்ளை எழுதிய ஆறாயிரப்படி
நஞ்சீயர் எழுதிய ஒன்பதினாயிரப்படி
வாதிகேசரி - அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் எழுதிய பன்னிரண்டாயிரப்படி
பெரியவாச்சான்பிள்ளை இருபத்தி நாலாயிரப்படி
நம்பிள்ளை காலட்சேபமாகச் சொல்ல வடக்கு திருவீதி பிள்ளை பட்டோலை கொண்டு அருளியது ஈடு முப்பத்தாறாயிரப்படி
இந்த ஐந்தில் நம்பிள்ளை சொல்ல திருவீதிப்பிள்ளை எழுதிய உரைக்கு மட்டும் 'ஈடு' என்னும் சிறப்பு அடைமொழி உண்டு.
இவற்றில் 'ஈடு' என்னும் சொல் செய்யுளுக்கு ஈடாக எழுதப்பட்டுள்ள உரை என்பதனைக் குறிக்கும்.
இவற்றில் ‘படி’ என்னும் சொல் ஓலையில் எழுதப்பட்டுள்ள எழுத்தெண்ணிக்கைப் படிவத்தைக் குறிக்கும்.
திருவாய்மொழி நூற்றந்தாதி 15-ஆம் நூற்றாண்டு நூல். மணவாள மாமுனிகள் பாடிய மூன்று தமிழ்நூல்களில் இது ஒன்று.

நம்மாழ்வார் பாடிய நூல் திருவாய்மொழி. இதில் 100 பதிகங்கள் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்கள் மணவாள மாமுனிகள் பாடிய நூற்றந்தாதியில் உள்ளன. ஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பா வரும்படி அமைத்து நூற்றந்தாதி நூல் நம்மாழ்வாரின் புகழைப் பாடுகிறது. இதனால் நூற்றந்தாதி வெண்பாக்களும் திருவாய்மொழி நூலைப் போலவே அந்தாதித் தொடையைப் பெற்றுள்ளன.

இந்த அந்தாதி வெண்பாக்கள் திருவாய்மொழி நூலின் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் அச்சிடப்பட்டுள்ளன. நம்மாழ்வார் திருவாய்மொழிப் பிரபந்தத்தாலே துவயத்தின் பொருளை விவரணம் செய்கிறார்.

 இதில், முதல் மூன்று பத்துகளாலே இரண்டாம் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்; மேல் மூன்று பத்துகளாலே முதல் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்; மேல் மூன்று பத்துகளாலே உபாயத்திற்குத் தகுதியான குணங்களையும், ஆன்மாவிலும், ஆன்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் தமக்கு நசையற்ற படியையும், அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக சம்பந்தத்தையும் அருளிச்செய்கிறார். பத்தாம் பத்தாலே தாம் வேண்டினபடியே பெற்றபடியைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்.

    இவற்றுள்,
 • முதற்பத்தாலே ‘உயர்வற உயர்நலமுடையவன் யவன் அவன் - அயர்வறும் அமரர்கள் அதிபதியவன் அவன் - துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே!’ என்றதனால் மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உருவமாகவுடையவனாய் வானவர்கட்கு இனியனானவன் திருவடிகளில் தொண்டு செய்தலே பேறு என்று உறுதி செய்து, கூறிய பொருளுக்கும், இனிக்கூறப் புகும் பொருளுக்கும் பிரமாணம், ‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்றதனால் குற்றங்கள் அற்ற சுருதியே பிரமாணம் என்றும், ‘இத்தன்மைகளையுடையவன் யார்?’ என்ன, ‘வண்புகழ் நாரணன்’ என்றும் ‘திருவுடை அடிகள்’ என்றும் ‘செல்வ நாரணன் என்றும் சிறப்புற ஓதி, ‘தொழுது எழு என் மனனே!’ என்று தொடங்கி, ‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’ என்றதனால் முக்கரணங்களாலும் அடிமை செய்து தலைக்கட்டுகையாலே ‘பகவானுக்குச் செய்யும் கைங்கரியமே புருஷார்த்தம்,’ என்று அறுதியிட்டார்.
  • இரண்டாம் பத்தால், இந்தக் கைங்கரியத்துக்கு விரோதியான உலகத் தொடர்பின் சம்மந்தத்தையுங்கழித்து, ‘ஒளிக்கொண்ட சோதியுமாய், இக்கைங்கரியத்துக்குத் தேசிகரான அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?’ என்றதனால், தாமும் வேண்டிக்கொண்டு, ‘நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்’ என்றதனால், பிறர்க்கும் உபதேசிக்கையாலே, ‘இவர்க்குப் பரமபதத்திலே நோக்காய் இருந்தது’ என்று நினைந்து, இறைவன் பரமபதத்தைக் கொடுக்கப் புக, ‘எம் மா வீட்டுத் திறமும் செப்பம்’ என்றதனால், ‘எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை’ என்றும், ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ என்றதனால், ‘அவனுக்கேயாய் இருக்கும் இருப்பே எனக்கு வேண்டுவது,’ என்றும் இப்புருஷார்த்தத்தை அறுதியிட்டார் .  
• மூன்றாம் பத்தால், இவர்க்குக் கைங்கரியத்தில் உண்டான ருசியையும், விரைவையும் கண்ட இறைவன், கைங்கரியத்துக்கு ஏகாந்தமான திருமலையில் நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு, ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று பாரித்து, பாரித்தபடியே, பாகவதர்களுக்கு அடிமை அளவாக வாசிகமாக. அடிமை செய்து தலைக்கட்டுகிறார். ஆக, முதல் மூன்று பத்துகளால் துவயத்தின் பின் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.
  இனி,
• நான்காம் பத்தால், இப்புருஷார்த்தத்துக்கு உபாயம் ‘திருநாரணன் தாள்’ என்றும், விரோதி ‘குடிமன்னும் இன்சுவர்க்கம்,’ ‘எல்லாம் விட்ட இறுகல் இறப்பு’ என்பனவற்றால், ஐசுவரிய கைவல்யங்களே விரோதி என்றும் பிறர்க்கு உபதேசித்து, ‘ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்’ என்று தாமும் சொல்லிப் போந்தார்.
• ஐந்தாம் பத்தால், விரும்பியவற்றை அடைவதற்கும், விருப்பம் இல்லாதனவற்றை நீக்குவதற்கும் ‘ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’ என்றதனால், இறைவன் தன் திருவடிகளையே உபாயமாகத் தந்தான் என்றார்.
• ஆறாம்பத்தால், அவன் தந்த உபாயத்தைச் சேர்ப்பாரை முன்னிட்டுப் பெரிய பிராட்டியார் புருஷகாரமாக ‘அலர்மேல்மங்கை உறைமார்பா, உன் அடிகீழ் அமர்ந்து புகுந்தேன்’ என்ற தனால் ஏற்றுக்கொண்டார். ஆக, இம்மூன்று பத்துகளாலும் (4 - 6) துவயத்தின் முன் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.
 • ஏழாம்பத்தால், இப்படிச் சித்தோபாயத்தை ஏற்றுக்கொண்டிருந்தும் சடக்கெனப் பலியாமையாலே துயர் உற்றவராய்க் ‘கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்’ என்று தொடங்கி, உபாயத்திற்கு உபயோகியான குணங்களைச் சொல்லிக் கூப்பிட ‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்திக் கொடியேன்பால், வாராய்’ என்று இவர் ஆசைப்பட்டபடியே, 'வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி’ வந்து காட்சியளித்தான்; அளித்த இது, மானச அனுபவ மாத்திரமேயாய்ப் புறச்சேர்க்கைக்குக் கிடையாமையாலே
பிரிந்தபடியை அருளிச் செய்தார்.
 • எட்டாம் பத்தால், மேலே கிடைத்த மனக்காட்சி, வெளியில் புறக்கண்களாலும் காண இவர் விரும்பியவாறு கிடையாமையாலே  உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவமாகி உன்றனக்கு அன்பரானார், அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை’ என்கிறபடியே, அடியார்கட்கு அதீனப்பட்ட சொரூபம் ஸ்திதி முதலான வைகளையுடையவன் நமக்குத் தன்னைக் காட்டி மறைக்கைக்குக் காரணம், ஆத்துமாவிலும் ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் ஏதேனும் நசை உண்டாகவேண்டும் என்று ஐயங்கொண்டு, அவற்றில் நசை அற்றபடியை அருளிச்செய்தார்.
 • ஒன்பதாம் பத்தால், 'நீர் என்றிய ஐயங்கொண்டு படுகிறீர் இப்படி?’ என்று தன்னுடைய நிருபாதிக சம்பந்தத்தையும் காட்டி., ‘நாம் நாராயணன்; எல்லா ஆற்றல்களோடும் கூடினவன்; உம்முடைய விருப்பமனைத்தையும் முடிக்கிறோம்’ என்று அருளிச்செய்ய,. 'சீலம் எல்லை இலான்’ என்று அவனுடைய சீல குணங்களிலே ஆழங்கால்பட்டார்.
 • பத்தாம் பத்தால், ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்டு, 'திருமோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி, இவர்க்கு அர்ச்சிராதிகதியையுங் காட்டிக்கொடுத்து, இவர் வேண்டிக் கொண்டபடியே ‘என் அவா அறச் சூழ்ந்தாயே’ என்று இவர் திருவாயாலே அருளிச்செய்யும்படி பேற்றினை அளித்தபடியை அருளிச்செய்கிறார்.
                   அன்புடன்
         ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
 E.P.I. இராம சுப்பிரமணியன்




No comments:

Post a Comment