Friday, August 31, 2018

நன்மாறனும் தமிழருவியும் (பகுதி - 5)





நன்மாறன் சடகோபரின் தமிழ் பேரருவியான திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் (பாடல்களைக்) கொண்டது.
இதில் பல்வேறு வகையான விருத்தப் பாடல்கள் அந்தாதியாக அமைந்துள்ளன.
இவற்றிற்கு ஈடு உரை என்று போற்றப்படும் ஐந்து உரைகள் உள்ளன.
இது பாடலின் பொருளாழத்தை நுட்பமாக விளக்குகிறது.

இந்நூலின் பாடல்களில் பல அகத்திணைத் துறைகளாக உள்ளன
பன்னிரண்டு ஆழ்வார்களில்ஒருவரான நம்மாழ்வார் இயற்றியதிருவாய்மொழி நூலிலுள்ள பாடல்களுக்குப் ஐந்து பேர் எழுதிய பழமையான உரைகள் உள்ளன. அவைமணிப்பிரவாள நடையில்அமைந்துள்ளன. திருவாய்மொழி வேதத்தின் சாரமாகவும், தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இவற்றை வெளிப்படுத்தும் வகையில் இதன் உரைகள் உள்ளன. திருக்குருகைப்பிரான் பிள்ளை எழுதிய ஆறாயிரப்படி
நஞ்சீயர் எழுதிய ஒன்பதினாயிரப்படி
வாதிகேசரி - அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் எழுதிய பன்னிரண்டாயிரப்படி
பெரியவாச்சான்பிள்ளை இருபத்தி நாலாயிரப்படி
நம்பிள்ளை காலட்சேபமாகச் சொல்ல வடக்கு திருவீதி பிள்ளை பட்டோலை கொண்டு அருளியது ஈடு முப்பத்தாறாயிரப்படி
இந்த ஐந்தில் நம்பிள்ளை சொல்ல திருவீதிப்பிள்ளை எழுதிய உரைக்கு மட்டும் 'ஈடு' என்னும் சிறப்பு அடைமொழி உண்டு.
இவற்றில் 'ஈடு' என்னும் சொல் செய்யுளுக்கு ஈடாக எழுதப்பட்டுள்ள உரை என்பதனைக் குறிக்கும்.
இவற்றில் ‘படி’ என்னும் சொல் ஓலையில் எழுதப்பட்டுள்ள எழுத்தெண்ணிக்கைப் படிவத்தைக் குறிக்கும்.
திருவாய்மொழி நூற்றந்தாதி 15-ஆம் நூற்றாண்டு நூல். மணவாள மாமுனிகள் பாடிய மூன்று தமிழ்நூல்களில் இது ஒன்று.

நம்மாழ்வார் பாடிய நூல் திருவாய்மொழி. இதில் 100 பதிகங்கள் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்கள் மணவாள மாமுனிகள் பாடிய நூற்றந்தாதியில் உள்ளன. ஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பா வரும்படி அமைத்து நூற்றந்தாதி நூல் நம்மாழ்வாரின் புகழைப் பாடுகிறது. இதனால் நூற்றந்தாதி வெண்பாக்களும் திருவாய்மொழி நூலைப் போலவே அந்தாதித் தொடையைப் பெற்றுள்ளன.

இந்த அந்தாதி வெண்பாக்கள் திருவாய்மொழி நூலின் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் அச்சிடப்பட்டுள்ளன. நம்மாழ்வார் திருவாய்மொழிப் பிரபந்தத்தாலே துவயத்தின் பொருளை விவரணம் செய்கிறார்.

 இதில், முதல் மூன்று பத்துகளாலே இரண்டாம் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்; மேல் மூன்று பத்துகளாலே முதல் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்; மேல் மூன்று பத்துகளாலே உபாயத்திற்குத் தகுதியான குணங்களையும், ஆன்மாவிலும், ஆன்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் தமக்கு நசையற்ற படியையும், அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக சம்பந்தத்தையும் அருளிச்செய்கிறார். பத்தாம் பத்தாலே தாம் வேண்டினபடியே பெற்றபடியைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்.

    இவற்றுள்,
 • முதற்பத்தாலே ‘உயர்வற உயர்நலமுடையவன் யவன் அவன் - அயர்வறும் அமரர்கள் அதிபதியவன் அவன் - துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே!’ என்றதனால் மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உருவமாகவுடையவனாய் வானவர்கட்கு இனியனானவன் திருவடிகளில் தொண்டு செய்தலே பேறு என்று உறுதி செய்து, கூறிய பொருளுக்கும், இனிக்கூறப் புகும் பொருளுக்கும் பிரமாணம், ‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்றதனால் குற்றங்கள் அற்ற சுருதியே பிரமாணம் என்றும், ‘இத்தன்மைகளையுடையவன் யார்?’ என்ன, ‘வண்புகழ் நாரணன்’ என்றும் ‘திருவுடை அடிகள்’ என்றும் ‘செல்வ நாரணன் என்றும் சிறப்புற ஓதி, ‘தொழுது எழு என் மனனே!’ என்று தொடங்கி, ‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’ என்றதனால் முக்கரணங்களாலும் அடிமை செய்து தலைக்கட்டுகையாலே ‘பகவானுக்குச் செய்யும் கைங்கரியமே புருஷார்த்தம்,’ என்று அறுதியிட்டார்.
  • இரண்டாம் பத்தால், இந்தக் கைங்கரியத்துக்கு விரோதியான உலகத் தொடர்பின் சம்மந்தத்தையுங்கழித்து, ‘ஒளிக்கொண்ட சோதியுமாய், இக்கைங்கரியத்துக்குத் தேசிகரான அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?’ என்றதனால், தாமும் வேண்டிக்கொண்டு, ‘நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்’ என்றதனால், பிறர்க்கும் உபதேசிக்கையாலே, ‘இவர்க்குப் பரமபதத்திலே நோக்காய் இருந்தது’ என்று நினைந்து, இறைவன் பரமபதத்தைக் கொடுக்கப் புக, ‘எம் மா வீட்டுத் திறமும் செப்பம்’ என்றதனால், ‘எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை’ என்றும், ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ என்றதனால், ‘அவனுக்கேயாய் இருக்கும் இருப்பே எனக்கு வேண்டுவது,’ என்றும் இப்புருஷார்த்தத்தை அறுதியிட்டார் .  
• மூன்றாம் பத்தால், இவர்க்குக் கைங்கரியத்தில் உண்டான ருசியையும், விரைவையும் கண்ட இறைவன், கைங்கரியத்துக்கு ஏகாந்தமான திருமலையில் நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு, ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று பாரித்து, பாரித்தபடியே, பாகவதர்களுக்கு அடிமை அளவாக வாசிகமாக. அடிமை செய்து தலைக்கட்டுகிறார். ஆக, முதல் மூன்று பத்துகளால் துவயத்தின் பின் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.
  இனி,
• நான்காம் பத்தால், இப்புருஷார்த்தத்துக்கு உபாயம் ‘திருநாரணன் தாள்’ என்றும், விரோதி ‘குடிமன்னும் இன்சுவர்க்கம்,’ ‘எல்லாம் விட்ட இறுகல் இறப்பு’ என்பனவற்றால், ஐசுவரிய கைவல்யங்களே விரோதி என்றும் பிறர்க்கு உபதேசித்து, ‘ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்’ என்று தாமும் சொல்லிப் போந்தார்.
• ஐந்தாம் பத்தால், விரும்பியவற்றை அடைவதற்கும், விருப்பம் இல்லாதனவற்றை நீக்குவதற்கும் ‘ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’ என்றதனால், இறைவன் தன் திருவடிகளையே உபாயமாகத் தந்தான் என்றார்.
• ஆறாம்பத்தால், அவன் தந்த உபாயத்தைச் சேர்ப்பாரை முன்னிட்டுப் பெரிய பிராட்டியார் புருஷகாரமாக ‘அலர்மேல்மங்கை உறைமார்பா, உன் அடிகீழ் அமர்ந்து புகுந்தேன்’ என்ற தனால் ஏற்றுக்கொண்டார். ஆக, இம்மூன்று பத்துகளாலும் (4 - 6) துவயத்தின் முன் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.
 • ஏழாம்பத்தால், இப்படிச் சித்தோபாயத்தை ஏற்றுக்கொண்டிருந்தும் சடக்கெனப் பலியாமையாலே துயர் உற்றவராய்க் ‘கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்’ என்று தொடங்கி, உபாயத்திற்கு உபயோகியான குணங்களைச் சொல்லிக் கூப்பிட ‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்திக் கொடியேன்பால், வாராய்’ என்று இவர் ஆசைப்பட்டபடியே, 'வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி’ வந்து காட்சியளித்தான்; அளித்த இது, மானச அனுபவ மாத்திரமேயாய்ப் புறச்சேர்க்கைக்குக் கிடையாமையாலே
பிரிந்தபடியை அருளிச் செய்தார்.
 • எட்டாம் பத்தால், மேலே கிடைத்த மனக்காட்சி, வெளியில் புறக்கண்களாலும் காண இவர் விரும்பியவாறு கிடையாமையாலே  உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவமாகி உன்றனக்கு அன்பரானார், அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை’ என்கிறபடியே, அடியார்கட்கு அதீனப்பட்ட சொரூபம் ஸ்திதி முதலான வைகளையுடையவன் நமக்குத் தன்னைக் காட்டி மறைக்கைக்குக் காரணம், ஆத்துமாவிலும் ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் ஏதேனும் நசை உண்டாகவேண்டும் என்று ஐயங்கொண்டு, அவற்றில் நசை அற்றபடியை அருளிச்செய்தார்.
 • ஒன்பதாம் பத்தால், 'நீர் என்றிய ஐயங்கொண்டு படுகிறீர் இப்படி?’ என்று தன்னுடைய நிருபாதிக சம்பந்தத்தையும் காட்டி., ‘நாம் நாராயணன்; எல்லா ஆற்றல்களோடும் கூடினவன்; உம்முடைய விருப்பமனைத்தையும் முடிக்கிறோம்’ என்று அருளிச்செய்ய,. 'சீலம் எல்லை இலான்’ என்று அவனுடைய சீல குணங்களிலே ஆழங்கால்பட்டார்.
 • பத்தாம் பத்தால், ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்டு, 'திருமோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி, இவர்க்கு அர்ச்சிராதிகதியையுங் காட்டிக்கொடுத்து, இவர் வேண்டிக் கொண்டபடியே ‘என் அவா அறச் சூழ்ந்தாயே’ என்று இவர் திருவாயாலே அருளிச்செய்யும்படி பேற்றினை அளித்தபடியை அருளிச்செய்கிறார்.
                   அன்புடன்
         ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
 E.P.I. இராம சுப்பிரமணியன்




நன்மாறனும் தமிழருவியும் ( பகுதி - 4)





பெரிய திருவந்தாதி வெண்பாச் செய்யுளால் ஆனது. இந்த நூலில் 87 வெண்பாக்கள் அந்தாதியாகத் தொடுக்கப்பட்டுள்ளன. முதலும் இறுதியும் கூட மாலை போல் தொடுக்கப்பட்டுள்ளன

பல்உருவை எல்லாம் படர்வித்த வித்தா!உன்
தொல் உருவை யார் அறிவார்? சொல்லு

(3704:3-4)
(படர்வித்த = உண்டாக்கிய)

எனக் கேட்டு வியக்கின்றார் ஆழ்வார்.

இறைவனோடு தாம் பெற்ற இன்பத்தை அப்படியே உரையாடல் போக்கில் பாடுகின்றார். நெஞ்சம் பெருமாளை மட்டும் சிந்தித்து இருக்க வேண்டும் (3695), பஞ்சபாண்டவர்களைக் காத்தவனைக் காணவேண்டும் (3699), நாவு திருமாலை வாழ்த்த வேண்டும் (3730), இப்படி மனிதப் பிறவியின் பயனைத் திருமாலை வழிபட்டு அடையவேண்டும் எனக் காட்டுகின்றார்.

உலகைப் படைத்தவன் அவனே, அவனுக்கு எல்லாம் உரியது என்பதையும் (3278),

பார்உண்டான்! பார்உமிழ்ந்தான் பார்இடந்தான்! பார்அளந்தான்
பார்இடம் முன்படைத்தான் என்பரால் - பார் இடம்
ஆவானும் தான்ஆனால், ஆர்இடமே? மற்றொருவர்க்கு
ஆவான் புகாவால் அவை

 (3728)
எனக் காட்டுகிறார். அதாவது பெருமானின் செயற்கரிய செயல்களை இப்பாசுரம் கூறுகிறது. பிரளய காலத்தில் இவ்வுலகை விழுங்கித் தம் வயிற்றில் வைத்துக் காப்பாற்றிப் பின்னர் படைப்புக் காலத்தில் வெளிவிட்டார். அவரே வராக அவதார காலத்தில் பூமியை எடுத்துக் கீழிருந்து மேலே கொண்டு வந்தார். திரிவிக்கிரம அவதாரத்தில் பூமியை அளந்தார். அவ்வுலகை ஆதியில் படைத்தவரும் அவரே என்று கூறுவர். பார் (உலகம்) என்னும் பெயர்ச்சொல் மீண்டும் மீண்டும் வேறு வேறு வினைச்சொற்களோடு வந்து அவதாரங்களை நயம்படக் காட்டுகிறது.

‘எல்லாம் அவனே, அவனுள் எல்லாம்’ என்பதையும் அழகுபடச் சுட்டுகிறார்.


தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லைகாண் மற்றோர் இறை!

(3746:3-4)
எனவே நரகம் செல்லாதிருக்கத் துழாய் மாலை அணிந்த மாயனைப் பணிய வேண்டும் என்பது நம்மாழ்வார் முடிவாகும்.

கடவுள் எங்கு உள்ளான்? எப்படிப்பட்டவன்? என்று மனப் போராட்டத்துக்கு ஆளாகாமல் கண்ணனே கடவுள் எனத் தெளிந்து நன்மை பெறுங்கள் எனத் தம் சமயக் கடவுளைக் காட்டுவார் நம்மாழ்வார்.

ஐம்புலன்கள் படுத்தும் பாட்டைப் பற்றிப் பேசாத கவிஞர்களும், பக்தர்களும், சித்தர்களும் இல்லை எனலாம். ஆழ்வாரும் குறும்பு செய்யும் ஐவரை நெறிப்படுத்தி, சினம் அழித்துச் செலுத்தினால் திருத்துழாய் மாலையானைச் சேவிக்கப் பழகிக் கொள்ளும் பெருமை உடையது (3737) ஆகுமாம்.

வாழ்த்தி அவன் அடியைப் பூப்புனைந்து நின் தலையைத் தாழ்த்தி, இருகை கூப்பித் தொழுவாய் மனமே! அவனைத் தொழாமல் உன்னால் இருக்க முடிகிறதா? எப்போதும் பெருமானின் திருவடிகளைப் போற்று. வல்வினை நீங்கும் என்பதோடு பெரிய திருஅந்தாதி நிறைவுறுகிறது.

நெஞ்சை விளிப்பது போலத் தன் உணர்வையும், பிறரையும் பக்தி நெறிப்படுத்தும் ஆழ்வாரின் அணுகுமுறையைக் காட்டும் இவ்வந்தாதி, உண்மையிலேயே பெரிய அந்தாதிதான்.

            அன்புடன்

      ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்



Wednesday, August 29, 2018

நன்மாறனும் தமிழருவியும் ( பகுதி - 3)






திருவாசிரியம் நன்மாறன் சடகோபன் தந்த இரண்டாவது தமிழருவி ஆகும். இது தமிழ் சிற்றருவி. ஆனால் எல்லா சாரங்களையும் கொண்ட திருவாய்மொழி எனும் பேரருவிக்கு சளைத்ததல்ல.

திருவாசிரியம்
இதில் ஏழு ஆசிரியப்பாக்கள் உள்ளன. இவை அந்தாதித்தொடையில் அமைந்துள்ளன.
இந்த நூலை யஜுர்-வேத சாரம் என்பர்.  யஜுர் வேதம் 7 காண்டங்கள் என்பதால் 7 பாசுரங்கள்.
இதன் முகப்பில் அருளாளப் பெருமான் எம்பெருமானார் இயற்றிய கலிவிருத்தத்தாலான தனியன் பாடல் ஒன்றும் உண்டு.

பிரிவையும் கூடலையும் மாற்றி மாற்றித் திருவிருத்தத்தில் காட்டிய நம்மாழ்வார், திருஆசிரியத்தில் திருமால் மட்டும் தனிப்பெரும் தெய்வம் என்றும் அவன் அருளிச் செயல்களைத் தொகுத்துக் காட்டி, அவனை மட்டும் வணங்குவோம் என்றும், அவன் திருவடிகளைப் போற்றும் பேறு பெற்று நல்வீடு பெறுவோம் என்றும் கூறி, உண்மையான செல்வம் (பக்தி) வழிபாட்டின் மூலம் கிடைக்கும் என்பதைக் காட்டுகிறார்.

ஏழு பாசுரங்களைக் கொண்ட இப்பிரபந்தம் மூன்று உலகம் அளந்தவனின் சேவடியைப் போற்றுகிறது. சிவன், பிரமன், இந்திரன் ஆகிய தெய்வங்களும் திருமாலுக்குள் அடக்கம். அவன் தனிப்பெரும் தெய்வம்.

ஐம்பெரும் பூதங்கள் அவனுள் அடக்கம். உலகுக்கும் அவன் தெய்வம், எமக்கும் அவனே தெய்வம் எனத் தீவிர வைணவராகத் திருஆசிரியத்தை நிறைவு செய்கின்றார் நம்மாழ்வார்.

தாழ்ந்த தெய்வங்களை வணங்குவோர்க்கு உபதேசமாக ஈன்றோள் இருக்க மனை நீராட்டாதீர்கள் என ஆறாம் பாசுரத்தில் கூறுகிறார்.

பிறகு சிருஷ்டி லயமாகும் வர்ணனையாக 7ம் பாசுரம் உள்ளது.

நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா,
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட, நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க, ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்தவெம்
பெருமா மாயனை யல்லது, ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே. என்கிற ஏழாம் பாசுரம் அடியேனுக்கு மிகவும் பிடித்த பாசுரம். இதில் சிவன்,பிரம்மா,இந்திராதி தேவர்கள் என அனைவரும் அனைத்தும் அகப்படக்கந்த ஆலிலைத்தெய்வத்தை முற்காலங்களில் தங்கத்தில் டாலராக செய்து போட்டுக்கொண்ட வைணவப் பற்றாளர்கள் தற்போது அவ்வாறு அணிவதில்லையே! ஏன்?

ஆலிலை துயில்பவன் சர்வேஸ்வரன் அல்லவோ?  பரத்வ நிலைக்கு ஓர் சான்று இப்பாசுரம் எனலாம்.

ஒருபொருள் புறப்பாடின்றி அகப்படக்கரந்த காட்சியைக் காண ஸ்ரீரங்கம் மேட்டழகிய சிங்கர் சந்நதி ஓவியத்தை காணலாம்.  யமனை ஊறுகாயாக தொட்டு மற்றவற்றை வாயில் திருமால்  விழுங்கும் ஓவியக்காட்சியானது நெஞ்சினை விட்டு நீங்காது நிற்கும்



அன்புடன்

ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்

E.P.I. இராம சுப்பிரமணியன் :


Tuesday, August 28, 2018

நன்மாறனும் தமிழருவியும் ( பகுதி - 2)








நன்மாறன் சடகோபனின் முதல் தமிழருவியான திருவிருத்தம் கட்டளைக்கலித்துறைப் பாடல்களால் ஆனது. நூற்பயன் கூறும் இறுதிப்பாடலையும் சேர்த்து இதில் 100 பாடல்கள் உள்ளன. இவை அந்தாதி முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. அகத்திணையில் வரும் துறையைச் சேர்ந்த பாடல்களாகவே நூல் முழுவதும் அமைந்துள்ளது ஒரு குறிப்பிடத்தக்க செய்தி.
இதில் உள்ள அகத்துறைச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உள்ள அகத்துறைப் பாகுபாடுகளிலிருந்து சற்று வேறுபட்டவை. கட்டளைக் கலித்துறை என்னும் கடினமான வடிவமே பிற்கால வடிவம். மேலும் பிரிவுக்கும் வாடைக்கும் இரங்கல், வெறிவிலக்கு, ஏறுகோள், வரைவுகடாதல் போன்றவை பிற்காலத்தில் அகத்துறை இலக்கணத்தில் வந்து சேர்ந்து கொண்டவை. அவைகளின்படியே ஆழ்வார் இயற்றியுள்ளார். அகத்துறைத் தலைவனை சாதாரண மனிதனிடமிருந்து உயர்த்தி, கடவுளாக்கிய பெருமை ஆழ்வார்களைச் சேரும். அகத்துறைப் பாடல்களை இரண்டு விதமாக அர்த்தம் கொள்வது வைணவ வழக்கம். நேரடியான தலைவன், தலைவி, தோழி, பிரிவு இவை சார்ந்த அர்த்தம்; தலைவன் திருமால்தான்... இந்த அர்த்தத்தை மீறி உள்ளுரையாக பகவானுக்கும் பக்தனுக்கும் ஆழ்வாருக்கும் அடியார்க்கும் உள்ள உறவுகளை அகக்கண் கொண்டு பார்த்தல். பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை போன்றவர்கள் இவ்வாறுதான் அகத்துறைப் பாடல்களை பரிசீலிக்கவே சம்மதிக்கிறார்கள் என்று சொல்லலாம். நன்மாறன் சடகோபனின் பிற்காலத்தவரான சைவ சமயத்து திருவாதவூர்
மாணிக்கவாசகரின் திருக்கோவையார் எனும் நூல்  இதுபோலவே சிவபெருமானைத் தலைவனாக வைத்து கட்டளைக் கலித்துறையில் இயற்றிய நூல்  ஆகும்.  இவ்விரண்டு நூலையும் ஒப்பிட்டு பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

நம்மாழ்வார் திருவிருத்தமும் மாணிக்கவாசகர் திருக்கோவையாரும்
ஆசிரியர்;  பேராசிரியர் இ.பா.வேணு கோபால்

புத்தகம் படிக்க Link:-



 கட்டளைக் கலித்துறை என்னும் கடினமான யாப்பில் அமைந்த இந்தப் பாடல்கள் சங்க காலத்தின் அகத்துறைக் கருத்துகளை கடவுளுக்குப் பயன்படுத்திய முதல் முயற்சிகளில் ஒன்றாகும். ஆழ்வார்களின் காலத்தில் பக்தி பெருக்கெடுத்தோடினாலும் அகத்துறைக் கருத்துகளின் அழகுணர்ச்சியை கைவிடாமல் இருப்பதற்கு அவர்கள் செய்த சாமர்த்தியமான மாற்றம் இது என்று சொல்லலாம். தலைவனை தெய்வமாக்கிவிட்டால் அகத்துறைக் கருத்துகளில் உள்ள விரசங்கள் தெய்வீகம் பெற்று மன்னிக்கப்படுகின்றன. அவைகளுக்கு மரியாதை கிடைத்துவிடுகிறது.

மாறன் ஆழ்வாரும் முதல் பாட்டில் ஒரு விண்ணப்பம் செய்கிறார். பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கமும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாப் பிறந்தாய் இமையோர் தலைவா.
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும்  விண்ணப்பமே.

பொய்யான அறிவும் தவறான ஒழுக்கங்களும் அழுக்கான உடம்பும் போன்ற குணங்கள் இனி எமக்கு வேண்டாமல் உயிர் தருவாய். எப்போதும் நின்று பிறக்காமல் பிறந்த வானவர் தலைவனே, நான் செய்யும் இந்த விண்ணப்பத்தைக் கேள்.

அகத் துறைப் பாடல்கள் உள்ள திருவிருத்தத்தில் அவ்வப்போது ஆழ்வாரின் பிரம்மாண்டமான தெய்வீகக் கருத்துகள் ஒளிரவே செய்கின்றன.



நன்மாறனின் முதல்  தமிழருவியான திருவிருத்தமானது இப்படி வளர்ந்துகொண்டே செல்லுகிறது. இந்த அக-இலக்கியம் வெறிவிலக்கு (20), தலைவி அன்னத்தை(சோற்றை) வெறுத்தல் (29), தலைவி மேகத்தைத் தூது விடுதல் (31), தலைவனுடன் தன் மகள் சென்ற சுரத்து அருமையை எண்ணி நற்றாய் கவலைப்படுதல் (37), கட்டுவிச்சி குறி சொல்லுதல் (53), தலைவி அன்றில் குரல் கேட்டுப் புலம்புதல் (87) போன்ற செய்திகளுடன் நூல் வளர்கிறது. ஒரு நல்ல உதாரணப் பாடலைப் பார்ப்போம்.
சின்மொழி கோயோ கழிபெரும் தெய்வம் இந்நோயினதென்று
இன்மொழி கேட்கும் இளம் தெய்வம் அன்று, வேல, நில்
என்மொழி கேண்மின் என் அன்னைமீர் உலகேழுமுண்டான்
சொன்மொழி மாலை அத் தண்ணந்துழாய் கொண்டு சூடுமினே

அகநானூறிலும் ஒரு பாடல் இதே கருத்தில் உள்ளது. வெறிவிலக்கு என்கிற துறையில் வருகிறது இப்பாட்டு. தலைவனைப் பிரிந்த தலைவி வாடுவதைப் பார்த்து அவளுக்கு நோய் ஏற்பட்டதென்று கட்டுவிச்சியிடம் காட்ட, அவள்மேல் முருகப் பெருமான் வந்திருக்கிறான் என்று கட்டுவிச்சி சொல்ல, தோழி `அதெல்லாம் இல்லை... நீங்கள் விலகி நில்லுங்கள்.. இவள்மேல் திருமாலின் துளசி மாலையை எடுத்து வீசுங்கள் சரியாகி விடும் என்கிறாள்.

பிரிவுத் துயரால் வாடியிருப்பதால் சில பேச்சுக்களே பேசுகிறாள். (சின்மொழி) இவள் நிலை பற்றி சொல்கிறேன் கேளுங்கள்; இவளுடைய நோய், மிகப் பெரிய கடவுளான திருமால்மேல் கொண்ட காதலால் உண்டாயிற்று. புகழ் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்கின்ற சின்ன தெய்வங்களை நினைத்து வந்ததல்ல இந்த நோய். பிரளய காலத்தில் உலகைத் தன் வயிற்றில் வைத்தவன் பேரைச் சொல்லி அவன் சூடிய துளசி மாலையை இவளுக்குச் சூட்டுங்கள்... இவள் நோய் தீர இதுதான் வழி.

இதன் உள்அர்த்தமாக, பெருமாளின் குணங்களில் ஈடுபட்டு அவனை எதிர்நோக்கி இருக்கும் ஆழ்வாருக்கு அவன் அருள்கிட்டும் காலம் நீடிக்கிறது. அவர் படும் பாட்டைக் கண்டு இரக்கப்பட்ட ஞானிகள் இந்தப் பாட்டைப் பாடுவதாகக் கொள்கிறார்கள். அகத்துறைப் பாடல்கள் இவ்வாறே வைணவத்தில் ஒத்துக் கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், இந்த அழகான பாடலைப் பாருங்கள்

`முலையோ முழுமுற்றும் போந்தில மொய்பூங்குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல்மண் எல்லாம்
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமாள்
மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே
தலைமகள் இளமைக்கு செவிலி இரங்குவதாக உள்ள இந்தப் பாட்டில் இந்தப் பெண்ணுக்கு மார்பே இன்னும் பெரிசாகவில்லை, தலைமயிர் வளரவில்லை. ஆடைகள் இடுப்பில் நில்லாமல் நழுவுகின்றன, பேச்சு சரியில்லை. கண்கள் உலகை விலை பேசும் அளவுக்கு மிளிர்கின்றன. பெருமாள் இருப்பது திருவேங்கடம் என்று மட்டும் கூறுகிறாள் இந்தப் பேதைப் பெண் என்று ஒரு தாய் இன்னும் பருவம் எய்தாத தன் மகள் திருமாலையே எண்ணுவதை நினைத்து மனம் வருந்துவதாக நேரடி அர்த்தம் கொண்ட இந்தப் பாட்டிற்கு ஸ்வாபதேச அர்த்தம் இப்படிச் சொல்வார்கள்.

ஆழ்வாருடைய அறியாத காலத்திலிருந்து உண்டாகியது அவர் பக்தி. முலையே முற்றும் போந்தில என்றால் பக்தி இன்னும் பரம பக்தியாக முற்றவில்லை. குழல் குறிய என்றால் தலையால் செய்யப்படும் வணக்கம் குறைவானது. கலையோ அரையிலில்லை என்பது தன் முயற்சி கூடாதிருக்கும் நிலையைச் சொல்கிறது, இவ்வாறு பாடலின் அகத்துறை விளக்கத்தை தெய்வமாக்கி சுத்தப்படுத்திவிட்டுத்தான் வைணவர்கள் அங்கீகரிக்கிறார்கள்.

வணங்கும் துறைகள் பலபல
ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல
ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கிநின்
மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண்
வேட்கை எழுவிப்பனே. (பாடல் 96 )
திருவிருத்தத்தின் மிகச்சிறந்த பாசுரம். இதற்கான வியாக்யானத்தை அறிந்தால் மேலும் ஆச்சர்யமே.  

திருவிருத்தம் இப்பிரபந்தத்தின் முதல் பாசுரம் விண்ணப்பம் அல்லது வேண்டுதல் ஆக தொடங்கி இறுதிப் பாசுரம் பயன் உரைக்கும் பாசுரம் ஆகவும் அமைய, ஏனைய 98 பாசுரங்கள் அகப்பொருள் துறையில் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது..

சான்றாக, நலம் பாராட்டல் துறையைக் காண்போம். தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டுவது அகப் பொருளில் நலம்பாராட்டல் என்பர். இங்கு, திருமாலை நாயகனாகப் பாவித்த ஆழ்வார் நாயகியாகத் தம்மைப் பாவித்து நலம் பாராட்டுகிறார். சான்றாக ஒரு பாடல்:

வண்டுகளோ! வம்மின்! நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண்பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்ஏனம் ஒன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டு கள்வாரும் மலர் உளவோ நும்வியல் இடத்தே?

(3634)

(வம்மின் = வாருங்கள்; ஏனம் = பன்றி, விண்டு = மலர்ந்து, விரை = மணம்)

ஞானச்சுடர் விளக்கானவன் (3637), வெண்ணெய் உண்ட கள்வனை அல்லால் வேறு எதுவும் நெஞ்சம் பேணவில்லை (3670), யாக்கை முதுமை அடைந்து தடுமாறும் முன் நல்வீடு செய்யும் திருமாலை வணங்குபவன் (3674) இப்படிப் பல சொல்லி நாயகி தாம் விரும்பும் தலைவன் யார் எனக் காட்டுவது போல் அமைந்த பாசுரங்கள் அறத்தொடு நிற்றல் துறையில் அமைந்துள்ளன.

ஞானப் பிரானை அல்லால் இல்லை நான்கண்ட நல்லதுவே
(3678:4)
என அகப்பொருள் துறைகள் அரங்கன் மீது கொண்ட பக்தியைப் பரப்பும் துறைகளாகப் படைத்துக் கொண்டுள்ளார் நன்மாறன் சடகோபன்.






Monday, August 27, 2018

நன்மாறனும் தமிழருவியும் (பகுதி - 1)



திருமால் மீது  பக்தியில் ஆழ்ந்து சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் மாறன் சடகோபனாகிய நம்மாழ்வார் ஆவார்.  ஞான சூரியனாகிய இவர் நான்கு வேதங்களை மேகங்ளாக இழுத்து திருமால் எனும்  மலை மீது தமிழருவியாக  பொழிந்தார். "வேதம் தமிழ் செய்த மாறன்" என்று புகழப்பட்ட இவர் வாழ்க்கை வரலாற்றினை முதலில் அறிவோம்.


திருக்குருகூரில் காரியார் மற்றும் திருவண்பரிசாரம் உடைய நங்கைக்கு மகனாக வைகாசி விசாகத்தில் பிறந்தார். பொதுவாக உலக வழக்கப்படி குழந்தை பிறந்தவுடன் அழும். பின்னர் தாயின் முலைப்பால் குடிக்கும். ஆனால் இவரோ இவை எவற்றையும் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தார். எனவே அவரை "மாறன்" என்று அழைத்தனர்.

ஒவ்வொரு ஜீவனும் இந்நிலவுகில் பிறக்கும்பொழுது, அதன் உச்சந் தலையில் முதன் முதலாக காற்று படும். இக்காற்று பட்டவுடன், அக்குழந்தைக்கு முன் ஜென்ம நினைவுகள் மறக்கும். மீண்டும் இந்நிலவுலக மாயையில் சிக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். மாயையை உருவாக்கும் "சடம்" என்னும் இக்காற்று உச்சந்தலையில் படுவதாலேயே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்று சொல்லப்படுகிறது.

ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வார், சடம் என்னும் இக்காற்றை கோபமாக முறைத்ததால் "சடகோபன்" என்று அழைக்கப்படுகிறார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமை யால் "பராங்குசன்" என்று அழைக்கப் பட்டார். தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடியதால் "பராங்குசநாயகி" என்றும் அழைக்கப்படுகிறார்.
திருவரங்கனால் அவர் "நம்மாழ்வார்" என்றே அழைக்கப்பட்டார்.
பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளிய மரத்தின் அடியில் இருந்த பொந்தில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். இவரது தவ ஓளி பல நூறு மைல் தூரம் வீசியது. இவ்வொளியை மதுர கவி ஆழ்வார் கண்டார். அவர் அப்போது வடதிசை யாத்திரை மேற்கொண்டு அயோத்தியில் இருந்தார். தெற்கு திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடையத் தென்திசை நோக்கிப் பயணித்தார்.


திருக்குருகூர் நம்பி கோவிலில் இருந்த நன்மாறனிடமிருந்தே அவ்வொளி வருவதைக் கண்டு உணர்ந்தார். அவரைச் சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். பின்னாளில் சடகோபனின் ஞானத்தாலும், பக்தியாலும் கவரப்பெற்ற மதுரகவி ஆழ்வார் அவருக்கே அடிமை செய்தார் . இவ்வாறு நம்மாழ்வார் இறைவனை நினைந்து இன்புற்றுப் பாசுரங்களைப் பாடிக்கொண்டும், மதுரகவிகளுக்கு உபதேசித்துக் கொண்டும் முப்பத்தைந்து ஆண்டளவும் இவ்வுலகில் எழுந்தருளியிருந்து, அதன்மேல் அந்தமில் பேரின்பவீடாகிய பரமபதத்தை அடைந்தார்
என்கிறது
வைணவ குருபரம்பரை வரலாறு.


திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகிய நான்கு தமிழருவிகளாகிய நூல்களை மாறன் சடகோபனாகிய நம்மாழ்வார் இயற்றினார். இவை ரிக், யஜுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்துள்ளன என வைணவப் பெரியோர்கள் கூறுவார்கள்.
இந்த திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் 8 பாசுரங்களும் பெரிய திருவந்தாதிநூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார். நன்மாறன் நம்மாழ்வாரின் பாட்டுடைத் தலைவர் திருமால் ஆவார்.
மாறன் என்பது பாண்டியர்பெயர்களுள் ஒன்று.
(சங்ககாலப் பாண்டிய அரசர்கள்
முடத்திருமாறன்பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
மாறன் வழுதிகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதிமாலைமாறன்நாயனார்
நின்றசீர் நெடுமாற நாயனார்
மாறவர்மன் என்ற பெயரில் பல பாண்டிய அரசர்கள் இருந்தனர்.)

கி.பி.7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாறன் சடகோபனின் தந்தை காரி மாறன். இவர் பாண்டியர் ஆட்சியில் சிற்றரசராக திருக்குருகூர் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்தவர். அதனால் பாண்டியர்களின்
"மாறன்" எனும் அடைமொழியோடு வாழ்ந்தார். ஆழ்வாரும் தம் தமிழருவிப் பாசுரங்களில் சில பாசுரங்களில் தன்னை  சடகோபன் மாறன் என்றே கூறிக்கொள்கிறார்.
(திருவாய்மொழி2-6-11, 4-5-10, 4-7-11, 4-10-10, 5-2-11,)
நன்மாறனாகிய நம்மாழ்வார் அருளியது.
1.
திருவிருத்தம் 100 பாசுரங்கள்
2.
திருஆசிரியம் 7 பாசுரங்கள்
3.
பெரிய திருவந்தாதி 87 பாசுரங்கள்
4.
திருவாய்மொழி 1102 பாசுரங்கள்

இனி முதலில் மாறன் அருளிய திருவிருத்தம் பற்றிக் காணலாமா?

1.திருவிருத்தம்
இப்பிரபந்தத்தின் முதல் பாசுரம் விண்ணப்பம் அல்லது வேண்டுதல் ஆகவும், இறுதிப் பாசுரம் பயன் உரைக்கும் பாசுரம் ஆகவும் அமைய, ஏனைய 98 பாசுரங்கள் அகப்பொருள் துறையில் அந்தாதித் தொடையில் அமைந்தவை
2.திருஆசிரியம்
ஏழு பாசுரங்களைக் கொண்ட இப்பிரபந்தம் மூன்று உலகம் அளந்தவனின் சேவடியைப் போற்றுகிறது. சிவன், பிரமன், இந்திரன் ஆகிய தெய்வங்களும் திருமாலுக்குள் அடக்கம். அவன் தனிப்பெரும் தெய்வம். ஐம்பெரும் பூதங்கள் அவனுள் அடக்கம். உலகுக்கும் அவன் தெய்வம்,  எமக்கும் அவனே தெய்வம் எனத் தீவிர வைணவராகத் திருஆசிரியத்தை நிறைவு செய்கின்றார் மாறன். பிரிவையும்
கூடலையும் மாற்றி மாற்றித் திருவிருத்தத்தில் காட்டிய நன்மாறன்  திருஆசிரியத்தில் திருமால் மட்டும் தனிப்பெரும் தெய்வம் என்றும் அவன் அருளிச் செயல்களைத் தொகுத்துக் காட்டி, அவனை மட்டும் வணங்குவோம் என்றும், அவன் திருவடிகளைப் போற்றும் பேறு பெற்று நல்வீடு பெறுவோம் என்றும் கூறி, உண்மையான செல்வம் (பக்தி) வழிபாட்டின் மூலம் கிடைக்கும் என்பதைக் காட்டுகிறார்.

3.பெரிய திருவந்தாதி

அந்தாதித் தொடையில் அமைந்தது இந்நூல்; 87 பாசுரங்கள் கொண்டது.

நெஞ்சை விளிப்பது போலத் தன் உணர்வையும், பிறரையும் பக்தி நெறிப்படுத்தும் ஆழ்வாரின் அணுகுமுறையைக் காட்டும் இவ்வந்தாதி, உண்மையிலேயே பெரிய அந்தாதிதான்.

4. திருவாய்மொழி

‘வேதம் தமிழ் செய்த மாறன்’ எனத் திருவாய்மொழியினால் திருநாமம் பெற்றார் நன்மாறனாகிய ஆழ்வார். இத்தன்மைத்தான சிறப்புக்குரிய திருவாய்மொழி பற்றிக் காண்போம்.
 திராவிட(தமிழ்) வேதம் எனப் போற்றப்படும் நூலானது நன்மாறன் சடகோபன் உருவாக்கிய தமிழ் பேரருவி எனலாம்.
நன்மாறன் சடகோபனின் திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் (பாடல்களைக்) கொண்டது.
இதில் பல்வேறு வகையான விருத்தப் பாடல்கள் அந்தாதியாக அமைந்துள்ளன.
இவற்றிற்கு ஈடு உரை என்று போற்றப்படும் ஐந்து உரைகள் உள்ளன.
இது பாடலின் பொருளாழத்தை நுட்பமாக விளக்குகிறது.
இந்நூலின் பாடல்களில் பல அகத்திணைத் துறைகளாக உள்ளன.
திருவாய்மொழி என்றால் மேன்மையுடைய வாயினால் சொல்லும் சொற்களாலாகிய நூல் என்பது பொருள். இது ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு ப்ரபந்ரங்களுள் நான்காவதான சரமப்ரபந்தம். இது ஸாமவேத ஸாரமாகும்.

ஆழ்வார் இப்ரபந்தத்திலே நமக்காக, நாம் உஜ்ஜீவிப்பதற்காக பல பல அத்யத்புதமான விஷயங்களை ஆயிரத்துக்கு மேற்பட்ட பாசுரங்களில் கூறியிருக்கிறார். அவருக்கு ஒவ்வொரு அனுபவம் ஏற்படும் போதும் அதை பாசுரமாக வெளியிட்டுள்ளார்.

ஆழ்வார் சொல்வதாவது,

மக்களில் பெரும்பாலோர் நமக்குச் சோறில்லையே, தண்ணீரில்லையே, துணிமணியில்லையே!’ என்று குறைபடுவார்களேயொழிய தமக்கு ஆன்மீக ஞானம் இல்லையே என்று குறைபடுவதில்லை.

அதனாலேயே கண்ணபிரான் உலகமெல்லாம் அறியும்படி அர்ச்சுனனை வ்யாஜமாக்க்கொண்டு पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् என்று பார்த்தனுக்குமட்டுமல்லாமல், அறிவினால் தமக்கு குறைவு இருக்கிறது என்ற ஞானமும் இல்லாத உலக மக்களுக்கு நெறியெல்லாம் சொல்லி பகவத் கீதையை அவர்கள் உஜ்ஜீவிக்க உபதேசித்தான். - திருவாய்மொழி 4.8.6

அழகிய மணவாள பெருமாள் நாயனார என்பவர் இயற்றிய நூல்.
ஆசார்ய ஹ்ருதயம்
இதனை மாறன் மனம் (நம்மாழ்வாரின் மனம்) என்று முன்னோர் அழைப்பர். அவரது மனத்தினை அறிந்து நன்மாறன் உருவாக்கிய நான்கு தமிழ்அருவியில் நீராடி நாராயணன் நலந்திகழ் கழல்களை அடைய முயற்சிப்போமாக!
இதனை தொடந்து நன்மாறன் தந்த தமிழருவியில் நீராடி மகிழ்வோம்.

 (தொடரும்.....)





 


அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் 

Saturday, August 25, 2018

காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத்தலங்கள்


காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத்தலங்கள்

1.திருக்கச்சி வரதராஜன் 2..அட்டபுயக்கரம்ஆதிகேசவன்  3.திருத்தண்கா(தூப்புல்)தீபப்ரகாசர் - 4.திருவேளுக்கை 5.திருப்பாடகம் (காஞ்)பாண்டவ தூதர்  6.திருநீரகம் (காஞ்)ஜகதீசப்பெருமாள் - 7.நிலாத்திங்கள் (காஞ்)நிலாத்திங்கள்துண்டத்தான்
8.திரு ஊரகம் (காஞ்)உலகளந்தபெருமாள் -
9.திருவெக்கா (காஞ்)யதோத்தகாரி
10..திருக்காரகம் (காஞ்)கருணாகரர் - 11.திருக்கார்வானம் (காஞ்)
12.திருக்கள்வனூர் (காஞ்)
13.திருப்பவள வண்ணம்(காஞ்)



            1.திருக்கச்சி வரதராஜர் திருக்கோயில்

2..அட்டபுயக்கரம்ஆதிகேசவன்   

3.திருத்தண்கா(தூப்புல்)தீபப்ரகாசர் 

4.திருவேளுக்கை

5.திருப்பாடகம் (காஞ்)பாண்டவ தூதர் 


 6.திருநீரகம் (காஞ்)ஜகதீசப்பெருமாள் - 

7.நிலாத்திங்கள்துண்டம்(காஞ்)

8.திரு ஊரகம் (காஞ்)உலகளந்தபெருமாள் 



9.திருவெக்கா (காஞ்)யதோத்தகாரி

10..திருக்காரகம் (காஞ்)கருணாகரர் 

11.திருக்கார்வானம் (காஞ்)

  12.திருக்கள்வனூர் (காஞ்)

                   

13.திருப்பவள வண்ணம்(காஞ்)
          திருப்பபவள வண்ணம்




   அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்

காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் தரிசனம்


காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவில்...!!! திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும். வரலாறும் சிற்பக்கலையும் இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர். கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாளான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும். தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது. கோயில் அமைப்பும் உட்சன்னதிகளும் மூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழ மலை (அத்திகிரி) மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலமுடன் நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோயிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார். பெருமாளை காண்பதற்கு இருப்பதிநான்கு படிகளை ஏறிச்செல்லும் போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசிதம். மூலவரை நோக்கிய படி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரதாழ்வர் சன்னிதி உள்ளது. கோயில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன. இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது. அத்தி வரதர் எனப்படும் மரத்தல் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோயிலில் பள்ளிகொள்ள வைத்து ஒருமாத காலத்திற்கு உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர். திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார். பாடல்கள் மங்களாசாசனம், திருமங்கையாழ்வார் என்னெஞ்சம் மேயான் என் சென்னியான், தானவனை- வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்- ஊழியான் ஊழி பெயர்த்தான், உலகேத்தும்- ஆழியான் அத்தியூரான். அத்தியூரான் புள்ளை ஊர்வான், அணிமணியின்- துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ- மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும் இறையாவான் எங்கள் பிரான். திருவிழாக்கள் வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம். போக்குவரத்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும் ரயில்களும் உள்ளன.
ஸ்ரீகாஞ்சி வரதராஜர் கோயில் கொண்டுள்ள திருத்தலம், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக  அமைந்துள்ளது. கிழக்கு கோபுரம் 9 நிலைகளுடனும் மேற்கு கோபுரம் 7 நிலைகளுடனும் திகழ்கின்றன.
காஞ்சிபுரத்தில், ஏராளமான வைணவ தலங்கள் உள்ளன. ஆனால் அதில் மிக முக்கியமான ஒரு கோயில் காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்.  108 திவ்ய தேசங்களில் 44-வது திவ்ய தேசம். ஸ்ரீஹயக்ரீவர், அகத்தியருக்கு 'ஸ்ரீவித்யை'யை உபதேசித்த தலம்... இப்படி பல சிறப்புகள் கொண்ட இத்திருத்தலம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது . வில்லிபாரதத்தின் ‘தீர்த்த யாத்திரை’ சருக்கத்தில் அர்ஜுனன் காஞ்சிபுரம் வந்து ஸ்ரீவரதராஜர், அஷ்டதச புஜ பெருமாள் ஆகியோரை தரிசித்ததுடன், ஏழு நதிகள் மற்றும் தீர்த்தங்களில் நீராடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், சக்ரவர்த்தி ஹர்ஷவர்த்தனர் நிறுவிய நாளந்தா பல்கலைக்கழகத்தின் முதல் தலைவரான தர்மபாலர் முதலான அறிஞர்கள், கல்வியும் ஞானமும் பெற்ற தலம் இது.

கி.மு. 2-ம் நூற்றாண்டில் பண்டைய சோழர்களது தலைநகரமாக இருந்த காஞ்சி கி.பி. 3 முதல் 9-ம் நூற்றாண்டு வரை பல்லவர்களது தலைநகரமாகவும், 10 முதல் 14ஆம் நூற்றாண்டு வரை பிற்காலச் சோழர்களின் தலைநகராகவும் திகழ்ந்ததாம். பிறகு, 17-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் சிறப்புப் பெற்றது காஞ்சி மாநகரம்!

பிரளய காலத்திலும் அழியாத தலம் காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்
காஞ்சியை விஷ்ணு காஞ்சி, சிவ காஞ்சி, பெரிய காஞ்சி என்று மூன்று பிரிவாகக் கொள்வர். இவற்றில் விஷ்ணு காஞ்சியில் அமைந்துள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் தல வரலாறை, பிரும்மாண்ட புராணம் ஹஸ்திகிரி மகாத்மியம் (18 அத்தியாயங்கள்) மூலம் அறியலாம். இதையெல்லாம் பிருகு மகரிஷிக்கு நாரத முனிவர் விவரித்து அருளினார்

  *மூலவர்:-
 ஸ்ரீவரதராஜர், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள்,
அத்தியூரான் மூலவர் ஸ்ரீதேவராஜர், அத்திவரதன், கஜேந்திர வரதர் என பல பெயர்கள் உண்டு. பல திருநாமங்கள். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

*தாயார்:-
பெருந்தேவித் தாயார் மஹாதேவி தனிக்கோவில்

*தீர்த்தம்
வேகவதி நதி, அனந்த ஸரஸ், சேஷ தீர்த்தம், (நூற்றுக்கால் மண்டபத்தின் அருகே 'அனந்த சரஸ்' எனும் தீர்த்தம் உள்ளது.  இதில்  சனிக்கிழமைகளில் நீராடுவோருக்கு காவிரியில் நீராடிய பலன் கிட்டும். ஆதிசேஷன் இதில் நீராடி பூமியைத் தாங்கும் வல்லமை பெற்றாராம். இதை 'சேஷ தீர்த்தம்' என்றும் கூறுவர்.)
 வராஹ தீர்த்தம், பிரம்ம
தீர்த்தம்,

*விமானம்
புண்யகோடி விமானம்

*(பிரத்யட்சம்)காட்சி கண்டவர்கள்
 பிரம்மா, பிருகு, நாரதர் ஆகியோர். கஜேந்திரன் (இந்திரன்) சரஸ்வதி
மற்றும் பலர்.
திருமங்கையாழ்வாரால் 4 பாசுரங்களாலும், பூதத்தாழ்வாரால் இரண்டு
பாசுரங்களாலும், பேயாழ்வாரால் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம்
செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீஆளவந்தார், இராமானுஜர், ஸ்வாமி தேசிகன், மணவாள
மாமுனிகள், திருக்கச்சி நம்பிகள், பெரிய நம்பி ஆகியோருக்கும் இந்த
வரதராஜப் பெருமாளுக்கும் உள்ள சம்பந்தம் பற்றித் தனி நூலொன்றே
எழுதிவிடலாம்.


*சிறப்புக்கள்
1) திருவேங்கடம் போன்றும், திருவரங்கம் போன்றும் எண்ணற்ற
பெருஞ்சிறப்புக்கள் கொண்ட திவ்ய தேசமாகுமிது. காஞ்சியில் உள்ள
வைணவத் தலங்கட்குத் தீபம் போலவும், தொண்டை நாட்டுத் தலங்கட்குத்
திலகம் போன்றும் திகழ்வதாகுமிது. விஷ்ணு காஞ்சியென்றும்,
அத்திகிரியென்றும், திருக்கச்சி என்றும், ஸ்தய விரத சேஷத்ரமென்றும்
பெயர்கொண்ட இத்தலம் வைணவ சம்பிரதாயத்தில் வடகலைக்கு தமிழகத்தில்
ஒரு தலைமை இடமாகத் திகழ்கிறது. மாமேதைகளும் வடகலை ஞானியரும்,
வைணவ வல்லுனர்களும், பாகவதோத்தமர்களும், பக்தர்களும் எந்நேரமும்
சுற்றிச் சூழ வந்து கொண்டிருக்கும் திவ்யமான திவ்யதேசமாகுமிது.

     2) இங்குள்ள குளத்தில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் என்றழைக்கப்படும்
அத்திமரத்தாலான சிலையை 40 வருடங்கட்கு ஒரு முறை வெளியே எடுத்து
பூஜை செய்து 10 தினங்கட்குப் பொதுமக்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள பாலாற்றில் இறங்கும் 'நடபாவி உற்சவம்' சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறுகிறது
     3) சித்ரா பௌர்ணமியன்று இப்போதும் ஒவ்வொர் ஆண்டும் இரவு 12
மணிக்கு மேல் பிரம்மனே இங்கு நேரில் வந்து எம்பெருமானை வழிபடுவதாக
ஐதீஹம். இந்த தினத்தில் எம்பெருமானுக்குப் பிரசாதம் செய்து வைத்துவிட்டு
பட்டர்கள் வெளியே வந்து விடுவார்கள். ஒரு நாழிகை (24 நிமிஷம்) கழித்து
எடுத்துப் பார்த்தால் அதில் தூய நறுமணம் கமழும் இக்காட்சி ஆண்டுதோறும்
இங்கு நடைபெறும் வைபவமாகும்.
சித்திரை மாதம் பௌர்ணமி கழிந்த 15 தினங்கட்கு சூரியன்
மறையும்போது சூரியனிடமிருந்து வரக்கூடிய கதிர்கள் மூலவரின் திருமுகத்தில்
விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களும் கண்டு களிக்கக் கூடிய
இவ்வரிய காட்சி மற்றெந்த திவ்ய தேசத்திலும் இல்லாததாகும். ஆடி மாதத்தில் வளர்பிறையில் தசமியன்றும் தேய்பிறையில்
ஏகாதசியன்றும் திருவனந்தாழ்வான் எனப்படும் ஆதிசேடனுக்கு இங்கு
சிறப்பான வழிபாடு நடக்கிறது. இந்த இரண்டு தினங்களிலும் ஆதிசேடனே
இங்கு வந்து வழிபடுவதாக ஐதீஹம்.

    திருமங்கையாழ்வாரால் 4 பாசுரங்களாலும், பூதத்தாழ்வாரால் இரண்டு
பாசுரங்களாலும், பேயாழ்வாரால் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம்
செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீஆளவந்தார், இராமானுஜர், ஸ்வாமி தேசிகன், மணவாள
மாமுனிகள், திருக்கச்சி நம்பிகள், பெரிய நம்பி ஆகியோருக்கும் இந்த
வரதராஜப் பெருமாளுக்கும் உள்ள சம்பந்தம் பற்றித் தனி நூலொன்றே
எழுதிவிடலாம்.
 


   அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்

ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்யம்



ஸ்ரீகாஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் ஸ்தல வரலாறு


திருக்கச்சி,அத்திகிரி என்றழைக்கப்படும் இத்திருத்தலம் பற்றி பாத்மபுராணத்தில் ஏழுஅத்தியாயங்களிலும், கூர்ம
            புராணத்தின் 52, 57 ஸ்லோகங்களிலும்                                         பேசப்பட்டுள்ளது.

ஸ்ரீஹஸ்திகிரீ மாஹாத்ம்யம்  கதைச்சுருக்கம்

முன்னொரு ஒரு சமயம் முப்பெருந்தேவியர்களின் துணையின்றி மும்மூர்த்திகள்(ப்ரும்மா,விஷ்ணு,சிவன்) தனித்து யாகம்
செய்து வெற்றி காண முடியாதென்று சர்ச்சை ஏற்பட ப்ரும்மா நான் செய்து
காட்டுகின்றேனென்று லோக சேமத்திற்காக ஒரு யாகத்தை ஆரம்பிக்க, ஸரஸ்வதி
அந்த யாகத்தை தடுத்து நிறுத்த பல முயற்சிகள் மேற்கொண்டாள். ப்ரும்மாவின் யாகத்தைக் கெடுக்க ஸரஸ்வதி எத்தனையோ முயற்சிகள்
செய்தாள். அக்னி ரூபத்தில் அசுரர்களை ஸரஸ்வதி அனுப்பினாள். பிரம்மனுக்காக
அந்த அக்னியை கையில் தீபம் போல் ஏந்தி தீபப் பிரகாசமாக எம்பெருமான்
நின்றார். இதனால் சினங்கொண்ட ஸரஸ்வதி கொடூரமான யானைகளைப்
படைத்தனுப்பி யாகத்தை அழிக்க எத்தனித்தாள். எம்பெருமான் நரசிம்ஹ
ரூபனாகி யானைகளை வென்று விரட்டியடித்தார்  அதன் பின்னர் ஸரஸ்வதி அரக்கர் கூட்டங்களைப் படைத்து அனுப்பினாள்.
அவ்வரக்கர்களைத் துவம்சித்து எம்பெருமான் ரத்தப் பிரவாளராக நின்றார்.
இந்நிலையில் யாகத்தைக் கலைக்க 8 கைகளைக் கொண்ட காளியைப்
படைத்தனுப்பினாள். திருமால் 8 திருக்கரங்கள் கொண்ட அட்டபுயக்கரத்தானாகத்
தோன்றி காளியின் ஆங்காரத்தை அடக்கினார். இவ்வாறு தனது முயற்சிகள்
எல்லாம் வீணாவதைக் கண்ட ஸரஸ்வதி தானே ஒரு வேகமுள்ள நதியாக
"வேகவதி" என்ற பெயரில் பிரளயம் போல் வர திருமால் அந்த நதிக்கு
எதிரே அணையாகப் படுத்துத் தடுத்தார்.

 திருமால் அணையாக வந்து படுத்து ஸரஸ்வதியின் வெள்ளப் பெருக்கைத் தடுத்த
பிறகு ப்ரும்மா திருமாலைக் குறித்துக் கடுந்தவம் செய்ய திருமால் அக்னி ஜுவாலையாக காட்சிக் கொடுத்து ப்ரும்மாவின் யாகத்தைத் தொடர
அருள்புரிந்தார். இவ்வாறு தனது இடைஞ்சல்கள் எல்லாம் தவிடுபொடியாவதைக் கண்ட
ஸரஸ்வதி நாணமுற்று ஓய்ந்தாள்.

     இதன்பின் ப்ரும்மா யாகத்தைத் தொடர்ந்தார். இந்நிலையில் யாகத்தில்
கிடைக்கும் அவிர்ப்பாகத்தை வழக்கப்படித் தமக்குத் தரவேண்டுமென்று
தேவர்கள் ப்ரும்மாவிடம் முறையிட சுவர்க்கம் முதலான பலனைக் கோரி
செய்யும் யாகங்களில் தான் உங்களுக்குப் பங்குண்டு. இது உலக நன்மைக்காகச்
செய்யும் யாகம். இது லோக சிருஷ்டியாகும். எனவே இதில் யக்ஞ அங்கமாக
உங்கள் பெயர்கள் கூறினாலும், உங்களிடத்திலும் அதேபோல் உலகத்தின் சகல
ஜீவன்களிலும் அந்தர்யாமி(உள்ளுறைபவன்)யாக இருக்கும் ஸ்ரீமந் நாராயணனுக்கே அவிர்ப்பாகம்
செல்லும். அவரே இதனை ஏற்றுக்கொள்வார் என்று சொல்லி யாகத்தைத்
தொடர்ந்தார். யாகம் முடியும் தருவாயில் பேரொளி பொருந்திய விமானம்
ஒன்று அதில் (யாக அக்னி) தோன்றியது.
கோடிப்பிறவியில் செய்த புண்ணியத்தால் தரிசிக்கத்
தகுந்த அந்த விமானம் "புண்யகோடி விமானம் என்றாகியது. அதில் சங்கு சக்ர கதா
பாணியாக திருமால் தோன்றி அவிர்ப்பாகத்தையேற்றுக் கொள்ள யாகம்
முடிவுற்றது.

     யாகத்தில் பங்கு கொண்ட தேவர்களுட்பட்ட அனைவருக்கும் கேட்கும்
வரமெல்லாம் கொடுத்ததால் எம்பெருமானுக்கு "ஸ்ரீவரதர்" என்னும் திருநாமம்
உண்டாயிற்று. ஸ்ரீமந்நாராயணன் புண்ணிய கோடி விமானத்துடன் இங்கு எழுந்தருளிய நன்னாள் ஒரு சித்திரை மாதத்து திருவோண தினத்திலாகும்.


(அக்னி ஜ்வாலையாக இவ்விடத்து எம்பெருமான் எழுந்தருளியமையை
இங்குள்ள ஸ்ரீவரதராஜப்பெருமாள் உற்சவரின் திருமுகத்தில்  அக்னியின் வடுக்கள் போன்று ஜ்வாலை
வீசக்கூடிய புள்ளிகளை இன்றும் காணலாம்.)

இதேபோல் எம்பெருமான் இங்கு நித்யவாசம் செய்து வேண்டியவர்க்கு
வேண்டிய வரமெல்லாம் கொடுக்க வேண்டுமென அனைவரும் பிரார்த்திக்க
எம்பெருமானும் அதற்கிசைந்தார். உடன் தேவலோகத்தில் உள்ள ஐராவதம்
என்ற வெள்ளை யானையே மலைவடிவங்கொண்டு எம்பெருமானைத் தாங்கி நின்றது.
அதனால் இதற்கு "அத்திகிரி" (ஹஸ்தி கிரி)என்ற பெயர் ஏற்பட்டது. ஐராவதம் வெள்ளைநிற
யானை என்பதால் ஸ்வேதகிரி என்றழைக்கப்பட்டு வேதகிரி என மருவியது.

க - என்றால் பிரம்மன் என்றும் அஞ்சிரம் என்றால் பூஜிக்கப்படல் என்பதாலும்
கஞ்சிரம் என்றாகி கஞ்சிதபுரியாகி காலப்போக்கில் மருவி
காஞ்சிபுரமாயிற்றென்பர்.
  இத்தலத்தை கிரேதா யுகத்தில் பிரம்மனும்
     திரேதாயுகத்தில் கஜேந்திரனும்
     துவாபரயுகத்தில் பிருஹஸ்பதியும்
     கலியுகத்தில் அனந்தனும்
     பூஜித்து உய்ந்தனர்.
   
 ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்று இரண்டு
புத்திரர்கள் இருந்தனர். இவர்கள் கொங்கண தேசத்தில் கௌதம முனிவரிடம்
வித்தை பயின்றனர். இவ்விருவரும் விஷ்ணு பூசைக்கு பழம், புஷ்பம், தீர்த்தம்
கொடுக்கும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தனர். ஒரு நாள் தீர்த்தத்தை
மூடாமல் வைக்க அதில் ஒரு பல்லி விழுந்துவிட்டது. அதைக்காணாது
அப்படியே கொணர்ந்து குருவிடம் கொடுக்க அதிலிருந்து பல்லி
தாவியோடியது. இதைக்கண்டு சினந்த முனிவர் இவ்விருவரையும்
பல்லிகளாகும்படி சபித்தார். தமது தவறுணர்ந்த சீடர்கள் மன்னிப்பு வேண்டி
பிராயச் சித்தம் கோரினார்.

 இந்திரன் (கஜேந்திரனாக) யானையாகி வரதனைத் தரிசிக்க
இச்சன்னதியில் நுழைவான். அப்போது உங்கள் சாபமகலும் என்று தெரிவிக்க
இருவரும் இத்தலத்தின் பிரகாரத்தில் பல்லிகளாக வந்தமர்ந்தனர். பின்பு
இந்திரன் இத்தலத்தில் நுழைந்ததும் இவர்களின் சாபமகன்று தங்கள்
பூர்வஜென்ம உடம்பைப் பெற்று வரதனைச் சேவித்து முக்தியடைந்தனர்.
இந்நிகழ்வைக் குறிக்கும்படியாக தற்போது இத்தலத்தின் பிரகாரத்தில்
24வது படிக்கெதிரில் தங்கத்தினாலும், வெள்ளியினாலுமான இரண்டு பல்லிகள்
செய்து அமைக்கப்பட்டுள்ளன.
இதனை  'வையமாளிகை பல்லி' தரிசனம் என்பர்.

இதைத் தொட்டு வணங்கு பவர்களுக்கு பல்லி விழுவதால் ஏற்பட கூடிய சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது ஐதீகம். கடுமையான தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்
இப்பல்லிகளைத் தொட்டு ஸ்ரீவரதராஜப் பெருமாளைச் சேவித்தால் நோயினின்று
விடுபடுகின்றனர் என்று ஐதீஹம்.
(அயோத்தி மன்னன் சகரன் என்பவனின் மகனும் மனைவியுமே
சாபத்தினால் பல்லிகளாக மாறி இவ்விதம் ஆனர் என்றும் ஒரு கதையுண்டு)


 வாரணகிரி, அத்திகிரி என்ற ஒரு சிறிய மாடி போன்ற மலைகளாலானது
இத்தலம். வாரணகிரி என்ற முதல் மாடியில் நரசிம்மன் சன்னதி உள்ளது.
இங்கு அழகிய சிங்கர் (நரசிம்ம அவதார திருக்கோலத்தில்) அமர்ந்த
திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஹரித்ரா தேவியே இங்கு பிராட்டியாக
எழுந்தருளியுள்ளார். குஹ விமானம் பிருஹஸ்பதிக்கு காட்சி.

     2வது மாடியான மேல்மாடி வரதராஜப் பெருமாள் சன்னதியான
அத்திகிரியாகும். தற்போதுள்ள இவ்வமைப்பு பிற்காலத்தில் ஒரு பக்தரால்
கட்டப்பட்டதாகும். இவர் முதலில் சிவபக்தனாக இருந்து புத்திரப்பேறு வேண்டி
சிவபக்தி செய்ய புத்திரப்பேறு கிட்டாது போகவே விஷ்ணு பூஜை செய்ய
புத்திரப்பேறு உண்டாக எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனுக்கு அடிமை பூண்டு
இத்தலத்தின் தற்போதைய அமைப்பை அமைத்தார் என்றும் கூறுவர்.





                அன்புடன்
     ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம் 
E.P.I. இராம சுப்பிரமணியன்