இந்த பூமியில் மனிதர்களின் பாவ மூட்டைகள் மலை கணக்கில் பெருகி போனதால்,அதனை தாங்க முடியாத பூமா தேவி, நிலைமை மோசமாவதற்குள் திருமாலின் உதவியை நாடியதால், திருமாலும் கண்ணனாக அவதரித்து துஷ்டர்களை நிக்ரஹம் செய்து பூமியின் பாரத்தை குறைத்தார். (கண்ணனாக
அவதரித்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படும் புராண மரபுக்கதை)
பூமிக்கு பாரமாக மகாபாபியான
கம்சன் என்ற அரசன் தீய சக்தியின் வடிவமாகவே வட மதுராவை ஆண்டு வந்தான் கொடுங்கோலன் ஆவான். தீய சக்தியின் உச்சத்திற்கே சென்றது கம்சன் செய்த பாவங்கள் அனைத்தும்.
வடமதுரை,கோகுலம் வாழ் இடையர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டினான் அசுரகுணமுடைய கம்சன்.
சர்வாதிகார மன்னனான கம்சன் இடையர்களுக்கு கடுமையான வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக இடையர்கள் வெண்ணெயை விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள்.
தவறான முறையில் வரி விதித்து அப்பாவி மக்களைத் துன்புறுத்தும் சர்வாதிகார கம்சனிடமிருந்து காப்பாற்றவே காம்ரேட் கண்ணபிரான் வெண்ணெயைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். மேலும் எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான். பொதுவுடைமை என்பது முழுமுதற்கடவுளின் பூர்ண அவதாரமான கண்ணபிரானின் முதற் கொள்கையாகவே இருந்தது என்று கூறிவதில் பிழையேதுமில்லை எனலாம்.
ஏழைப்பங்காளன் ராபின் ஹுட் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? பணக்காரர்களிடம் இருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் இவனை பற்றி ஏராளமான நாவல்களும் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. அவனுக்கெல்லாம் கண்ணபிரான் முன்னோடி ஆவார்.
புராண கால கார்ப்பரேட் கம்சனிடமிருந்து அறிவொன்றுமில்லாத ஆயர்மக்களை காப்பாற்றிய பொதுவுடமை போராளியான காம்ரேட் கண்ணன் பிறந்தது முதல் இறப்பு வரை அதை நிரூபித்திருக்கிறார். கடைசி வரை நாடோடி மன்னனாகவே வாழ்ந்தவர். எந்த தேசத்திற்கும் அவன் அரசனாக பொறுப்பேற்கவில்லை. அரச பதவி பலராமனுக்கே சென்றதாக புராண மரபு கூறுகிறது.
கண்ணபிரானுக்கு வெண்ணெய் மிகவும் விருப்பமானது என நினைத்து அவரது பக்தர்கள் அதை அவருக்கு நிவேதனம் செய்கின்றனர். உண்மையில் கண்ணன் (ஏழைக்குசேலனின் ஒரு பிடி அவல் மீதே தீராக்காதல் கொண்டு காத்திருந்தாராம்.)
இடையர்கள் வெண்ணையை உறிப்பானையில் வைத்திருந்தனர். அதை கண்ணபிரான் அடித்து உடைத்து திருடிய லீலையை நினைவு கொள்ளும் வகையில் இன்றும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழாக்காலங்களில் தமிழகத்தில் உறியடி உத்ஸவம் நடைபெறுகிறது. இதில்
வரகூர் எனும் ஊரில் ஆண்டுதோறும் நடைபெறும் "ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி' நன்னால் பத்து தினங்களுக்கு, காலம் காலமாக நடத்தப்படுகின்றது. ( இவ்வூர் தஞ்சாவூரில் இருந்து 24 கி.மீ. தூரத்தில் கண்டியூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் இருந்து 1 கி.மீ. தென்புறம் அமைந்துள்ளது.)
இவ்வூர் உறியடி உத்ஸவம் மற்றும் வழுக்குமரம் ஏறுதல் போன்ற விழாக்கள் உலகப்புகழ் பெற்றவை. இதனால் இவ்வூரும் ஆலயமும் உலகறிய சிறப்புப் பெற்றுள்ளது பெருமையாகும். ஆனால் இவ்வூரில் இருப்பதோ ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் ஆலயம்! கண்ணன் கோயில் இல்லாமல் உறியடித் திருவிழா நடைபெறுவது ஆச்சர்யம்.
ஆண்டு தோறும் ஆவணியில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள், அதாவது காயத்ரி ஜபத்தன்று தொடங்கி, பத்து நாட்கள் இவ்விழா நடைபெறும். உறியடி நாளன்று காலையில் வெண்ணெய் நிரம்பிய தங்கக் குடத்தை அணைத்தபடியே வெள்ளிப் பல்லக்கில் ஸ்ரீநவநீத கிருஷ்ணனாக இக்கோயில் உற்சவமூர்த்தி வீதி உலா வருவார். அன்று இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உறியடி கிருஷ்ணர் அலங்காரத்துடன் புறப்படுவார்.
தலையில் முண்டாசும், நெற்றியில் திருமண் காப்புடன், உடம்பில் போர்வை போர்த்திக் கொண்டு, காலில் சலங்கை கட்டிக் கொண்டு ஒரு கூட்டம் இடையர்கள் போல வேடமணிந்து
உறியடி மரத்தை வந்தடைவார்கள். மிருதங்கம் போன்று அமைப்பில் உறி கட்டி, அதில் கண்ணனுக்கு விருப்பமான முறுக்கு, சீடை, தட்டை போன்ற தின்பண்டங்களையும் மண்பாண்டத்தில் வைத்துத் தொங்க விடுவார்கள். மற்றொரு நுனியில் நீண்ட கயிற்றைக் கட்டி வைத்திருப்பார்கள்.
கையால் எட்டிப் பிடிக்க முடியாமல், இளைஞர்கள் தடிகொண்டு அடிப்பார்கள். அதற்கும் இடையூறு செய்வதுபோல் ஊர் மக்கள் இவர்கள் மீது தண்ணீணரைப் பீய்ச்சும் குழலால் முகத்தில் தண்ணீரை அடித்து, பார்வையை மறைப்பார்கள். முடிவில் யாராவது ஒருவர் இதில் வெற்றி பெறுவார். பின் கைப்பற்றிய தின்பண்டங்களை அங்குள்ள பலரோடும் பங்கிட்டு உண்டு மகிழ்வர்.
வரகூரில் 1868-ல் பிறந்து 1935 வரை வாழ்ந்த ஸ்ரீநாராயணகவி என்பவர் “கிருஷ்ண சிக்யோத்ஸவம்’ என்ற பெயரில் வடமொழியில் ஒரு காவியம் பாடியுள்ளார். சிக்யோத்ஸவம் என்றால் உறியடி உற்சவம் என்று பொருள். சுமதி, சுகுணன் என்ற இரண்டு கின்னரர்கள் பூலோகத்திற்கு வந்து வரகூரை அடைந்து, உறியடி உற்சவத்தைக் கண்டு மகிழ்ந்து, தமக்கிடையே உரையாடும் விதமாக இவ்விழாவைப் பற்றி இந்நூலில் வர்ணிக்கப்படுகிறது. உத்ஸவத்தின் தத்துவார்த்தம்.
உறியடி நமது ஆசைகள்; வழுக்குமரச் சறுக்கல்கள் நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்கள்; தண்ணீர் அடித்து சறுக்க வைப்பது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சோதனைகள். இவையெல்லாம் நம்முடைய அஞ்ஞானங்கள். வைராக்கியத்தோடு முடிவில் உச்சியை அடைவது என்பதுதான் நாம் பெறும் ஞானம் அல்லது இறையனுபவம் ஆகும்.
வரகூரைத் தொடர்ந்து மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி தெரு இடையர்கள் நடத்தும் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் திருவிழா புகழார்ந்தது எனலாம்.
இப்பகுதியில் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் பலர் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவரான பதுமைக் கம்பெனி வீரணக்கோனார் பங்காளியான பட்டிக்காரர் ராமசாமிக்கோன் அவர்களால் உறியடி விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
ராமசாமிக்கோனாருக்கு ஆண்வாரிசு இல்லாததால் அவரது பங்காளிகள் குடும்பத்திற்கு உறியடி உரிமை கை மாறியது. இராமாயணச்சாவடியின் மேற்கு பகுதியில் உள்ள சிறு சந்தில் உள்ள "நல்லதங்கை கோயில்" எனும் அவர்களின் சிறு தெய்வக்கோயிலிலிருந்து தமது பங்காளிகளுடன் திருமண் காப்பிட்டு உறியடி கம்புகளுடன் புறப்பட்டு வந்தபிறகு உறியடி உத்ஸவம் ஸ்ரீநவநீத கிருஷ்ணன் திருமுன்பு தொடங்கும். பிறகு வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றோடு அன்றைய இரண்டாம் நாள் ஸ்ரீஜயந்தி உத்ஸவம் நிறைவு பெறும்.
கம்சன் பற்றி நெல்லை மாவட்டங்களில் வில்லுப்பாட்டு பாடப்பட்டன. சுவடிகளில் கம்சனது கதைப்பாடலை பதிவு செய்து வைத்துள்ளனர். அதில் கார்ப்பரேட் சிந்தனையாளன் கம்சனின் கதையோடு காம்ரேட் கண்ணன் லீலைகளும் பாடப்பட்டுள்ளன.
கம்சன் வதமான பிறகு அவனது ஆன்மா வைகுண்டத்தை அடைந்தது என்பது புராணக்கதை.
‘என்ன? கெட்டவனுக்கு வைகுண்டமா?’ என்று அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடையாதீர்கள்.
மிகக் கொடூரமான கொடுமைக்காரன் என்றாலும், சதா சர்வ காலமும் கண்ணனையே நினைத்தவன் அவன். அவனால் தனக்கு மரணம் ஏற்படுமோ என பயந்து கொண்டே கடவுளை மட்டுமே சிந்தித்தவன். ஆகையால் தான் கம்சனுக்கு வைகுண்டத்தில் ‘சாரூப்ய சொரூபம்’ கிடைத்தது. இந்த சொல்லுக்கு ‘நாராயணனைப் போலவே உருவமெடுத்தல்’ என்பது பொருள். வைகுண்டத்தில் இருப்பவர்கள் நாராயணனை வணங்கி, நாராயண வடிவத்தைப் பெறுவார்களாம். அந்த வடிவம் கருணைக் கடலான கண்ணனால், கல் நெஞ்சம் கொண்ட கம்சனுக்கும் அருளப்பட்டது.
ஒருவன் பூமியில் இருக்கும் போது என்ன நினைக்கிறானோ அதற்கேற்ற மறுபிறவியை அடைகிறான். கம்சன் பயத்தின் காரணமாக கண்ணணையே நினைத்தாலும், அவனையே நினைத்துக் கொண்டிருந்ததால் இந்த உயர் நிலையை அடைய முடிந்தது.
No comments:
Post a Comment