Monday, September 3, 2018

கண்ணன் பிறப்பும் பாகவத பாராயணமும்






பூபாரம்  குறைக்க மாபாரதப் செயய்த
கண்ணபிரான் பிறந்த ஆவணி (சிரவண)மாத ரோஹிணி நட்சத்திரம், மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு ஸ்ரீஜெயந்தி விழா பாரதம் முழுவதும் சாதி,மத பேதமின்றி கொண்டாடப்படுகிறது.

இந்த குழந்தைக்கண்ணன் நமக்கெல்லாம் ரட்சகனாய் இருப்பவன்.
ஏனெனில், அவனே இந்த உலகில் எல்லாமாக இருக்கிறான். நாம் பகவான் கண்ணபிரானை நம் உறவினனாகவும் பார்க்கலாம். ஆம்…தாயாய், தந்தையாய், குருவாய், குழந்தையாய், நண்பனாய்,
அரசனாய், சீடனாய், மந்திரியாய்,  நல்லாசிரியனாய், தெய்வமாய்,  சேவகனாய்…எப்படி வேண்டுமானாலும் அவனைக் காணும் உரிமையை அவன் நமக்கு அளித்துள்ளான்.
(மகாகவி பாரதியின் அனுபவம் - கண்ணன் பாட்டு)

கண்ணன் பிறப்புக் கொண்டாட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பெரியாழ்வாரிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு வண்ணமாடங்கள் பாசுரமே சிறந்த உதாரணம். பெரியாழ்வார் தன்னை யசோதையாகவே பாவித்து பாடிய பாசுரங்கள் படிக்க படிக்க நாமும் யசோதா பாவம் பெறுகிறோம் அல்லவா?





ஸ்ரீஜெயந்தியன்று நம் வீட்டைத் தூய்மைப்படுத்தி, வாசல்படியில் இருந்து பூஜை அறை வரை கண்ணபிரானின் திருப்பாதங்களைப் பச்சரிக்கோல மாவால் அழகாக வரைந்து மகிழ்கின்றனர்.
சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், அவனது பாதச் சுவடுகளை "ஸ்ரீ கிருஷ்ண பாதம்" எனக் கூறிக் கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்பது தென்கலை ஐயங்கார்களின் வழக்கமாகும்.


 இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம் எனக் கருதுகின்றனர்.
 அதாவது கண்ணபிரானே தன் திருப்பாதங்களைப் பதித்து நடந்து வந்து, பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக்கொள்கிறார் என்பதாகும்.
அன்று காலையில் இருந்து ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு கண்ணன் படக்கதைகள் தந்து படிக்க வைக்கலாம்.  நம் வீட்டு தெய்வ வழிபாட்டு அறையில்
 கண்ணபிரான் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான,
தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். இவற்றுடன் நைவேத்திய பட்சணங்களும் இடம்பெற வேண்டும்.
வெல்லச்சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தேன்குழல், லட்டு, மைசூர்பாகு, பால்கோவா, அவல், வெல்லம், தயிர், பால், வெண்ணெய், திரட்டுப்பால், பர்பி,
பூரி மற்றும் பழ வகைகளான நாவற்பழம், கொய்யாபழம், விளாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம்.
வீட்டில் வழிபாடும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணபிரானின் திருக்கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகளைக் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.
அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து கண்ணபிரானின் லீலைகளை கூறும் பாகவத மகா புராணத்தை படித்தல் சிறப்பு.


பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.
இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசிர்வாதம் நமது இல்லத்திற்கும் உள்ளத்திற்கும் கிடைக்கும்.
வடமொழியில் வியாசர் எழுதிய பாகவதம் என்னும் நூல் திருமாலின் ஆறு அவதாரங்களையும் 25 கீதைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு 36,000 சுலோகங்களில் எழுதப்பட்டுள்ளது.
இதனை அருளாளதாசர் என்பவர் 130 சருக்கங்களில் 9147 பாடல்களால், 16ஆம் நூற்றாண்டில் தமிழில் பாடியுள்ளார்.
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் அதற்கு ஏது  நேரம் என்றிருப்பார்களுக்கென ஆழ்வார்கள் பாசுரம் கொண்டு "பாசுரப்படி பாகவதம்" எனும் நூல் படைக்கப்பட்டுள்ளது. 


தேவகியின் வயிற்றில் பிறந்த பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் உள்ள யசோதையிடமே வளர்ந்தான். அவன் தன் தாய் யசோதையிடம் புரிந்த குறும்புகள் ஏராளமானவை.
பாகவத்தில் தசம ஸ்கந்தத்தில் கண்ணன் பிறப்பு முதல் தொடங்கி அனைத்தையும் சுருக்கமாக தொகுக்கப்பட்ட அற்புதமான நூலாகும்.
கண்ணபிரானுடைய இனிமையான பால்ய லீலைகள் தெய்வீகமானவை. அதை ஆழ்வார்களின் ஈரத் தமிழ்ப் பாசுரங்களில் எளிமையாகப் படிப்பதால் எல்லா நலனும் வளமும் கிடைக்கும் என்பது வைணவச் சான்றோர்கள் வாக்காகும்.





இனிய ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள்!


                     அன்புடன்

           ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
   E.P.I. இராமசுப்பிரமணியன்



 பாசுரப்படி பாகவதம் : -
Download link:-

https://archive.org/details/subburaji2009_gmail_20180903




1 comment:

  1. கண்ணன் திருவவதாரச் சிறப்பு

    கலிவிருத்தம்

    வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
    கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
    எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட
    கண்ணன் முற்றம் கலந்து அளறா யிற்றே.


    ஓடுவார் விழுவார் உகந்தா லிப்பார்
    நாடுவார் நம்பிரான் எங்குற்றா னென்பார்
    பாடுவார்களும் பல்பறைகொட்ட நின்று
    ஆடுவார்களும் ஆயிற்றாய்ப் பாடியே.


    பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
    காணத்தாம் புகுவார் புக்குப போதுவார்
    ஆணொப்பார் இவன்நேரில்லை காண் திரு
    வோணத்தான் உலகாளு மென்பார்களே.


    உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
    நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்
    செறிமென் கூந்தல் அவிழத்திளைது எங்கும்
    அறிவழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.

    கொண்ட தாளுறிக் கோலக் கொடுமழு
    தண்டினர் பறியோலைச்சயனத்தர்
    விண்டமுல்லை அரும்பன்னபல்லினர்
    அண்டர்மிண்டிப் புகுந்துநெய்யாடினார்.


    கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்
    பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
    ஐயநா வழித்தாளுக்கு அங்காந்திட
    வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே.


    வாயுள் வையகங் கண்ட மடநல்லார்
    ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
    பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
    மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே.


    பத்து நாளும் கடந்த இரண்டாநாள்
    எத்திசையும் செயமரம் கோடித்து
    மத்த மாமலை தாங்கிய மைந்தனை
    உத்தானஞ் செய்து உகந்தனர் ஆயரே.


    கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
    எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
    ஒடுக்கிப் புல்கில் உகரத்தே பாய்ந்திடும்
    மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்.


    செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர்
    மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
    மின்னு நூல்விட்டுடச் சித்தன் விரித்த இப்
    பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே.

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

    ReplyDelete