திருவாசிரியம் நன்மாறன் சடகோபன் தந்த இரண்டாவது தமிழருவி ஆகும். இது தமிழ் சிற்றருவி. ஆனால் எல்லா சாரங்களையும் கொண்ட திருவாய்மொழி எனும் பேரருவிக்கு சளைத்ததல்ல.
திருவாசிரியம்
இதில் ஏழு ஆசிரியப்பாக்கள் உள்ளன. இவை அந்தாதித்தொடையில் அமைந்துள்ளன.
இந்த நூலை யஜுர்-வேத சாரம் என்பர். யஜுர் வேதம் 7 காண்டங்கள் என்பதால் 7 பாசுரங்கள்.
இதன் முகப்பில் அருளாளப் பெருமான் எம்பெருமானார் இயற்றிய கலிவிருத்தத்தாலான தனியன் பாடல் ஒன்றும் உண்டு.
பிரிவையும் கூடலையும் மாற்றி மாற்றித் திருவிருத்தத்தில் காட்டிய நம்மாழ்வார், திருஆசிரியத்தில் திருமால் மட்டும் தனிப்பெரும் தெய்வம் என்றும் அவன் அருளிச் செயல்களைத் தொகுத்துக் காட்டி, அவனை மட்டும் வணங்குவோம் என்றும், அவன் திருவடிகளைப் போற்றும் பேறு பெற்று நல்வீடு பெறுவோம் என்றும் கூறி, உண்மையான செல்வம் (பக்தி) வழிபாட்டின் மூலம் கிடைக்கும் என்பதைக் காட்டுகிறார்.
ஏழு பாசுரங்களைக் கொண்ட இப்பிரபந்தம் மூன்று உலகம் அளந்தவனின் சேவடியைப் போற்றுகிறது. சிவன், பிரமன், இந்திரன் ஆகிய தெய்வங்களும் திருமாலுக்குள் அடக்கம். அவன் தனிப்பெரும் தெய்வம்.
ஐம்பெரும் பூதங்கள் அவனுள் அடக்கம். உலகுக்கும் அவன் தெய்வம், எமக்கும் அவனே தெய்வம் எனத் தீவிர வைணவராகத் திருஆசிரியத்தை நிறைவு செய்கின்றார் நம்மாழ்வார்.
தாழ்ந்த தெய்வங்களை வணங்குவோர்க்கு உபதேசமாக ஈன்றோள் இருக்க மனை நீராட்டாதீர்கள் என ஆறாம் பாசுரத்தில் கூறுகிறார்.
பிறகு சிருஷ்டி லயமாகும் வர்ணனையாக 7ம் பாசுரம் உள்ளது.
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா,
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட, நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க, ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்தவெம்
பெருமா மாயனை யல்லது, ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே. என்கிற ஏழாம் பாசுரம் அடியேனுக்கு மிகவும் பிடித்த பாசுரம். இதில் சிவன்,பிரம்மா,இந்திராதி தேவர்கள் என அனைவரும் அனைத்தும் அகப்படக்கந்த ஆலிலைத்தெய்வத்தை முற்காலங்களில் தங்கத்தில் டாலராக செய்து போட்டுக்கொண்ட வைணவப் பற்றாளர்கள் தற்போது அவ்வாறு அணிவதில்லையே! ஏன்?
ஆலிலை துயில்பவன் சர்வேஸ்வரன் அல்லவோ? பரத்வ நிலைக்கு ஓர் சான்று இப்பாசுரம் எனலாம்.
ஒருபொருள் புறப்பாடின்றி அகப்படக்கரந்த காட்சியைக் காண ஸ்ரீரங்கம் மேட்டழகிய சிங்கர் சந்நதி ஓவியத்தை காணலாம். யமனை ஊறுகாயாக தொட்டு மற்றவற்றை வாயில் திருமால் விழுங்கும் ஓவியக்காட்சியானது நெஞ்சினை விட்டு நீங்காது நிற்கும்
அன்புடன்
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் :
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன் :
No comments:
Post a Comment