Tuesday, August 28, 2018

நன்மாறனும் தமிழருவியும் ( பகுதி - 2)








நன்மாறன் சடகோபனின் முதல் தமிழருவியான திருவிருத்தம் கட்டளைக்கலித்துறைப் பாடல்களால் ஆனது. நூற்பயன் கூறும் இறுதிப்பாடலையும் சேர்த்து இதில் 100 பாடல்கள் உள்ளன. இவை அந்தாதி முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. அகத்திணையில் வரும் துறையைச் சேர்ந்த பாடல்களாகவே நூல் முழுவதும் அமைந்துள்ளது ஒரு குறிப்பிடத்தக்க செய்தி.
இதில் உள்ள அகத்துறைச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உள்ள அகத்துறைப் பாகுபாடுகளிலிருந்து சற்று வேறுபட்டவை. கட்டளைக் கலித்துறை என்னும் கடினமான வடிவமே பிற்கால வடிவம். மேலும் பிரிவுக்கும் வாடைக்கும் இரங்கல், வெறிவிலக்கு, ஏறுகோள், வரைவுகடாதல் போன்றவை பிற்காலத்தில் அகத்துறை இலக்கணத்தில் வந்து சேர்ந்து கொண்டவை. அவைகளின்படியே ஆழ்வார் இயற்றியுள்ளார். அகத்துறைத் தலைவனை சாதாரண மனிதனிடமிருந்து உயர்த்தி, கடவுளாக்கிய பெருமை ஆழ்வார்களைச் சேரும். அகத்துறைப் பாடல்களை இரண்டு விதமாக அர்த்தம் கொள்வது வைணவ வழக்கம். நேரடியான தலைவன், தலைவி, தோழி, பிரிவு இவை சார்ந்த அர்த்தம்; தலைவன் திருமால்தான்... இந்த அர்த்தத்தை மீறி உள்ளுரையாக பகவானுக்கும் பக்தனுக்கும் ஆழ்வாருக்கும் அடியார்க்கும் உள்ள உறவுகளை அகக்கண் கொண்டு பார்த்தல். பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை போன்றவர்கள் இவ்வாறுதான் அகத்துறைப் பாடல்களை பரிசீலிக்கவே சம்மதிக்கிறார்கள் என்று சொல்லலாம். நன்மாறன் சடகோபனின் பிற்காலத்தவரான சைவ சமயத்து திருவாதவூர்
மாணிக்கவாசகரின் திருக்கோவையார் எனும் நூல்  இதுபோலவே சிவபெருமானைத் தலைவனாக வைத்து கட்டளைக் கலித்துறையில் இயற்றிய நூல்  ஆகும்.  இவ்விரண்டு நூலையும் ஒப்பிட்டு பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

நம்மாழ்வார் திருவிருத்தமும் மாணிக்கவாசகர் திருக்கோவையாரும்
ஆசிரியர்;  பேராசிரியர் இ.பா.வேணு கோபால்

புத்தகம் படிக்க Link:-



 கட்டளைக் கலித்துறை என்னும் கடினமான யாப்பில் அமைந்த இந்தப் பாடல்கள் சங்க காலத்தின் அகத்துறைக் கருத்துகளை கடவுளுக்குப் பயன்படுத்திய முதல் முயற்சிகளில் ஒன்றாகும். ஆழ்வார்களின் காலத்தில் பக்தி பெருக்கெடுத்தோடினாலும் அகத்துறைக் கருத்துகளின் அழகுணர்ச்சியை கைவிடாமல் இருப்பதற்கு அவர்கள் செய்த சாமர்த்தியமான மாற்றம் இது என்று சொல்லலாம். தலைவனை தெய்வமாக்கிவிட்டால் அகத்துறைக் கருத்துகளில் உள்ள விரசங்கள் தெய்வீகம் பெற்று மன்னிக்கப்படுகின்றன. அவைகளுக்கு மரியாதை கிடைத்துவிடுகிறது.

மாறன் ஆழ்வாரும் முதல் பாட்டில் ஒரு விண்ணப்பம் செய்கிறார். பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கமும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாப் பிறந்தாய் இமையோர் தலைவா.
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும்  விண்ணப்பமே.

பொய்யான அறிவும் தவறான ஒழுக்கங்களும் அழுக்கான உடம்பும் போன்ற குணங்கள் இனி எமக்கு வேண்டாமல் உயிர் தருவாய். எப்போதும் நின்று பிறக்காமல் பிறந்த வானவர் தலைவனே, நான் செய்யும் இந்த விண்ணப்பத்தைக் கேள்.

அகத் துறைப் பாடல்கள் உள்ள திருவிருத்தத்தில் அவ்வப்போது ஆழ்வாரின் பிரம்மாண்டமான தெய்வீகக் கருத்துகள் ஒளிரவே செய்கின்றன.



நன்மாறனின் முதல்  தமிழருவியான திருவிருத்தமானது இப்படி வளர்ந்துகொண்டே செல்லுகிறது. இந்த அக-இலக்கியம் வெறிவிலக்கு (20), தலைவி அன்னத்தை(சோற்றை) வெறுத்தல் (29), தலைவி மேகத்தைத் தூது விடுதல் (31), தலைவனுடன் தன் மகள் சென்ற சுரத்து அருமையை எண்ணி நற்றாய் கவலைப்படுதல் (37), கட்டுவிச்சி குறி சொல்லுதல் (53), தலைவி அன்றில் குரல் கேட்டுப் புலம்புதல் (87) போன்ற செய்திகளுடன் நூல் வளர்கிறது. ஒரு நல்ல உதாரணப் பாடலைப் பார்ப்போம்.
சின்மொழி கோயோ கழிபெரும் தெய்வம் இந்நோயினதென்று
இன்மொழி கேட்கும் இளம் தெய்வம் அன்று, வேல, நில்
என்மொழி கேண்மின் என் அன்னைமீர் உலகேழுமுண்டான்
சொன்மொழி மாலை அத் தண்ணந்துழாய் கொண்டு சூடுமினே

அகநானூறிலும் ஒரு பாடல் இதே கருத்தில் உள்ளது. வெறிவிலக்கு என்கிற துறையில் வருகிறது இப்பாட்டு. தலைவனைப் பிரிந்த தலைவி வாடுவதைப் பார்த்து அவளுக்கு நோய் ஏற்பட்டதென்று கட்டுவிச்சியிடம் காட்ட, அவள்மேல் முருகப் பெருமான் வந்திருக்கிறான் என்று கட்டுவிச்சி சொல்ல, தோழி `அதெல்லாம் இல்லை... நீங்கள் விலகி நில்லுங்கள்.. இவள்மேல் திருமாலின் துளசி மாலையை எடுத்து வீசுங்கள் சரியாகி விடும் என்கிறாள்.

பிரிவுத் துயரால் வாடியிருப்பதால் சில பேச்சுக்களே பேசுகிறாள். (சின்மொழி) இவள் நிலை பற்றி சொல்கிறேன் கேளுங்கள்; இவளுடைய நோய், மிகப் பெரிய கடவுளான திருமால்மேல் கொண்ட காதலால் உண்டாயிற்று. புகழ் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்கின்ற சின்ன தெய்வங்களை நினைத்து வந்ததல்ல இந்த நோய். பிரளய காலத்தில் உலகைத் தன் வயிற்றில் வைத்தவன் பேரைச் சொல்லி அவன் சூடிய துளசி மாலையை இவளுக்குச் சூட்டுங்கள்... இவள் நோய் தீர இதுதான் வழி.

இதன் உள்அர்த்தமாக, பெருமாளின் குணங்களில் ஈடுபட்டு அவனை எதிர்நோக்கி இருக்கும் ஆழ்வாருக்கு அவன் அருள்கிட்டும் காலம் நீடிக்கிறது. அவர் படும் பாட்டைக் கண்டு இரக்கப்பட்ட ஞானிகள் இந்தப் பாட்டைப் பாடுவதாகக் கொள்கிறார்கள். அகத்துறைப் பாடல்கள் இவ்வாறே வைணவத்தில் ஒத்துக் கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், இந்த அழகான பாடலைப் பாருங்கள்

`முலையோ முழுமுற்றும் போந்தில மொய்பூங்குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல்மண் எல்லாம்
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமாள்
மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே
தலைமகள் இளமைக்கு செவிலி இரங்குவதாக உள்ள இந்தப் பாட்டில் இந்தப் பெண்ணுக்கு மார்பே இன்னும் பெரிசாகவில்லை, தலைமயிர் வளரவில்லை. ஆடைகள் இடுப்பில் நில்லாமல் நழுவுகின்றன, பேச்சு சரியில்லை. கண்கள் உலகை விலை பேசும் அளவுக்கு மிளிர்கின்றன. பெருமாள் இருப்பது திருவேங்கடம் என்று மட்டும் கூறுகிறாள் இந்தப் பேதைப் பெண் என்று ஒரு தாய் இன்னும் பருவம் எய்தாத தன் மகள் திருமாலையே எண்ணுவதை நினைத்து மனம் வருந்துவதாக நேரடி அர்த்தம் கொண்ட இந்தப் பாட்டிற்கு ஸ்வாபதேச அர்த்தம் இப்படிச் சொல்வார்கள்.

ஆழ்வாருடைய அறியாத காலத்திலிருந்து உண்டாகியது அவர் பக்தி. முலையே முற்றும் போந்தில என்றால் பக்தி இன்னும் பரம பக்தியாக முற்றவில்லை. குழல் குறிய என்றால் தலையால் செய்யப்படும் வணக்கம் குறைவானது. கலையோ அரையிலில்லை என்பது தன் முயற்சி கூடாதிருக்கும் நிலையைச் சொல்கிறது, இவ்வாறு பாடலின் அகத்துறை விளக்கத்தை தெய்வமாக்கி சுத்தப்படுத்திவிட்டுத்தான் வைணவர்கள் அங்கீகரிக்கிறார்கள்.

வணங்கும் துறைகள் பலபல
ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல
ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கிநின்
மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண்
வேட்கை எழுவிப்பனே. (பாடல் 96 )
திருவிருத்தத்தின் மிகச்சிறந்த பாசுரம். இதற்கான வியாக்யானத்தை அறிந்தால் மேலும் ஆச்சர்யமே.  

திருவிருத்தம் இப்பிரபந்தத்தின் முதல் பாசுரம் விண்ணப்பம் அல்லது வேண்டுதல் ஆக தொடங்கி இறுதிப் பாசுரம் பயன் உரைக்கும் பாசுரம் ஆகவும் அமைய, ஏனைய 98 பாசுரங்கள் அகப்பொருள் துறையில் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது..

சான்றாக, நலம் பாராட்டல் துறையைக் காண்போம். தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டுவது அகப் பொருளில் நலம்பாராட்டல் என்பர். இங்கு, திருமாலை நாயகனாகப் பாவித்த ஆழ்வார் நாயகியாகத் தம்மைப் பாவித்து நலம் பாராட்டுகிறார். சான்றாக ஒரு பாடல்:

வண்டுகளோ! வம்மின்! நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண்பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்ஏனம் ஒன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டு கள்வாரும் மலர் உளவோ நும்வியல் இடத்தே?

(3634)

(வம்மின் = வாருங்கள்; ஏனம் = பன்றி, விண்டு = மலர்ந்து, விரை = மணம்)

ஞானச்சுடர் விளக்கானவன் (3637), வெண்ணெய் உண்ட கள்வனை அல்லால் வேறு எதுவும் நெஞ்சம் பேணவில்லை (3670), யாக்கை முதுமை அடைந்து தடுமாறும் முன் நல்வீடு செய்யும் திருமாலை வணங்குபவன் (3674) இப்படிப் பல சொல்லி நாயகி தாம் விரும்பும் தலைவன் யார் எனக் காட்டுவது போல் அமைந்த பாசுரங்கள் அறத்தொடு நிற்றல் துறையில் அமைந்துள்ளன.

ஞானப் பிரானை அல்லால் இல்லை நான்கண்ட நல்லதுவே
(3678:4)
என அகப்பொருள் துறைகள் அரங்கன் மீது கொண்ட பக்தியைப் பரப்பும் துறைகளாகப் படைத்துக் கொண்டுள்ளார் நன்மாறன் சடகோபன்.






No comments:

Post a Comment