• அரசியல் வரலாற்று மரபு
திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 5)
தொடர்ச்சி .....
மதுரையை ஆண்ட பாண்டிய வம்சத்தின் கடைசி மன்னரரான
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
கி.பி. 1308ஆம் ஆண்டு தன் இறப்பு வரை ஆட்சியைத் தொடர்ந்தார். இவருடைய இறப்புக்குப் பின் அவருடைய இரு மகன்களுக்கு இடையில் மூண்ட வாரிசுரிமைச் சண்டையால் ஏற்பட்ட குழப்பத்தால் "மதுரை அரசு" (பாண்டிய பேரரசின் தமிழ் மாகாண பேரரசு) தில்லி சுல்தானின் கைக்கு மாறியது. 1327ஆம் ஆண்டு ' மதுரை' தில்லி சுல்தானத்தில் 23ஆவது மாநிலமாக மதுரை அறிவிக்கப்பட்டது. ஜலாவுதீன் ஹசன் ஷா மதுரையின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
இதன் பிறகு முகமது பின் துக்ளக் 1325இல் தில்லியின் சுல்தானானார். ஆனால் பாரசீகப் படையெடுப்பால் மிக மோசமான பொருளாதார நிலைக்கு துக்ளக்கின் ஆட்சி சென்றது. மாநிலங்கள் பிரிந்து செல்லத் தொடங்கின. மதுரையும் தனி நாடாகியது. அதற்கான அறிவிப்பை ஜலாவுதீன் ஹசன் ஷா 1333ஆம் ஆண்டு வெளியிட்டான். இதிலிருந்துதான் 'மதுரை சுல்தானகத்தின் ஆட்சி' தொடங்குகிறது.
ஜலாவுதீன் ஹசன் ஷா மதுரையின் வலிமை மிக்க சுல்தானாக இருந்தான். அவர் காலத்தில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் கணக்கில் அடங்காதவை. இவன் 1340ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். இறுதியாக சிக்கந்தர் ஷாவின் காலத்துடன் மதுரை சுல்தான்களின் ஆட்சி
கி.பி. 1371 விஜயநகர குமார கம்பண்ணனால் முடிவுக்கு வந்தது.
விஜயநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு தோன்றிய விஜயநகரப் பேரரசு முஸ்லீம்களை புறமுதுகிட்டு ஓடச் செய்து இத்திருக்கோவிலை மீட்டு திருவேங்கடமலையிலிருந்து உற்சவப் பெருமாளையும், பிறபொருட்களையும் மீளக் கொணர்ந்து சற்றேறக் குறைய இன்றுள்ள
அளவிற்கு திருவரங்கம் சீர்படுத்தப்பட்டு பொலிவு பெற்றது. அன்று முதல்
விடுபட்டுப் போயிருந்த விழாக்களும். நிகழ்ச்சிகளும் தொடரத் தொடங்கின.
சில வைணவச் சொற்றொடர்களும் 15ஆம் நூற்றாண்டில் கொடுக்கப்பட்ட
பெயர்களுடனே இன்றும் நின்று நிலவுகிறது.
கி.பி.1565இல் தலைக்கோட்டை
யுத்தத்தில் விஜயநகர பேரரசு வீழ்ச்சி அடையும்வரை இத்திருக்கோவிலை
அவர்கள் கண் போல காத்து வந்தனர்.
இக் காலத்தில் பல புதிய கோயில்கள் கட்டப்பட்டன, அத்துடன், தென்னிந்தியா முழுவதும் ஏற்கனவே இருந்த பல ஆயிரக்கணக்கான கோயில்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டதுடன், திருத்த வேலைகளும் செய்யப்பட்டன. தென்னிந்தியாவில் உள்ள
விஜயநகரக் கோயில்கள் பெரும்பாலும் உறுதியான சுற்று மதில்களால் சூழப்பட்டவை. சிறிய கோயில்கள் ஒரு கருவறையையும் அதன் முன் அர்த்த மண்டபம் எனப்படும் சிறிய மண்டபம் ஒன்றையும் மட்டும் கொண்டவை. நடுத்தர அளவிலான கோயில்களில், கருவறையயும், அர்த்த மண்டபத்தையும் இணைக்கும் சிறிய இடைநாழி எனும் ஒரு சிறிய இடம் அமைந்திருக்கும். அத்துடன் அர்த்த மண்டபத்துக்கு அப்பால் முக மண்டபம் என்னும் இன்னொரு மண்டபமும் இருக்கும். பெரிய கோயில்களில் சுற்று மதில்களில் வாயில்கள் இருக்கும் இடங்களில் பெரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விஜயநகரப் பேரரசர்களான ராயர்களின் பெயரைத் தழுவி இக் கோபுரங்கள் 'ராய கோபுரங்கள்' என அழைக்கப்பட்டன. இவை, மரம், செங்கல், சாந்து ஆகியவற்றைக் கொண்டு, பெரும்பாலும் சோழர் பாணியில் அமைக்கப்பட்டன. கோபுரங்களில், மக்கள், கடவுளர் ஆகியோரின் பெரிய அளவுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
தமிழர் கட்டிடக்கலைச் செல்வாக்கினால் உருவான இவ்வழக்கம், பேரரசன் கிருஷ்ணதேவ ராயரின் காலத்தில் பிரபலமாகிப் பின்வந்த 200 ஆண்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வந்தது. இவை தவிர, மதில்களுக்குள் கருவறையைச் சுற்றிய கூரையிடப்பட்ட திருச்சுற்று, மகாமண்டபம் எனப்படும் பல தூண்களோடு கூடிய பெரிய மண்டபங்களாக 1000கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், கல்யாண மண்டபம், திருக்குளம் என்பனவும் இக் காலக் கோயில்களின் கூறுகள் ஆயின. இக் காலத் தூண்களின் ஒரு புறத்தில், அவற்றோடு ஒட்டியபடி நிமிர்ந்த நிலையில் யாளிகள், முதுகில் வீரர்கள் இருக்க, இரண்டு கால்களில் பாய்ந்தபடி நிமிர்ந்து நிற்கும் குதிரைகள் ஆகியவற்றின் சிற்பங்கள் காணப்படுகின்றன. தூணின் மறு பக்கங்களில் இந்துப் பழங்கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். யாளிகள், குதிரைகள் போன்றவை இல்லாத தூண்கள் சதுர வடிவாக அமைந்து அவற்றில் பழங்கதைகளை அடிப்படையாகக் கொண்ட சிற்பங் களஞ்சியங்கள் காணப்படும்.
||: விஜயநகரப் பேரரசு :||
தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசாக விஜயநகரப் பேரரசு
இருந்தது. தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவே சிருங்கேரி மடாதிபதி "வித்யாரண்யர்" வழிகாட்டுதலின் படி, விஜயநகரப் பேரரசு கி.பி.1336 ஆம் ஆண்டில்
சங்கம மரபைச் சேர்ந்த முதலாம் 'ஹரிஹரர்' மற்றும் 'முதலாம் புக்கராயர்' ஆகியோரால் நிறுவப்பட்டது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந்திய வரலாற்றில் 'விஜயநகர பேரரசு ஒரு முக்கிய இடம்' கொண்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. விஜயநகர பேரரசு உண்மையில் பார்த்தால் ஒரே மன்னர் வம்சம் கிடையாது, அது 1336 - 1485 வரை சங்கம வம்சம், 1485-1491 வரை சாலுவ வம்சம், 1491-1542 வரை துளுவ வம்சம் மற்றும் 1542 - 1646 வரை ஆரவிடு வம்சம் என 4 வம்சங்களால், சுமார் 310 வருடங்கள் விஜயநகரத்தை தலைநகரமாக கொண்டு ஆளப்பட்டது. இப்பேரரசின் அழிபாடுகள் இன்றைய கர்நாடகத்தில் உள்ள 'ஹம்பி'யைச் சுற்றிலும் காணப்படுகின்றன.
கிருஷ்ண தேவராயரின் ஆமுக்த மால்யதா, கங்காதேவி எழுதிய மதுராவிஜயம், அல்லசானி பெத்தண்ணாவின் மனுசரிதம் போன்ற பல விஜயநகர சமகால இலக்கிய நூல்களில் இருந்து விஜயநகர பேரரசின் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.
விஜய நகரப் பேரரசுக்கு பல்வேறு அயல்நாட்டு பயணிகள் வருகைபுரிந்தனர். அவர்களது குறிப்புகளும் பயனுள்ள சான்றுகளாகும். மொரோக்கா நாட்டைச் சேர்ந்த இபின் பதூதா, வெனிஷியப் பயணி நிக்கோலோ டி கோன்டி, பாரசீகப்பயணி அப்துல் ரசாக், போர்ச்சுகீசியப் பயணி டோமிங்கோ பயஸ் போன்ற பயணிகள் விஜய நகர கால சமூக பொருளாதார நிலைமைகள் பற்றி தங்களது பயணக் குறிப்புகளில் விவரித்துள்ளனர்.
இரண்டாம் தேவராயரின் ஸ்ரீரங்கம் செப்பேடுகள் போன்ற செப்பேடுகள் விஜயநகர அரச வழித்தோன்றல்கள் மற்றும் அவர்களது சாதனைகளைக் கூறுகின்றன. ஹம்பி இடிபாடுகளும் பிற சின்னங்களும் விஜய நகர ஆட்சியாளர்களின் பண்பாட்டுப் பங்களிப்பை வெளிப்படுத்துகின்றன. அவர்கள் வெளியிட்டுள்ள எண்ணற்ற நாணயங்களில் காணப்படும் உருவங்கள் மற்றும் சொற்றொடர்கள் விருதுகளையும் சாதனைகளையும் எடுத்துக்கூறுகின்றன.
• விஜயநகர கம்பண உடையார், இஸ்லாம் மத ஆதிக்கத்தை ஒழிக்கக் கருதித் தெற்கே படையெடுத்துச் சென்றார். தமிழகத்துத் தொண்டை நாட்டில் இருந்த படைவீடு ராஜ்ஜியத்தை வென்று, பின்பு மதுரையில் முகமது பின் துக்ளக்கின் காலத்தில் ஏற்பட்டு நடந்து வந்த சுல்தான் ஆட்சியை ஒழித்து, அங்கே விஜயநகர நேரடி ஆட்சிக்கு வழிகோலி வைத்தார்.
திருவேங்கடமலையில் ரங்கமண்டபத்தில் இருந்தபோது செஞ்சியை ஆண்டு கொண்டு இருந்த கோபண்ண உடையார் திருமலைக்கு வருகை தந்து அழகியமணவாளனனை
தரிசித்து விட்டு திருவரங்கத்தில் திரும்பவும் அவரை எழுந்தருளப்பண்ணச் சித்தம் கொண்டு அவரது பெரு முயற்சியால் அழகியமணவாளனையும் உபய நாச்சிமார்களையும் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பித்தான் என்பதை கடந்த பதிவிலேயே அறிந்தோம்.
அப்போது (கி.பி. 1371 பரீதாபி ஆண்டு வைகாசி 17ஆம் நாள்) தற்போதைய பவித்ரோத்ஸவ மண்டபத்தில்தான் அழகியமணவாளன் எழுந்தருளியிருந்தார். திருவரங்க மாளிகையாரும் அப்போது எழுந்தருளியிருந்ததால், யார் உண்மையான 'அழகியமணவாளன்' என்பதைத் தெள்ளத் தெளிவாக அங்கு கூடியிருந்தோரால் அறுதியிட இயலவில்லை. கி.பி.1323ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதால் 1371ஆம் ஆண்டில் 48 வருடத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறுவார் யாருமில்லை. அப்போது வயது முதிர்ந்த கண்பார்வையற்ற ஈரங்கொல்லி ஒருவன் (வண்ணான்) அழகிய மணவாளனின் திருமஞ்சனம் செய்த பிறகு அழகியமணவாளன் உடுத்தியிருந்த கைலியைப் பிழிந்து பிரஸாதமாகக் கொடுக்கப்படும் புனிதநீரை
(ஈரவாடை தீர்த்தம்) சுவைத்து முன்பு எழுந்தருளியிருந்த அழகிய மணவாளனே “நம்பெருமாள்” ஆவார் என்று உறுதி செய்தார்.
அவன் இட்ட "நம்பெருமாள்" என்ற
பெயரே இன்றுவரை வழங்குகிறது என்கிற இந்த செய்தியையும் கடந்த பதிவில் கண்டோம்.
• நம்பெருமாள் (கி.பி.1371ல்) ஆஸ்தானம் எழுந்தருளிய போது மூலஸ்தானம் முழுதுமாக பாழ்பட்டு கிடந்தது. வெயிலிலும் மழையிலும் மூலவர் ரங்கநாதர் காய்ந்தும் நினைந்தும் கிடந்திருக்கின்றார். ஆதிசேஷனின்
சேஷபடம் அவரது திருமுகத்தினை மட்டும் பாதுகாத்தபடியிருந்திருக்கின்றது.
சுந்தரபாண்டியனால் வேயப்பட்ட தங்கவிமானம், தங்கத்தினால் ஆனக் கொடிக்கம்பம், தங்கத்தினால்
செய்த சேரகுலவல்லி, அணிகலன்கள், சிம்மாசனங்கள் அனைத்தும் சுத்தமாக கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இந்த சமயத்தில் உத்தமநம்பி வம்சத்தரான 'கிருஷ்ணராய உத்தமநம்பி' செய்த கைங்கர்யங்கள் முக்யத்துவமானது. மகத்தானது. இவர் வீரகம்பண்ண உடையாரையும், அவரது உறவினரான விருப்பண உடையாரையும் விஜயநகரம் சென்று ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்துள்ளார். கம்பண்ணரும், விருப்பண்ண உடையாரும் திருவிடையாட்டமாக பல கிராமங்களை கோவிலுக்கென்று அர்ப்பணித்து திருப்பணி வேலைகளை மேற்கொள்கின்றனர்.
கோவிலின் ஸ்தலத்தார்களும், உத்தமநம்பிகளும், கோவிலார்களும் வெகுவாக அரசர்களுடன் சேர்ந்து பாடுபட்டு ஸ்ரீரங்கத்தினை புனர்நிர்மாணம் செய்கின்றனர்.
சித்திரையில் விருப்பண உடையார், கோவிலின் நிதிநிலைமையை சீர்செய்யும் பொருட்டும், கோவிலில் ஆராதனைகள் சீராக நடைபெறுவதற்கு தானியங்களை பெருக்குவதற்கும் அருகிலுள்ள அனைத்து கிராம மக்களையும் அரவணைத்து அன்போடு அழைத்து, அரங்கனுக்கு ஒரு தேரோட்டத்துடன் 'பிரம்மோற்சவம்' ஒன்றை கொண்டாடுகின்றார்.
கிராமத்து மக்கள் அனைவரும் தாங்கள் விளைநிலங்களில் விளைந்த தானியங்களை அரங்கனுக்குக் காணிக்கையாக்கி உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
அரங்கனது நித்யபடி பூஜைகளுக்குக் குறைவின்றி தானியங்கள் குவிந்தன. அன்று தொடங்கிய இவ்விழா இன்றும் அன்று போன்றே குறைவற நடந்து வருகின்றது. இந்த விழாவிற்கு ‘விருப்பண் திருநாள்” என்று பெயர்.
(விஜயநகர பேரரசின் சங்கமகுல மன்னன் இரண்டாம் ஹரிஹரன், அவருடைய புதல்வரான விருப்பண்ண உடையார் பெயரில் கி.பி.1383ல் ஏற்படுத்தப்பட்டத் திருவிழா சித்திரை பிரம்மோத்ஸ்வம் ஆகும்.)
கோயிலொழுகு நூலில் கோபண்ணவுடையார்,குண்டு சாளுவயர், மற்றும் விருப்பண்ணஉடையார்
கைங்கர்யம் பற்றி குறிக்கிறது.இதில் கோபண்ணவுடையாருடன் வந்த 'குண்டு சாளுவயர்' அணியரங்கன் திருமுற்றத்திலே பாண்டியன் கைங்கர்யமான பொன்னாலான 'திருக்கொடித்தட்டு' (த்வஜஸ்தம்பம்-கொடிமரம்) துலுக்கனழித்ததால் வெண்கல வார்ப்பாகத் திருக்கொடித்தட்டு பண்ணி நாட்டுவித்தார். (தற்போது அந்த வெண்கல கொடிமரத்திற்கு பொற்கவசம் பூட்டியுள்ளனர்). அதன் அருகே கிழக்கே பெரிய கிருஷ்ணராய உத்தமநம்பி, ஹரிஹரராயரின் குமாரர் உத்தரவுப்படி துலாபுருஷ மண்டமும் கட்டி வைத்தனர். அந்த ராயர் குமாரர் விருப்பண்ண உடையாரும் வந்து, "துலாபுருஷங்கட்டி தாரைவார்க்கையில், பொன்னும், குட்டிக்கோயில் விமானமும் பொன் மேய்ந்து, இந்த ராயர் காணிக்கை இரண்டு பொற்குடம் உள்பட ஒன்பது பொற்குடமும் வைப்பித்து, பெருமாள் பஹுநாளைக்காக எழுந்தருளினபடியாலே நாநாதேசத்திலும் வந்த, பரிஜனங்களுக்கு ஸேவிக்கும்படி, விருப்பண்ண உடையார் பேரிலே சித்திரைத்திருநாள் த்வாஜாரோஹணத் திருநாள் நடத்துகையில்...." என்று விருப்பண்ண உடையார் கைங்கர்யம் பற்றி கோயிலொழுகு விவரிக்கிறது.
வீரகம்பண்ண உடையார் காலத்துக் கல்வெட்டுகள்
ராஜமகேந்திரன் திருச்சுற்றுகளில்[( கி.பி.1371 பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாள் கல்வெட்டு:
A.R.E.No. 55 of 1892)
மற்றும்( A.R.E.No. 47,48 of 1938-39), ( A.R.E.No. 35 of 1948-49)] உள்ளன.
• மேலும் விருப்பண்ண உடையாரின் தாதியான 'கன்னாத்தை' என்பாள் திருவரங்கநாதனுக்கு பாலமுது மற்றும் நெய்யமுது படைப்பபதற்கு ரக்தாக்ஷி மற்றும் அக்ஷய ஆண்டுகளில் முறையே 15 கன்றுகளுடன் கூடிய பசுக்களை தானமாக அளித்தமை பற்றிய கல்வெட்டு ( A.R.E.No. 341 of 1952-53)
ஒன்று ஆர்யபடாள் நுழைவு வாயில் இடது உள்பக்க சுவரில் உள்ளது. மேலும் அதே கைங்கர்யமாக விருப்பண்ண உடையாரின் 'பிரதானி தேவராஜர்' செய்தது பற்றிய கல்வெட்டு (A.R.E.No.77,78 of 1938-39) சந்தன மண்டபம் தென்பக்க சுவரில் உள்ளது.
• சங்கமகுல விஜயநகர அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு
திருச்சி பகுதியை "கோனேரிராயன்" என்போன் மகாமண்டலேஸ்வரனாக ஆண்டு வந்தான்.கி.பி.1486 ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சாளுவநரசிம்மன் என்போன் விஜயநகர் ராஜவானான். இவனின் மூத்த சகோதரர் “ராமராஜராயன்” என்போன் சன்யாசி கோலம் கொண்டு "கந்தாடை ராமானுஜ முனி” பெயருடன் ஸ்ரீரங்கத்தில் (தனது தம்பியின் விஜயநகர அரச அனுமதியுடன் ) பல கையங்கரியங்கள் செய்தது வந்தார்.
இவர்தான் வைணவ கோவில்களில் பிராமணர் பிடியில் இருந்து விடுவித்து சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் ஏற்றமும் மரியாதையும் பெற்றுத் தந்தவர்.
மேலும் எண்ணற்ற திருப்பணிகளும் செய்தனர்.
இவர் வாழ்ந்த வீடு இன்றும் 'ஸ்ரீரங்கம் தெற்கு உத்திரவீதி'யில் உள்ளது.
சைவ சமயத்தின் மீது பற்றுக்கொண்ட, சோழமண்டல அரசனான கோனேரிராஜா திருச்சிராப்பள்ளியிலேபாளையம் பண்ணிக் கொண்டிருக்கையில்,திருவரங்கம் கோயில் சொத்துகளை பறித்து, திருவானைக்காவல் கோவிலுக்கு கொடுக்க உத்தரவிட்டார். திருவரங்கம் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தனக்கு வேண்டியவர்களான கோட்டை சாமந்தனார், மற்றும் சென்றப்ப நாயக்கர் ஆகியோருக்கு குத்தகைக்கு விட்டார். 'புரவரி' 'காணிக்கைவரி' 'பட்டுவரி' 'பரிவட்ட வரி' போன்ற வரிகளை விதித்து திருவரங்கம் கோயில் ஸ்ரீ பண்டாரத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த உயர்ந்த திருவாபரணங்களையும், பொற்காசுகளையும் கவர்ந்து சென்றான். இவ்வாறான கொடுமைகளை பொறுக்க ஒண்ணாத நிலையில்
இதை எதிர்த்து, கி.பி., 1489ல், இரண்டு ஜீயர்கள் மற்றும் 'அழகியமணவாள தாஸர்' எனப்படும் ஒரு ஏகாங்கியும் என, மூன்று பேர், வெள்ளை கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து தங்களது உயிரை மாய்ந்துக் கொண்டனர்.• இந்த விசயத்தை கந்தாடை ராமாநுச முனி
தனது சகோதரன் சாளுவநரசிம்மனின் தளபதி நரசநாயக்கனுக்கு (அப்போது அவன்தான் அரசாண்டு வந்தான் சாளுவநரசிம்மன்(கி.பி. 1491) இறந்து போய் இருந்தான் அவன் மகன்கள் சிறுவர்கள் ) கடிதம் எழுதினார்.
• கந்தாடை ராமாநுச முனியின் (ராமராஜராயர்) கடிதத்தின் மூலமாக
தகவலறிந்த, விஜயநகர சாளுவ அரசனின் தளபதியான நரசநாயக்கன், (கி.பி. 1495 நளவருஷம், ஐப்பசி மாதம் 14ம் நாள்) கோனேரிராயனை போரிட்டு வென்று, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் சொத்துகளை மீட்டுக் கொடுத்தார் என, கோயிலொழுகு கூறுகிறது. கோனேரிராயனை போரில் வென்று கொன்று தனது ஆளுமையை கந்தாடை ராமாநுச முனி திருவரங்கம் கோயிலில் நிலை நாட்டினார்.
( உயிரிழந்த மூவருக்கும், வெள்ளை கோபுரத்தில் சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளன.)
• திருவரங்கம் பெரியகோயிலின் கிழக்கு வெள்ளை கோபுர உட்புறம் வடபுற நிலைக்காலில்,
நெற்றியில் திருமண்காப்பு தரித்து, கையில் தூக்கிய அரிவாள் ஒன்றினைத் தோளில்சுமந்த வண்ணம், இடுப்பில் ஆடை தரித்துக் கழுத்தில் மாலையும் சூடி அரங்கனை வணங்கும் கோலத்தில் ஓர் அடியவரின் சிலை உள்ளது. அந்த சிலைக்கு மேல் உள்ள கல்வெட்டும்
(A.R.E.No. 87 of 1936-37)
உள்ளது.
ஸ்வஸ்திஸ்ரீ சௌமிய வருஷம் தைமாதம் இருபதாம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு படித்தனம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம் பண்ணுகையில் பொறுக்க மாட்டாதேயிந்த திருகோபுரத்திலேறி விழுந்து இறந்த காலமெடுத்த அழகியமணவாளதாசன் ஸ்ரீகாரியம் பெரியாழ்வார் ....
என்று கூறப்பட்டுள்ளது.அந்தச்சிலைக்கு நேர் எதிரே இரண்டு ஜீயர்களின் திருவுருவம் உள்ளது.
• தெற்கு ராஜகோபுரத்தின் கீழ்புறநிலையில் நெற்றியில் திருமண்காப்பு தரித்து, மார்பில் மாலை புரள கூப்பிய கரங்களுடன்
அப்பாவையங்கார் சிலை உள்ளது. சுபமஸ்த்து சௌமிய வருஷம் தை மாதம் நாலாம் தேதி வெள்ளிக்கிழமை நாள் ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு படித்தனம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம் பண்ணுகையில் குடுக்க மாட்டாதே இந்த திருக்கொபுரத்தில் ஏறி விழுந்து இறந்தகாலம் எடுத்த அழகியமணவாளதாசன் ஸ்ரீகாரியம் அப்பாவய்யங்கார். இவருக்கு சுவாமி யெக்காளகள் திருத்தேர் புறப்பாட்டு முதலான அதிகவரிசை பிரசாதித்தருளி பிரம்மமேத சம்ஸ்காரம் பண்ணிவித் தருளி முழுபடித்தனம் கொண்ட ருளினார். யிப்படி நடந்த இந்த முழு படித்தனத்துக்கு விரோதம் பண்ணியவன் ரெங்கத் துரோகியாய் போகக் கடவன் அனுகூலம் பண்ணியவன் ஸ்ரீலட்சுமி பரிபூர்ண கடாக்ஷ பாக்யஸ்தனா இருக்கக் கடவன் “ என்று கல்லெழுத்துக்ள் கூறுகின்றன.
இதில் சைவ,வைணவ சமப்பூசல் என்று கொள்ள முடியாது. அதற்குக் காரணம். ஸ்ரீரங்கம் கோயிலில் கோனேரிராயன் பல கல்வெட்டுக்கள் உள்ளன. அவன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொக்கப்பனை 'கார்த்திக்கை கோபுர வாசல் கதவுகள்' செய்து கொடுத்த கல்வெட்டு உள்ளது , (அந்த கதவுகள் 2005 வரை இருந்தது)
• கோனேரிராயன் சக ஆண்டு 1414 (கி.பி.1492ம் ஆண்டு) பரீதாபி ஆண்டு ஆவணி 26 ஆம் நாள் வெள்ளிக்கிழமை,உத்திர நாளில் கதவுகள் இட்டு இரண்டு கிராமங்களை தானமாக குடுத்தது பற்றிய கல்வெட்டு( A.R.E. No.115 of 1937-38) கார்த்திகை கோபுர வாசல் உள் கீழ் புறம் உள்ளது. (அவன் தந்த கதவுகள் கி.பி.2002 ம் ஆண்டு நடந்த திருப்பணியின் போது அகற்றப்பட்டு மடைப்பள்ளியில் வைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்போடு மறைந்து போனது.)• கி.பி.15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயநகர ஆட்சியின் கீழ் சிற்றரசனாக இருந்தவன் கோனேரிராயன் (கி.பி.1486-1495) இவனது ஆட்சிப் பகுதி வடக்கே காஞ்சிபுரத்திலிருந்து தெற்கே திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் உட்பட்ட பகுதிகள் அடங்கியிருந்தன. 1471இல் கோனேரிராயன் திருச்சிராப்பள்ளி பிராந்திய தலைவரானார். இவரது தலைநகர் காஞ்சிபுரமாகும். திருவரங்கத்தில் இவனது கல்வெட்டே தமிழ் மன்னர்களின் கடைசி கல்வெட்டாகும்.
• சாளுவ வம்சம் (கி.பி1485- 1491) முடிவு:-
• கி.பி.1485ல் சங்கம மரபைச் சேர்ந்த இறுதி விஜயநகரப் பேரரசர் பிரௌத ராயன் இறப்பிற்குப் பின், சாளுவ மரபின் படைத்தலைவர் சாளுவ நரசிம்ம தேவ ராயன் (கி.பி. 1485 – 1491) இராணுவப் புரட்சி மூலம் விஜயநகரப் பேரரசின் அரியணை ஏறினார். இவருக்குப் பின் வந்த திம்ம பூபாலன் மற்றும் நரசிம்ம ராயன் II ஆகியோர் கி.பி.1491 முதல் 1505 முடிய பேரரசை ஆண்டனர்.• துளுவ வம்சம்(கி.பி.1491-1542):-
கி.பி.1505 பேரரசின் துளுவ மரபின் பெரும் படைத்தலைவர் துளுவ நரச நாயக்கன் இராணுவப் புரட்சி செய்து சங்கம மரபினரிடமிருந்து விஜயநகரப் பேரரசை கைப்பற்றி அரியணை ஏறினார். கி.பி.1509ல் துளுவ நரச நாயக்கரின் மகன் கிருஷ்ணதேவராயரின் ஆட்சி துவங்கியது.
•கிருஷ்ணதேவராயர் (கி.பி.1509 - 1529) ஆட்சி:- ஸ்ரீகிருஷ்ணதேவராயனின், தந்தை நரச நாயகன், உண்மையில் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாய் கொண்டவர் இல்லை, கர்நாடகத்தில்(தற்போதைய கூர்க்) துளு என்ற மொழியை தாய்மொழியாய் கொண்டவர், அவர் தலைமை தளபதியாக வேலை பார்த்த கடைசி சாலுவ வம்ச மன்னனான நரசிம்ம ராயனுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் மன்னன் ஆனார்.
கிருஷ்ணதேவராயர் இந்து வீரர்களுடன், முஸ்லீம் படைவீரர்களையும் தனது படைதுறைகளில் சேர்த்து வளுவான படையணிகளை உருவாக்கினார். பத்தாண்டுகளில் தன் போர்த் திறமையால் வடக்கில் இருந்த தக்காணச் சுல்தான்களின் ஆக்கிரமிப்புகளை வென்றார்.
கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் விஜயநகரப் பேரரசு நாற்புறங்களிலும் விரிவாக்கப்பட்டு, புகழின் உச்சத்தில் இருந்தது. தக்காண சுல்தான்களின் வடக்கு, கிழக்குப் பகுதிகளையும் மற்றும் கலிங்க நாட்டையும் கைப்பற்றி விஜயநகரப் பேரரசில் இணைத்தார். கி.பி.1520ல் நடைபெற்ற ராய்ச்சூர் போரில் கிருஷ்ணதேவராயர், பீஜாப்பூர் சுல்தானகத்தை வெற்றி கொண்டார். போரின் முடிவில் பிஜப்பூர் சுல்தான் கிருஷ்ண நதியின் அப்பாலுக்கு விரட்டியடிக்கப்பட்டார். ராயர் மிகுந்த இறை நம்பிக்கை உடையவராகவும் இருந்தார் .
இன்றைய ஆந்திராவில் உள்ள திருவேங்கடமலைக்கு (திருப்பதி ) சென்று, தங்கம் வைடுரியங்களால் ஆன பொருட்களை தானமாக வழங்கினான். மேலும் திருப்பதி கோயிலுக்கு பல தானங்கள் செய்து, கடைசியாக, தன் இரு பட்டத்து ராணிகளுடன் தன் சிலையையும் (சென்னாதேவி, திருமலாதேவி) சேர்த்து மூன்று பேரும் அங்கு வேங்கடவனை நோக்கி வணங்குவது போல சிலைகளைச் செய்து வைத்தான்.
இன்றும் திருவேங்கடமலையில் சென்றால் இவர்கள் மூவரின் வெண்கல சிலைகனை பார்க்கலாம்.
கிருஷ்ணதேவராயர் தாம் வைணவராக இருந்தபோதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார். கலை இலக்கியப் புரவலராகவும் அவர் திகழ்ந்தார். எனவே 'ஆந்திரபோஜர்' என்று அவர் அழைக்கப்பட்டார்.
•அஷ்டதிக்கஜங்கள் என்ற எட்டு சிறந்த அறிஞர்கள் அவரது அவையை அலங்கரித்தனர். அவர்களின் முதன்மையானவர் அல்லசானி பெத்தண்ணா. ஆந்திரகவிதாபிதாமகர் என்று அவர் புகழப்பட்டார். அவரது முக்கிய படைப்புகள் மனுசரிதம் மற்றும் ஹரிகதாசாரம் என்பதாகும். பிங்கலி சூரண்ணா, தெனாலி ராமகிருஷ்ணா இருவரும் சிறந்த அறிஞர்களாகத்திகழ்ந்தனர். ஆமுக்தமால்யதம் என்ற தெலுங்கு மொழி நூலையும், ஜாம்பவதி கல்யாணம், உஷாபரிணயம் என்ற வடமொழி நூல்களையும் கிருஷ்ண தேவராயர் இயற்றியுள்ளார். • ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் மீது மிகுந்த ஈடுபாடு உடைய ராயர் ஆண்டாளை மையக்கருவாகக் கொண்டு “ஆமுக்த மால்யதா’ என்ற நுலை எழுதினார். இந்த நூல் தெலுங்கு இலக்கிய உலகில் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாக கருதப் படுகிறது.
•ஸ்ரீகிருஷ்ணதேவராயர் திருவரங்கம் பெரியகோயிலுக்கு சக ஆண்டு 1438 (கி.பி.16-02-1517) தாது வருஷம் மாசி மாதம் 11ம் நாள் திங்கட்கிழமை வருகை தந்து, அன்றே பல விலையுயயர்ந்த ஆபரணங்களையும், நவரத்னங்களையும் திருக்கோயிலுக்கு நன்கொடையாகவும், சில கிராமங்களைத் தானமாகவும் தந்தது பற்றிய தெலுங்கு மொழிக் கல்வெட்டு (A.R.E.No.341 of 1950-51 - இரண்டாம் திருச்சுற்று மேற்குப் பக்கச் சுவர் அடித்தளப்பகுதியில்) கூறுகிறது. மேலும் இவரது பெயரால் மாசி மாதம் தேரோட்டத்துடன் கூடிய 'மாசி பிரம்மோத்ஸவம்' நடைபெற்றதாக இரு தமிழ் கல்வெட்டுக்களின்
(A.R.E.No.42 of 1938-39)(A.R.E.No.265 of 1930)
மூலம் அறியமுடிகிறது. தற்போது மாசி தெப்போத்ஸவம் மட்டுமே நடைபெறுகிறது.
தொடர்ச்சி அடுத்த பதிவு-Postல பார்ப்போம்.
அன்புடன்
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்
ஒரு தியாக வரலாறு:
ReplyDeleteஒரு தாசியின் கதை: இதேபோல, கடந்த, 15ம் நூற்றாண்டின் இறுதியில், மதுரை சுல்தான்கள், கோவிலை கைப்பற்றி, அவர்களின் தளபதியை ஸ்ரீரங்கத்தில் தங்கவைத்து, பக்தர்களை வழிபாடு செய்யாமல் தடுத்தனர். இதனால் வேதனையடைந்த கோவிலின் தாசி வெள்ளையம்மாள், சுல்தானின் தளபதியை மயக்கி, தன்வசப்படுத்தினார். அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி, வெள்ளை கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச்சென்று அவரை கட்டிப்பிடித்தபடியே கீழே குதித்தார்.
ரங்கநாதருக்காக உயிரிழந்த தாசியின் வம்சாவழியினர் இறந்தால், அரங்கனின் வஸ்திரம், மாலை, சமையற்கட்டில் இருந்து வாய்க்கரிசி, ஈமச்சடங்குகாக நெருப்பு கொடுப்பது, கடைபிடிக்கப்பட்டது. சுல்தானின் தளபதி இறப்புக்குபின், பக்தர்கள் கோவிலுக்கு சகஜமாக செல்லும் நிலை ஏற்பட்டது. திருவரங்கம் கோயில் நடைமுறைகள் குறித்து எழுதப்பட்ட நூலான, "கோயில் ஒழுகு' என்ற நூலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
• ஜலாலுதீன் ஆசன் கான், மதுரையின் முதல் சுல்தான் ஆவார். இவரது மகன் இப்ராஹீம் டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கிடம் பணியாற்றினார். மாபார் பிரிந்து சென்ற செய்தியை கேட்டவுடன் ஆத்திரம் அடைந்த துக்ளக் இப்ரஹீமை கொலை செய்தார். பெரும் படையுடன் மாபாரை மீண்டும் கைப்பற்ற தெற்கு நோக்கி கிளம்பினார். ஆனால் வழியில் உடல் நலக்குறைவினால் படையெடுப்பை கைவிட நேர்ந்தது. ஜலாலுதீனின் ஆட்சிக்கு வந்த ஆபத்து நீங்கியது. ஜலாலுதீனின் மகளை மொரோக்கோ நாட்டின் வரலாற்றாளர் இப்னு பதூதா மணந்திருந்தார். 1340 ஆம் ஆண்டு ஜலாலுதீன் அவருடை பிரபு (சிற்றரசர்) ஒருவரால் கொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின் சுல்தானாகிய அலாவுதீன் உதாஜி, குதுப்துதீன் ஃபிரோஸ் ஆகியோரும் முடிசூடிய குறுகிய காலத்தில் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு பின்னர் மதுரை சுல்தானகம் கியாத்துதீன் முகமது தம்கானியின் ஆட்சியின் கீழ் வந்தது. இபுன் பதூதா கியாத்துதீனின் ஆட்சி காலத்தில் மதுரைக்கு வந்தார். அவரது குறிப்புகள் கியாத்துதீன் ஆட்சி ஒரு கொடுங்கோலனின் ஆட்சி என்று வர்ணிக்கின்றன. கியாத்துதீன், போசள மன்னர் மூன்றாம் வீர வல்லாளன் மோதினார். முதலில் தோல்வி அடைந்தாலும் பின்னர் கண்ணனூர் கொப்பம் கோட்டையின் முற்றுகையின் (1343) போது வல்லாளரை சிறைபிடித்தார். வல்லாளரைக் கொன்று, வைக்கோல் அடைக்கப்பட்ட அவரது உடலை மதுரை கோட்டை சுவர்களில் காட்சிக்கு வைத்தார். 1344 ஆம் ஆண்டு வீரிய மருந்து ஒவ்வாமை காரணமாக, கியாத்துதீன் மரணமடைந்தார்.
ReplyDelete• கியாத்துதீன் மரணத்திற்கு பிறகு மதுரை சுல்தானகம் வலுவிழந்தது. விஜயநகரப் பேரரசின் படைகள் இளவரசர் குமார கம்பண்ண உடையாரின் தலைமையில் தெற்கு நோக்கி படையெடுக்கத் தொடங்கின. கம்பண்ணரின் மனைவி கங்கதேவி எழுதிய மதுரா விஜயம் என்ற நூலில் இப்படையெடுப்பு விவரிக்கப்பட்டுள்ளது. 1344-1371 காலகட்டத்தில் நசுரீதின் தம்கானி, ஷம்சுதீன் ஆதில் ஷா, ஃபக்ரூதின் முபாரக் ஷா, அலாவுதீன் சிகந்தர் ஷா ஆகியோர் மதுரையின் சுல்தான்களாக இருந்தனர். விஜய நகர் படைகள் சம்புவரையர்களை வென்று, ஸ்ரீரங்கத்தை கைப்பற்றி மதுரையை நோக்கி முன்னேறின. சுல்தான்களுடனான இறுதி யுத்தத்தில், கம்பண்ணர், சிக்கந்தர் ஷாவுடன் தனியே போரிட்டு சுல்தான் தலையை வெட்டி சாய்த்ததாக மதுரா விஜயம் கூறுகிறது. சிக்கந்தர் மற்றும் ஃபக்ருதீனின் சமாதிகள் மதுரை நகரில் உள்ள கோரிப்பாளையம் தர்காவில் உள்ளன. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவும் சிக்கந்தர் ஷாவின் நினைவாக எழுந்ததாக நம்பப்படுகிறது
ReplyDelete• 14ம் நூற்றாண்டில் கங்கதேவியால் எழுதப்பட்ட ஒரு சமஸ்கிருதக் கவிதை நூல் "மதுரா விஜயம் (அ)
வீர கம்பராய சரித்திரம்" ஆகும். கங்கதேவியின் கணவர் விஜயநகரப் பேரரசின் இளவரசர் குமார கம்பண்ணர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து மதுரை சுல்தானகத்தை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றுவதை இந்நூல் விவரிக்கிறது.
மதுரா விஜயத்தில் ஒன்பது பகுதிகள் உள்ளன. முதல் பகுதிகளில் கங்க தேவி விஜயநகரப் பேரரசின் பின்புலம், முதலாவது புக்காராயரின் ஆட்சி சிறப்புகள், அவரது மகன் குமார கம்பண்ணரின் பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்து விவரிக்கிறார். நூலின் நடுப்பகுதிகள், கம்பண்ணர் தெற்கு நோக்கி படையெடுத்து காஞ்சிபுரத்தைக் கைப்பற்றுவதை விவரிக்கின்றன. சம்புவரையர்களை வென்று காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிய பின்னர் கம்பண்ணர் படையெடுப்பை சற்றே நிறுத்தி ஓய்வு கொள்கிறார். அப்போது 'மதுரை மீனாட்சியம்மன்' ஒரு சிறுமி வடிவில் கம்பண்ணர் முன் தோன்றி தென் தமிழ் நாட்டை மதுரை சுல்தான்களின் கொடுங்கோலாட்சியிலிருந்து விடுவிக்குமாறு வேண்டுகிறார். அதற்கிணங்கி மீண்டும் தெற்கு நோக்கிப் படையெடுக்கிறார் கம்பண்ணர். நூலின் இறுதிப்பகுதிகளில் மதுரை மீதான படையெடுப்பு, கம்பண்ணர் அடைந்த வெற்றிகள், கடைசி சுல்தான் சிக்கந்தர் ஷாவினை அவர் தனித்துப் போரிட்டு வெல்லுதல், 'திருவரங்கம் பெரியகோயிலை' மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்துதல் போன்ற செய்திகள் சொல்லப்படுகின்றன.
•• மதுரை சுல்தானகத்தைப் பற்றி அறிய இரு சமகாலத்திய சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். இபுனு பதூதாவின் குறிப்புகளும், கங்கதேவியின் மதுரா விஜயம் இரண்டுமே, மதுரை சுல்தான்களை கொடுங்கோலர்களாகவும், இந்து குடிமக்களை கொடுமை படுத்தியவர்களாகவும் சித்தரிக்கின்றன. கியாத்துதீன் இந்துகளுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டு மனம் வருந்திய பதூதா, “இக்கொடுமைகளின் காரணமாகவே இறைவன், கியாத்துதீனின் மரணத்தை துரிதப்படுத்தினார்” என்று குறிப்பிடுகிறார். மதுரா விஜயம் “குளிக்கும் பெண்களின் மார்பில் பூசிய சந்தனம் கலந்து வெளிர் நிறமாக ஓடிய தாமிரபரணி, சுல்தான்களின் ஆட்சியில் பலியிடப்பட்ட பசுக்களின் ரத்தம் கலந்து சிவந்து ஓடியது” எனக் குறிப்பிட்டுகிறது.