Wednesday, October 10, 2018

திருவரங்கம் பெரியகோயில் (பகுதி - 3)





• 6வது திருச்சுற்று



                       ||திருவிக்கிரமன் திருவீதி||

• 6வது திருச்சுற்று
 சக்கரம்,சங்கம் என்னும் துவாரபாலகர்களை வணங்கி விட்டு 'புவர்லோகம்' என்று அழைக்கப்படும்  6 வது திருச்சுற்றாகிய 'திருவிக்கிரமன்
திருவீதி' என்று அழைக்கப்படும் ப்ராகாரத்தினுள் நுழைவோம்.
ஒருபுறம் மதிலும் எதிர்பக்கத்தில் கட்டிடங்களும் காணப்படுகின்றன. 
இது ஜவுளிக்கடைகளும்,
பாத்திரக்கடைகளும் நிறைந்து ஒரு கடைவீதி மாதிரி அமைந்துள்ளது. இந்த
வீதியில் பெருமாள் திருவாகனங்கள் உலாப்போகும் காரணத்தால் இதற்கு
உள் திருவீதியென்றும் உத்திரவீதி என்றும் பெயர். திருக்கோயிலின் உள்துறை நிர்வாகிகள் தங்கும் வீதியாக  'உள்துறை வீதி'  என்றும்
கூறப்படுகிறது.
 யானைகட்டும்
மண்டபம்,உத்தராதிகள் (பாங்கூர்) சத்திரம், தைத்தேர் நிற்குமிடம், அர்ச்சகர்களின் திருமாளிகை, ஸ்ரீஉத்தம நம்பி திருமாளிகை, மேலக்கட்டைகோபுரம்(இதன் வழியாக வெளியே வந்தால், 7வது மேற்கு திருச்சுற்று மற்றும் தெப்பக்குளத்தை அடையலாம்), ஸ்ரீபுத்தங்கோட்டம் ஸ்வாமி திருமாளிகை, ஸ்ரீஎம்பார் திருமாளிகை, வடக்கு கட்டை கோபுர வாசல் ( இவ்வழியே
 7வது வடக்குச் சுற்று,
வடதிருக்காவேரி, திருமங்கை மன்னன் படித்துறை, தசாவதாரன் சந்நதி ஆகியவற்றை காணச் செல்லலாம்)
தாயார் சந்நதிக்கு செல்லும் வடபுறக்கோபுர வாசல், அதன் எதிரே
புரட்சித்துறவி ஸ்ரீராமானுஜர் தங்கியிருந்து ஸ்ரீரங்கத்து நிர்வாகத்தைக்
கவனித்த மடமாகிய
 'ஸ்ரீரங்கநாராயண
ஜீயர் ஸ்வாமி மடம்' என்ற பெயரில் தொன்று தொட்டு ஜீயர்கள்
பரிபாலனத்திலேயே இருந்து வருகிற மடம்
அஹோபில மடம்,
ஆஞ்சநேயர் சந்நதி,(பெரிய பெருமாள் திருவடி இங்குள்ளது)
கீழக்கட்டை கோபுர வாசல் ( இதன் வழியே 7வது கிழக்கு திருச்சுற்று, காட்டழகிய சிங்கர் கோயில் ஆகியவற்றிற்கு செல்லலாம். அஞ்சாவது கிழக்கு திருச்சுற்றிலுள்ள ஆயிரம் கால் மண்டபம், சேஷராயர் மண்டபம் கண்டுகளிக்க வழியான வெள்ளைக்கோபுரம் இந்த 6வது வீதியில் உள்ளது. அரையர்கள் திருமாளிகை, கோயில் கந்தாடைஅண்ணன் ஸ்வாமிதிருமாளிகை,
 மணவாள
மாமுனிகள் மடம் போன்றனவும் இதில்தான் உள்ளது. மணவாள மாமுனிகள்
தமது அவதார ரகசியத்தை உத்தம நம்பி என்னும் தமது சீடருக்கு இங்குதான்
காட்டியருளினார்.
இம்மடத்தின் தூண்களில் இந்நிகழ்ச்சி செதுக்கப்பட்டுள்ளது. பெரியபெருமாளின் திருப்பார்வை படும் இடம் 'மணவாளமாமுனிகள் மடம்' ஆகும் என்பது ஐதீகம்.
 மார்வாரி சத்திரம் ஆகியன உள்ளன. 5வதுதிருச்சுற்று நுழைவதற்கான நான்முகன் கோபுரம் (அ) ஸ்ரீரங்கா ரங்கா ரங்கா கோபுரமும் இந்த (தெற்கு) உத்தர வீதியில் உள்ளது.


    ||:அரசியல் வரலாற்று மரபு:||

வரலாறு (History) (கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: "ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு") என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

வாய்மொழி வரலாறுகளே வரலாற்றின் முதல் வடிவங்கள் எனலாம்.
எழுத்து வடிவ வரலாறும் எழுத்துவடிவ இலக்கியமும் வலுவாக உருவாகிய  பிறகு  'வாய்மொழி வரலாறு' அழியத் தொடங்கின.
  வரலாறென்பது இறந்தகாலத்தை நிகழ்காலம் வழியாக எதிர்காலத்துடன் இணைக்கும் ஒரு பெரிய சித்தரிப்புதான். தொடர்ச்சியை உருவாக்குவதே அதன் இலக்கு.

• வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்திருந்த மக்கள்
பெரிய பெரிய பெருங்கற்குழிகளில் (பாழிகளில்) பிணங்களைப் புதைக்கும்
வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இக் குழிகளில் பலவகையான இரும்புக்
கருவிகளும் சக்கரத்தைக் கொண்டு வனையப்பட்ட மட்பாண்டங்களும்
புதைக்கப்பட்டுள்ளன. இத்தகைய புதைகுழிகள் மேற்காசிய நாடுகளிலும்,
வடஆப்பிரிக்காவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
அவற்றுக்கும், தமிழகத்துக் குழிகட்கும் பல ஒற்றுமைகள் தோன்றுகின்றன.
ஆதிச்சநல்லூரிலும், கீழடி மற்றும் புதுச்சேரிப் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்ட
புதைபொருள்களுள் பல சைப்ரஸ் தீவிலுள்ள ‘என்கோமி’ என்னும்
இடத்திலும், பாலஸ்தீனத்திலுள்ள காஸா, ஜெரார் என்னும் இடங்களிலும்
கண்டெடுக்கப்பட்ட புதைபொருள்களைப் போலவே காணப்படுகின்றன.
இவற்றையெல்லாங் கொண்டு பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைகளையும்
குடிப் பெயர்ச்சிகளையும் ஒருவாறு யூகித்து அறியலாம்.

• இவ்வாறு ‘கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தக்குடி'யான தமிழ்க்குடிச்சமூகம் சங்ககாலத்தின் தொடக்க காலத்திலேயே தன்னுடைய நிலவியல் எல்லைகளை தெளிவாக வகுத்துக்கொண்டிருந்ததை நாம் பல சங்கப் பாடல்களின் மூலம் அறியலாம். இவ்வாறு தன்னுடைய நிலவியல் எல்லைகளை தமிழ்ச்சமூகம் எப்போது பதிவுசெய்ததோ அதையே தமிழக வரலாற்றின் தொடக்கமாக கருதலாம்.
சிலப்பதிகாரம் தமிழ்நிலத்தை வரையறை செய்கிறது.
"நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு..." [வேனில்காதை]
(வடக்கே நெடியோனாகிய திருமால் நிற்கும் வேங்கட மலை, கீழே தொடிவளை அணிந்த தென்குமரியின் கடல். நடுவே உள்ளது தமிழ்நன்னாடு என்கிறார் இளங்கோவடிகள்)
இந்த நில அடையாளம் காலம் செல்லச்செல்ல மேலும் பரவலான அங்கீகாரம் பெற்றது என்பதை தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பனம்பாரனார்
"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து.."
என்று சொல்வதிலிருந்து காணலாம்.

• தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக தமிழ்மொழியே இருந்துள்ளது என்பதை சிலப்பதிகார வரியும் பனம்பாரனாரின் வரியும் காட்டுகின்றன. ‘தமிழ்கூறு நல்லுலகம்’ என்ற சொல்லாட்சி தமிழ்பேசப்படுவதனாலேயே இந்த நிலப்பகுதி தங்களுடையதாக ஆயிற்று என்று அன்றைய தமிழர் எண்ணியிருந்ததைக் காட்டுகிறது.
நிலம், மொழி என்னும் இவ்விரு சுயஅடையாளங்களும் உருவாகிவந்த காலகட்டத்தில் தமிழ் வரலாறு தொடங்குகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். பழந்தமிழ்நூல்கள் குறிப்பிடுவதுபோல திருப்பதிக்கு தெற்கே குமரிவரைக்கும் அரபிக்கடல் முதல் வங்காளவிரிகுடா வரைக்கும் விரிந்திருக்கும் நிலத்தை அந்த வரலாற்றின் களம் என்று வரையறை செய்யலாம்.
பழந்தமிழகத்தின் வரலாறானது பண்டைய எகிப்து,
பாபிலோனியா, சுமேரியா, ரோம், கிரீசு ஆகிய நாடுகளின் வரலாறுகளுடன்
தொடர்பு கொண்டுள்ளன.
தமிழக வரலாற்றைக் கீழ்க்காணுமாறு பகுத்துக் கொள்ளலாம்:
வரலாற்றுக்கு முற்பட்ட காலம், சங்க காலம், பல்லவர் காலம், பாண்டியர்
சோழரின் பேரரசுக் காலம், மத்திய காலம், பிற்காலம் என ஆறு காலங்களாக
வரையறுத்துக் கொள்ளலாம். இப் பல்வேறு காலங்களில் வாழ்ந்துவந்த
தமிழரின் வாழ்க்கை வரலாறுகளை ஆராய்ந்தறிவதற்கு நமக்கு உதவியுள்ளவை
புதை பொருள்கள், சங்க இலக்கியங்கள், தமிழ்நாட்டைப் பற்றி அயல்நாட்டு
வரலாற்று நூல்களில் காணப்படும் குறிப்புகள், புராணங்கள், சமய
இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், முஸ்லிம் வரலாற்று
ஆசிரியர்களின் குறிப்புகள், பிரிட்டிஷ் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனிகள்,
அரசாங்கங்கள் ஆகியவற்றின் ஆவணங்கள், டச்சு போர்ச்சுகீசியப்
பாதிரிகளின் நாட்குறிப்புகள், கடிதங்கள், அறிக்கைகள், புதுச்சேரி
ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புப் போன்ற ஆவணங்கள்
ஆகியவையாம். பிற்கால வரலாற்றிற்கு இந்திய விவரங்களின் ஆவணங்கள்
மிகப் பயன்படுகின்றன. தமிழகத்தில் கோயில்களிலும் குகைகளிலும்
அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களும் அவ்வக்
காலத்து மக்களின் கலை வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன. ஆகையால், தமிழக
வரலாறு எழுதும் முயற்சிக்கு அவை பெரிதும் துணைபுரிகின்றன.
ஆனால், விரிவான வரலாறு ஒன்று
எழுதுவதற்கு இவையும் போதுமானவை என்று கூறமுடியாது. தமிழகத்தில்
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் முப்பதினாயிரத்துக்கு மேற்பட்டவை
இன்னும் பதிப்பிக்கப்படாமலே உள்ளன. அவை வெளியாகக் கூடிய செய்திகள்
இப்போது தொகுக்கப்பட்டுள்ள செய்திகளுக்கு முரண்பாடாகவும், விளக்கங்
கொடுக்கக்கூடியனவாகவும், கூடுதலான தகவல்கள் அளிக்கக்கூடியனவாகவும்
இருக்கக்கூடும்.

  தமிழக வரலாற்றைத் தொகுக்க உதவும் கல்வெட்டுகள் பல்லவர்
காலத்தில்தான் தொடங்குகின்றன. பல்லவர்கள் காலத்திய கல்வெட்டுகள் ஏழு, எட்டாம்
நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை.
     பாண்டியர் சோழர் காலத்திய வரலாற்றைத் தொகுப்பதற்கும் அவர் காலத்திய
மக்கள் சமுதாயத்தின் நிலையை அறிந்து கொள்ளுவதற்கும்
கல்வெட்டுகளேயன்றி அக் காலத்துப் பொறித்து அளிக்கப்பெற்ற செப்பேட்டுப்
பட்டயங்களும் பெரிதும் துணை புரிகின்றன. வேள்விக்குடிச் செப்பேடுகளும்,
பெரிய சின்னமனூர்ச் செப்பேடுகளும் கிடைத்திராமற் போனால் ஏழு முதல்
பத்தாம் நூற்றாண்டு வரையிலான பண்டைய பாண்டியர் வரலாறும்,
களப்பிரரைப்பற்றிய சில தகவல்களும் நம் கைக்கு எட்டியிராது.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆளத்துவங்கிய, 18-ஆம் நூற்றாண்டில் தான்
இந்திய வரலாற்றை எழுத வேண்டிய கவனஈர்ப்பு
 அறியப்பட்டது எனலாம். ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் பெரும்பாலும் பேரரசர்கள், பரம்பரையாக ஆட்சி செய்வது போன்றவற்றையே எழுதிவந்தனர். அரசர் தவிர வேறு எந்தவிதமான பயனுள்ள அரசியல், சமூக அமைப்புகளைப்பற்றியும் இவர்கள் எவ்விதக் குறிப்பும் கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் இந்திய மக்கள் சோம்பேறித்தனமான பிற்போக்கு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று ஆழமான எண்ணங்களைத் தம் மனதில் கொண்டே வரலாறை எழுதினர். பாகுபாடற்ற அணுகுமுறையுடன் இந்திய வரலாறு இவர்களால் பார்க்கப்படவில்லை என்னும் கருத்து இன்றளவிலும் உள்ளது.
 சர் வில்லியம் ஜோன்ஸ், சார்லஸ் வில்கின்ஸ், H.T. கோல்புரூக், H.H. வில்சன்,மேக்ஸ் முல்லர் உட்பட பல ஐரோப்பிய அறிஞர் பெருமக்கள் இந்திய நாகரிகத்தையும், பண்பாட்டையும் புரிந்துகொள்வதற்கும், இந்திய வரலாறு பின்பு சரித்திர ஆசிரியர்களால் எழுதப்படுவதற்கும் இவர்களது எழுத்து உதவியாக இருந்துவந்துள்ளது. இவர்களின் எண்ணமும் எழுத்தும் கூட ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாறு எழுதப்பட்டதற்கு காரணமாக அமைந்தது என்று கருதுவோரும் உண்டு.
ஜான் ஸ்டூவர்ட் எழுதிய பிரித்தானிய இந்தியாவின் வரலாறு (History of British India) என்னும் நூல் 1817-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 'இந்தியர்களின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் காட்டுமிராண்டித்தனமானது, காரண காரியங்களுக்கு எதிர்மறையானது' என்று இந்நூல் வலியுறுத்தியது. ஆங்கில அதிகாரிகள் இந்தியா வருவதற்கு முன் பயிற்சியின் போது இந்நூலை ஒரு பாடமாகவே கற்று வந்தனர். இந்நூல் இந்தியர்கள் குறித்த ஒரு மோசமான மனப்பான்மையை அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தியது.

வி. ஏ. சிமித் என்னும் ஆங்கில அதிகாரி, இது போன்று வந்தவர்தான். இவர் ஆக்ஸ்போர்டு இந்திய வரலாறு (The Oxford history of India) என்னும் நூலை எழுதினார். ஆனால் ஸ்டூவர்ட் மில் போன்று அல்லாமல் இந்தியர்களைக் குறித்து வின்சென்ட் சிமித் அவ்வளவு மோசமான எண்ணம் கொண்டிருக்கவில்லை. இருந்தாலும் இந்தியர்கள் 'ஆளத்தெரியாதவர்கள்' என விவரிக்கிறார். இதுபோன்று ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாற்றை எழுதுவதற்கு இந்தியச் சரித்திர ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்திய அரசுமுறை குறித்தும் அதன் மேன்மை குறித்தும் பலவாறு விளக்கிவந்தனர்.

பிற்காலத்தில் இந்திய வரலாறு அதன் உண்மையான பரிமாணத்துடன் எழுதப்படவேண்டும் என பல அறிஞர்கள் விரும்பி, அவ்வாறு எழுதப்பட்டும் வந்துள்ளது.
கல்வெட்டுகள்,செப்பேடுகள், ஓவியங்கள், சுவடிகள்,இலக்கியங்கள் ஆகியவற்றைக் கொண்டு 19ம் நூற்றாண்டு வரையிலான தென்னிந்திய வரலாறு கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
அவர்களால் உருவாக்கப்பட்டது.
கே.ஏ.நீலகண்டசாஸ்திரி தென்னிந்திய வரலாற்றை எழுதியதில் தனிப்பட்ட ஆளுமை செலுத்தியவர். அவருடைய வரலாற்று ஆய்வுகள் இன்றைக்கும் தமிழ்ச்சமூகம் குறித்த ஆழ்ந்தபுரிதலுக்கு உறுதுணையாக உள்ளது.

 முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு பற்றி அறிய முற்படும் போது,
சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பேரரசுகளே நான்கு பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்கள் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர், இதனால் உலகில் அழியாமல் வழக்கத்திலிருந்த சில பழமையான இலக்கியங்களின் வளர்ச்சி சாத்தியமானது. இவர்கள் ரோமப் பேரரசுடன் அதிகப்படியான கடல்வழி வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இப்பகுதியின் தலைமைக்காக இந்த மூன்று வம்சத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக போரிட்டுக் கொண்டனர். மூன்று பேரரசுகளும் பாரம்பரியமாக ஆட்சி செய்துவந்த இந்தப் பகுதியை மூன்றாம் நூற்றாண்டில் நுழைந்த களப்பிரர்கள் விரட்டியதால் இப்பகுதியின் பாரம்பரிய ஆட்சி வடிவம் மாறியது.

பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் மீட்டெழுந்து களப்பிரர் ஆதிக்கத்தை முறியடித்து தங்களின் பாரம்பரிய பேரரசுகளை மீண்டும் நிலைநாட்டினர். வீழ்ந்திருந்த 'சோழர்கள்' ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும் பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் சோழப் பேரரசை விரிவுபடுத்தினர். வங்காள விரிகுடா பகுதியில் சோழப் பேரரசு சுமார் 3,600,000 கி.மீ அளவிற்குப் பரவி இருந்தது.
14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வடமேற்கு பகுதியிலிருந்து வந்த இசுலாமிய படைகளின் ஊடுருவல் காரணமாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டின் மையப்பகுதியில் சேர,சோழ,பாண்டியர்களாகிய பண்டைய மூன்று தமிழ் பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது. விஜயநகரப் பேரரசின் கீழ் 'தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள்' தமிழ்ப் பகுதியை ஆட்சி செய்தனர். மராத்தியர்களின் குறுகிய கால வருகை தமிழ்ப் பகுதியில் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகைக்கு வழிவகுத்தது. பதினேழாம் நூற்றாண்டின் போது இவ்வாறு வணிகம் செய்ய வந்தவர்கள் இறுதியில் இந்தப் பகுதியின் பூர்வீக ஆட்சியாளர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய 'சென்னை மாகாணம்' பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.
இப்பகுதி 'பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால்' நேரடியாக ஆட்சி செய்யப்பட்டது.

 இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மொழியியல் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு 'தமிழ்நாடு' மாநிலம் உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவான பிறகு
அரசியல் நிலைமை மூன்று விதமான நிலைகளை அடைந்துள்ளது. 1947 ஆம் ஆண்டுக்கு பிறகு இருந்த காங்கிரசு கட்சியின் செல்வாக்கு 1960 ஆம் ஆண்டில் திராவிட கட்சியின் கொள்கைகளால் மாறியது. 1990 ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த நிலை நீடித்திருந்தது. திராவிட அரசியல் கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கூட்டணி அரசாங்கம் அமைக்கும் நிலையை தற்போது கொண்டிருக்கிறது.

• அரசியல் வரலாற்று மரபில் திருவரங்கம் பெரியகோயில்

திருவரங்கம் பெரியபெருமாள் திரேதாயுகத்துப் பெருமாள் என 'புராண மரபு' மூலம் நம்பப்படுகிறது. புராணத்தில் கூறப்படும் 'தர்மவர்மா' மற்றும் 'கிளிச்சோழன் என்னும் கிள்ளிவளவன்' ஆகியோரின் காலம் சரிவர
அறியமுடியவில்லை.

• சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் பெரிய கோயில் புகழ் பெற்றது. அதனால் இரண்டாயிரம் ஆண்டுகளாக திருவரங்கம் பெரியகோயில் ஆகம முறையிலான வழிபாடு நடப்பது அறியமுடிகிறது.  சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் "விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், 'ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன்' என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது" என வர்ணிக்கப்படுகிறது.
அகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்) திருவரங்கம் பெரியகோயிலில் நடக்கும் 'பங்குனி உத்திரம்' திருவிழா பற்றி குறிப்புள்ளது.

• திருவரங்கம் பெரியகோயிலில்  வரலாற்று  கால கல்வெட்டுகள்
 சுமார் 800க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. Archaeological survey of India; Annual epigraphic Volume XXIV -ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் South Indian Temple Inscription என்ற தொகுப்பு நூலிலும் காணலாம். செப்பேடுகளைப் பற்றிய செய்திகள் Epigraphia indica களில் வெளிவந்தன.

    • கி.பி. 10ம் நூற்றாண்டு - இது சோழர்கள் தமிழ்நாட்டின்
ஆட்சியுரிமையில் சிறந்திருந்த காலம்.
ஏறத்தாழ 181 சோழர் கல்வெட்டுகள் திருவரங்கம் பெரியகோயிலில் உள்ளது.

• முதலாம் ஆதித்த கரிகாலன் (கி.பி.871-907) காலத்திய கல்வெட்டுகள் இரண்டு (A.R.E.No.69 & 70 of 1892) நான்காம் திருச்சுற்றான ஆலிநாடன் திருச்சுற்றில் அமைந்துள்ள கொட்டாரத்தின் தரைப்பகுதியில் உள்ளன.

• முதலாம் பராந்தகச்சோழன் (கி.பி. 907- 955) காலத்து எட்டு கல்வெட்டுகள்  (A.R.E.No. 71,72,73,95,345,415,417,418 of 1961-62)  திருவரங்கம் பெரிய கோயிலில் உள்ளன.
கி.பி. 953 ல் முதலாம் பராந்தக சோழனின் 17ம் ஆட்சியாண்டுக்
கல்வெட்டு ஒன்று (A.R.E.No. 72 of 1892) இம்மன்னன் இக்கோவிலுக்கு ஒரு வெள்ளி மற்றும் தங்கத்திலான  குத்துவிளக்கு
அளித்ததையும் அதற்கு , பட்டுத்திரி, நூல், நெய்யோடு சேர்த்து எரிப்பதற்காக 'பீமஸேனி கற்பூரம்' வாங்குவது உட்பட அதன்
நிலையான செலவினங்கட்கு 71 கழஞ்சு பொற்காசுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது.

• இரண்டாம் பராந்தகன் எனும் சுந்தரச்சோழன் காலத்தைய (கி.பி. 957 -970) கல்வெட்டு(A.R.E.No.416 of 1961-62) ஒன்று மட்டும் சந்தன மண்டபத்தின் இடது பக்கம் அமைந்துள்ளது.

• உத்தமசோழன் (கி.பி.973-985) காலத்திய கல்வெட்டு (A.R.E.No.65 of 1938-39) ஒன்று இரண்டாம் திருச்சுற்றிலுள்ள சந்தன மண்டபத்தில் உள்ளது. அதில் 'பீமஸேனி கற்பூரம்' கலந்த நெய்யைக் கொண்டு திருவிளக்கு ஏற்றும் நடைமுறை கூறப்படுகிறது. கோயில் விளக்குகளிலே சேர்க்கப்படும் நெய்யை கோயில் ஊழியர்கள் தங்களது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தாதிருக்க பீமஸேனி கற்பூரம் நெய்யுடன் சேர்த்து எரிப்பது அக்கால  வழக்கம் ஆகும்.

• முதலாம் ராஜராஜன்(கி.பி.985-1014) மற்றும் முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012-1043) காலத்திய பத்து கல்வெட்டுகள் (A.R.E.No.19 of 1948-49 327,328,331,341,342,343,344,344a,370)  உள்ளன.

• முதலாம் ராஜாதிராஜன்
(கி.பி. 1018-1054) காலத்திய கல்வெட்டுகள் இரண்டு (A.R.E.No.333,334 of 1952-53) சக்கரத்தாழ்வார் சந்நிதி முன் அமைந்துள்ள மண்டப தாழ்வாரத்தில் உள்ளது.

  • இராசமகேந்திர சோழன் (கி.பி. 1058-1063) திருவரங்கம் பெரியகோயிலில் பல திருப்பணிகளைச் செய்துள்ளதை 'கோயிலொழுகு'  (இராசமகேந்திர சோழன் கைங்கர்யம்) மூலம் அறியலாம். இங்குள்ள இரண்டாம்
பிரகாரத்தில் முதலாம் பிராகாத்திற்கான திருமதிலை கட்டினான். இரண்டாம் திருச்சுற்றினை திருப்பணி செய்தவன் இவனே. அதனால் 'இராசமகேந்திரன் திருவீதி'
என்றே இன்றும் வழங்கப்படுகிறது.

• இராஜேந்திரச் சோழனின் மகன் வீர ராஜேந்திரன் அவன்மகன்  அதிராஜேந்திரன் (கி.பி. 1068-71) காலத்திய கல்வெட்டு ஒன்று மட்டும் நாழிகை கேட்டான் வாசலின் நுழைவு வாசல் பக்கச்சுவரில் உள்ளது.

• திருவரங்கம் பெரியகோயிலில் காணப்படும் சோழர்காலக் கல்வெட்டுகளில்  முதலாம் குலோத்துங்கச்சோழனின்  (கி.பி.1070-1122) கல்வெட்டுகளே மிகுதியானவை ஆகும். ஸ்ரீரங்கம் கல்வெட்டு எண். 26 தொடங்கி 108 முடிய உள்ள இவனது கல்வெட்டுகள் மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றில் அமைந்துள்ளன.

  • வைணவ சமய புரட்சித்துறவி ஸ்ரீஇராமானுஜர் (கி.பி.1020-1137) காலத்திலே நடந்த நிகழ்வுகள்  ஸ்ரீரங்க வரலாற்றின் 'பொற்காலம்' என்றே கூறலாம். இவரின் அரிய
சேவைகளை 'கோயிலொழுகு' என்னும் நூல் சிறப்பித்துப் பேசுகிறது. அவற்றை சமய மரபில் விரிவாக காணலாம். முதலாம் குலோத்துங்க சோழன் இராமானுஜருக்குப் பல கொடுமைகள் விளைவித்ததாகவும் இதனால் ராமானுஜர் சிலகாலம்
(சுமார் 13 ஆண்டுகள்) ஒய்சாளப் பேரரசின் மைசூர்பகுதியில் உள்ள மேல்கோட்டை- திருநாராயணபுரத்தில்  தங்கியிருந்தார் எனவும் கோயிலொழுகின் மூலம் அறிய முடிகிறது.

• விக்ரமச்சோழன் (கி.பி.1118-1135) ஆட்சிகாலத்திய. கல்வெட்டுகளை (A.R.E.No27,28,31,33,37,38,39,112,115,127,438,340,339)
மூன்றாம் திருச்சுற்றுகளில் காணலாம்.

  • இரண்டாம் குலோத்துங்கச்சோழன்  ( கி.பி. 1133-1150) காலத்திய  இரு கல்வெட்டுகள் (A.R.E.No.55,56 of 1936-37) நான்காம் திருச்சுற்றுகளில் உள்ளன. 

  • இரண்டாம் இராஜராஜச்சோழன்  ( கி.பி. 1133-1150) காலத்திய  கல்வெட்டுகள் (A.R.E.No.68 of 1936-37
122 of 1947-48) நான்காம்
திருச்சுற்றுகளில் உள்ளன. 

  • இரண்டாம் இராஜாதிராஜச்சோழன்  ( கி.பி. 1163-1178) காலத்திய  கல்வெட்டுகள் (A.R.E.No.63,73 of 1936-37
267,268,269 of 1930) நான்காம்
திருச்சுற்றில்  உடையவர்சந்நதி எதிரில் உள்ளன. 

 • மூன்றாம் குலோத்துங்க சோழன்(கி.பி.1178-1218)
 காலத்தில்
இத்தலத்தின் நிர்வாகம் இவனது நேரடிக் கவனத்தின் கீழ் கொண்டுவரப்
பட்டது. காலத்திய  கல்வெட்டுகள் (A.R.E.No.50,51 of 1948-49
61,75,76,89, of 1936-37 ; 17,18,119,120,113,148, of 1938-39
63,66,67,of 1892;
364 of 1953-54;
157,158, 335 of 1951-52;) நான்காம்,ஐந்தாம்
திருச்சுற்றில் உள்ளன.
இவன் சைவ- வைணவ சமயப் பூசல்களைத் தீர்த்து வைத்ததாகவும் அறிய முடிகிறது.

• மூன்றாம் இராஜராஜன் (கி.பி.1216-1256) காலத்திய கல்வெட்டுகள்
(A.R.E.No.71,72 of 1936-37;
102,133,134,147 of 1938-39
156 of 1956-57;
30,52 of 1948-49; 156,157,158 of 1951-52;
363 of 1953-54; 30,35 of 1936 -37;) ஆகியன 3,4,5 திருச்சுற்றுகளில் உள்ளன.

   •  கி.பி.1223-1225 திருவரங்கம் கோவில் கங்கர்களால் கவர்ந்து
கொள்ளப்பட்டது. கோவில் நிர்வாகம் சீர் குன்றியது.

• மூன்றாம் ராஜேந்திரன் (கி.பி. 1246-1279) காலத்தைய (A.R.E.No.148 of 1938-39;
64,65 of 1892; 317 of 1952-53; 368 of 1953-1954; கல்வெட்டுகள்
 5,4,3 திருச்சுற்றுகளில் காணலாம்.
 இவனது ஆட்சிக்குப்பிறகு காலத்தில் சோழநாடு பாண்டியர்களுடைய நாடாக மாற்றம் அடைந்தது.

...தொடர்ச்சி அடுத்த பதிவு - Post ல பார்ப்போம்.

                  அன்புடன்

         ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்


No comments:

Post a Comment